.

Pages

Friday, February 28, 2014

தக்வா பள்ளிக்கு ஜனாஸா குளிப்பாட்ட பயன்படுத்தப்படும் சாதனத்தை வழங்கியது அதிரை பைத்துல்மால் !

அதிரை பைத்துல்மாலில் இன்று மாலை நடைபெற்ற மாதாந்திரக் கூட்டத்தின்போது ஜனாஸா குளிப்பாட்ட பயன்படுத்தும் சாதனத்தை தக்வா பள்ளியின் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சாதனத்தை அதிரை பைத்துல்மால் நிர்வாகிகளிடமிருந்து தக்வா பள்ளியின் டிரஸ்ட் தலைவர் அப்துல் சுக்கூர், நிர்வாக உறுப்பினர் மஜீத் ஆகியோர் பெற்றுச்சென்றனர்.

இது குறித்து அதிரை பைத்துல்மாலின் செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள் நம்மிடம் கூறியதாவது...
'அதிரை பைத்துல்மால் சார்பாக ஜனாஸா குளிப்பாட்ட பயன்படுத்தும் சாதனத்தை இன்று மாலை தக்வாபள்ளியின் நிர்வாகிகளிடம் வழங்கினோம். இதைதொடர்ந்து அதிரையில் கஃப்ர்ஸ்தான் அமைந்துள்ள பிற பள்ளிகளுக்கும் வழங்க திட்டமிட்டுள்ளோம்.

இவற்றை எளிதாக பயன்படுத்தும் நோக்கில் 17 ஆயிரம் ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிக்காக அதிரை பைத்துல்மால் சார்பாக அந்தந்த நாடுகளில் உள்ள கிளை நிர்வாகிகள் நிதிதிரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவற்றிற்கு தாராளமாக உதவுவதன் மூலம் இவற்றின் பங்கை மேலும் விரிவுபடுத்த இயலும்' என்றார்.

புதுப்பட்டினத்தில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர் போட்டியில் முதல் பரிசை தட்டிசென்ற அதிரை AFCC அணியினர் !

புதுப்பட்டினத்தில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பங்கேற்ற AFCC அணியினர் முதல் பரிசை தட்டிச்சென்றனர்.

இன்றைய இறுதி ஆட்டமாக AFCC அணியினரும், அணியினரும் மோதினர். ஆட்டத்தின் இறுதியில் 9 விக்கெட் வித்தியாத்தில் NGCC அணியை வென்றனர். இதில் 27 பாலில் 47 ரன்கள் எடுத்த AFCC அணியின் நட்சத்திர வீரர் முஹம்மது இஸ்மாயில் சிறந்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை தட்டிச்சென்றார். 

இன்றைய ஆட்டத்தை காண புதுப்பட்டினம் மற்றும் அதிரை இளைஞர்கள் பலர் திரண்டு வந்து இருந்தனர். இதனை தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. முதல் பரிசு ரூபாய் 10,000/- த்தை AFCC அணியினரும், இரண்டாம் பரிசை NGCC அணியினரும், மூன்றாம் பரிசை ABCC அணியினரும் பெற்றனர்.




அதிரை உலமா பெருமக்கள் பங்கேற்ற பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி [ படங்கள் இணைப்பு ] !

கொழும்பு காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் அதிரை உலமா பெருமக்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் மௌலவி ஹாபிழ் பட்டமளிப்பு விழாவும நூல் வெளியீட்டு விழாவும் நேற்று 27.02.2014 வியாழக்கிழமை மதரசா மண்டபத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி ஜாமிஆவின் முதல்வர் மௌலானா மௌலவி எம்.ஏ.முகம்மது அப்துல்லாஹ் ஆலிம் (றஹ்மானி) ‘ஷைகுல் பலாஹ்’ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தென் இந்தியா அதிராம் பட்டினத்தை சேர்ந்த (கேரளா றஹ்மாணியா அறபுக்கல்லுரியின் முதல்வர்) கே.ரீ. முஹம்மதுக் குட்டி முஸ்லியார்(பாஸில் பாகவீ) அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் நிறைவேற்றுக்குழு இணைப்பாளரும், கொழும்பு மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்ஹ் எம்.ஏ.சீ.எம்.பாஸில்(குமைதி)அவர்களின் விசேட சிறப்புரையும் இடம் பெறறது.

