.

Pages

Wednesday, February 5, 2014

மறைந்து வரும் தொப்பித்தொழில் !? ஒரு சிறப்புப் பார்வை !

ஒரு காலத்தில் இந்தத் தொப்பியும் நமது ஆடைகளில் ஒன்றாக அதிக பட்சம் பேர்களால் அணியப்பட்டு வந்தது. அந்த காலகட்டத்தில் தொப்பிக்கு நல்ல வரவேற்ப்பு இருந்தது.தொப்பி அணிந்திருப்பவர்கள்தான் தொழுகையாளியாக கருதப்பட்டு வந்தனர்.தொப்பி அணிந்து செல்பவர்களுக்கு ஒரு தனி மரியாதை இருந்தது என்று கூட சொல்லலாம். இன்னும் சொல்லப் போனால் இஸ்லாமியர்களின் அடையாளங்களில் ஒன்றாகக் கூட தொப்பி கருதப்பட்டு வந்தது.அந்த அளவுக்கு தொப்பிக்கு முதலிடம் கொடுக்கப்பட்டு வந்தது.

இஸ்லாமியர்களுக்கென பிரத்தியேக அமைப்புடன் தயாரிக்கப்படும் இந்ததொப்பி சென்னை மாநகருக்கு அடுத்தபடியாக நாகூர், காரைக்கால், அதிராம்பட்டினம், காயல்பட்டினம், கீழக்கரை ஆகிய ஊர்கள் தொப்பிக்கு பிரசித்திபெற்று விளங்கியது. இந்த ஊர்களில் தான் தொப்பிகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தொப்பிகளில் ஜின்னா கேப், மலாய் கேப், ராம்பூரி, ஒவல்தொப்பி, துருக்கித்தொப்பி, வரித்தொப்பி,,பின்னல் தொப்பி, தப்லீக் தொப்பி, ஹாஜித் தொப்பி, ஓமன்தொப்பி, உள்ளன் தொப்பி [ மாப்பிள்ளைத் தொப்பி ] கருப்பு,நேவிபுளு, சிவப்பு, பச்சை நிறத்திலான வெல்வெட் தொப்பிகள் மற்றும் சிறுவர்களுக்கென கலர்த்தொப்பி,டிசைன் தொப்பி,ரேந்தை தொப்பி, ஜரிகைத் தொப்பிகளென்று என்று பலவித ரகங்கள் புழக்கத்தில் இருந்தன. வண்ணவண்ண தோற்றத்திலான தொப்பிகள் அணியப்பட்டு நகரை வலம் வந்தனர். ஒவ்வொன்றும் அதற்கேற்றார்போல் விலை உள்ளதாக இருக்கும். அவரவர் வசதிக் கேற்றாற்போல் வாங்கிச் செல்வார்கள். ஒவ்வொன்றும் வெவ்வேறு அமைப்புக்களில் அதன் தோற்றத்தை வெளிப்படுத்தி பார்க்க அழகாக இருக்கும்.தொப்பி விற்பனை சிறப்பாக இருந்ததால் இத்தொழில் செய்து வந்தவர்களும் மிக சந்தோசத்துடன் வியாபாரம் செய்து வந்தார்கள்.

மதரஸா,மக்தப் பள்ளிகளுக்கு ஓதச் செல்லும் சிறுவர்கள் முதல் பெரிய ஆலிம்கள் வரை அணியப்பட்டு வந்த தொப்பி இன்றைய சூழ்நிலையில் விருப்பமில்லாத ஒன்றாகி ஒருசிலரின் தலையில் மட்டுமே ஒட்டிக் கொண்டிருக்கிறது.

ஒரு நேரத்தில் நமதூரில் கல்யாண மாப்பிள்ளைக்கென ஸ்பெஷல் தொப்பியாக மாப்பிள்ளைத் தொப்பி என்று மிக பிரபல்யமாக இருந்தது. அதுவும் காலப் போக்கில் மறையத்தொடங்கி விட்டது.கால போக்கில் தொப்பி அணிபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து விட்டதால் இத்தொழிலை செய்து வந்தவர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

