.

Pages

Monday, February 17, 2014

கும்பகோணத்தில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமிய மாநாட்டில் அதிரை கவிஞர் தாஹா, எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி கெளரவிப்பு ! [ படங்கள் இணைப்பு ]

கடந்த 14, 15,16 ஆகிய மூன்று நாட்களில் கும்பகோணம டி. எஸ் மகாலில் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் ஆதரவில் அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய எட்டாம் மாநாடு வெகு சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டை நடத்தும் பொறுப்புக்களை கும்பகோணத்தின் இஸ்லாமிய வணிகர்களின் பங்களிப்புடன் கூடிய கிஸ்வா என்று அழைக்கபப்டும் கும்பகோணம் இஸ்லாமிக் சோஷியல் வெல்பேர் அசோசியேஷன்( Kumbakonam Islamic  Social Welfare Association )  ஏற்று சீரும் சிறப்புடன் நடத்தியது. “ இலக்கியங்களால் இதயங்களை இணைப்போம்” என்பதே மாநாட்டின் கோஷமாக இருந்தது.

ஐ.நா சபையின் ஆசிய பசிபிக் வர்த்தக ஆலோசனைக் குழுத்தலைவரான மலேசியாவைச் சேர்ந்த டத்தோ டாக்டர். முகமது இக்பால் அவர்களும் அறிவுசார் சொத்துரிமை மேல் முறைஈட்டுத் தீர்ப்பாயத்தின் தலைவர் நீதியரசர் கே. என். பாஷா அவர்களும், சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் ஜி. எம். அக்பர் அலி அவர்களும், வானொலி மற்றும் தொலைகாட்சி வர்ணனையாளர் B. H அப்துல் ஹமீது அவர்களும், தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் முனைவர் ம. திருமலை அவர்களும் சாகித்ய அகடாமி விருது பெற்ற ஜோடி குரூஸ் அவர்களும் பேராசிரியர் மார்க்ஸ் அவர்களும் ஆளூர் ஷா நவாஸ் மற்றும் ஏ. ஆர். ரைஹானா அவர்களும் முன்னணி வகித்துக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் தலைமையில் தொடங்கிய மூன்று நாள் மாநாடு தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், இசை அறிஞர்கள், ஆகியோர் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அரபு நாடுகள் ஆகியவற்றிலிருந்து பல பிரதிநிதிகளும் குடும்பங்களுட ன் கலந்து சிறப்பித்தனர்.

முஸ்லிம்களின் இசைப் பாடல்கள் மரபுகள் என்ற தலைப்பில் ஆய்வரங்கு, இஸ்லாமிய பாரம்பரிய இசை மரபு சார்ந்த நிகழ்வுகள், கவியரங்கம் , பட்டிமன்றம் ஆகியவற்றுடன் மூன்று நாட்களும் பெருந்திரளான மக்கள் கூட்டத்துடன் கும்பகோணமே அமர்க்களப் பட்டது.

உமறுப் புலவர் விருது, இலக்கியச் சுடர் விருதுகள் ,இசைச்சுடர் விருதுகள் ஆகிய பல விருதுகளும் பொற்கிழியும் அறிஞர் பெருமக்களுக்கு வழங்கப் பட்டன. அதிரை கவிஞர் முகமது தாஹா அவர்களின் கவிதை நூல் வெளியிடப்பட்ட நூல்களில் ஒன்றாகும். அதிரை காதிர்  முகைதீன் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் அ. கலில் ரஹ்மான் அவர்கள் ஆய்வரங்கு ஒன்றின் நெறியாளராக நடத்தினார்கள்.  மாநாட்டில் வெளியிடப் பட்ட நூல்களுடன் அதிரை எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி அவர்கள் எழுதிய மனு நீதி மனித  குலத்துக்கு நீதியா – நூலும் உலகெங்கிலுமிருந்து வந்திருந்த அனைத்து விருந்தினருக்கும் பரிசாக வழங்கப்பட்டது. நீதியரசர்  முனைவர் பாஷா அவர்கள் உரையாற்றியபோது, அதிரையின் முதுபெரும் எழுத்தாளர் அதிரை அஹமது அவர்களைக் குறிப்பிட்டும், பட்டிமன்றத்திற்கு தலைமை ஏற்ற வாணியம்பாடி பேராசிரியர் தி. மு. அ. காதர் அவர்கள் அதிரையின் பேராசிரியர் அப்துல் காதர் அவர்களையும் குறிப்பிட்டும் தங்களின் உரையின் இடையே  பேசினார்கள். அதிரை காதிர்  முகைதீன் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஹாஜாகனி அவர்கள் கவியரங்கில் கலக்கினார்.

வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் கவிக்கோ அவர்கள் தலைமையில் பல அறிஞர்களுக்கும் ரூபாய் ஒருலட்சத்துடன் கூடிய உமறுப் புலவர் விருது நாகூர் ஈ. எம். ஹனிபா அவர்களுக்கும் வழங்கப்பட்டது.  வடக்குக் கோட்டையார்  முகமது அப்துல்லா அறக்கட்டளை சார்பான வாழ்நாள் இலக்கியப் பணிக்கான விருது கவிஞ்ர் அதிரை கவிஞர் மு. முகமது தாஹா அவர்களுக்கு வழங்கி இந்த மாநாடு பெருமை சேர்த்தது.