இதன்போது ‘ஷைகுல் பலாஹ்’ அவர்களதும் அன்னாரின் சகோதரர் மர்ஹும் அப்துர்றஹ்மான் அவர்களினதும் சிறப்புக் கூறும் “என்றும் இலங்கும் இரு மணிகள்” என்னும் நூல் வெளியிடப்பட்டதுடன் இந்நூலில் ‘ஷைகுல் பலாஹ்’ பற்றி சிறப்புக் கவிதை புனைந்த மௌலவி ஏ.எல.எம்.எம்.முஸ்தபா பலாஹி(சூபி ஹஸரத்) அவர்கள் அதிதிகளால் மக்கத்துச் சால்வை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இவ் விழாவில் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், தென் இந்தியா அதிராம் பட்டின றஹ்மானியா அறபுக் கல்லுர்ரி பேராசிரியர் ஏ.ஜே முஹம்மத் நெய்னா ஆலிம் ஸாஹிப் (றஹ்மானி அத்றமீ), சம்மாங் கோட்டுப் பள்ளிவாயல் பிரதம இமாம் மௌலானா மௌலவி எஸ்.ஓ.எம் காழி அலாவுதீன் ஆலிம் பாஸில் பாகவீ உட்பட உள்ளுர் வெளியூர் உலமாக்கள், புத்தி ஜீவிகள், மார்க்க அறிஞர்கள், பாதுகாப்பு படை அதிகாரிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது ஒன்பது ஹாபிழ்களுக்கும் ஏழு மௌலவிமார்களுக்கும் “பலாஹி” பட்டமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

“பலாஹி”  மௌலவி பட்டம் பெற்றவர்களின் பெயர் விபரம்
எம்.எஸ்.எம்.பயாஸ் – காத்தான்குடி, எம்.எச்.எம்.அனஸ் – புநொச்சிமுனை, எம்.எம்.எம்.நுஸ்ரி – காத்தான்குடி, எம்.ஜே.எம்.ஜப்ரான் – காத்தான்குடி, எம்.எ.எம்.ஹபிழ் – பாலமுனை, எம்.எ.எம்.அஸ்பர் – வாழைச்சேனை, ஐ.சப்ராஸ் – ஓட்டமாவடி.

தகவல் : அபூ ஒசாமா
Source :  www.newsbest.net







Thursday, February 27, 2014

அதிரையில் புதியதோர் உதயம் வேலூர் ஸ்பெஷல் சிக்கன் கடை !

அதிரையில் புதியதோர் உதயமாக வேலூர் ஸ்பெஷல் சிக்கன் கடை அதிரை பேருந்து நிலையம் அருகே செயல்பட துவங்கியது. இந்த மாலை நேரக்கடையில் ஏராளமான சிக்கன் பிரியர்கள் வாங்கி ருசிப்பதற்காக படையெடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து கடையின் உரிமையாளர் மஹபூப் நம்மிடம் கூறியதாவது...
'நமதூர் தக்வா பள்ளி அருகே வேலூர் ஸ்பெஷல் சிக்கன் கடையை முதன் முதலாக ஆரம்பித்தோம். அதிக வரவேற்பை பெற்றதால் மற்றுமொரு கடையை இந்த இடத்தில் உருவாக்கியுள்ளோம். தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே எங்களின் வியாபாரம் இருக்கும். ஹலால் செய்யப்பட்டு சுத்தமான முறையில் உடனுக்குடன் சில்லி சிக்கன், சிக்கன் பக்கோடா, பீப் ஆகியவற்றை சுடச்சுட தயாரித்து கொடுக்கிறோம். மிகவும் சுவையாக இருப்பதால் அதிக இளைஞர்கள் ஆர்வமாக வாங்கி சாப்பிடுகின்றனர்' என்றார்.



குறிப்பு: அதிரை இளைஞரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட்டம் !

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம் கடந்த 14/02/2014 வெள்ளி அன்று மலாஸ் ஏரியாவில் இனிதே நடைப்பெற்றது.

நிகழ்ச்சி நிரல் :
தலைமை : சகோ. சரபுதீன்
கிராத் : சகோ. அப்துல் ரஷீத்
வரவேற்புரை : சகோ. ஜலீல்
சிறப்புரை : சகோ. அபூபக்கர்
மாதாந்திர அறிக்கை : சகோ. அப்துல் ரஷீத்
நன்றியுரை : சகோ : சரபுதீன்.