கல்யாணம், சுன்னத்து [ ஹத்னா ] மற்றும் வீட்டு விசேஷ காரியங்களுக்கு ஆடைகளுடன் தொப்பிக்கும் முக்கியத்துவம் கொடுத்துஅணியப்பட்டு வந்தன. ஒருநேரத்தில் சிறந்ததொழிலாக நல்ல வருமானம் தரக்கூடிய தொழிலாக இருந்த இத்தொழில்தொப்பி போடும் மோகம் குறைந்து விற்பனைக் குறைவாகி போதிய வருமானம் இல்லாததால் இத்தொழில் செய்பவர்களால் தனது முன்னோர்கள் செய்த இந்தத் தொப்பித் தொழிலை தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மேலும் இத்தொழிலை பண்டு தொட்டு செய்தவர்களே இன்று வரை செய்து கொண்டிருக்கிறார்களே தவிர புதிதாக செய்வதற்கு பிறருக்கு ஆர்வமோ, அனுபவமோ இல்லை என்பதே உண்மை. ஆகவே இனிவரும் காலங்களில் நமது நன்னதியினருக்கு நாம் அறிந்து அணிந்த பழைய மாடல் தொப்பிகளெல்லாம்  என்னவென்று தெரியாமல் புகைப்படங்களில் மட்டுமே பார்க்கும்படி ஆகிவிடும் போல் இருக்கிறது.

22 comments:

  1. Arumayana thakaval . Entha thoppe kal maruvatharkkum entha tholelukku thoppe poda karanam sollavaveandum athan oru kuutdam erukkea

    ReplyDelete
  2. மறைந்துவரும் தொப்பி தொழிலை ஊக்குவிப்பதாக இருக்கிறது படைப்பு !

    நல்ல வருமானம் ஈட்டிதரக்கூடிய தொப்பி தொழிலை விசேஷ தினங்களில் மாத்திரம் எடுத்து நடத்தாமல் எந்நாளும் எடுத்து நடத்துவதற்குரிய முயற்சியில் ஈடுபடலாம்.

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    இது வரை யாருமே நினைத்துக் கூட பார்க்கமுடியாத இந்த விஷயத்தை சிரமம் பார்க்காமல் பதிந்து இருப்பது உங்களின் ஆதங்கத்தை காட்டுகிறது.

    பொதுமக்களாகிய நம்மவர்களை கேட்டால் காலம் மாறிப்போச்சு என்று சொல்கின்றனர்.

    அந்தக் காலத்திலும் சோத்தைத் தான் சாப்பிட்டார்கள், இப்பவும் அந்த சோத்தைத் தான் சாப்பிடுகிறார்கள்.

    காலம்தாம் மாறிப்போச்சே, சோத்துக்கு பதில் வேறு எதையாவது அதாவது, கொள்ளு, பருத்திக்கொட்டை, கடலை புண்ணாக்கு, எள்ளு புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு, இப்படி பல புண்ணாக்குகளை சாப்பிடலாமே.

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    நான் இன்றும் தொப்பி அணிகின்றேன்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
    Replies
    1. காலம் மாறிப் போச்சுன்னு நடையை, உடையை, மாப்பிள்ளையை, இன்னும் எல்லாத்தையும் மாத்துராங்களே அண்ணே.

      Delete
    2. தோல் அழகை மாத்த அது என்னவோ பியூட்டி பார்லராமே,

      Delete
    3. காலம்தான் மாறிப்போச்சா? அட! போங்கங்கே!! விலைவாசி எல்லாம் விலை ஏறிப் போனதினாலே, விருந்து ஸ்டைலும் மாறனாலும் மாறலாம்.

      Delete
    4. என்னதான் ஆனாலும் பண்ணா மீனு டேஸ்ட் இருக்குதே அது எந்த நாளும் மாறாத ஒரே டேஸ்ட்.

      வாழ்க பண்ணா மீனு.

