.

Pages

Saturday, January 31, 2015

கடும் பனிப்பொழிவில் மூழ்கிய பிரிட்டன் !

பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவால் நாட்டின் முக்கிய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆர்டிக் கடலிலிருந்து வீசும் குளிர்ந்த காற்றால், பிரித்தானியாவின் முக்கிய நகரங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

இதன் காரணமாக, பெரும்பாலான உள்ளூர் விமானங்கள், ரயில்கள் மற்றும் வாகன சேவைகளை நிறுத்தப்பட்டதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வாகன போக்குவரத்தும், காலநிலையும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால், வடக்கு ஐர்லாந்தில் 100க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

பிரித்தானியாவின் வடக்குப்புற சாலைகள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டதால், வாகன ஓட்டுநர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண வாகனங்கள் மட்டுமின்றி அவசர மருத்துவ வாகனங்களும் சாலைகளை கடக்க முடியாமல் சிரமத்துக்கு உள்ளாகியது.

பனிப்பொழிவின் பாதிப்புகளை குறித்து பேசிய போலீஸ் அதிகாரிகள், Northern Ireland, Derbyshire மற்றும் Cumbria நகரங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

வடக்கு ஸ்கொட்லாந்து, ஐர்லாந்து மற்றும் வடக்கு பிரித்தானியாவில் மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் அளவிற்கு பனிப்பொழிவு இருக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஞாயிறு மற்றும் திங்கள் திகதிகளில் பிரித்தானியாவின் பெரும் பகுதிகளில் மைனஸ் 5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு கடுங்குளிர் வீச வாய்ப்புள்ளதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Huyton மற்றும் Liverpool உள்ளிட்ட சாலைகளில் வாகன விபத்துகள் நிகழ்ந்துள்ளதாகவும், அசம்பாவிதங்களால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல்கள் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் பெரும்பாலன நகரங்களில் அடுத்த ஒரு வாரத்திற்கு பனிப்பொழிவின் தாக்கம் இருக்கும் என்றும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அதிரையில் நடைபெற்ற இலவச புற்றுநோய் கண்டறிதல் முகாமில் 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு !

அதிரையில் லயன்ஸ் சங்கம் - காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் - தஞ்சை கேன்சர் சென்டர் ஆகியோர் இணைந்து நடத்திய புற்றுநோய் கண்டறிதல் முகாம் இன்று 31-01-2015 காலை நமதூர் காதிர் முகைதீன் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

மருத்துவர்கள் பாலகிருஷ்ணன், மருதுதுரை, அப்துல் ஹக்கீம்,கெளசல்யா, விஜயா, கிருஷ்ண மூர்த்தி, அனிதா குமாரி மற்றும் மணிகண்டன் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் முகாமில் கலந்துகொண்டோருக்கு பரிசோதனைகளை மேற்கொண்டனர். இதில் அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு உடல் பரிசோதனை செய்துகொண்டனர். இதில் 12 பேருக்கு நோயின் ஆரம்ப நிலை அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான தொடர் சிகிச்சை தஞ்சை கேன்சர் சென்டரில் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய முகாமில் அதிரை லயன்ஸ் சங்கத்தின் பொறுப்பு தலைவர் N.U. ராமமூர்த்தி, செயலாளர் பேராசிரியர் முனைவர் N.M.I.அல் ஹாஜி, பொருளாளர் N. ஆறுமுகசாமி, லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர்கள் பேராசிரியர் K.செய்யது அகமது கபீர், பேராசிரியர் மேஜர் S.P. கணபதி, சாரா அஹமது, பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர் S.M. முஹம்மது மொய்தீன், வளர்ச்சி தலைவர் S.A. அப்துல் ஹமீது, பேராசிரியர் முருகானந்தம், ராஜேந்திரன், செல்வராஜ், முல்லை மதி, முஜீப், தமீம் அன்சாரி உள்ளிட்ட  லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை சிராஜ் மற்றும் உதவி தலைமை ஆசிரியை, ஆசிரியைகள், பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் ஆகியோர் முகாமில் கலந்துகொண்டருக்கு வேண்டிய உதவிகளை செய்தனர்.