தீர்மானங்கள் :
1. ஜனாஸா குளிப்பாட்டும் தொட்டி ரியாத் சார்பாக ஒன்று ABM க்கு வழங்குவதென முடிவுசெய்யப்பட்டது .
.
2. மாத சந்தா தொகையை ஒவ்வொரு மாதமும் அனைத்து  உறுப்பினர்களிடம் வசூல் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதற்கு பகுதி வாரியாக பொறுப்புதாரிகள் நியமிக்கப்பட்டது .

மலாஸ் : அப்துல் ரஷீத்
ஓலையா : அஹ்மத் அஷ்ரப்
ஹாரா     : அப்துல் காதர் /ஹாஜா ஷரிப்
பத்தா       : ஜமால்
நஸ்ரியா : சரபுதீன்

மேலும் 5 ஆம் தேதிக்குள் சந்தா தொகையை அனைவரிடமும் வசூல் செய்வதென முடிவு செய்யப்பட்டது .

3. சவுதி அரேபியாவில் உள்ள புரைதா நகரில் ABM கிளை தொடங்குவது விசயமாக ஆலோசிக்கப்பட்டது .

4. அடுத்த அமர்வு மார்ச் 14 ஆம் தேதி கூடுவது என முடிவு செய்யப்பட்டது .

5. வருடத்தில் 3 அமர்வுகள் அதிரை மக்கள் அனைவரையும் ஒன்று கூட்டி ஒரு சிறப்பு ஏற்பாடு செய்வதென முடிவு செய்யப்பட்டது .அதன் அடிப்படையில்  ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் மெகா கூட்டம் கூடுவது  என முடிவு செய்யப்பட்டது .

தகவல் : அப்துல் மாலிக் - ரியாத்




காதிர் முகைதீன் கல்லூரியில் நடைபெற்ற 59 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் !

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் 59 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் இன்று [ 27-02-2014 ] காலை 9.15 மணியளவில் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.

இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ. ஜலால் அவர்கள் தேசியக்கொடியை ஏற்றிவைத்து வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் உதுமான் முகைதீன், முன்னாள் முதல்வர் முனைவர் முஹம்மது அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் முனைவர் முருகானந்தன் அவர்கள் விளையாட்டுத்துறையில் கல்லூரி நிகழ்த்திய சாதனைகள் குறித்து தனது உரையில் விரிவாக எடுத்துரைத்தார்

முன்னதாக சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட உடையார்பாளையம் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் T. பிச்சையப்பா அவர்கள் ஒலிம்பிக் சுடரை ஏற்றி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

சுடரை விளையாட்டு வீரர்கள் கையில் ஏந்தியவாறு கல்லூரி மைதானத்தை சுற்றி வந்தனர். இதைதொடர்ந்து அணிவகுப்பு மரியாதையுடன் விளையாட்டு போட்டிகள் ஒவ்வொன்றாக நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ மாணவிகள், பேராசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோருக்கான போட்டிகள் நடைபெற்றது.

போட்டியில் வெற்றிபெற்றோருக்கு பதக்கங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. நிகழ்சிகள் அனைத்தையும் முனைவர் மேஜர் கணபதி இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியில் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் முனைவர் முருகானந்தன் அவர்கள்  நன்றியுரை நிகழ்த்தினார்.

பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர் வீராங்கனைகள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள், பேராசிரியப் பெருமக்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், முன்னாள் மாணவர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் என திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.










Wednesday, February 26, 2014

பிலால் நகர் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய கிரிக்கெட் தொடர் போட்டியில் கோப்பையை தட்டிச்சென்றது கடற்கரைதெரு அணி !

அதிரை பிலால் நகர் ஸ்போர்ட்ஸ் கிளப் [ BSC ] சார்பில் சுழற்கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டியின் இறுதி போட்டி இன்று மாலை சிறப்பாக நடைபெற்றது.

இந்த தொடரில் அதிரை மற்றும் அதிரையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல்வேறு அணிகள் பங்கேற்று தனித்திறமையை நிருபித்து வந்தனர். இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் பிலால் நகர் அணியினரும் [ BSC ] , கடற்கரைதெரு அணியினரும் [ ABCC ] மோதினர்.

