.

Pages

Friday, July 31, 2015

செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய சசிபெருமாள் திடீர் மரணம்!

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காந்தியவாதி சசி பெருமாள், கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியபோது அவர், திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைக்கடை என்ற கிராமத்தில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த டாஸ்மார்க் கடை கோயில், பள்ளி இருக்கும் பகுதியில் அமைந்துள்ளதால் அதனை அகற்றக்கோரி காந்தியவாதி சசிபெருமாள் அந்த ஊர் மக்களுடன் கடந்த ஆண்டு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும், உண்ணாமலைக்கடை பஞ்சாயத்து தலைவர் ஜெயசீலன் தலைமையில் அந்த ஊர் மக்களும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். அப்போது, தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, டாஸ்மாக் கடையை அகற்றுவதாக அதிகாரிகள் உறுதிமொழி அளித்துள்ளனர். இதனால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.

ஆனால், அதிகாரிகள் அளித்த உறுதிமொழிபடி டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை. தொடர்ந்து டாஸ்மாக் கடையை தமிழக அரசு நடத்தி வந்தது.

இதனிடையே, டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஊர்மக்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், உண்ணாமலைக்கடையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்தது.

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் டாஸ்மாக் கடையை தமிழக அரசு அகற்றவில்லை. இதனால் மீண்டும் ஊர்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் சசிபெருமாளும் போராட்டத்தில் குதித்தார். அப்போது, ஜூலை 31ஆம் தேதிக்குகள் டாஸ்மாக் கடையை அகற்றுவதாக அதிகாரிகள் மீண்டும் உறுதி அளித்தனர். ஆனால், 31ஆம் தேதியான இன்று டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை.

இந்நிலையில், காந்தியவாதி சசிபெருமாள் மற்றும் உண்ணாமலைக்கடை பஞ்சாயத்து தலைவர் ஜெயசீலன் தலைமையில் ஊர்மக்கள் இன்று போராட்டத்தில் குவித்தனர். அப்போது, மண்எண்ணெய் மற்றும் தீப்பெட்டியுடன் காலை 9.30 மணிக்கு சசிபெருமாள் 500 அடி உயரமுள்ள செல்போன் டவரில் ஏறினார். அவரைத் தொடர்ந்து பஞ்சாயத்து தலைவர் ஜெயசீலனும் டவரில் ஏறினார்.

தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் ஜெயசீலன் டவரில் இருந்து கீழே இறங்கிவிட்டார். ஆனால், சசிபெருமாள் மட்டும் டவரில் இருந்துள்ளார். சுமார் ஐந்தரை மணி நேரம் டவரில் இந்த அவரை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். பின்னர் ஒரு வழியாக சசிபெருமாளை காவல்துறையினர் மீட்டனர். அப்போது, சசிபெருமாள் ரத்த வாந்தி எடுத்ததாக தெரிகிறது. அவர் சட்டையில் ரத்தக்கறை படிந்திருந்தது. உடனடியாக சசிபெருமாள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோரித்த மருத்துவர்கள் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி காந்தியவாதி சசிபெருமாள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2013ஆம் ஆண்டில், 34 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டார். மேலும், பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி டெல்லியிலும் சசிபெருமாள் போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

-த.ராம்
நன்றி:விகடன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.