கடந்த வருடங்களை போல் அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதியில் நடப்பாண்டில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை நான்கு பகுதிகளாக தொகுத்து 'அதிரை நியூஸ்' வாசகர்களுக்கு வழங்க இருக்கிறோம்.
இந்த ஆண்டில் அதிரையில் நடந்த நிகழ்வுகள் ஏராளமாக இருந்தாலும், பதிவின் நீளம் கருதி குறிப்பிட்ட சில முக்கிய நிகழ்வுகளை மாத்திரம் பதிவதற்கு எடுத்துக் கொண்டுள்ளோம். இதில் ஜனவரி முதல் மார்ச் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை பகுதி 1 எனவும், ஏப்ரல் முதல் ஜூன் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை பகுதி 2 எனவும், ஜூலை முதல் செப்டம்பர் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை பகுதி 3 எனவும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை பகுதி 4 என வகை படுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி முதல் மார்ச் வரை அதிரை நியூஸில் பதியப்பட்ட முக்கிய நிகழ்வுகள்:
அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1984 ம் ஆண்டு முதல் 2008 ம் ஆண்டு வரை 24 ஆண்டுகள் 'நீதி போதனையை' கற்பிக்கும் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் என்.எஸ் ஜமால் முஹம்மது ( வயது 74 ). 'ஹஜரத்' என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவர். ஹஜரத் குறித்து 'தோள் கொடுப்போம் நம்ம ஹஜரத்துக்கு!' என்ற தலைப்பில் அதிரை நியூஸில் பதியப்பட்ட செய்தி இவரிடம் தீனியாத் பாடம் பயின்ற ஆயிரக்கணக்கான மாணவர்களை திரும்பி பார்க்க வைத்தது.
ஆஸ்திரேலியா வாழ் அதிரையரும், முன்னாள் விளையாட்டு வீரருமாகிய முஹமது யாசீன் அதிரையில் புதிதாக பள்ளிவாசலை கட்டினார். மேலும் இவரது 9 வயது மகனை இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தும் இளைஞராக தயார் படுத்தி வருகிறார். இவரது முயற்சியை பலர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். இது குறித்து அதிரை நியூஸில் பதிந்த செய்தி பலரின் கவனத்தை ஈர்த்தது.
அதிரை நடுத்தெரு கீழ்புறம், வாய்க்கால் தெரு, புதுத்தெரு ஆஸ்பத்திரி தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தக்வா பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள 1 ம் நம்பர் ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி வருகின்றனர். இங்கு சீனி அரிசி, மண்ணெண்னை, பாமாயில், பருப்பு, உளுந்து உள்ளிட்ட முக்கிய அத்திவாசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்வதற்காக நுகர்வோர் வாணிப கிடங்கிலிருந்து அரிசி மூடைகள் லாரி மூலம் 1 ம் நம்பர் ரேஷன் கடைக்கு கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டது. அப்போது சில மூடைகளை மற்றொரு இடத்திற்கு எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியின் இளைஞர்கள் அதிரை காவல் நிலையத்திற்கும், உணவு வட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜனவரி 16,
அதிரையிலிருந்து தனியாருக்கு சொந்தமான ஆம்னி பேருந்து 23 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னையை நோக்கி பயணமானது. பேருந்து திருப்போரூர் அடுத்து தந்தனம் என்ற கிராமத்தின் அருகே வந்தபோது சாலையின் குறுக்கே திடீரென புகுந்த மாட்டின் மீது தனியார் பேருந்து மோதியதில் அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் பயணமான செட்டித்தெரு காசியார் வீட்டை சேர்ந்த அப்துல் கறீம் (வயது 55 ), புதுத்தெருவை சேர்ந்த உமர் ஜாஃபர் ( வயது 66 ) ஆகியோர் மரணமடைந்தனர். இந்த சம்பவம் அதிரை பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அதிரையில் லயன்ஸ் சங்கம் - காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் - தஞ்சை கேன்சர் சென்டர் ஆகியோர் இணைந்து புற்றுநோய் கண்டறிதல் முகாம் நடத்தினர். இதில் தஞ்சை கேன்சர் சென்டர் பொறுப்பாளர்கள் மருத்துவர்கள் பாலகிருஷ்ணன், மருதுதுரை, அப்துல் ஹக்கீம்,கெளசல்யா, விஜயா, கிருஷ்ண மூர்த்தி, அனிதா குமாரி மற்றும் மணிகண்டன் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் முகாமில் கலந்துகொண்டோருக்கு பரிசோதனைகளை மேற்கொண்டனர். இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். இந்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட சிஎம்பி லேன் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை அப்பகுதியில் சுற்றி திரிந்த ஆறு , எழு வெறிநாய்கள் சூழ்ந்துகொண்டு கடித்து குதறியது. இதில் ஒரு ஆடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. மற்ற ஆடுகள் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடியது. இதில் மூன்று ஆடுகளின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. இந்த நிகழ்வு இந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அதிரை பேரூராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது.
செக்கடி குளத்தை புதுப்பொலிவுடன் நவீன படுத்தும் முயற்சியில் அப்பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பணிகள் நடைபெற்று வந்தது. குறிப்பாக செக்கடி குளத்தை சுற்றி காணப்படும் நடைமேடை பகுதிகளில் டிசைன் தட்டுக்கள் புதைப்பது, தமிழக அரசின் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தும் வகையில் குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சேரும் மழைநீரை பைப் மூலம் குளத்திற்கு போய் சேரும்படி ஏற்பாடு செய்தது, ஆங்காங்கே மின்விளக்குகள் ஏற்படுத்தியது. சிறுவர் பூங்கா அமைத்தது, செடிகள் மரங்கள் நடுவது உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டது. தற்போது செக்கடி குளம் நடைமேடையை பெண்கள் சிறுவர்கள் உட்பட பலர் பயன்படுத்தி வருகின்றனர். இவை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
மார்ச் 4,
அதிரையின் பிராதன மீன் மார்க்கெட்டாக கருதப்படும் கடைத்தெரு பெரிய மீன் மார்க்கெட்டுக்கு அதிரை கடலில் பிடிபட்ட ராட்சஷ சுறா மீன் விற்பனைக்கு வந்தது. 125 கிலோ எடையுள்ள சுறா மீன் கிலோ ₹ 170 க்கு விலை போனது.
மார்ச் 12,
சவூதி அரேபியா ஜித்தாவின் பிரதானப் பகுதியான ஷரஃபிய்யாவில் மினி சூப்பர் மார்கெட் வைத்திருந்த ஒரே தமிழர் என்ற பெருமைக்கு உரிய அதிரையர். துல்கர்ணைன் என்கிற இந்தியன் காக்கா. இவரைப் பற்றி ஜித்தாவில் அதிரையர் என்ற குறுகிய வட்டத்தில் இல்லாமல் 'இந்தியன் காக்கா' என்று பெருமையுடன் அழைத்தால்தான் எல்லோருக்கும் தெரியும். இவர் குறித்து அதிரை நியூஸில் வெளியிடப்பட்ட செய்தி பலரின் கவனத்திற்கு சென்று, பெரும் வரவேற்பை பெற்றது.
மார்ச் 30,
அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடரவும், அதற்காக கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில் அதிரையின் அனைத்து மஹல்லா ஜமாத் நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், ஊர் பிரமுகர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர்கள் 15 க்கும் மேற்பட்ட வாகனங்களில் தஞ்சை புறப்பட்டு சென்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இந்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
அதிரை நியூஸின் பார்வை தொடரும்...
Evvalavuthana
ReplyDelete