அதிரையில் திருமண வலீமா விருந்து, நண்பர்களை அழைத்து விருந்து, உறவினர்களுக்கு விருந்து, புதிய வீடு கட்டி குடிபுகுதல், ஹஜ் பயணம், பெருநாள் விருந்து, குழந்தை பிறப்பையொட்டி உள்ளிட்ட நிகழ்வுகளின் போது விருந்துகள் உபசரிக்கப்படுகிறது.
லுஹர்த் தொழுகை முடித்தவுடன் வைபவங்கள் நடக்கும் வீட்டினிலோ அல்லது திருமண மண்டபத்திலோ நடைபெறும் விருந்து உபசரிப்பில் உற்றார்- உறவினர்- நண்பர்கள் என மகிழ்ச்சியுடன் கலந்துகொள்கின்றனர்.
ஊரிலே 'கலரி சாப்பாடு' என்றொரு பெயரிலும் இவற்றை அழைப்பதுண்டு.
இஸ்லாத்தின் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் ஏழை, பணக்காரான் எங்கள் பகுதியை சேர்ந்தவன் - எங்கள் குடும்பம் !, எங்களுக்கு வேண்டியவர் என்ற இன பாகுபாடுகள் இல்லாமல் தமிழகத்திலேயே சஹனில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூடிய ஊர்களில் நமதூரும் ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரு சஹனிலும் தலா 3 பேர் அல்லது 4 பேர் வீதம் அமர்ந்து பரிமாறுவார்கள்.
'அஞ்சு கறி' என்ற பெயரில் அழைக்கப்படும் உணவை அதிரையர் அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். இவை சீராகச் சம்பா, துளசி பழசு, பாஸ்மதி போன்ற உயர்ரக அரிசியில் கம கம மணத்துடன் நெய்ச்சோறு தயாரிக்கப்படுகிறது. செம்மறி ஆட்டுக்கறியில் கூடுதல் ஆயில் ( ! ) இட்டு தயாரிக்கப்படுகிற இறைச்சி ஆணம், நாவிற்கு சுவையைக்கூட்ட நாட்டுக் கத்தரிக்காயில் பச்சடி, உருளையில் குருமா, செரிமானத்திற்கு என்று சொல்லியே ( ! ? ) அனைவரும் விரும்பி பருகக்கூடிய புளியானம் ( ரசம் ) இவைகள் ஒரு வகையாகவும்...
மற்றொறு வகை பிரியாணி ! அதிரைக்கு சிறப்பை சேர்க்கக்கூடிய உணவு. அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணக்கூடியது. இவை சீராகச்சம்பா, துளசி பழையது, பாஸ்மதி போன்ற உயர்ரக அரிசியில் சமமான அளவு செம்மறி ஆட்டுக்கறிச் சேர்த்து தயாரிக்கப்படுகிறப் பிரியாணி சுவையாகவும், நறுமண மிக்கதாகும் இருக்கும். பிற ஊர்களுக்கு சவால் விடக்கூடிய அளவிற்கு இதன் டேஸ்ட் இருக்கும். கூடுதல் இணைப்பாக துண்டுகளிட்ட பொரிச்சகோழி, வெங்காயத்தயிர் ஊறுகாய், எலுமிச்சை கலரி ஊறுகாய் போன்றவை இடம்பெற்றிருக்கும்.
தால்ச்சா ! இதன் ருசியே தனி, அஞ்சு கறி, பிரியாணி போன்ற உணவிற்கு கூடுதல் இணைப்பாக அதில் இடம்பெற்றிருக்கும். தால்ச்சா அதிரையில் மிகவும் பிரசித்திபெற்றது. அனைத்து தரப்பினரும் விரும்பக்கூடியது.
சாப்பிட்டதும் விருந்தில் இடம்பெற்றுள்ள இனிப்பை எடுத்துக்கொள்வார்கள் இதில் சேமியா பிர்னி, பீட்ரூட் சுவீட், மம்மி கோதுமை சுவீட், ரவா கேசரி,பேரிட்சை - தக்காளி பழம் சுவீட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று அஞ்சு கறி - பிரியாணி விருந்து உணவில் இடம்பெற்றிருக்கும்.
மறு சோறு போதும்... போதும்... எனச்சொல்லும் அளவுக்கு அனைவருக்கும் வழங்கி தங்களின் சகோதரத்துவ அன்பை வெளிப்படுத்துவார்கள்.
வாங்க காக்கா !
பேப்பரு தாங்க...
மூணு பேரா உட்காருங்க...
அங்கே ஒரு சஹன் வைய்ங்க !
எங்கே தால்ச்சா ?
இங்கே சோறு பத்தலே...
எங்கே மறுசோறு ?
இன்னொரு சுவீட் எடுத்துத் தாங்க !
என இதுபோன்ற பழக்கப்பட்ட குரல்கள் கலரிச் சாப்பாட்டில் ஆங்காங்கே ஒலித்துக்கொண்டேதான் இருக்கும்...
என்ன சகோதரர்களே !
உங்களுக்கும் அப்படி ஒலித்ததா என்ன !?
கவனத்தில் கொள்ள வேண்டியவை:
வைபவங்கள் நடக்கும் வீட்டில் நடைபெறும் விருந்து உபசரிப்புகளில் வீணாக உணவு விரையமாக்கப்படுவது மிகவும் வேதனைப்பட வேண்டிய ஒன்று மட்டுமல்ல சிந்திக்கபட வேண்டிய ஓன்று. உணவுப் பற்றாக்குறையுடன் ஏழைகள் பலர் நம்மிடையே வாழ்கிற இந்நாட்டில் உணவு வீண் விரையம் செய்வது மிகப்பெரிய சமூகக்குற்றமாக கருதப்படும். உணவை வீணாக்ககூடாது என்ற உணர்வை நம்மை சார்ந்தவர்கள் மற்றும் நம் பிள்ளைகள் மனதில் போட்டு வைப்போம். ஒரு பருக்கை கூட தட்டில் மிச்சம் வைக்காமல் உண்பதுதான் சிறந்த பண்பு என்பதை நாம் அனைவரும் உணருவோம்.
சேக்கனா நிஜாம்
[ கடந்த 2002 ஆம் ஆண்டு பதியப்பட்டது ]
அந்த பிளாஸ்டிக் பைகளில் தண்ணீர்! தண்ணீராக எனக்குத் தெரியவில்லை.
ReplyDeleteஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம். அதைத் தவிர்க்கும் வழியைக் காணவேண்டும். இது நமது எதிர்கால சந்ததிகளின் நலன் நாடிப் பதியப்படும் கருத்தாகும்.
இந்த விருந்து சாப்பாட்டிற்க்கு ஏதுவாக லுஹர் பாங்கை 12;30 க்கு மாற்றிக்கொண்டார்கள்
ReplyDelete