.

Pages

Saturday, February 29, 2020

அதிராம்பட்டினம் அருகே காரில் கடத்தப்பட்ட 6 மூட்டை கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது!

அதிராம்பட்டினம், பிப்.29
பட்டுக்கோட்டை வட்டம்,  தம்பிக்கோட்டை மறவக்காடு பாட்டுவனாட்சியார் பாலம் அருகே அதிராம்பட்டினம் போலீஸார் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாகச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அந்த காரில் 6 மூட்டைகளில் 220 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சா மூட்டைகளையும், அதை கடத்தப் பயன்படுத்திய காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக காரில் இருந்த மறவக்காடு கே.வெங்கட்ராமன் (48), தம்பிக்கோட்டை முருகேசன் (38) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில் கஞ்சா கடத்தல் சம்பவத்தில் மறவக்காடு குமார், பட்டுக்கோட்டை ஆர்.வி.நகரைச் சேர்ந்த அய்யம்பெருமாள் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மறவக்காடு குமார் (38) சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். தலைமறைவான அய்யம்பெருமாளை போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிராம்பட்டினத்தில் 11-வது நாள் தொடர் போராட்டம் ~ பேரணி (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.29
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் பிப்.19 ஆம் தேதி தொடங்கிய போராட்டம் 11-வது நாளாக சனிக்கிழமை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில், சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், ஜமாத் மற்றும் கிராம பஞ்சாயத் நிர்வாகிகள் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்துப் பேசி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாகவும், குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆா்) ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். சிஏஏ க்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்,  என்ஆா்சி, என்பிஆா் ஆகிய பணிகள் நடைபெறாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது. அதிராம்பட்டினம் நடுத்தெரு வழியாகச்  சென்ற பேரணியில், இந்திய தேசியக்கொடிகளை கையில் ஏந்தியவாறு, முழக்கமிட்டபடி சென்றனர். நிறைவில், அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் நடைபெறும் தொடர் போராட்டக் களத்திற்கு சென்றடைந்தது.
 

Friday, February 28, 2020

அதிராம்பட்டினத்தில் நடந்த எழுச்சிப் பேரணியில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு (படங்கள், வீடியோ)

அதிராம்பட்டினம், பிப்.28
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, அதிராம்பட்டினம் மேலத்தெரு, கீழத்தெரு, பெரிய நெசவுத்தெரு, தரகர் தெரு (ஆஷாத் நகர்) ஆகிய பகுதி பொதுமக்கள் சார்பில், பிரமாண்ட எழுச்சிப் பேரணி, அதிராம்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் பிப்.19 ஆம் தேதி தொடங்கிய போராட்டம் 10-வது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில், சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், ஜமாத் மற்றும் கிராம பஞ்சாயத் நிர்வாகிகள் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்துப் பேசி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக, அதிராம்பட்டினம் அதிராம்பட்டினம் மேலத்தெரு, கீழத்தெரு, பெரிய நெசவுத்தெரு, தரகர் தெரு (ஆஷாத் நகர்) ஆகிய பகுதி பொதுமக்கள் சார்பில், பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு, குடியுரிமை சட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் இந்திய தேசியக்கொடிகளை கையில் ஏந்தியவாறு,  குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆா்) ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக தீா்மானம் நிறைவேற்றி, தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்பிஆா்) ஆகிய பணிகள் நடைபெறாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டபடி சென்றனர்.

அதிராம்பட்டினம் மேலத்தெரு, கீழத்தெரு, பெரிய நெசவுத்தெரு, தரகர் தெரு (ஆஷாத் நகர்) ஆகிய பகுதிகளில் தொடங்கியப் பேரணி பேருந்து நிலையம், பழைய அஞ்சலக சாலை, கடைத்தெரு வழியாக அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் நடைபெறும் தொடர் போராட்டக் களத்தில் நிறைவடைந்தது.

இதுகுறித்து பேரணியில் பங்கேற்ற தீனுன் நிஷா கூறியது;
குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆா்) ஆகியவற்ற திரும்ப பெற வலியுறுத்தி அதிராம்பட்டினத்தில் 10-வது நாளாக இன்று (பிப்.28) வெள்ளிக்கிழமை போராட்டம் தொடர்கிறது. இதில்,பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் உட்பட பொதுமக்கள் பலர் பங்கேற்று வருகிறார்கள். இந்த சட்டம் திரும்ப பெரும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றார்.

குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டக்குழுவை சேர்ந்த வழக்குரைஞர் இசட். முகமது தம்பி கூறியது;
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம். இதுவரையில், மத்திய அரசோ, மாநில அரசோ தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. மாறாக, மக்களாகிய நாங்கள் இந்த கொடூர சட்டம் திரும்பப் பெரும் வரை எங்களது போராட்டம் தொடரும். 10-வது நாளான இன்று (பிப்.28) அதிராம்பட்டினத்தின் பல்வேறுப் பகுதிகளிலிருந்து  பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பேரணியாகப் புறப்பட்டு தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நடந்த போராட்டத்தின் இடையே வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட பாஜக, ஆர்.எஸ்.எஸ் காரர்களை கண்டிப்பதோடு, வன்முறையில் பலியான 38 குடும்பங்களுக்கும் நீதி வழங்க வேண்டும் என்பதை கோரிக்கையாகப் பதிவு செய்கிறோம் என்றார்.