      Delete
    5. தொப்பி அணிவது இஸ்லாத்தின் மிக முக்கியமான அடையாளம் என இந்திய முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர். தொழுகை நோன்பு போன்ற வணக்கம் ஒருவரிடம் இல்லாவிட்டாலோ தாடி போன்ற வலியுறுத்தப்பட்ட சுன்னத் ஒருவரிடம் இல்லாவிட்டாலோ அதைப் பெரிதுபடுத்தாத முஸ்லிம்கள், ஒருவர் தொப்பி அணியத் தவறினால் அதைப் பெரிதுபடுத்துவதைக் காண முடிகிறது. தமிழகத்தில் பல பள்ளிவாசல்களில் தொப்பி அணியாதவர் பள்ளிவாசலில் தொழ அனுமதிக்கப்பட மாட்டார் என்று அறிவிப்பு பலகையே வைத்துள்ளதைக் காண முடிகிறது. எல்லா நேரத்திலும் தொப்பி அணியாவிட்டாலும் தொழுகை, திருமணம், மற்றும் இஸ்லாமியப் பொது நிகழ்ச்சிகளில் கட்டாயம் தொப்பி அவசியம் என்று கருதப்படுகிறது. சில ஊர்களில் சினிமாவுக்குச் சென்றாலும் சூதாட்டத்தில் இறங்கினாலும் கூட தொப்பி அணிந்தே காட்சி தருவதையும் காண முடிகிறது. இஸ்லாத்தின் முதன்மையான அடையாளமாக இந்திய முஸ்லிம்களால் கருதப்படும் தொப்பி குறித்து திருக்குர்ஆன் என்ன கூறுகிறது? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்ன கூறுகிறார்கள்? தொப்பிக்கு இந்திய முஸ்லிம்கள் கொடுக்கும் முக்கியத்துவத்துக்கு ஆதாரம் உள்ளதா? என்பதை முஸ்லிம்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நூலை வெளியிடுகிறோம். தொப்பி அவசியம் எனக் கூறுவோரும் அவசியம் இல்லை எனக் கூறுவோரும் தமது வாதத்தை நிலை நாட்ட எடுத்து வைக்கும் ஆதாரங்கள் யாவை? இவற்றில் எந்தக் கருத்து சரியானது? என்பதை முழுமையாக விளக்கும் ஆய்வு நூலாக இது அமைந்துள்ளது. தொப்பி குறித்து இஸ்லாத்தின் நிலைபாடு என்ன என்பதை தக்க சான்றுகளுடன் அறிந்து கொள்ள விரும்புவோருக்கு இது போதுமான நூலாகும் என்பது எங்களின் நம்பிக்கை.

      நபீலா பதிப்பகம்

      Delete
    6. முஸ்லிம்கள் என்று காட்டிக் கொள்வதற்கு தொப்பி முக்கிய அடையாளமாக கருதப்பட்டு வருகிறது. தொப்பியே இஸ்லாத்தின் அடையாளம் என்றும் பெரும்பாலான முஸ்லிம்கள் நம்பிச் செயல்படுத்தி வருகின்றனர். இஸ்லாத்தின் ஏனைய கடமைகளை விட தொப்பி முஸ்லிம்களிடம் முதலிடம் பெற்று வருகிறது. முஸ்லிம்கள் நடத்தும் நிழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முஸ்லிமல்லாத அரசியல் தலைவர்களும் தொப்பி அணிந்து முஸ்லிம்களைக் கவர முயற்சிப்பதையும் நாம் பார்க்கிறோம். முஸ்லிமல்லாதவர்கள் கூட தொப்பி தான் இஸ்லாத்தின் அடையாளம் என்று கருதும் அளவுக்கு இந்தக் கருத்து ஆழமாக வேரூன்றி விட்டது. குறிப்பாக தொழுகை நேரங்களில் ஒருவரிடம் தொப்பி இல்லையென்றால் அவர் தொழுவதற்குத் தகுதியற்றவர் என்று பொது மக்களும் ஆலிம்களும் எண்ணுகின்றனர். எனவே பல பள்ளிவாசல்களில் "தொப்பி அணியாமல் தொழக் கூடாது!' என்ற கடுமையான வாசகம் பள்ளிவாசலின் முகப்பில் எழுதப்பட்டுள்ளது. மேலும் சில பள்ளிவாசல்களில் ரெடிமேட் தொப்பிகள் வாங்கி வைத்துள்ளனர். இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் தொப்பிக்கு அல்லாஹ் முக்கியத்துவம் கொடுத்துள்ளானா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்களா? இதற்கு ஆதாரங்கள் உண்டா? என்பதைக் காண்போம்.

