அதிராம்பட்டினம், நவ-29
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், ஏரிபுறக்கரை, நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் (ஈசிஆர் சாலை) 10 அடி அகலத்தில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான வாய்க்கால் பகுதியிலுள்ள நீர் நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து 66 பேர் வீடு, கடைகள் கட்டியுள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு பட்டுக்கோட்டை வருவாய்த்துறைக்கு சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
அதன்பேரில் கடந்த செப். 27-ம் தேதி பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் இரா. கோவிந்தராசு தலைமையில் வட்டாட்சியர் ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (கல்லணைக் கால்வாய்) செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்றனர். அப்போது நில ஆக்கிரமிப்பாளர்கள் அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு, அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால், அதை அளந்து குறியீடு செய்து, கால அவகாசம் தாருங்கள். நாங்களே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்கிறோம் என வாதிட்டனர்.
இதையடுத்து, அவர்களின் கோரிக்கையை ஏற்று ஆக்கிரமிப்புகளை நவ. 28-ம் தேதிக்குள் அகற்றிக் கொள்ள வேண்டுமென அதிகாரிகள் அறிவுறுத்திச் சென்றனர்.
இந்நிலையில், ஆக்கிரமிப்பாளர்கள் அனைவருக்கும் அண்மையில் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்பாளர்களில் சிலர் தாமாகவே முன்வந்து ஆக்கிரமிப்பு செய்து கட்டியுள்ள கட்டிடங்களை ஊழியர்களை கொண்டு இடித்து அப்புறப்படுத்தும் பணியில் நேற்று திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
இந்நிலையில் அகற்றப்படாமல் இருந்த கடைகள், வீடுகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை இன்று செவ்வாய்க்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றும் பணிகளில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். பின்னர் சாலையின் பிரதான பகுதிகளில் எல்லைக்கல் நூண்டப்பட்டு அதில் அடையாள குறியீடு செய்யப்பட்டது.
எக்ஸ்ட்ரா பிட்ஸ்:
1. ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி காலை 11 மணி முதல் மாலை 6.30 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது.
2. 2 ஜேசிபி வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.
3. இதில் ஏரிப்புறக்கரை கிராம நிர்வாக எல்லையில் இருந்த 11 வீடுகள், 16 கடைகள், 2 ரைஸ் மில் உள்ளிட்டவையும், அதிராம்பட்டினம் கிராம நிர்வாக எல்லையில் உள்ள 40 வீடுகள் ஆகியன அகற்றப்பட்டன.
4. அதிரை பேருந்து நிலையம் ஈசிஆர் சாலையோரத்தில் இருந்த அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள், வர்த்தக நிறுவனங்களின் விளம்பர பதாகைகள் ஆகியன அகற்றப்பட்டன.
5. பட்டுக்கோட்டை ஏ.எஸ்.பி அரவிந்த்மேனன் தலைமையில் அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், மதுக்கூர் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், திருச்சிற்றம்பலம் சப்இன்ஸ்பெக்டர் ஞானசுமதி உட்பட 120 போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
6. உள்ளூர் அதிகாரிகள் ராஜகுமாரி (வருவாய் ஆய்வாளர்), கிராம நிர்வாக அலுவலர்கள் மகர ஜோதி, ஆனந்த ஜோதி, அருள்மொழி ஆகியோர் இடம்பெற்றனர்.
7. பட்டுக்கோட்டை தீத்தடுப்பு-மீட்புக்குழு நிலைய அலுவலர் மெல்கியூராஜா தலைமையில் தீயணைப்பு வாகனம் மற்றும் வீரர்கள் இடம்பெற்றனர்.
8. ஆக்கிரமிப்பு அகற்றிய போது சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக இப்பகுதியில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்பட்டன.