.

Pages

Wednesday, August 31, 2016

ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவிட தயார் நிலையில் 177 ஆம்புலன்ஸ்கள் மற்றும் இளைஞர்கள் !

அதிரை நியூஸ்:
சவூதி அரேபியா, ஆகஸ்ட்
சவுதி சுகாதார அமைச்சின் 'மருத்துவ சேவை வழங்கல் குழுவினர்' (medical supply committee) ஹஜ் யாத்ரீகளுக்கு உதவிட 177 ஆம்புலன்ஸ்களை தயார் நிலையில் வைத்துள்ளனர். இந்த ஆம்புலன்ஸ்களில் தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், மருத்துவ ஆய்வகத்திற்கு தேவையான பொருட்களும் இருக்கும். மேலும் இவர்கள் புனித தலங்களை சுற்றியுள்ள சுகாதார மையங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் தேவையான உணவுகளை வழங்குவதற்கும் உதவுவர்.

நோய் தடுப்பு, சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு (preventive, curative and awareness) தொடர்பான மருத்துவ பணிகளை மேற்பார்வையிடுவதன் மூலம் மருத்துவம் மற்றும் மருத்துவமல்லாத பாரமரிப்பு பணிகளிலும் புனித தலங்களை சுற்றியுள்ள மருத்துவமனைகளை ஒருங்கிணைத்து செயல்பட 'மருத்துவ சேவை வழங்கல் குழுவினர்' பணிக்கப்பட்டுள்ளனர்.

புனித ஹஜ், உம்ரா கமிட்டி மற்றும் மக்கா வர்த்தக சபையினரின் அறிவித்தலின்படி, அராபத் மலை அருகே 18,000 கூடாரங்களை அமைக்கும் பணிகளில் சுமார் 2000 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த கூடாரங்களில் 130,000 ஹஜ் யாத்ரீகர்களை தங்க வைக்க முடியும் எனக்கூறியுள்ளனர்.

இதற்கிடையில், கவனமாக தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பயிற்சியளிக்கப்பட்டுள்ள 700 சவுதி இளைஞர்கள் 24 மணிநேரமும் வயதானவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவிட நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் தேவையானவர்களுக்கு முதலுதவி செய்திடவும், மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை கொண்டு செல்லவும், ஏற்கனவே மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து வரும் நோயாளிகளுக்கு அருகேயிருந்து மருத்துவ மாணவர்களின் கண்காணிப்பின் கீழ் உதவிடவும் செய்வர்.

இதேபோன்ற சாரணர் குழுவினர் 2 முகாம்களை (Scout Camp) அமைத்து புனித மதீனா பிரதேசத்தில் மேற்படி உதவிகளை வழங்கி வருகின்றனர்.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

வழிபாட்டு உரிமையை பறிக்கும் செயலைக் கண்டித்து, பட்டுக்கோட்டையில் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம் !

பட்டுக்கோட்டை, ஆகஸ்ட் 31
வழிபாட்டு உரிமையை பறிக்கும் செயலைக் கண்டிக்கும் வகையில் தமுமுக சார்பாக கண்டன ஆர்பாட்டம் பட்டுக்கோட்டையில் இன்று மாலை நடைபெற்றது.

முஸ்லிம்களின் தியாக திருநாளான ஹஜ் பெருநாள் அன்று ஒட்டகம் அறுக்க தடை விதித்து, வழிபாட்டு உரிமையை பறிக்கும் அநீதியை கண்டித்து, தமுமுக சார்பில் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே பெருந்திரள் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் அதிரை அஹமது ஹாஜா தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமுமுக தலைமைக் கழக பேச்சாளர் ஏர்வாடி ரிஜ்வான் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.  பின்னர் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வழிபாட்டு உரிமையை பறிக்கும் செயலைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

முன்னதாக மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் எம். கபாஃர் வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் டாக்டர் உமர் நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், பேராவூரணி, ஆவணம், மல்லிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தமுமுக, மமகவினர் பலர் கலந்துகொண்டனர்.
 