      Delete
    7. இப்போது முஸ்லிம்களின் கலாச்சார சின்னங்களில் ஒன்றாகிப் போனது தொப்பி. கால மாற்றத்திற்கேற்ப தொப்பியின் வடிவமும் மாறி வந்திருக்கிறது.
      அந்தக் காலத்தில் பெரியவர்கள், சிறியவர்கள் பாகுபாடின்றி எல்லோரும் அணிந்தது துருக்கி தொப்பி. சிவப்பு வண்ணத்தில் நீளமாக இருக்கும். அதன் நடுவில் கருப்பு கலரில் ஒரு குஞ்சம் தொங்கும். நிமிர்த்தி வைத்தால், அதன் உட்புறத்தில் ஒரு படி அரிசியை தாராளமாகப் போடலாம். அவ்வளவு நீளமானது எழுபதுகளின் முற்பகுதி வரை இந்த தொப்பி அணிந்த முதியவர்கள் நமதூரில் காணப்பட்டார்கள். (மர்ஹூம்) காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களின் இந்த துருக்கி தொப்பி அணிந்த புகைப்படத்தை இன்றும் காணலாம். 1940,50,60 களில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்களில் நமதூர்வாசிகள் இந்த தொப்பி அணிந்தே காணப்பட்டார்கள்.
      இதன் தொடர்ச்சியாகவோ, என்னவோ, அக்காலத்தில் தமிழக காவல்துறையினரும் இதே வடிவிலான கூம்பு வடிக மிளகாய் தொப்பியையே அணிந்து வந்தனர். எதையும் தாங்கும் இதயம் மட்டுமல்ல, எதையும் தாங்கும் தலையும் வேண்டும் என்பதை அந்த தொப்பிகள் நிருபித்தன. அதைக்கண்டு பயப்படாத திருடர்களோ, கேடிகளோ அன்றில்லை. 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னரே அத்தொப்பி மாற்றப்பட்டு, இன்றைக்கு புழக்கத்தில் உள்ள நவீன தொப்பிகள் பயன்பாட்டுக்கு வந்தன. அதன் பிறகு ராம்பூரிகேட் என்ற பெயரிலான ஒரு விதமான மிறு மிறு கருப்பு வெல்வெட் துணியில் தைத்த தொப்பிகள் நடைமுறைக்கு வந்தது. அது ஒரு காலத்தி; வடநாடு ராம்பூர் என்ற இடத்தில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது. பிறகு அதை உள்ளுரிலேயே தயாரித்தனர். ஆனால் அதன் பெயர் மட்டும் இறுதி வரை மாறவே இல்லை. நாங்கள் சிறுவர்களாக இருந்த போது இந்த ராம்பூரி தொப்பி தான் நடைமுறையில் அணியப்பட்டு வந்தது. வாங்கி இரண்டு மாதம் வரை ஓரளவு பளபளப்பு மாறாமல் இருக்கும். அதன் பிறகு மாடு நக்கியது போல சவ சவ என்றாகி விடும். போடவே வெட்கமாக இருக்கும். என்ன செய்ய..? அடுத்த பெருநாள் வரைக்கும் அது தான் தலைவிதி. இத்துணைக்கும் அப்போது ஆறோ, ஏழோ ரூபாய்கள் தான் அதன் விலை.
      பிறகு ஒரு அலைபோல வந்தது. பின்னல் தொப்பிகள். சில்க் துணியில் முடிச்சு முடிச்சாக பின்னப்பட்டு இருபுறமும் பழைய எக்ஸ்ரே பிலிம்கள் வைக்கப்பட்டு தைக்கப்பட்டன இத்தொப்பிகள். எடையற்றதாகவும், நீரில் கழுவக் கூடிய வசதியுடனும் இத்தொப்பிகள் அமைந்தன. வீட்டுக்கு ஒரு பெண்ணாவது இந்த பின்னல் தொப்பிகளின் துணிகளை பின்னத் தெரிந்தவராக இருப்பர்.
      நேரப்போக்காகவும், வருமானம் தரக்கூடியதாகவும் பெண்களுக்கு இது அமைந்தது. இதன் பின்னரே அரபு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இன்றைய வலைத் தொப்பிகள் அறிமுகமாயின. இவைகள் அரபு நாடுகளில் இருந்து வந்தாலும் சீனாவில் தயாரிக்கப்பட்டவையே.
      இன்றைக்கு என்னென்னவோ, நவீன மாடலில் பல ரகத் தொப்பிகளை நமது இளைஞர்கள் அணிகின்றனர் ஸ்டைலுக்காக!
      தொப்பிகள் வாங்குவதற்காகவே இருந்த தொப்பி கடைகள் இன்றில்லை. பெருநாட்கள் போன்ற விழாக்காலங்களில் திடீரென தொப்பிக்கடைகள் முளைக்கும். பின்பு மறைந்து விடும். எந்த துணிக் கடைகளிலும் அவசரத்துக்கு தொப்பிகளை இப்போது வாங்கிக் கொள்ளலாம்.
      ஆனால் அன்று முதல் இன்று வரை மாறாமல் இருப்பது தப்லீக்காரர்கள் அணியும் துணித் தொப்பிகள் தான். மடித்து பக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம். இவ்வாறாக, கலாச்சார அடையாளமாகத் திகழ்ந்த தொப்பிகள் சமயங்களில் யாரிடமிருந்தாவது 'பல்க் அமௌண்டை' லவட்டிக் கொண்டு வருபவர்களை 'தொப்பி போட்டு விட்டான்' என்ற அடைமொழியில் விழித்தனர். கொடுத்த பணம் திரும்ப வரவில்லை எனில் அதற்கு 'தொப்பி' என்று திருநாமம் சூட்டினர். தொப்பிகள் செய்த பாவம் தான் என்ன?
      ஒரு காரியம் செய்யத் துணிந்து, பிறகு தயங்குபவர்களை தொப்பி குறித்த ஒரு வாழ்வியல் தொடரால் இப்படி சித்தரித்தனர். அதாவது, 'நான் கிணற்றில் குதிக்கப் போகிறேன்' என் தொப்பியை பிடித்துக் கொள்' என்றானாம் ஒருவன். இவனே கிணற்றில் மூழ்கப் போகிறான். இவனது தொப்பி இருந்தால் என்ன? இல்லாவிட்டால் தான் என்ன? இதையே என் வாட்ச்சை வைத்துக்கொள்' 'பணத்தை வைத்துக்கொள்' என்கிற ரீதியால் மரபுத் தொடர்களை அமைப்பார்களா? தொப்பி – அது மிகமிக சாதாரண பொருள். அதனால் மட்டுமே, அதற்கு இந்த 'துரதிருஷ்டம்' வந்து சேர்;ந்தது. பாவம் தொப்பி! நண்பர்கள் விளையாட்டாக ஒருவர் தொப்பியை ஒருவர் தட்டிவிடுவது, எடுத்து கீழே எறிவது என்பன போன்ற நிகழ்வுகளும் நமது இளைஞர்களிடம் இருக்கிறது. இதெல்லாம் தொப்பிகளின் சாதாரணத் தன்மையை காட்டுகிறது. தொப்பி எனில் அப்படி ஒரு இளக்காரம்.

