.

Pages

Tuesday, December 1, 2015

ஹலோ போலீஸ் திட்டம் தொடக்கம் !

தஞ்சாவூரில் பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஹலோ போலீஸ் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தைத் தொடக்கி வைத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் என்.எம். மயில்வாகனன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
சிறு, சிறு பிரச்னைகள் தொடர்பாக பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கும் விதமாக இந்த ஹலோ போலீஸ் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 83000 71100 என்ற எண் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்டக் காவல் அலுவலகத்தில் ஒரு சிறப்புப் பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுஇடங்களில் தகராறு, பெண்களைக் கேலி செய்தல் உள்பட பொதுமக்களுக்கு இடையூறாக எந்த பிரச்னை நிகழ்ந்தாலும் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவித்தால், தொடர்புடைய காவல் நிலையத்தில் இத்திட்டத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள போலீஸாருக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் அளிப்பவரின் பெயர், முகவரி எதுவும் கேட்கப்படமாட்டாது.

இதற்கென மாவட்டத்தில் உள்ள 43 காவல் நிலையங்களிலும் தலா ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர், ஒரு ஊர்க்காவல் படை வீரர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஒரு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சிறப்புப் பிரிவுக்குத் தகவல் அளிப்பர். தவிர, மாவட்டத்தில் குற்ற நடவடிக்கைகளைக் குறைப்பதற்காக 16 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 8 படைகள் கொலை, கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்கவும், 8 படைகள் பிக்பாக்கெட் போன்ற சிறு திருட்டுச் சம்பவங்களைத் தடுக்கவும் அமைக்கப்பட்டுள்ளது என்றார் மயில்வாகனன்.
* file image

1 comment:

  1. பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களின் வருகையால் தகவல்பரிமாற்றம் எளிதாகி வருகிறது. சமூகத்தில் நடக்கும் அவலங்கள் குறித்த பதிவுகள் இருப்பினும் அதனை புகாராக சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று தெரிவிப்பதில் சிக்கல்கள் உள்ளன. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் ஸ்மார்ட் போன் கையாளாதவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவுதான், பொதுமக்கள் புகார்களை வீடியோ, போட்டோ மூலம் தெரிவிக்க வாட்ஸ்அப் திட்டம் தஞ்சாவூர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சி.

    சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் இனி உளவுத்தகவல் தருபவர்களாகவே பார்க்க வேண்டும். சில நேரங்களில் சொந்த பிரச்னைகளில், வேண்டுமென்றே யாரையாவது சிக்கவைக்கவேண்டும் எனவும் தகவல்களை அனுப்ப வாய்ப்புள்ளது. இருப்பினும் புகாரின் உண்மைத்தன்மையை விரைவிலேயே கண்டறிய வேண்டும் . ஹலோ போலீஸ் திட்டத்தின் படி குற்றங்கள் நடக்காமலும் தடுக்க வாய்ப்புள்ளது. Good Focus !

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.