ஹஜ் செய்திகள்: 1000 பாலஸ்தீனியர்களுக்கு மன்னரின் அழைப்பில் ஹஜ் செய்ய வாய்ப்பு !

அதிரை நியூஸ்:
சவூதி அரேபியா, ஆகஸ்ட் 31
பாலஸ்தீன மண்ணையும், ஜெருசலம் நகரையும், புனித அல் அக்ஸா பள்ளியை பாதுகாக்கும் பணியின் போது ஷஹீதாக்கப்பட்ட தியாகிகளின் குடும்பத்தினர்கள் 1000 பேர் இந்த வருடம் ஹஜ் கடமையை மன்னர் சல்மான் அவர்களின் அழைப்பு மற்றும் உதவிகளை கொண்டு ஹஜ்ஜை நிறைவேற்றவுள்ளனர்.

இதற்கிடையில், 700 மார்க்க அறிஞர்கள் அல்லாஹ்வின் விருந்தினர்கள் ஹஜ்ஜை அதன் தூய வழியில் நிறைவேற்றிடவும், 30 உலக மொழிகளைச் சார்ந்த இந்த அறிஞர்கள் ஹஜ் யாத்ரீகர்களுக்கு அவரவர் மொழிகளில் பேசி கடமைகளை நிறைவேற்ற உதவிடவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

துபாயில் பரிதவித்த பெண்ணை மீட்டு, தாயகம் அனுப்பிய அமீரக தமுமுகவினர் !

ஆம்பூரை சேர்ந்த பெண் ஒருவர் சவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்காக, ஏஜெண்ட் மூலம் நேற்றைய முன்தினம்(29/8/16) துபாய் வழியாக சென்றார்.
செல்லும் வழியில் துபாயில் ஒரு அறையில் இரவு தங்கியுள்ளார், அப்போது அவரோடு இருந்த ஏஜண்டுகள் தவறாக நடக்க முயன்றுள்ளனர்.

அதிர்ச்சி அடைந்த அந்த பெண், ஆம்பூரில் உள்ள தனது மகனை தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறி அழுதுள்ளார். எப்படியாவது தன்னை மீட்குமாறும் கூறியுள்ளார்.

உடனே அவரது மகன் என்னை தொடர்பு கொண்டார், நான் தமுமுகவின் அமீரக துணை தலைவர் சகோ.ஹூசைன் பாஷா மற்றும் துபை மமக செயலாளர் சகோ.A.S.இப்ராஹிம் ஆகியோரது தொடர்பு எண்ணை கொடுத்து பேச சொன்னேன்.

அந்த பெண் ஒரே முறை மட்டும் தான், தனது மகனை தொடர்பு கொண்டு இருந்தார், அதுவும் NET மூலம் பேசியிருக்கிறார். வேறு எந்த தொடர்பு எண்ணும் இல்லை, ஆனாலும் நமது சகோதரர்களின் தொடர் முயற்சியால், அந்த பெண்ணை கண்டுபிடித்து, சம்மந்தப்பட்டவர்களோடு பேசி, அவரை மீட்டு, அவருக்கு ஆறுதலும் அறிவுரையும் கூறி, சிறு தொகையை செலவுக்கு வழங்கி, சென்னைக்கு விமான டிக்கெட் எடுத்து கொடுத்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

துரிதமாகவும் பொறுப்பாகவும் செயல்பட்ட அமீரக செயலாளர் அண்ணன் அப்துல் ஹாதி, A.S.இப்ராஹிம், ஹூசைன் பாஷா, அஹ்மத் கான் மற்றும் துபையை சேர்ந்த தமுமுக சகோதரர்கள் அனைவருக்கும், எல்லாம் வல்ல அல்லாஹ் இம்மை மறுமையில் இதற்கான நற்கூலி வழங்குவானாக.

(ஏஜண்டுகளை நம்பி, அவர்களது ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி, இவரைப் போல் பலர் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். இனிமேலாவது கவனத்துடன் செயல்பட வேண்டும்.)