      Delete
  4. மறைந்து வரும் தொப்பி தொழில் .....யார் சொன்னது ????அதான் வந்துருச்சே ஆம் ஆத்மி கட்சி .......இனி தொப்பிக்கு மௌஸ் தான் ...

    ReplyDelete
  5. சிரமம் பார்க்காமல் பதிந்து இருப்பது உங்களின்எல்லோரின் ஆதங்கத்தை காட்டுகிறது.மேல்தோவை கீல்தோவையை பார்த்து சிரித்ததாம் அதுபோலத்தான் இப்பொழுது உள்ள சின்னஞ்சிறுசுகள் எல்லாம் அப்படிதான் செய்கிறார்கள் மார்கத்தையும் குழப்பி மார்கட்டையும் குழப்பி காலம் மாறிப் போச்சுன்னு நடையை, உடையை, மாப்பிள்ளையை, இன்னும் எல்லாத்தையும் மாத்துராங்களே அண்ணே.

    ReplyDelete
  6. //.தொப்பி அணிந்திருப்பவர்கள்தான் தொழுகையாளியாக கருதப்பட்டு வந்தனர்.தொப்பி அணிந்து செல்பவர்களுக்கு ஒரு தனி மரியாதை இருந்தது என்று கூட சொல்லலாம். இன்னும் சொல்லப் போனால் இஸ்லாமியர்களின் அடையாளங்களில் ஒன்றாகக் கூட தொப்பி கருதப்பட்டு வந்தது.அந்த அளவுக்கு தொப்பிக்கு முதலிடம் கொடுக்கப்பட்டு வந்தது.//

    உண்மை. பெரும்பான்மை இஸ்லாமிய தொழுகையாளிகள் தொப்பி அணிகிறார்கள்.
    அன்று தொழுகாவிட்டாலும் முஸ்லிம் பெரியவர்கள் தொப்பி அணிந்தார்கள்.
    இன்றும் தொப்பி அணிந்து செல்பவர்களுகுத்தான் அதிக மரியாதைகள்.
    என்றுமே தொப்பி இஸ்லாமியரின் அடையாலாமே.

