ஏன் இல்லை ? வரலாற்றுகளில் முக்கியப் பங்கு வகிக்கும் கடைமடைப் பகுதியான அதிராம்பட்டினம் பண்டையக் கால வணிக வியாபாரத்தில் சிறந்து விளங்கியது. பெரும்பாலான வணிகர்கள் தங்களுடைய வியாபாரமாக தேங்காய், மீன், நண்டு, கருவாடு, இறால் போன்ற விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்து வந்தனர் - வருகின்றனர். அதுமட்டுமா ! தமிழகத்தில் உப்பு அதிகமாக உற்பத்தி செய்யக் கூடிய ஊர்களில் அதிராம்பட்டினமும் ஒன்று என்பது கூடுதல் சிறப்பாகவே இருந்து வருகிறது.
இவ்வூரில் கஸ்டம்ஸ் அலுவலகம், வானொலி நிலையம், துறைமுகம், நூலகம், தமிழக அளவில் புகழ் பெற்ற கல்லூரி, தொழிற்பயிற்சிக் கூடங்கள், மேல்நிலைப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், இரயில் நிலையம், தபால் நிலையம், காவல் நிலையம், வானிலை ஆராய்ச்சி நிலையம், கடலோரப் காவல் படை அலுவலகம், எரிபொருள் விற்பனை நிலையங்கள், சார்பதிவாளர் அலுவலகம், துணை மின் நிலையம், அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகள், மத்திய வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், வழிபாட்டுத் தளங்கள் உள்ளிட்டவை அடங்கும். மேலும் இப்பகுதியை சுற்றி மகிழங்கோட்டை, தொக்காளிக்காடு, ராஜாமடம், புதுப்பட்டினம், மல்லிபட்டினம், ஆண்டிக்காடு, கொள்ளுக்காடு, மருதங்க வயல், கூடலிவயல், ஏரிபுறக்கரை, கீழத்தோட்டம், பழஞ்சூர், மளவேனிக்காடு, ராசியங்காடு, முடிச்சிக்காடு, மஞ்சவயல், நடுவிக்காடு, விலாரிக்காடு, உள்ளூர் புதுக்கோட்டை உட்பட்ட கிராமங்களில் சுமார் 3 லட்சம் வரை மக்கள் தொகையை கொண்ட பரந்த பகுதியாக விரிந்து காணப்படுகின்றன.
இவ்வளவு சிறப்புகளைப் பெற்ற பகுதியில் ‘தாலுகா அலுவலகம்’ இல்லாதது பெறும் குறையாக இருந்து வருகின்றன. அதிரையில் வசிக்கும் ஒருவர் தாங்கள் வசிக்கும் இருப்பிடத்திலிருந்து தாலுகா அலுவலகம் செல்ல வேண்டும் என்றால் குறைந்தது ஒரு ஆட்டோ அல்லது இரண்டு பஸ்கள் மாறி சுமார் 20 கி.மீ., தூரம் வரை பயணம் செய்ய வேண்டியுள்ளது. அதிரைக்கே இந்த கதி என்றால் அதிரையின் பகுதியை சுற்றியிருக்கும் கிராமங்களில் வசிக்கக் கூடியவர்களின் நிலை எவ்வாறு இருக்கும் !?
கல்வி உதவித்தொகை சான்றுகள் பெறவும், பட்டா மாறுதல், ரேஷன் கார்டு தொடர்பான குறைகளுக்கும், நலத்திட்ட உதவிகள் பெறவும், நிலத்தை அளவீடு செய்வதற்கும் நீண்ட தூரத்தில் அமைந்துள்ள தாலுகா அலுவலகத்திற்கு செல்ல வேண்டியதோடு மட்டுமல்லாமல் அங்கே மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுகிறது.
நீண்ட தூரத்தை கருத்தில் கொண்டு வேலை செல்லும் பொதுமக்களும், வயோதியர்களும், கல்லூரி, பள்ளிகளுக்குச் செல்லும் மாணவ மாணவிகளும் சான்று பெறுவதற்காக தாங்கள் பணி புரிகின்ற நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளிலிருந்து விடுமுறை எடுத்துக்கொண்டே தாலுகா அலுவலகத்துக்குச் செல்கின்றனர். இந்த பணிக்காக சிலர் இடைத்தரகர்களிடம் தங்களின் பணத்தை இழப்பதும் அவ்வப்போது உண்டு.
இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண, அதிராம்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா அமைக்க வேண்டும். இதற்காக அதிரையில் கடந்த 1981 ஆம் ஆண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மேலத்தெரு பகுதியில் புதிதாக கட்டப்பட்டிருந்த நீர்த்தேக்க தொட்டியிணை திறந்து வைப்பதற்காக காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் அதிரை மாநகருக்கு வருகை புரிந்தார். அப்போது எம்ஜிஆர் அவர்கள் தனது சொற்பொழிவின் போது, விரைவில் அதிரையை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகாவாக மாற்றப்படும் என்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த மாபெரும் கூட்டத்தில் பகிரங்கமாகவே அறிவித்தார். அன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களும் தங்கள் பகுதியின் நீண்ட நாள் கோரிக்கையான தாலுகா அலுவலகம் விரைவில் நம் பகுதியில் வர இருக்கின்றதை எண்ணி மகிழ்ந்ததோடு மட்டுமல்லாமல் நீண்ட கரஒலியை எழுப்பி அவருக்கு நன்றியும் தெரிவித்தனர்.
அறிவிப்பு செய்து 35 ஆண்டுகள் கடந்துவிட்டன...
எண்ணற்ற அரசியல் மாற்றங்கள்,
புதிய கட்சிகள்,
புதிய இயக்கங்கள்,
சமூக அமைப்புகள்,
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்
என உருவாகி இருந்தாலும் அதிராம்பட்டினம் அதிரையாகவே இருக்கின்றன அதன் வளர்ச்சிப் பாதையில் பின்தங்கியே காணப்படுகின்றன.
எம்.ஜி.ஆர் அவர்களின் 'தாலுகா கனவு' அதிராம்பட்டினத்தில் நனவாகுமா !?
சேக்கனா நிஜாம்
( Published: சமூக விழிப்புணர்வு பக்கங்கள், Dated: January 16, 2013 )
அந்த கூட்டத்தில் நானும் தான் இருந்தேன் மகளீருக்கு என்று தனி மேல் நிலை பள்ளியும் மேலும் அதிரை தாலூக்காவாக அமையவேண்டும் என்றும் அதற்காக MGR அவர்களால் அறிவிப்புகள் கொடுக்கப்பட்டது .கால மாற்றங்களில் மகளீர் மேல் நிலை பள்ளிகள் வந்துவிட்டன ஆனால் தாலுக்கா இதுவரை அமையவில்லை .
ReplyDelete