V.R.நசீர் அஹ்மத்.
மாவட்ட செயலாளர்.
தமுமுக. (வே.மே.)

துபாய் மெட்ரோவுடன் இணைக்கப்படும் இப்னு பதூதா மால் !

அதிரை நியூஸ்:
துபாய், ஆகஸ்ட் 31
14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இப்னு பதூதா என்கிற மொராக்கோ நாட்டு அரபியர் சுமார் 20 வருடங்கள் வீட்டை விட்டு வெளியேறி உலகத்தை சுற்றி வந்து எழுதிய பயணக்குறிப்புகளை கருப்பொருளாக கொண்டு துபாயில் கட்டியெழுப்பப்பட்ட 'இப்னு பதூதா மால்' துபாய்வாசிகள் மத்தியிலும், சுற்றுலாவாசிகள் மத்தியிலும் பிரசித்தி பெற்ற ஒன்றாக திகழ்கிறது.

இப்னு பதூதா பெயரில் அமைந்துள்ள, வரலாற்றுச் சிறப்புகளை எடுத்துச் சொல்லும் இந்த மாலில் சுமார் 400 கடைகளும், உணவகங்களும், இன்ன பிற நிறுவனங்களும் இயங்குகின்றன. தற்போது மேலும் ஒரு 5 நட்சத்திர ஹோட்டலுடன் 60 சில்லறை விற்பனை கடைகளும், உணவகங்களும், திரையரங்குகளும் அமைக்கப்பட உள்ளன.
ஆண்டுக்கு சுமார் 20 மில்லியன் வருகையாளர்களால் நிரம்பி வழியும் இந்த இப்னு பதூதா மாலுக்குள் செல்ல மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து 210 மீட்டருக்கு நடைபாலம் (Walkway) அமைக்கப்படுகிறது (ஏற்கனவே மால் ஆப் தி எமிரேட்ஸில் உள்ளது போல்). இந்தப் நடை பாலத்தை பயன்படுத்தி மெட்ரோ பயணிகளை போலவே RTA பஸ் பயணிகளும் பயனடையலாம் என்பதால் பயணாளிகளின் சிரமம் வெகுவாக குறையும்.

வரலாற்றுத் தகவல்:
இப்னு பதூதா அவர்கள் டெல்லியை ஆண்ட முஹமது பின் துக்ளக் ஆட்சி காலத்தில் இந்தியாவுக்கு வந்தவர் மேலும் துக்ளக் அரசவையில் மிகக்குறுகிய காலம் 'காஸி' எனும் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.

பின் குஜராத் வழியாக கேரளம் வந்து பின் மாலத்தீவுகளுக்கு சென்றவர். அதன் பின் ஸ்ரீ லங்கா வழியாக மதுரைக்கு வந்த சமயம் கியாஸூத்தீன் முஹமது தம்கானி என்ற சுல்தான் சிறிது காலம் மதுரையை ஆண்டுள்ளார் என வரலாற்று குறிப்புகள் கூறுகிறது.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

10.5 லிட்டர் இரத்த தானம் செய்து அதிராம்பட்டினம் இளைஞர் சாதனை !

அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 31
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் அஜ்மீர் ஸ்டோர் ஏ. சாகுல் ஹமீது. சமூக ஆர்வலரான இவர் 'மணிச்சுடர்' இதழின் அதிராம்பட்டினம் பகுதி நிருபராகவும், 'அதிரை நியூஸ்' இணையதளத்தின் நேர்காணல் நடத்துனராகவும் இருந்து வருகிறார்.

கடந்த 9 ஆண்டுகளாக ஆர்வத்துடன் தானாக முன்வந்து இரத்த தானம் செய்து வருகிறார். இதுவரையில் 29 தடவை இரத்தம் வழங்கி மொத்தம் 10 லிட்டர் 150 மில்லி கிராம் இரத்தம் வழங்கி உள்ளார். இந்நிலையில் இன்று புதன்கிழமை காலை 30 வது முறையாக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இரத்தம் வழங்கினார். இதுவரையில் 10.50 லிட்டர் இரத்தம் வழங்கி சாதனை புரிந்துள்ளார்.