மாநாட்டின் அமைப்புக் குழுவின் செயலாளராகப் பணியாற்றிய உத்தம பாளையம் பேராசிரியர் மு. அப்துல் சமது அவர்களின் பணியை விழாவுக்கு வந்திருந்த அத்தனை பெரும் பாராட்டினார்கள்.

இஸ்லாமிய இலக்கிய கழக மாநாட்டின் முக்கிய நிகழ்வுகள் :
முக்கிய கருவாக இஸ்லாத்தில் இசை தவிர்க்கப்பட வேண்டியவை அல்ல என்பதாக இருந்தது. அது சம்பந்தமாக ஆய்வுகள் நடத்தப்பட்டன. இஸ்லாத்திற்கு இசை எதிரானதல்ல. இஸ்லாத்தில் இசை உண்டு என்ற கருத்தை மையமாகக் கொண்டே மாநாடு நிகழ்வுகள் இருந்தன.

மாநாடு நிகழ்வுகள் அதிராம்பட்டினம் பைத்துசபா அதனைக்கொண்டே கொடியேற்றம் செய்து மாநாட்டின் மேடையிலும் பைத்து சபா பாடல்கள் சிலவுடன் ஆரம்பம் செயப்பட்டது.

மாநாட்டு தலைவர் இஸ்லாத்தில் இசை கூடும் என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் தந்து நோட்டீஸ்களும் வெளியட்டு உரை நிகழ்த்தினார். மாநாட்டில் இஸ்லாமிய நீதிபதிகள், பேராசிரியர்கள், கவிங்ஞர்கள், புலவர்கள், அய்வாளர்கள் போன்ற தமிழ்நாடு, இலங்கை, மலேசிய, சிங்கப்பூர் அறிஞர்கள் கலந்துக் கொண்டனர்.

மேடையில் புர்தா ஷரீப் ஓதப்பட்டது. பொட்டால் புதூர் பக்கிரிசா பாடல்கள், காயல்பட்டினம் கல்யாண சபா பாடல்கள், ரிபாய் கவ்வாளிப் பாடல்கள் நடு இரவு வரை பாடப்பட்டன.

நாகூர் ஹனீபா உடன் பெண் குரலில் பாடும் சரளா மேடையில் பாடினார். அவருக்கு முத்துப் பேட்டை ரஹ்மத் அறக் கட்டளை பெரியவர் முஸ்தபா அவர்கள் பொன்னாடை போர்த்தி 50 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கினார்கள்.











7 comments:

  1. முதல் வரிசையில் முதல் ஆளாக நீதி அரசர் அக்பர் அலி அருகில் அமர்ந்திருக்கும் உலகம் முழுதும் இறுக்கும் தமிழர்களால் நன்கு அறியப்பட்ட எங்கள் அன்பு அறிவிப்பாளர் B . H அப்துல் ஹமீது அவர்களை தங்கள் கட்டுரையில் குறிப்பிடவில்லையே

    ReplyDelete
  2. அன்புச்சகோதரர் லியாகத் அலி

    சுட்டிகாட்டியமைக்கு நன்றி !

    வானொலி மற்றும் தொலைகாட்சி வர்ணனையாளர் B . H அப்துல் ஹமீது அவர்களின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  3. ஒரே நாளில் அதிரையிலும், கும்பகோணத்திலும் விருதுகள் அதிரை அருட்கவி அவர்கள் பெற்றுள்ளார்கள்.

    ReplyDelete
  4. மேடையில் அதிராம்பட்டினம் தபஸ் குழுவினர், மற்றும் எதோ ஆலிம்கள் ஒதுவதுபோலும், பக்கிரிசா பாடல் போலும், மதரச பிள்ளைகள் போலும் தெரிகிறதே இதன் விளக்கம் எழுதினால் விபரம் புரியலாமே.

    ReplyDelete
  5. சகோதரர் Ansari Adirai அவர்கள் கேட்டிருக்கும் கேள்விக்கு சிறு தகவலாக,

    கவி. கா. மு. ஷரீப் அரங்கில் தமிழ முஸ்லிம்களின் பாரம்பரிய இசைக்கலை நிகழ்ச்சிகள் என்ற ஒரு நிகழ்ச்சி மாநாட்டில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் குமரி அபூபக்கரின் திருவினும் திருவாய் மற்றும் தக்காளி ஹலீமாவின் ரபியுள் வசந்தம் ( தங்ங்கள் பைத் ) ஆகிய குறுந்தகடுகள் வெளியிடப் பட்டன.

    படத்தில் காண்பது புர்தா ஷரீப், பக்கீர்ஷா பாடல்கள், தாயிரா களி, திருமண பைத், சூபி பாடல்கள். ரிபாயி முர்ஷித் ஆகிய நிகழ்ச்சிகளின் அரங்கேற்றமே.

    ReplyDelete
  6. இஸ்லாமிய எழுத்தாளர்களையும் பாடகர்களையும் ஊக்குவிக்கும் பாராட்டஇந்த முயற்சி பாராட்டுக்குயுரியது.அதோடுஇஸ்லாமிய தனவந்தர்கள் ஒன்று கூடிகட்சி சார தமிழ் தினசரி ஒன்றை தொடங்க முயற்சிக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.