.

Pages

Thursday, July 31, 2014

திமுக தஞ்சை மாவட்ட பொறுப்பாளருடன் அதிரை பேரூராட்சி தலைவர் சந்திப்பு !

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு திமுக கட்சியில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. குறிப்பாக தஞ்சை மாவட்டச் செயலாளராக பணியாற்றிய  பழனிமாணிக்கம் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து தஞ்சை மாவட்ட பொறுப்பாளராக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் து.செல்வம் புதிதாக நியமிக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து இன்று அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் தலைமையில் சென்ற அதிரை நகர திமுக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக மாவட்ட பொறுப்பாளர் து.செல்வத்தை சந்தித்து தங்களின் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்து மகிழ்ந்தனர். இதில் பட்டுகோட்டை ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், 19 வது வார்டு செயலாளர் நிஜாமுதீன் உள்ளிட்டோர் உடன் சென்றனர். சந்திப்பின் போது பட்டுக்கோட்டை முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை மற்றும் ஏனைய திமுக பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.


பட்டுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் !

காப்பீட்டு துறையில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து தஞ்சை கோட்ட காப்பீட்டு கழக ஊழியர்கள் சங்கத்தின் பட்டுக்கோட்டை கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
             
காப்பீட்டு துறையில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் நோக்கில் மத்திய பாஜக அரசு மக்களவையில் வியாழன் அன்று ஒரு மசோதாவை தாக்கல் செய்வதாக அறிவித்தது. பின்னர் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக ஏற்பட்ட அமளியால் மக்களவை ஓத்தி வைக்கப்பட்டது.மத்திய அரசின் இந்த முயற்சியை கண்டித்து நாடு முழுவதும் காப்பீட்டு கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
           
பட்டுக்கோட்டை எல்ஐசி கிளை அலுவலகத்தில் வியாழன் அன்று மதியம் உணவு இடைவேளையின் போது கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காப்பீட்டு கழக ஊழியர்கள் சங்கத்தின் பட்டுக்கோட்டை கிளை தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். கிளை செயலாளர் சம்பத், இளங்கோவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பக்கிரிசாமி நன்றி கூறினார். சங்கீதா, எல்ஐசி முகவர் திருமேனி, மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட நூறு பேர் கலந்து கொண்டு முழக்கமெழுப்பினர்.

செய்தி : 
எஸ்.ஜகுபர்அலி,
பேராவூரணி.

அமெரிக்கா கலிபோர்னியாவில் வசிக்கும் அதிரையரின் பெருநாள் சந்திப்பு [ படங்கள் இணைப்பு ] !

உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் அமெரிக்கா கலிபோர்னியாவிலும் வசித்து வருகின்றனர்.  அமெரிக்கா கலிபோர்னியாவில் வாழும் முஸ்லீம்கள் பெருநாளை இன்று சிறப்பாக கொண்டாடினர்.

இன்று காலையில் அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள மஸ்ஜீத்தில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் அதிரையர்கள் ஒன்றாக கலந்து கொண்ட ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்.

அதிரை ஈசிஆர் சாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் தமிழன் டிவி செய்தியாளருக்கு பலத்த காயம் !

அதிரை முத்தம்மாள் தெரு நுழைவாயிலை ஒட்டி அமைந்துள்ள ஈசிஆர் சாலையில் இன்று காலை ஏற்பட்ட வாகன விபத்தில் தமிழன் டிவி செய்தியாளருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அதிரை பாரதியார் தெருவை சேர்ந்தவர் தண்டாயுதபாணி இவரது மகன் ரமேஷ் ( வயது 32 )  தமிழன் டிவியின் செய்தியாளராக பணிபுரிகிறார். இவர் இன்று காலை இருசக்கர வாகனத்தில் ஈசிஆர் சாலையில் சென்றபோது முத்துப்பேட்டை தர்ஹாவிலிருந்து கேரளாவை நோக்கி தனியார் ஆம்னி பேருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிகொண்டு சென்றது. 

பேருந்து அதிரை முத்தம்மாள் தெரு நுழைவாயிலின் அருகே வந்த போது ரமேஷின் இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் ரமேஷ்க்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து அதிரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

புனித ரமலான் மாதத்தில் 570 நிமிடங்கள் மாத்திரம் மின்தடை செய்த மின்சார வாரியத்திற்கு நன்றி அறிவிப்பு !