இவருக்கு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை இளநிலை நிர்வாக அலுவலர் பாலச்சந்தர் வாழ்த்து தெரிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அருகில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை இரத்த வங்கி பொறுப்பாளர் கலைச்செல்வன், இரத்த கொடையாளர் ஜாகிர் ஹுசைன் ஆகியோர் உள்ளனர்.

இவரது இரத்த தான சேவையைப் பாராட்டி கடந்த ஜூன் மாதம் அதிரை சமூக நல அறக்கட்டளை சார்பில் 'சேவை விருது' வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தஞ்சையில் கடந்த ஆண்டு நடைபெற்ற இரத்ததான ஒருங்கிணைப்பாளர் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் இவருடைய குருதிக்கொடை சேவையை பாராட்டி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த திரு. பாஸ்கரன் அவர்கள், தஞ்சை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தேசிய தன்னார்வ இரத்ததான விழாவில் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் இ. அஹமது எம்பி, பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அப்துல் ரஹ்மான் எம்பி, பட்டுக்கோட்டை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் திரு. என்.ஆர். ரெங்கராஜன் எம்எல்ஏ ஆகியோரிடம் பாராட்டுதலை பெற்றுள்ளார். மேலும் அதிரை லயன்ஸ் சங்கம் வழங்கிய குருதிக்கொடையாளர் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
 
 
 

அபுதாபியில் 'மகளிர் மட்டும்' பிங்க் கார் பார்க்கிங் அறிமுகம் !

அதிரை நியூஸ்:
அபுதாபி, ஆகஸ்ட் 31
அமீரகத்தில் குறைந்த சம்பளத்தில் உள்ளவர்கள் கூட கார் வாங்கிவிட முடியும் ஆனால் அந்தக் காரை நிறுத்த நேரத்திற்குள் பார்க்கிங் கிடைப்பது என்பது தான் குதிரை கொம்பு. பலரும் பார்க்கிங் வசதியை தேடி மணிக்கணக்கில் அலைவதும் உண்டு. இந்நிலையில் பெண்களுக்கும் மட்டும் 'பிங்க் பார்க்கிங்' எனும் ரோஸ் வண்ணம் பூசப்பட்டு அடையாளமிடப்பட்டுள்ள சிறப்பு வசதியை குறிப்பிட்ட பகுதிகளில் அபுதாபி அறிமுகம் செய்துள்ளது, இந்த வசதி இன்னும் விரிவுபடுத்தப்படும்.

பல அடுக்குமாடி பார்க்கிங் கட்டிடங்களிலும் (Multi-Storey Car Parking Buildings)) இந்த பிங்க் பார்க்கிங் வசதிகள் அதிகம் ஏற்படுத்தித் தரப்படும். மேலும் இந்த பிங்க் பார்க்கிங் வசதியை முறைகேடாக பயன்படுத்தும் ஆண்களின் வாகனங்கள் இழுத்துச் செல்லப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் மகளிர் மட்டும் கார் பார்க்கிங் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விபரம்:
1. லிவா சென்டர் பின்புறம் 26 இடங்கள்
2. கோர்னிச் ஏரியா 18 இடங்கள்
3. லிவா ஸ்ட்ரீட் 26 இடங்கள்
4. ஜாகெர் ஹோட்டல் பின்புறம் 28 இடங்கள்
5. சுகாதார ஆணைய அலுவலக பின்புறம் 18 இடங்கள்
6. அல் நூர் ஹாஸ்பிட்டல் பின்புறம் 25 இடங்கள்
7. அல் டனா, அபுதாபி தவ்தீன் கவுன்சில் பின்புறம் 41 இடங்கள்.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

துபாயில் இனி மாலை நேரங்களிலும் தங்குமிடங்களில் சோதனை !