    ReplyDelete
  7. //மதரஸா,மக்தப் பள்ளிகளுக்கு ஓதச் செல்லும் சிறுவர்கள் முதல் பெரிய ஆலிம்கள் வரை அணியப்பட்டு வந்த தொப்பி இன்றைய சூழ்நிலையில் விருப்பமில்லாத ஒன்றாகி ஒருசிலரின் தலையில் மட்டுமே ஒட்டிக் கொண்டிருக்கிறது.//

    இல்லை இஸ்லாமியர்கள் தலையில் விருப்பமுடந்தான் தொப்பி உள்ளது. தொப்பி இஸ்லாமியனின் சின்னம். எப்படி இஸ்லாமியன் தனது சின்னத்தை விடுவான் ? இஸ்லாமியன் ஒரு போதும் தன சின்னம் தொப்பியை விடமாட்டான்.

    ReplyDelete
  8. //ஒரு நேரத்தில் நமதூரில் கல்யாண மாப்பிள்ளைக்கென ஸ்பெஷல் தொப்பியாக மாப்பிள்ளைத் தொப்பி என்று மிக பிரபல்யமாக இருந்தது. அதுவும் காலப் போக்கில் மறையத்தொடங்கி விட்டது.//

    இஸ்லாமியர் கல்யாணத்தில் கல்யாணத் தொப்பி இன்றும் என்றும் இருக்கும்.

    ReplyDelete
  9. //ஆகவே இனிவரும் காலங்களில் நமது சாந்ததியினருக்கு நாம் அறிந்து அணிந்த பழைய மாடல் தொப்பிகளெல்லாம் என்னவென்று தெரியாமல் புகைப்படங்களில் மட்டுமே பார்க்கும்படி ஆகிவிடும் போல் இருக்கிறது.//

    மாறியவர்கள் சந்ததிகளுக்க் அப்படித்தான் ஆகும்.

    ReplyDelete
  10. //மறைந்து வரும் தொப்பி தொழில் .....யார் சொன்னது ????அதான் வந்துருச்சே ஆம் ஆத்மி கட்சி .......இனி தொப்பிக்கு மௌஸ் தான்//

    கட்சியில் சேர்பவர்கள் கட்சிக்காக தொப்பி போடுகிறார்கள் அவர்கள் அவர்கள் கட்ச்சியை மதிக்கின்றார்கள்.
    பாரம்பரிய இஸ்லாமியன் எப்படி தொப்பியை விட்டுவிடுவான் ? அவன் உயிராச்சே.
    சிங்குகள் தலைப்பாகையை விடுவார்களா ? அவர்கள் சிங்கங்கள் பாரம்பரியத்தை விடமாட்டார்கள். அவ்வாறிருக்க எப்படி இஸ்லாமியன் தன் பாரம்பரிய தொப்பியை விடுவான் ? இஸ்லாமியன் தொப்பி போடுவான்.

    ReplyDelete
  11. இஸ்லாமியர்கள் தலையில் விருப்பமுடந்தான் தொப்பி உள்ளது. தொப்பி இஸ்லாமியனின் சின்னம். எப்படி இஸ்லாமியன் தனது சின்னத்தை விடுவான் ? இஸ்லாமியன் ஒரு போதும் தன சின்னம் தொப்பியை விடமாட்டான்.

    Reply

    ReplyDelete
  12. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறைவன் ஒருவன் என்றார்கள். ஒருவன் என்று ஏற்றுக்கொண்டோம். தொழுதார்கள் தொளுகச் சொன்னார்கள். தொழுகிறோம். நோன்பு பிடித்தார்கள், பிடிக்கச்சொன்னார்கள். நோன்பு பிடிக்கின்றோம். ஜக்காத் கொடுக்கச் சொன்னார்கள். கொடுக்கின்றோம். வாழ் நாளில் ஒருதடவை புனித ஹஜ் அதற்கு போகச்சொன்னார்கள் போகின்றோம். இவ்வாறு அனைத்தையும் அவர்கள் செய்துக் காட்டி நம்மையும் செய்யச்சொன்னார்கள். நம் முன்னோர்கள் அதனைப்பின்பற்றி நாமும் பின்பற்றுகிறோம். இது வாழையடி வாழையாக வரும் நம்பிக்கை, பழக்கம். இதை முறிக்கத் தான் ஆதாரக் கேளிவிகள், அப்புறம் இல்லை என்ற மறுப்புகள்,இவ்வாறு கச்சேரிகள் நடைபெறும். தன் பிறப்புக்கு ஆதாரம் யாரும் கேட்பதில்லை. சொன்னவுடன் நம்பிக்கொள்கின்றனர்.