முன்னதாக டாஸ் வென்ற பிலால் நகர் அணியினர் பீல்டிங்கை தேர்ந்தெடுத்து விளையாடினர். இரு அணியினரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல் கடுமையாக மோதினர். ஆட்டத்தின் இறுதியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கடற்கரைதெரு அணியினர் [ 68/3 ] 17 ரன்கள் வித்தியாசத்தில் பிலால் நகர் அணியை வென்றனர்.

இதனை தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட 'சமூக ஆர்வலர்' அஜ்மல்கான் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்ற கடற்கரை தெரு அணியினர் மற்றும் பிலால் நகர் அணியினருக்கு பரிசுகளை வழங்கி கெளரவித்தார்.

ஆட்டத்தின் நாயகனாக கடற்கரைதெரு அணியை சேர்ந்த அஹமது சேக் அலாவுதீன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்றைய இறுதி ஆட்டத்தைக் காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் திரளாக வருகை தந்து ரசித்தனர்.






மரண அறிவிப்பு [ கம்பவுண்டர் அப்துல் ரஹ்மான் அவர்களின் சகோதரர் ]

அதிரை ஆப்பக்காரத்தெருவை சேர்ந்த கம்பவுண்டர் அப்துல் ரஹ்மான், முஹம்மது கமால் ஆகியோரின் சகோதரர் அன்சாரி அவர்கள் நேற்று மதியம் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று அஸ்ர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Tuesday, February 25, 2014

அதிரையில் அதிசயம் ! பீடி, சிகரெட், மூக்குப்பொடி விற்பதை நிறுத்திகொண்ட பெட்டிக்கடை உரிமையாளர் !!

பொழுதுபோக்காக புகை பிடிக்கும் பழக்கத்தை ஆரம்பிப்பவர்கள் நாளடைவில் அதற்கு அடிமையாகி விடுவதுண்டு. இதனால் ஏற்படும் தீமையை அவ்வப்போது எடுத்துச்சொன்னாலும் காதில் வாங்கமாட்டார்கள்.

நாள் ஒன்றுக்கு பாக்கெட் கணக்கில் ஊதி தள்ளுவோரும் உண்டு. புகை பிடிப்பது தவறு என்று தெரிந்திருந்தாலும் இதனால் ஏற்படும் பயன் என்ன என்பதை அவர்களிடம் கேட்டால் சொல்லத்தெரியாது.

சரி விசயத்துக்கு வருவோம்...
அதிரை கடற்கரைத்தெருவை சேர்ந்தவர் தண்டையார் சிராஜுதீன் [ வயது 64 ] கடந்த 25 ஆண்டுகளாக கடற்கரைதெருவின் பிரதான பகுதியில் 'பிலால் ஸ்டோர்' என்ற பெயரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இங்கே பீடி, சிகரெட், பான்பராக், சுருட்டு, மூக்குப்பொடி உள்ளிட்ட உடல்நலனுக்கு கேடு விளைவிக்கக்கூடிய பொருட்களை விற்பனை செய்யப்பட்டு வந்தன. கடந்த வாரத்திலிருந்து இந்த பொருட்கள் விற்பது அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது என்ற செய்தி மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டதால் இதன் உண்மை நிலவரத்தை தெரிந்துகொள்வதற்காக நேரடியாக ஸ்பாட்டிற்கு சென்றோம். கடையை அடைந்ததும் நம்மைப்பற்றி அறிமுகம் செய்துகொண்டு சிராஜுதீன் அவர்களிடம் மெதுவாக பேச்சு கொடுத்தோம்.

'ஆம், நீங்கள் கேள்விபட்ட செய்திகள் அனைத்தும் உண்மைதான். கடந்த 3 மாதங்களாக நண்பர் அன்வர் அலி என்னிடம் இதன் கேடுகள் குறித்து எடுத்துச்சொல்லி, இந்த பொருட்களை கடையில் வைத்து விற்பனை செய்வதை நிறுத்திக்கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்து வந்தார்.

சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் என்னிடம் வந்து தாத்தா [ அப்பா ] ஒரு கட்டு பீடி, ஒரு பாக்கெட் சிகரெட் தாருங்கள் என என்னிடம் கேட்டு வரும்போது, இவர்கள் தீய வழியில் செல்வதற்கு நாமும் ஒரு காரணமாக இருக்கிறோமே என்று வருந்தியதுண்டு. இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று மனதில் எண்ணியவாறு முதலில் நான் கடந்த 30 வருடங்களாக மூக்குப்பொடி போடும் பழக்கத்தை விட்டுவிடுவது என முடிவுசெய்து அதன்படி பின்பற்றி அதில் வெற்றியும் பெற்றுவிட்டேன் [ அல்ஹம்துலில்லாஹ் ] இதன் தொடர்ச்சியாக எனது கடையில் விற்பனை செய்து வந்த பீடி , சுருட்டு, சிகரெட், பாக்கு போன்றவற்றை விற்பதை அதிரடியாக நிறுத்திவிட்டேன். இதனால் இந்த பகுதியில் வசிக்கும் புகை பிரியர்கள் எனது கடையில் வந்து கேட்பதில்லை. இதில் எனக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை. சமூகம் கெடுவதற்கு நாமும் ஒரு காரணமாக இருக்கக்கூடாது என்ற முடிவில் இருந்துவருகிறேன். இந்த முயற்சி தொடர்ந்து வெற்றியடைய இறைவன் அருள்புரிய வேண்டும்' என்றார்.

இதுகுறித்து TNTJ அதிரை நகர செயலாளர் அன்வர் அலி அவர்களிடம் கருத்து கேட்டபோது...
'இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கக்கூடிய பொருட்களை விற்பது தடை செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அந்த குறிப்பிட்ட பொருட்கள் இந்த கடையில் விற்பனை செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சி பெண்கள், இளைஞர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கடையின் உரிமையாளருக்கு ஏற்பட்டுள்ள மாற்றம் மற்ற கடைகளின் உரிமையாளர்களுக்கும் ஏற்பட வேண்டும். இந்த பொருட்கள் விற்பனை செய்வதை சமூக நலன் கருதி நிறுத்தவேண்டும். இதற்காக என்னால் இயன்றளவில் பிற கடைகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளேன். இதன் அடுத்த கட்டமாக கிளை நிர்வாகிகளின் கலந்தாலோசனைக்கு பிறகு இதுகுறித்து தெருமுனை பிரச்சாரங்கள், கடைகளின் உரிமையாளரை சந்தித்து வேண்டுகோள் வைப்பது உள்ளிட்ட பணிகளை தொடர முயற்சிப்போம்' என்றார்.

அதிரை வரலாற்றில் முதன்முதலாக பெட்டிக்கடை ஒன்றில் உடல் நலனிற்கு தீங்கு விளைவிக்ககூடிய பீடி, சிகரெட் விற்பனை இல்லை என்று விற்பனையாளர் முடிவு செய்து இருப்பது மகிழ்ச்சி தரும் மாற்றம் என்றாலும் இந்த மாற்றம் அதிரை மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள விற்பனை மையங்களிலும் பரவ வேண்டும்.


வழிப்பறியை கண்டித்து நகரெங்கும் ஒட்டப்பட்டுள்ள வால்போஸ்ட்டர் !

அதிரையில் சமீபத்தில் நிகழ்ந்த வழிப்பறி கொள்ளை - கொலை முயற்சியை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் அதிரை நகரெங்கும் வால்போஸ்ட்டர் ஒட்டப்பட்டுள்ளது.

பிலால் நகர், ஆதம் நகர் பகுதிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், ஃபேன் மாவட்ட ஆட்சியர் வழங்கினார் !

ஏரிபுறக்கரை கிராம நிர்வாக எல்லைக்குட்பட்ட பிலால் நகர், ஆதம் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் வழங்கப்பட்டன.

இன்று பகல் ஏரிபுறக்கரை ரெட் கிராஸ் கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் சுப்பையன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு விலையில்லா பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சரோஜா மலைஅய்யன், மாவட்ட கவுன்சிலர் கண்ணகி கல்யாண சுந்தரம், ஏரிபுறக்கரை ஊராட்சி மன்ற தலைவர் மாலா முத்து கிருஷ்ணன், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முன்னதாக ஏரிபுறக்கரை பகுதியை சேர்ந்த குடும்ப அட்டைகள் உள்ள மொத்தம் 970 பயனாளிகளுக்கு கிராம நிர்வாக அலுவலகர் மூலம் டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கனை பெறுவதற்காக பொதுமக்கள் திரண்டு காணப்பட்டனர். போலீசார் சிறிது நேரம் பாதுகாப்பு பணிகளை வழங்கினார்கள்.