மேலும் முகாமில் கலந்துகொண்டருக்கு காதிர் முகைதீன் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் பேராசிரியர் சையது அகமது கபீர், முனைவர் எஸ்.சாபிரா பேகம், முனைவர் ஓ.சாதிக், மற்றும் பேராசிரியர் பிரேம் நவாஸ் ஆகியோர் தலைமையின் கீழ் இயங்கும் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் வேண்டிய உதவிகளை செய்தனர்.

முன்னதாக பள்ளி மாணவிகள் மருத்துவம் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு மருத்துவர்கள் பாலகிருஷ்ணன், மருதுதுரை, அப்துல் ஹக்கீம் ஆகியோர் பதிலளித்து பேசினார்கள். இதில் சிறப்பான கேள்வி எழுப்பிய மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
  

காவல்துறை நடத்திய முப்பெரும் விழா !

தஞ்சை மாவட்ட காவல்துறை- பேராவூரணி காவல்நிலையம் சார்பில் சாலைப் பாதுகாப்பு- விழிப்புணர்வு பேரணி, வெற்றி நிச்சயம், விபத்து தடுப்பு மற்றும் குற்றத்தடுப்பு குறும்படம் திரையிடல் என முப்பெரும் விழா வெள்ளியன்று நடைபெற்றது.
               
மதியம் மூன்று மணிக்கு பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயில் அருகில் இருந்து எஸ்.டி.டி திருமண மண்டபம் வரை பள்ளி, கல்லூரி மாணவர்கள், வாகன ஓட்டுநர்கள், காவல்துறையினர் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரம்மாண்டமான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
                   
பின்னர் எஸ்.டி.டி திருமண மண்டபத்தில் மாணவ, மாணவியர் பங்கேற்ற   "வெற்றி நிச்சயம்" விநாடி- வினா போட்டி நடைபெற்றது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், ஜே.சி.குமரப்பா மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும், பெண்கள் மேல்நிலைப்பள்ளி மூன்றாமிடமும், வீ.ஆர்.வீரப்பா மேல்நிலைப்பள்ளி நான்காமிடமும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நகர வர்த்தக கழகம் சார்பில் ரூபாய் 10,000 பரிசாக வழங்கப்பட்டது.
         
அதனை தொடர்ந்து விபத்து தடுப்பு மற்றும் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு குறும்படமான " உயிர் மற்றும் ஆறாத வடு " திரையிடப்பட்டது.
             
நிகழ்ச்சியில் வட்டாட்சியர் மாணிக்கவள்ளி, பேராவூரணி பேரூராட்சி தலைவர் என்.அசோக்குமார், அரசு தலைமை மருத்துவர் ஏ.காந்தி, தொழிலதிபர் எஸ்.டி.டி. சிதம்பரம், ஏஷியன் சம்சுதீன், ராயல் அஜ்மீர் அலி, குமரப்பா பள்ளி தாளாளர் ஜி.ஆர்.ஶ்ரீதர், வர்த்தக சங்கத் தலைவர் பி.எஸ்.அப்துல்லா, செயலாளர் ஆர்.வெங்கடேசன், பொருளாளர் ஏ.சி.சி.ராஜா, வீரப்பா பள்ளி தாளாளர் வீ.இராமநாதன், தலைமை ஆசிரியர்கள் இளங்கோவன், எஸ்.தேன்மொழி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
           
காவல்துறை உதவி ஆய்வாளர் பெஞ்சமின் பன்னீர்செல்வம், சிறப்பு காவல்துறை உதவி ஆய்வாளர் அன்பழகன், பெத்தபெருமாள்,  தலைமை காவலர் துரைராஜ் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். காவல்துறை ஆய்வாளர் என்.அன்பழகன் விபத்தில்லாமல் வாகனம் ஓட்டிய ஓட்டுநர்களுக்கு நினைவு பரிசு வழங்கி நன்றி கூறினார்.

செய்தி மற்றும் படங்கள்:
எஸ். ஜகுபர்அலி, பேராவூரணி

ஏன் ஹிஜாப் ? - பரிசு போட்டி அறிவிப்பு - கால நீட்டிப்பு...