அதிரை நியூஸ்:
துபாய், ஆகஸ்ட் 31
துபாயின் ரெஸிடென்ஷியல் ஏரியாக்கள் மற்றும் வில்லாக்களில் நடைபெறும் வாடகை வீடுகள் தொடர்பான விதிமீறல் குற்றங்களை கண்டுபிடிக்க மாலை நேரங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்படுமென துபாய் மாநகராட்சி அறிவித்துள்ளது.

துபாயில் ரெஸிடென்ஷியல் ஏரியாக்கள் எனப்படும் குடும்பத்தினர் மட்டும் வசிக்க அனுமதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் மற்றும் ஒரு குடும்பம் மட்டுமே வசிக்க அனுமதிக்கப்பட்டுள்ள வில்லாக்களை பகிர்ந்து (Sharing Basis) கொண்டு வாழும் ஒன்றுக்கு மேற்பட்டவர்களை பிடித்து சட்டப்படி தண்டிக்க மாலை நேர சிறப்பு சோதனை குழுக்களை துபாய் மாநகராட்சி அமைத்துள்ளது.

பொதுவாக, பகலில் தங்குமிடங்களை பூட்டிவிட்டு பெரும்பான்மையோர் வேலைக்குச் சென்றுவிடுவதால் விதிமீறல்களில் ஈடுபடுவோரை சோதனை செய்ய முடியாமல் போவதாலேயே மேலதிகமாக இந்த மாலை நேரக் சோதனைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது.

இந்த சிறப்பு சோதனைக் குழுக்கள் மாலை நேரங்கள் மட்டுமின்றி வார விடுமுறை தினங்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து சோதனைகளை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Tuesday, August 30, 2016

அதிரையில் செப். 8 ந் தேதி விநாயகர் ஊர்வலம்: அமைதி பேச்சுவார்த்தையில் இஸ்லாமிய அமைப்புகள் - ஜமாத்தார்கள் பங்கேற்பு !

அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் எதிர்வரும் [ 08-09-2016 ] அன்று வியாழக்கிழமை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற உள்ளது.

இதையொட்டி அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் அதிரை இஸ்லாமிய அமைப்புகள், ஜமாத்தார்கள் கலந்துகொண்ட அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் கடந்த [ 27-08-2016 ] அன்று நடைபெற்றது.

கூட்டத்தில் பட்டுக்கோட்டை காவல் உதவி கண்காணிப்பாளர் தலைமை வகித்தார்.  அதிராம்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது காவல்துறையினற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பது, காவல்துறையினர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவது, மதநல்லிணக்கத்துடன் நிகழ்ச்சி நடைபெற முழு ஒத்துழைப்பு கொடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை தாருத் தவ்ஹீத், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய அமைப்புகளை சேர்ந்த அதிராம்பட்டினம் நிர்வாகிகள், புதுத்தெரு மிஸ்கீன் சாகிப் பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நடந்துவரும் அகல ரயில் பாதை விரிவாக்கப் பணிகள்; ரயில்வே உயர் அதிகாரி ஆய்வு ! ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற்று வரும் திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டப் பணிகளை தென்னக ரயில்வே சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு முதன்மை துணை பொறியாளர் சாம்சங் விஜயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டப் பணிகள் தொடர்பாக தென்னக ரயில்வே சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு முதன்மை துணை பொறியாளர் சாம்சங் விஜயகுமார் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நடந்து வரும் பணிகளை இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கட்டுமானப் பிரிவு உதவி  நிர்வாக பொறியாளர்கள் பி. செல்வம், கணபதி, உதவி பொறியாளர் எட்வின் ஆகியோர் உடனிருந்தனர்.

அப்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க பொறுப்பாளர்கள் விவேகானந்தம், லாசர், அதிராம்பட்டினம் சமூக ஆர்வலர்கள் ஹனீபா, கே.எம்.ஏ ஜமால் முஹம்மது, சேக்கனா நிஜாம், மணிச்சுடர் சாகுல் ஹமீது, முஹம்மது தமீம், செல்வம், அபூபக்கர், அன்வர், அன்சாரி உள்ளிட்டோர் அதிகாரிகளை சந்தித்து பணிகளை விரைந்து முடித்து தர கோரிக்கை விடுத்தனர். பின்னர்
அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் கிராவல் மற்றும் மணல் கலவை நிரப்பும் பணியை பார்வையிட்டனர்.

திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டப்பணியில், பட்டுக்கோட்டை - அதிராம்பட்டினம் - முத்துப்பேட்டை வரை உள்ள 63 சிறுபாலங்களில் 40 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 5 பெரிய பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2017 மார்ச் 17-க்குள் காரைக்குடி, பட்டுக்கோட்டை பணிகள் முடிவடையும். பட்டுக்கோட்டையிலிருந்து திருவாரூர் வரையிலான பணிகள் 2018 மார்ச்சில் முடிவடையும் என கூறப்படுகிறது.



 

கிரீன் காபி குடிக்காதிங்க ! துபாய் மாநகராட்சி எச்சரிக்கை !!

அதிரை நியூஸ்:
துபாய், ஆகஸ்ட் 30
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்னு சொல்ற மாதிரி தான் கிரீன் காபி குடிச்ச நல்ல இருக்கலாம்னு சொல்றதும்.

ஏற்கனவே இளச்சி போய் இருக்கிற எந்த பொம்பள படத்தையாவது போட்டு வெளம்பரம் பன்னுன யோசிக்காமா குடிப்பாய்ங்க என்கிற நம்பிக்கைல என்னாமா மார்க்கெட்டிங் பன்றானுங்க கொலகார பாவிங்க.

கிரீன் டீ குடித்தால் கொலாஸ்ட்ரால் குறையும் என்று ஏற்கனவே மக்கள் நம்புவதால் இப்ப கிரீன் காபி 1000 குடிக்க சொல்லி அள்ளிவிட்ருக்கானுங்க வெள்ளக்காரனுங்க ஆனால் இதை குடித்தால் உடம்பு இளைக்குதோ இல்லையோ ஆயுசு இளைக்கும்.

அட ஆமாங்க! இதில் கலந்துள்ள Sibutramine and Phenolphthalein போன்ற சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்களால் கண்டிப்பாக ஹார்ட் அட்டாக் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட பல நோய்களும் இலவச இணைப்பாய் வருமாம்.

எனவே, துபாய் மாநகராட்சி இந்த கிரீன் காபி 1000 என்ற பொருளை இறக்குமதிக்கும், பாவனைக்கும் தடை செய்துள்ளதுடன் இதுகுறித்த எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது.

உடம்பு இளைக்க ஆசப்பட்டு உசிருக்கு உலை வச்சுக்காதிங்க!

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

ஹஜ் செய்திகள்: கண்காணிப்பு வளையத்திற்குள் 33 ஆயிரம் உணவகங்கள் !

அதிரை நியூஸ்:
சவூதி அரேபியா, ஆகஸ்ட் 30
புனித ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ள யாத்ரீகர்களின் நலன் கருதி புனித மக்கா நகரைச் சுற்றியுள்ள உணவகங்கள், பேக்கரிகள், சூப்பர் மார்க்கெட்டுகள் ஆகியவைகளை உள்ளடக்கிய 33 ஆயிரம் உணவு சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையங்கள் சிறப்பு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

உணவின் தரம், தண்ணீர், இனிப்பு வகைகள் மற்றும் விலை என அனைத்தையும் பல்வேறு அரசு சார் நிறுவன அதிகாரிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுக்கள் கண்காணிக்கும் என்றும் இதில் 33,000 நிரந்தர உணவகங்களுடன் ஹஜ் காலத்திற்கு மட்டும் செயல்பட சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ள 2,000 உணவகங்களும் சேர்த்து கண்காணிக்கப்பட்டு தவறு செய்வோர் நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுவர் என மக்கா நகரின் முனிசிபாலிட்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழில்: நம்ம ஊரான்