    ReplyDelete
  13. Eneyavathu thoppe podatha unmaivathekal thoppe poduvarkal?

    ReplyDelete
  14. தொப்பி விஷயமாக பலரும் எழுதினார்கள். ஒருவர் கூட தலையை மறைப்பது பெருமானாரின் வழிமுறைகளில் ஒன்று என்று வாதிடவில்லை. அதேபோல் சிலரிடம் பெண்கள் முகத்தை மறைக்கக்கூடாது என்று வாதிட்டு வருகிறார்களாம். இதற்கு நேற்று நமதூர் மொஹிதீன் பள்ளி ஜும்மா பயானில் முப்தி அப்துல் ஹாதி அவர்கள் கொடுத்த விளக்கம்: இஹ்ராம் அணிபவர்கள் தலையை மறைக்கக்கூடாது, பெண்கள் முகத்தை மறைக்கக்கூடாது என்று சட்டமிருப்பதை வைத்து தான், முமீன்கள் தலை மேல்பகுதியை மறைப்பதும், பெண்கள் முகத்தை மறைப்பதும் சட்டமாக்கப்பட்டுள்ளது என்று விளக்கினார்கள்.

    இதற்குமுன்னர் புஹாரி ஷரீப் பயானில் பல ஆண்டுகளாக தொப்பி அணிவதை பற்றி மேற்சொன்ன ஆதாரத்துடனும், பெருமானார் (ஸல்) அவர்கள் வாழ்க்கையில் அதிகமான நேரம் தலையை மறைத்தவர்களாகவே இருந்துள்ளார்கள் என்றும், ஒரு சில சந்தர்பங்களில் ஒழு செய்யக்கூட தலைப்பாகையை எடுக்காமல், தூக்கிபிடித்தவர்களாக மஸஹ் செய்துள்ளதாகவும், நமதூர் மூத்த ஆலிம், இலங்கை காத்தான்குடி மதரசாவில் நீண்ட காலமாக முதல்வராக இருந்துவரும், அப்துல்லா ஆலிம் அவர்கள் சொல்லிவருகிறார்கள்.

    இதையெல்லாம் யாரும் கவனத்தில் கொள்வதாக இல்லை. சரி தொப்பி போடாமல் தொழபோகிறோமே, தலைமுடியையாவது பெருமானாரின் வழிமுறையில் எண்ணையிட்டு சீவி வருவார்களா என்றால் இல்லை, பரட்டையர்களைப்போல, ஏதாவது ஒரு கூத்தாடியை பார்த்துக்கொண்டு அவனைப்போல வேஷமிட்டு வருகிறார்கள். வேதனைக்குரிய விஷயம் இது. ஆசிரியர்களோ, பெற்றோர்களோ, பெரியவர்களோ கண்டு கொள்வதில்லை.

    ReplyDelete
  15. இனியாரும் கண்டுகொள்ளமாட்டார்கள். காரணம் மார்கம் அறிந்த வலிமையான தலைமைகள் அரிதாகி வருகின்றது. என்னதான் செய்ய? பத்தும் போனாலும் பதவிதான் வேண்டும். மார்க்கம் விலகி போகிறவனிடம் பணம் பண்ணும் வித்தை இருக்கிறது. அதனால் அவன் சொல்வது மார்க்கம் என்று அவனைச் சுற்றி உள்ளவர்கள் வழியில்லாது ஏற்கும் அளவிற்கு செல்கின்றனர். நமதூர் கடைவீதிக்கு பெண்கள் வருவதற்கு அச்சப்பட்டகாலம் அன்று. நாடு ரோட்டில் கூச்சல் போடும் கால் இன்று. காரணம் உரிமைப் போராட்டம் என்ற சப்பைக்கட்டு.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.