பிப்ரவரி 1-   உலக ஹிஜாப் தினத்தை முன்னிட்டு வலையுக அன்பர்களுக்காக இஸ்லாமிய பெண்மணி நடத்தும் இந்த வருடத்தின் முதல் போட்டியை இங்கு அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்... !!

உங்கள் அறிவுக்கும் ஹிஜாப்பிற்கும் சம்மந்தமே இல்லையே என்று நிருபர் கேட்ட கேள்விக்கு நோபல் பரிசு வென்ற இஸ்லாமிய பெண்மணியின் பதிலுக்கும் நம் போட்டிக்கும் தொடர்புண்டு என்றால் மிகையாகாது.

உடலை மறைத்திருக்கும் பெண்கள் அறிவையும் சேர்த்தே மறைக்கிறார்கள் என்ற பிம்பம்  இன்று பலர் மத்தியில் ஆழமாக பதிந்துவிட்டது. ஹிஜாப் பேணும் சகோதரிகள் ஒவ்வொருவரும் ஹிஜாப் குறித்தான கேள்விகளை கட்டாயம் எதிர்கொண்டிருப்பார்கள். அவர்களின் அனுபவங்களை பகிரவும், தங்கள் வீட்டு பெண்கள் எதிர்கொண்ட  கேள்விகளுக்கு ஆண்களின் பதில்களை பகிரவும் ஓர் அறிய வாய்ப்பு.

போட்டிக்கான  கேள்விகள் மற்றும் பரிசுகள் விபரம் கீழ்க்காணும் படத்தில்:-

போட்டியின் விதி முறைகள்:-
உங்கள் பதில்கள் 20 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்..
நீங்கள்  எழுதும் படைப்பு இதற்கு முன் வேறு எந்த தளத்திலும் பிரசுரிக்கப்பட்டு இருக்கக்கூடாது. காப்பி பேஸ்ட்டாகவோ யாரோ வேறொருவரின் பதில்களாகவோ இருக்கக்கூடாது. கட்டாயம் உங்கள் சொந்த பதிலை மட்டுமே எழுதி அனுப்புங்கள்.

உங்கள் ஆக்கங்களை அனுப்ப வேண்டிய இமெயில் முகவரி: admin@islamiyapenmani.com

உங்கள் ஆக்கங்கள் எங்களுக்கு அனுப்ப வேண்டிய கடைசி நாள்:          
பிப்ரவரி 15-02-2015 இந்திய நேரம் இரவு 11.59க்குள்
ஜனவரி 31-2015 என்ற போட்டியின் இறுதி தேதி வலையுக நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிப்ரவரி 15-2015 வரை போட்டியின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்களின் விருப்பமே எங்கள் விருப்பம்.
நடுவரின் தீர்ப்பே இறுதியானது.

அனைவரும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பரிசினை வெல்லுங்கள்.

கவனிக்க: ஹிஜாப் என்பது நாகரீகமாய், ஒழுக்கமாய், இறுக்கமற்றதாக, முகம், கை மணிகட்டு, கால்பாதம் தவிர்த்து உடல் அங்கங்களை  வெளிகாட்டாத எந்த உடையையும் குறிக்கும்.

வலையுக சகோதர சகோதரிகளுக்கு அன்பான வேண்டுகோள்: 
தங்கள் வலைதளங்களில் போட்டி குறித்த பேனரை பதிவு செய்து இந்த போட்டி அனைவரிடத்திலும் சென்றடைய உதவுங்கள்...

நன்றி: இஸ்லாமிய பெண்மணி
பரிந்துரை: 'நட்புடன்' ஜமால்

நாளை நமதூரிலும் இந்த நிலை வர வேண்டுமா ?

வீதிக்கு வீதி மதுக் கடைகளைத் திறந்து வைத்தவர்கள் இந்தப் புகைப்படங்களைத் தவறாமல் பார்க்க வேண்டும்!

கரூர் பேருந்து நிலையம் அருகே நல்ல குடிபோதையில் வந்த பள்ளிக் கூட மாணவர் ஒருவர், போதையின் தாக்கம் தாங்க முடியாமல் மயங்கி விழுந்தது பொதுமக்கள் அனைவரையும் அதிர வைத்தது.

