.

Pages

Thursday, September 5, 2013

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்ட ஆசிரியர் தின விழா !

இன்று [ 05-09-2013 ] மாலை 4.30 மணியளவில் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் வளாகத்தில் ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

முன்னாள் தலைமை ஆசிரியர் S.K.M. ஹாஜா முகைதீன் அவர்களின் தலைமையிலும், காதிர் முகைதீன் கல்லூரியின் துணை முதல்வர் உதுமான் முகைதீன் அவர்களின் முன்னிலையில் இனிதே துவங்கியது.

இந்த விழாவில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அதிரையின் பிரபல எழுத்தாளரும், மனிதவள ஆலோசகருமாகிய இப்ராஹீம் அன்சாரி அவர்களின் சிறப்பு சொற்பொழிவு அனைவரையும் கவர்ந்தது.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பிரபல பட்டிமன்ற பேச்சாளராகிய அண்ணா சிங்காரவேலு சிந்தனையைத் தூண்டுகிற வகையில் நகைச்சுவை உரை நிகழ்த்தி அனைவரையும் அசத்தினார்.

முன்னதாக வந்திருந்த அனைவரையும் காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் A. மஹபூப் அலி அவர்கள் வரவேற்று பேசினார். பள்ளியின் மூத்த முதுகலை ஆசிரியர் ஹாஜி முஹம்மது அவர்கள் பள்ளி மாணவர்கள் நிகழ்த்திய சமீபகால சாதனைகளைப் பட்டியலிட்டு வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் பள்ளியின் தமிழ் ஆசிரியர் உமர் பாருக் அவர்கள் இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நமதூர் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோருடன் பள்ளியின் முன்னாள் ஆசிரியர்கள் - மாணவர்கள் என அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். வந்திருந்த அனைவரையும் பள்ளியின் ஆசிரியை ஆசிரியப்பெருமக்கள் அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.





6 comments:

  1. அனைத்து ஆசிரியை ஆசிரியர்களுக்கு....

    தாங்களின் போதனைப் பணி மென்மேலும் சிறந்து விளங்கி நல்ல மாணாக்களை உருவாக்கி நற்ப் பேறும் புகழும் பெற்றுத் திகழ

    எனது அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ஆசிரியப் பெருந்தகைகட்கு உளமார்ந்த ஆசிரிய நாள் வாழ்த்துகள்


    அகரம் கற்பித்துச்
    சிகரம் ஏற்றிவிட்டு
    உயரம் காட்டியவர்களை
    உயரம் சென்றாலும் மறவேனே!


    யான்படித்த பள்ளித்தரம் உயர்வானச் செய்தியினால்
    தேன்குடித்த வின்பம்போல் தித்திப்பை எய்தினேனே
    யான்வடிக்கும் பாக்கட்கு யாப்புத்தந் தபள்ளியாமே
    யான்குடித்த தமிழ்ப்பால் இன்னுமூறு மேயள்ளி


    காதிர்மு கைதீனென்(னும்) கல்விச்சாலை கண்டேனே
    சாதிமதப் பேதமற்ற சமத்துவமே கொண்டேனே
    \ஆதியிறை ஞானமுள்ள ஆசானைப் பெற்றேனே
    நீதிக்கதைகள் மூலம்தான் நெறிமுறைகள் கற்றேனே



    தமிழ்வழியிற் கற்றாலும் தரமான ஆங்கிலமும்
    அமிழ்தெனவே ஊட்டியதால் அயல்நாட்டிற் பிழைக்கின்றோம்
    இமைகள்தான் கண்களையே இயல்பாகக் காப்பதுபோல்
    சுமையாகக் கருதாமல் சுகமாகக் கற்பிக்கும்

    தியாகமுள்ள ஆசான்கள் திகழ்கின்ற பள்ளியாகி
    வியாபார நோக்கங்கள் விட்டொழித் தெல்லார்க்கும்
    நியாயமான கல்விதனை நிலைநிறுத்தும் நிர்வாகம்
    அயராது ழைக்கின்ற ஆசிரியர் தலைமையினால்



    ஆசிரியப் பெருந்தகைகட்கு உளங்கனிந்த ஆசிரியர் நாள் வாழ்த்துகள்.


    கா.மு.பள்ளி என்னும் தாய்மடியில் அறிவமுதம் ஊட்டப்பட்டதன் பலனை இன்றும் அனுபவிக்கும் எமது நன்றிக் கடன்!

    கணிதமேதை- இலக்கியச் செம்மல் ஜனாப் ஹாஜா முஹைதீன் சார்ஆங்கில ஆசான் ஜனாப் அலியார் சார்தமிழமுதம் ஊட்டி என்னைப் புலவராக்க எண்ணிப் பயிற்சியளித்தத் தமிழாசான்கள் புலவர் ஷண்முகனார் மற்றும் உயர் திரு. இரமதாஸ்மறக்கவியலாத மாண்புமிக்க ஆசான்கள்.

