.

Pages

Sunday, August 28, 2016

பட்டுக்கோட்டை காவல் நிலைய லாக்கப்பில் கைதி மரணம்; சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் !

பட்டுக்கோட்டை, ஆக. 28:
பட்டுக்கோட்டை காவல் நிலைய லாக்கப்பில் கைதி ஒருவர் மரணமடைந்தார். அவர் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த ஏனாதி கரம்பை கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் மகன் ரவி என்கிற ரவிகாந்த் (37). திருமணமாகாதவர்.

சில தினங்களுக்கு முன் தென்னங்குடி கிராமத்தில் ஒரு வீட்டில் திருடியதாக பேராவூரணி போலீஸார் ரவிகாந்தை கைது செய்து, அவரை ஆஜர்படுத்துவதற்காக சனிக்கிழமை இரவு பட்டுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதி மன்றத்துக்கு அழைத்துச் சென்றனர். நேரமாகி விட்டதால் மறுநாள் காலையில் கைதியை அழைத்து வரும்படி நீதிமன்ற ஊழியர்கள் கூறினராம்.

இதையடுத்து, பேராவூரணி போலீஸார் சனிக்கிழமை இரவு ரவிகாந்தை பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய லாக்கப் அறையில் அடைத்தனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை ரவிகாந்த் லாக்கப் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவலறிந்ததும் தஞ்சாவூர் எஸ்பி மகேஷ், பட்டுக்கோட்டை ஏஎஸ்பி அரவிந்த் மேனன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, போலீஸார் கைதி ரவிகாந்தின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமலிருக்க பட்டுக்கோட்டை நகரில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தகவலறிந்து பட்டுக்கோட்டைக்கு வந்த ரவிகாந்தின் உறவினர்கள் ரவிகாந்த் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறினர்.

இச்சம்பவம் குறித்து பேராவூரணி காவல் உதவி ஆய்வாளர் தங்கவேலு அளித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் கே. சிங்காரவேலு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்
ரவிகாந்த் மரணம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டச்  செயலர் ஆர். மனோகரன் கூறுகையில், போலீஸ் காவலில் இளைஞர் ரவிகாந்த் மரணம் அடைந்துள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. லாக்கப் மரணங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. போலீஸ் காவலில் மரணம் நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது. முறையாக ரவிகாந்த் உடற்கூறாய்வு நடத்தப்பட வேண்டும். ரவிகாந்தின் உறவினர்களை போலீஸார் மிரட்டி இந்த வழக்கை தற்கொலை வழக்காக மாற்ற முயற்சி செய்வதாக வரும் தகவலை புறந்தள்ள முடியாது. காவல்துறையினர் சமரச முயற்சியில் ஈடுபடாமல் லாக்கப் சாவுக்குக் காரணமான நபரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். இளைஞரின் மரணத்தில் மறைந்துள்ள மர்மம் வெளிவர வேண்டும். பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.