கருரை அடுத்த வெங்கமேடு பகுதியை சார்ந்த ஒரு ஆட்டோ டிரைவரின் மகன் ராஜேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது - வயது 17). கரூரில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் +2 பயின்று வருகிறார். இதே பள்ளியில் +1 பயிலும் இவரது ந்ண்பர்கள் இருவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். போதையின் உச்சத்திற்க்கு வந்த மாணவர்கள் சாலையை கடந்து பேருந்து நிலையத்திற்க்கு செல்ல முயன்றுள்ளனர். நண்பர்கள் இருவரும் கடந்து சென்ற நிலையில் போதையின் உச்சத்தில் இருந்த ராஜேஷ் திடீரென மயங்கி பேருந்து நிலைய நுழைவாயில் அருகே விழுந்தார். இதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பள்ளி சீருடையிலேயே பட்டப்பகலில் மது அருந்தி பாதை தவறி செல்லும் மாணவனை கண்ட பொதுமக்க்ள் மயங்கி கிடந்த மாணவனை எழுப்ப முயன்றனர். இதனிடையே அவனது நண்பர்கள் பெற்றோருக்கு தகவல் அளித்ததன் பேரில் அவரது பெற்றோர் மாணவனை அழைத்து சென்றனர். பள்ளி சீருடையில் பட்டப்பகலில் மது போதையில் மயங்கி விழுந்த விவகாரம் கரூரில் பெற்றோர்களை கதிகலங்க செய்துள்ளது. இந்த மாணவனின் புகைப்படத்தை சமூகத்தை சீரழிக்கும் மதுவையும், அதன் கடைகளையும் ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி அறிமுகம் செய்து திறந்து வைத்தவர்கள் பார்த்தால் நலமாக இருக்கும்!

வீதிக்கு வீதி மதுக் கடைகளைத் திறந்து வைத்தவர்கள் இந்தப் புகைப்படத்தைத் தவறாமல் பார்க்க வேண்டும் !

நாளை நமதூரிலும் இந்த நிலை வர வேண்டுமா ?

இனிமேலாவது அரசாங்கம் திருந்துமா ?

கலீல் பாகவி

தகவல்:முஹம்மது ஷரீப்

மரண அறிவிப்பு !

கடற்கரைதெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.கு.மீ முஹம்மது சாலிஹு அவர்களின் மகளும், லெ.கா. தாவூது அவர்களின் மனைவியும், N. சிராஜுதீன் என்கிற தண்டையார் அவர்களின் சகோதரியும், ஹாஜா இஸ்மாயில், காதர் முகைதீன் ஆகியோரின் தாயாரும், ஜமால் ஹுசைன், ஜாஹிர் ஹுசைன் ஆகியோயரின் சிறிய தாயாரும், தாஹா அவர்களின் மாமியாவும், இர்பான் அலி, பரகத் அலி ஆகியோரின் சிறிய தாயாருமாகிய கன்சுல் மஹரீபா அவர்கள் இன்று காலை 6 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு கடற்கரைதெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Friday, January 30, 2015

பட்டுக்கோட்டையில் எஸ்டிபிஐ கட்சியினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் !

எஸ்டிபிஐ தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் தேசதந்தை மகாத்மா காந்தியை சுட்டு படுகொலை செய்த கோட்சேக்கு சிலை வைப்பதை கண்டித்து பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் சேக் ஜலாலுதீன், மாவட்ட செயலாளர் மதுக்கூர் செய்யது முஹம்மது, மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் நிஜாம், அதிரை நகர தலைவர் யூ அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கண்டன உரையை எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹாஜி சேக் நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தின் போது கோட்சேயின் உருவ படத்தை தீயிட்டு கொளுத்தினர். உடனே காவல்துறையினர் தீயை தண்ணீர் ஊற்றி அனைத்தனர்.

ஆர்பாட்டத்தின் இறுதியில் மாவட்ட துணை தலைவர் அமானுல்லா நன்றியுரை ஆற்றினார். இதில் அதிரை, மதுக்கூர், மல்லிபட்டினம் பகுதி எஸ்டிபிஐ கட்சியினர் கலந்துகொண்டனர்.

பட்டுக்கோட்டையில் 350 நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு டெங்கு விழிப்புணர்வு முகாம் !