    (புலவர் ஷண்முகனாரின் முயற்சியும் பயிற்சியும் என்னை அவரைப் போன்ற புலவர் பட்டப் படிப்புக்குத் தூண்டினார்கள்; வேண்டினார்கள்;நூலகத்திலுள்ள அனைத்து “யாப்பிலக்கண நூல்களையும்” என்னிடம் வழங்கி ஊக்கப்படுத்தினார்கள்; ஆயினும், குடும்பத்தார் “வணிகவியல்”தான் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதால் திரு. ஷண்முகனார் அவர்களின் அவாவினை நிறைவு செய்ய இயலவில்லை; ஆயினும் அவர்கள் ஊட்டிய தமிழமுதம் இன்றும் என்னுள் இருப்பதால் இன்ஷா அல்லாஹ் விரைவில் அவர்களின் அவாவினை நிறைவு செய்வேன் என்று இந்த நன்னாளில் அவர்கட்கு உறுதியளிக்கிறேன்)

    அண்மையில் என் வகுப்புத் தோழர் வீட்டுத் திருமண விழாவிற்கு வந்த தமிழாசான் திரு.இரமதாஸ் அவர்களைச் சந்தித்ததில் பேரானந்தம் அடைந்தேன்; அவர்களிடம் என் கவிதைத் தொகுப்பினைப் பற்றி சொன்னதும், அவர்களும் ஆன்ந்தத்தில் கண்ணீர் வடித்து, “ஒரு தந்தையைப் போன்று மகிழ்கின்றேன்; நான் கற்பித்த மாணவனைக் கண்டு, என் கற்பித்தலுக்குக் கிடைத்த பேறாக எண்ணுகின்றேன்” என்றார்கள்.

    ஓவிய ஆசான் வாவன்னா சார் அவர்கள் , ஓவியம் மட்டும் கற்று தரவில்லை; இடையில் ஆங்கில இலக்கணமும் கற்பித்தார்கள்.

    இப்படியாக , மலரும் நினைவுகளாய் மாண்புமிக்க ஆசான்களை, இந்த நாளில் அவர்களின் மகிழ்ச்சியில் பங்கு கொண்டவனாக என் கருத்துக்களைப் பதிகின்றேன்.

    ReplyDelete
  3. இந்த விழாவின் முக்கியமான அடிப்படையான அம்சம் மாணவர்களின் உற்சாகமான ஒத்துழைப்பு. ஒவ்வொரு அறிவிப்புக்கும் அவர்கள் எழுப்பிய கரவொலி. இந்த அளவுக்கு அவர்களின் ஆசிரியர்களின் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பு கலந்த மரியாதை. நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் நிரியிவு வரை கலந்து போகா முயற்சிக்காமல் கட்டுக் கோப்பாக இருந்து நிகழ்ச்சிகளை உன்னிப்பாக கவனித்த இந்த மாணவச் செல்வங்களுக்குத்தான் முதல் பாராட்டு.

    அதிரை நிருபர் வலைதளத்தின் சார்பாக அனைத்து ஆசிரியர்களுக்கும் அப்துல் ரகீம் எழுதிய நபிகள் நாயகம் என்கிற வரலாறு புத்தகமும், நினைவுப் பரிசாக ஆசிரியர்களில் ஆண்களுக்கு வெள்ளை சட்டைத் துணியும் பெண் ஆசிரியர்களுக்குப் பொன்னாடையும் பார்சல் செய்து வழங்கப் பட்டது.

    இது ஒரு ஆரம்பம். இன்ஷா அல்லாஹ் அடுத்த ஆண்டு அனைத்து தரப்பிலும் இணைந்து இதை இன்னும் வெற்றிகரமான நிகழ்வாக நடத்திட வேண்டுமென்ற ஆசையை முன்வைக்கிறேன்.

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  5. அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

    விழாவில் 30 நிமிடமே கலந்து கொண்ட எனக்கு மூத்த சகோதரர் இப்ராஹீம் அன்சாரி மற்றும் நண்பர் அண்ணா சிங்காரவேலு ஆகியோரின் சிறப்பான பேச்சை கேட்க இயலவில்லை.

    தலைமை ஆசிரியர் மஹபூப் அலி மற்றும் மூத்த முதுகலை ஆசிரியர் ஹாஜி முஹம்மது ஆகியோர் பேச்சை கேட்ககூடிய வாய்ப்பு அமைந்தன.

    அருமையான விழா !

    ஏற்பாட்டளருக்கு மிக்க நன்றி...

    தொடர்ந்து நடத்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும்

    இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து எமக்கு கல்வி பயிற்றுவித்த ஆசான்களை கவுரவப் படுத்த வேண்டும் என்ற ஆவல் எனக்கும் உண்டு வெளிநாட்டில் இருந்துகொண்டு சாத்தியமற்று போனது கொஞ்சம் வருத்தம்.

    வரும் வருடங்களில் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு கரமாக நம் ஆசான்களை கவுரவப் படுத்த வேண்டும் என்பது என் அவா.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.