நோன்பு காலத்தில் மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வேண்டும் என்று ஒரு விண்ணப்பப் படிவத்தை பொதுமக்கள் சார்பாக மின்சார வாரியத்துக்கு அஞ்சல் துறை மூலமாக அனுப்பட்டது, அதை “(ரமழான் மாதத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கக்கோரி என்ற தலைப்பில் 21ஜூன்2014 அன்று

http://www.adirainews.net/2014/06/blog-post_8052.html

இந்த வலைத்தளத்திலும் பதிந்து இருந்தோம்.

பொதுமக்களின் உணர்வுகளையும், நோன்பின் மகிமையையும் உணர்ந்த மின்சார வாரியம் நமக்கு பேருதவியாக செயல்பட்டதை இதில் பதியப்பட்டுள்ள பட்டியல் நமக்கு தெளிவாக விளக்குகிறது.

ஆகவே, பொதுமக்கள் சார்பாக மின்சார வாரியத்துக்கு நன்றிகலந்த வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரியப்படுத்துகின்றேன்.

வாழ்க மின்சார வாரியம், வளர்ந்து செழிக்க உங்களின் அன்பான சேவை.

இப்படிக்கு,
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.


மரண அறிவிப்பு !

ஆலடிதெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது சாலிம் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி முஹம்மது செய்யீது, ஹாஜி அஹம்மது அமீன், மர்ஹூம் ஹாஜி அஹமது தாஹா, ஹாஜி அஹம்மது ரஷாத் ஆகியோரின் சகோதரரும், புஹாரி அவர்களின் மாமனாரும், ஆபிதின் அவர்களின் தகப்பனாருமாகிய சூனா ஈனா என்கிற ஹாஜி சுல்தான் இப்ராஹீம் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5.30 மணியளவில்  மரைக்கா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Wednesday, July 30, 2014

கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளை நடத்திய பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியில் பிரபல எழுத்தாளர் இப்ராஹிம் அன்சாரி சிறப்புரை !

இன்று மாலை 4.30 மணியளவில் நமதூர் சிஎம்பி  லேனில் அமைந்துள்ள ஏ எல் மெட்ரிக் பள்ளியில் கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் சார்பில் பெருநாள் சந்திப்பு மற்றும் 4 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் ஆலோசகர்களுள் ஒருவரான A.S. அப்துல் காதர் M.A. அவர்கள் தலைமையேற்று, நிகழ்சிகள் அனைத்தையும் சிறப்பாக வழிநடத்தி சென்றார். அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் தலைவர் அதிரை அஹமது, அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னிலை வகித்த அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் வாழ்த்துரை வழங்கினார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அதிரையின் பிரபல எழுத்தாளர் இப்ராஹிம் அன்சாரி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். இதில் 'இஸ்லாமியப் பொருளாதாரம்' மற்றும் வட்டியின் கொடுமை குறித்து அழகாக விளக்கி கூறினார்.

கடந்த அன்று [ 08-06-2014 ] அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களின் இல்லத்தில்  நடைபெற்ற ‘கர்ழன் ஹஸனா’ அழகிய கடன் அறக்கட்டளையின் நிர்வாகிகள் கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் தலைவர் A. அப்துல் ரஹீம், துணைத் தலைவர் S. அஹமது அஸ்லம், செயலாளர் A. சேக் அலி, துணைச் செயலாளர் M.U. கமாலுதீன், பொருளாளர் S.H. அப்துல் காதர் ஆகியோர் இந்த கூட்டத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் அழகிய கடன் அறக்கட்டளையின் தலைவர் A. அப்துல் ரஹீம் நன்றியுரை கூறினார்

கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் முன்னாள் நிர்வாகிகள் அலி அக்பர், ஜமால் முஹம்மது, தலைமை ஆசிரியர் மஹபூப் அலி ஆகியோர் ஒத்துழைப்புடன் நிகழ்சிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் ஆர்வலர்கள் மற்றும் உறுப்பினர்கள், அதிரையின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.









துபாயில் நடைபெற்ற ஈத் பெருநாள் பேட்மிண்டன் போட்டியில் தமிழக இளைஞர்கள் கோப்பையை வென்றனர் !

துபாயில் நடைபெற்ற ஈத் பெருநாள் பேட்மிண்டன் போட்டியில் தமிழக இளைஞர்கள் கோப்பையை வென்றனர்

துபாய் : துபாயில் ஈத் பெருநாளையொட்டி 29.07.2014 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் தமிழக இளைஞர்கள் சையத் அலி மற்றும் நிஜார் அலி ஆகியோர் கோப்பையை வென்றனர்.