பட்டுக்கோட்டை செந்தில் குமரன் திருமண மண்டபத்தில் 30.01.2015 அன்று தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத்துறை பட்டுக்கோட்டை நகராட்சி ஜே.சி.ஐ பட்டுக்கோட்டை விங்ஸ் இணைந்து பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்களுக்கான டெங்கு சிக்குன் குன்யா மற்றும் நீரினால் பரவும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாமை நடத்தினர்.
நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை நகர்மன்ற தலைவர் எஸ்.ஆர். ஜவஹர்பாபு தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். கு.அறிவழகன் ஜே.சி.ஐ பட்டுக்கோட்டை விங்ஸ் தலைவர் கே. வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.

வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வ.விவேகானந்தம் வரவேற்றார். புட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் என். ஆர். ரெங்கராஜன் குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்து விழாப்பேருரை ஆற்றினார். தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தை சார்ந்த மாவட்ட மலேரியா அலுவலர் போத்திப்பிள்ளை இளநிலை பூச்சியியல் வல்லுநர் வேலுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு டெங்கு சிக்குன் குன்யா மலேரியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்கள் அவை தோன்றும் விதம் பரவும் முறை கட்டுப்படுத்தும் முறை சிகிச்சை முறைகள் பற்றி படக்காட்சிகளுடன் விரிவாக எடுத்துரைத்தனர்.டெங்கு தடுப்பு சுகாதார உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்ட லயன் சங்க தலைவர் பேராசிரியர் சையத் அகமது கபீர் ஜே.சி. ஐ பட்டுக்கோட்டை விங்ஸ் மண்டல துணைத் தலைவர் எஸ். கார்த்திகேயன் உறுப்பினர்கள் வீ. நாராயணன் ராஜூ ரமேஷ்கண்ணா துப்புரவு ஆய்வாளர் அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். மாணவிகளால் டெங்கு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. புகை மூட்டம் கொசுப்புழு ஒழிப்பு பற்றிய செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வ.விவேகானந்தம் நன்றி கூறினார்.

சவூதி மன்னரின் நல்லடக்கத்தில் பின்பற்றபட்ட எளிமையால் 500 சீனர்கள் இஸ்லாம் மதத்தில் இணைந்தனர் !

சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் அல் சவூத் கடந்த 23-01-2015 அன்று காலமானார். நாட்டை ஆளும் மன்னராக இருந்தும் இவரது உடல் சாதாரண மனிதரை போல் எளிமையான முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது உலக நாடுகள் பலவற்றை வியப்புக்குள்ளாக்கியது.

இந்நிலையில் மன்னரின் இறுதி சடங்கில் பின்பற்றப்பட்ட எளிமை, சவூதியில் பணிபுரியும் சீனா நாட்டை சேர்ந்த தொழிலாளர்களை பெரிதும் கவர்ந்தது. சுமார் 500 பேர் இஸ்லாம் மதத்தில் தங்களை இணைத்து கொண்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Source : Emirates247

மரண அறிவிப்பு !

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம்  நெ.மு.செ முஹம்மது ஹுசைன் அவர்களின் மகனும், மர்ஹூம் நெ.மு.செ அஹமது கபீர், தாஜுதீன், மர்ஹூம் அன்சாரி ஆகியோரின் சகோதரரும், சாகுல் ஹமீது, முஹம்மது ஹுசைன், முஹம்மது இப்ராஹீம் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி முகைதீன் சாஹிப் அவர்கள் இன்று  காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

செக்கடி குளம் - காட்டுக்குளத்திற்கு ஆற்று நீர் மீண்டும் வருகை !

அதிரை பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதில் முக்கிய நீர் ஆதாரப் பகுதியாக இருந்து வரும் காட்டுகுளத்திற்கு சிஎம்பி வாய்க்கால் வழியாக ஆற்று நீர் நேற்று முதல் மீண்டும் வந்தகொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து செக்கடி குளத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

இந்த இரு குளங்களிலும் நீர்மட்டம் குறைந்து காணப்பட்ட நிலையில் மீண்டும் தண்ணீர் வந்துகொண்டிருப்பது இப்பகுதியினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செக்கடி குளத்தை சுற்றி தடுப்பு சுவர் மற்றும் நடை மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.