பெருநாள் விடுமுறையில் கண்ணுக்கும், மனதுக்கும் இதமளிக்கும் ஓமனின் 'சலாலா' படங்கள்

அதிரை நியூஸ்: ஆகஸ்ட் 30
பசுமை போர்த்திய கேரளா மாநிலத்தை 'கடவுளின் தேசம்' (God's Own Country) என மலையாளிகள் தற்பெருமை பேசுவதை பார்த்திருப்போம், இதையே செயற்கையாய் விளைத்திட துபை உட்பட பல அரபு நாடுகள் பில்லியன் கணக்கில் செலவிட்டு வருவதையும் நிதர்சனமாய் பார்த்து வருகிறோம் ஆனால் இப்படி எத்ததைய முயற்சியுமின்றி, செலவுமின்றி கேரளாவின் சிறுபகுதியை பெயர்த்தெடுத்து பொருத்தியது போல் அதே இயற்கை பசுமை சுகத்தை தன்னகத்தே சுமந்துள்ளதென்றால் நம்ப முடிகிறதா?

ஆம், ஓமனின் 'சலாலா' (Salalah) எனும் இயற்கை மலைப் பிரதேசமே அது. நல்ல கன்டிஷனில் சொந்த வாகனம் வைத்திருப்போர் அல்லது விமானத்தில் சென்று வர வசதியுடையோர் எதிர்வரும் ஹஜ் பெருநாள் விடுமுறையில் சென்று வர அற்புதமானதொரு சுற்றுலாத்தலம்.

என்ன நண்பர்களே! குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் செல்ல ரெடியா? மறக்காமல் உங்கள் பாஸ்போர்ட்டை எடுத்துச் செல்லுங்கள், எல்லையில் விசா கட்டணம் செலுத்த வேண்டும் என்பதையும் நினைவில் கொள்க!

இதோ உங்களுக்காக சில படங்கள்...
  
 
 
 
 
 
 
 
குறிப்பு: 
இந்திய மன்னர்களில் இஸ்லாத்தை முதன்முதலில் தழுவிய, இந்தியாவில் முதல் மஸ்ஜிதை கட்ட உத்தரவிட்ட, நபி (ஸல்) அவர்களை நேரில் சந்தித்ததாக நம்பப்படும் மன்னர் சேரமான் பெருமாள், நபி (ஸல்) அவர்களை சந்தித்துவிட்டு மீண்டும் கேரளா திரும்பும் வழியில் உடல் சுகவீனமற்று மரணிக்க, இதே சலாலாவில் தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். (தகவல்: CMN சலீம் அவர்கள்)

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

பட்டுக்கோட்டை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அதிரை சேர்மன் உட்பட 16 அதிரையர் கைது !

பட்டுக்கோட்டை, ஆகஸ்ட் 30
காவிரியில் இருந்து தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

காவிரியில் உடனடியாக தண்ணீரைப் பெற மத்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்றும், இதற்காக சட்டப்பேரவையில் அவசர தீர்மானம் நிறைவேற்றி அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரை முதல் அமைச்சர் சந்திக்க வேண்டும் உள்ளிட்டவைகளை வலியுறுத்தி தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக பட்டுக்கோட்டை மணிக்குண்டு அருகே நடந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு திமுக தஞ்சை தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் கா. அண்ணாதுரை தலைமை வகித்தார். இந்த போராட்டத்தில் அதிராம்பட்டினம் பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில், பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம் முன்னிலையில் ஒன்றிய பிரதிநிதி மருதையன், நிஜாமுதீன், இஷாக், மல்ஹர்தீன், அன்வர்தீன், ஜாகிர் உசேன், ஜஹபர் அலி, பகுருதீன், சைஃபுதீன், அமீன், அப்துல்லா, இப்ராஹீம், சாகுல்ஹமீது, கனி, காதர், ஹனீப், அஸ்லம், ராஜதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் அதிராம்பட்டினத்தை சேர்ந்த 16 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு பட்டுக்கோட்டை தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.