ஈத் பெருநாளையொட்டி நண்பர்கள் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதில் சுமார் 10 அணிகள் பங்கேற்றன.

இறுதியில் தமிழக இளைஞர்கள் சையத் அலி நிஜார்  ஆகியோர் கொண்ட அணி வெற்றிக் கோப்பையினை வென்றது. நஜீர் மற்றும் எரிக் ஆகியோர் கொண்ட அணி முதலாவது ரன்னர் அணிக்கான பரிசினையும், முருகன் மற்றும் தானிஷ் ஆகியோர் கொண்ட அணி இரண்டாவது ரன்னர் அணிக்கான பரிசினையும் பெற்றனர்.

வெற்றி பெற்றவர்களை நண்பர்கள் கோப்பைக்கான ஒருங்கிணைப்பாளர்கள் பாராட்டினர்.

செய்தி மற்றும் படங்கள் :
முதுவை ஹிதாயத் 





செக்கடிமேடு நண்பர்களின் பெருநாள் மந்தி விருந்து [ படங்கள் இணைப்பு ]

செக்கடி மேடு நண்பர்கள் சார்பில் வருடந்தோறும் பெருநாள் மந்தி பிரியாணி விருந்து நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தவருடமும் செக்கடிமேடு நண்பர்களின் சார்பில் பட்டுகோட்டை சாலை இமாம் ஷாஃ பி மெட்ரிக் பள்ளியின் விளையாட்டு மைதானத்தின் எதிரே அமைந்துள்ள நெய்னா முஹம்மது அவர்களுக்கு சொந்தமான தென்னை தோப்பில் நடைபெற்ற பெருநாள் மந்தி பிரியாணி விருந்தில் 300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்வமுடன் சமைத்துக்கொடுத்த அஹமது ஜுபைர் அவர்களின் மந்தி பிரியாணியை கலந்துகொண்ட அனைவரும் சஹனில் ஒன்றாக அமர்ந்து ருசித்து சாப்பிட்டனர். அதிரையின் அனைத்து பகுதிலிருந்து வருகை தந்த சிறப்பு அழைப்பாளர்கள் பலர் ஆர்வத்துடன் விருந்தில் கலந்து கொண்டனர்.















துபாயில் இன்று அதிகாலையில் லேசான நிலநடுக்கம் !

அமீரகப்பகுதிகளில் இன்று அதிகாலை 5.35 மணியளவில் ( இந்திய நேரப்படி மணி 7.05 )  லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் துபாய், ஷார்ஜா, அபூதாபி  உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் கடற்கரை பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிஷ் தீவில் 30 மைல் தூரத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது என்றும், இது ரிக்டர் அளவில் 5.6 என கணக்கீடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

அதிரை சுட்டிகளின் பெருநாள் குதுகலம் தொடர்கிறது... [ படங்கள் இணைப்பு ]

குழந்தைகள் நமக்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ள மதிப்பிட முடியாத அருட்கொடைகள். இவர்களின் மழலைப் பேச்சு முதல் அவர்கள் செய்யும் குசும்பு வரை அருகில் இருந்து மனமகிழலாம். அதுவும் பண்டிகை காலமென்றால் அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி அளவில்லாதது. பெருநாள் மற்றும் விஷேச தினங்களில் குழந்தைகள் புதுப்புது டிசைன்களில் புத்தாடை உடுத்தி நகர்ப்புறங்களில் கலர்கலராக வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

அதிலும் சில துடிப்பான குழந்தைகளின் மழழைப்பேச்சும் அவரவர்களின் உடையைப்பற்றியும், பெற்றோர்களிடத்திலிருந்தும் உறவினர்களிடத்திலிருந்தும் பெறப்பட்ட காசுபணத்தைப் பற்றியும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது ரசிக்கும்படி இருக்கும்.

எங்கள் கண்களில் தென்படாத அதிரை நியூஸ் வாசகர்களாகிய உங்கள் வீட்டுச்சுட்டிக் குழந்தைகளின் புகைப்படங்களை எங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பித்தந்தால் தளத்தில் பதியப்படும்.   

பெருநாளன்று நம் அதிரை நியூஸ் குழுமத்தினரின் பார்வையில் பட்ட ஸ்வீட் பேபிகளின் கலர்  ஃபுல்  புகைப்படங்கள் இதோ...