அதிரை நியூஸ்: மார்ச் 31
தஞ்சாவூர் மாவட்டம், கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் உத்தரவின்படி, நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க, பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியில் வருவதை தவிர்ப்பதற்கு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் 8 எல்லைகளும் மூடப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
கொரானா தடுப்பு நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவில் வருவாய் துறை, பொது சுகாதாரத் துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் இதர துறை அலுவலர்களை கொண்ட 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.கொரோனா தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மற்றும் சந்தேகங்களின் மீது நடவடிக்கை எடுக்கும் குழு, புகார் கண்காணிப்பு குழு, தஞ்சாவூர் மாவட்டத்தில் தனிமை படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிக்கும் குழு, அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் தொடர்பான குழு, மருத்துவ குழு, புள்ளிவிபரங்கள் சேகரிப்பு குழு, சமூக இடைவெளி குழு, உணவு வழங்கல் குழு, அமலாக்க குழு ஆகிய குழுக்கள் கட்டுப்பாட்டு அறையில் செயல்பட்டு வருகின்றன.
மாவட்ட அளவிலான குழு, கோட்ட அளவிலான குழு, வட்டார அளவிலான கண்காணிப்பு குழு, நியாய விலை கடைகள் அளவிலான கண்காணிப்பு குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பு, கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1200 படுக்கைகள், அரசு மருத்துவமனைகளில் 300 படுக்கைகள், தனியார் மருத்துவமனைகளில் 900 படுக்கைகள் என மொத்தம் 2400 படுக்கைகள் தனிமைப்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
மேலும், தஞ்சாவூரில் தஞ்சாவூர் ரயில்வே மருத்துவமனையில் 28 படுக்கைகள், மருத்துவக்கல்லூரி வளாக நர்சிங் கல்லூரியில் 150 படுக்கைகள், ராசா மிராசுதார் மருத்துவமனை வளாக சி.இ.எம்.ஒ.என்.சி கட்டிடத்தில் 200 படுக்கைகள், கரந்தை சமுதாயக்கூடத்தில் 50 படுக்கைகள், செங்கிப்பட்டி பொறியியல் கல்லூரியில் 1100 படுக்கைகள், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காத்திருப்பு கட்டிடத்தில் 20 படுக்கைகள் என 6 மாற்று இடங்களில் 1548 படுக்கைகளும், கும்பகோணத்தில் 3 பள்ளிக்கூடங்களில் 40 படுக்கைகள், கண் வளாகத்தில் 40 படுக்கைகள் என 4 மாற்று இடங்களில் 80 படுக்கைகள், பட்டுக்கோட்டையில் 6 சமுதாயக் கூடங்களில் 120 படுக்கைகள், என்.ஹெச்.எம்-ல் 20 படுக்கைகள் என 7 மாற்று இடங்களில் 140 படுக்கைகள் என தஞ்சாவூர் மாவட்டத்தில் 17 மாற்று இடங்களில் 1768 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. அதைப்போன்று, வல்லத்தில் அமைந்துள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களை தனிமைப்படுத்துவதற்காக அறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பு பணியில் இருபத்தி இரண்டு 108 ஆம்புலன்ஸ்கள், 2 இருசக்கர ஆம்புலன்ஸ்கள், 78 தனியார் ஆம்புலன்ஸ்கள் என மொத்தம் 102 ஆம்புலன்ஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பால், காய்கறி, மருந்து, மளிகைப்பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை தடையின்றி கொண்டு செல்வதற்கு ஏதுவாக 396 வாகனங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 25 பொது இடங்கள், 8 சோதனைச் சாவடிகள், 26 அரசு அலுவலகங்கள் என மொத்தம் 59 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 39361 நபர்கள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு திரும்பிய 4676 நபர்களும், வெளி மாநிலங்களிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு திரும்பிய 447 நபர்களும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பொது விநியோக திட்டத்தின் கீழ் ஏப்ரல் 2020 மாதத்திற்கு 6712 டன் அரிசி முன் நகர்வு செய்யப்பட்டுள்ளது. அரசு வழங்கும் 1000 பணம், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை விலையின்றி வழங்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 1185 கொரோனா கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழுக்கள் மூலம் பொருட்களை அவரவர் வீட்டிற்கே விநியோகம் செய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் அவரவர் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் வீட்டிற்கே கொண்டு வந்து அளித்திட (Door Delivery) 100-க்கு மேற்பட்ட பெரிய மளிகை கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதற்காக இதுவரை 547 நபர்கள் மீதும், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் இடையூறு ஏற்படுத்தியதற்காக ஒரு நபர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவை மீறிய காரணத்தினால், 235 இருசக்கர வாகனங்கள் மற்றும் 40 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 275 வாகனங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு தவிர்க்க முடியாத காரணங்களுக்காக மாவட்ட எல்லையை தாண்டி செல்ல வேண்டியவர்கள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலர்- சார் ஆட்சியரிடம் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். (தஞ்சாவூர் - ero2_tanj@yahoo.com ) கும்பகோணம் - ero1_kbk@yahoo.com ) பட்டுக்கோட்டை - ero3_pkt@yahoo.com )
மேலும், கொரோனா நோய் முன்னெச்சரிக்கை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு 9345336838 (வாட்ஸ்அப்), 04362 - 271695, 1077 (கட்டுப்பாட்டு அறை) ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.