.

Pages

Sunday, January 31, 2016

அதிரை ஆய்ஷா மகளிர் அரங்கில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட பொதுக்குழு கூட்டம் !

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் அதிரை ஆயிஷா மகளிர் அரங்கில் இன்று மாலை நடந்தது.

கூட்டத்திற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் பி.எஸ் ஹமீது தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் அதிரை எஸ்.எஸ்.பி நசுருதீன், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம் ஜெய்னூல் ஆபிதீன், தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் ஏ.எம் அப்துல் காதர்,தஞ்சை தெற்கு மாவட்ட துணை தலைவர் டி. சைய்யது காதர் உசேன் புகாரி, தஞ்சை தெற்கு மாவட்ட துணை தலைவர், அதிரை நகர தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன், அதிரை நகர செயலாளர் வழக்கறிஞர் ஏ.முனாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் எதிர்வரும் அன்று விழுப்புரத்தில் நடைபெறு மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு சிறப்பாக அமைந்திட அனைத்து ஜமாத்தார்கள், உலமாக்கள் கலந்துகொள்ள அழைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது, மாவட்ட வரவு - செலவீனங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. மாவட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பிரைமரி இல்லாத ஊர்களில் விரைவாக அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டன.

கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியில் எஸ். அபுல் ஹசன் மற்றும் வழக்கறிஞர் ஏ. தஸ்லீம் ஆசிப் ஆகியோர் புதிதாக தங்களை இணைத்துக்கொண்டனர். இவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது.

கூட்டத்தின் முன்னதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தஞ்சை தெற்கு மாவட்ட துணை தலைவர், அதிரை நகர தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் வரவேற்புரை ஆற்றினார். கூட்ட முடிவில் மணிச்சுடர் நிருபர் ஏ. சாகுல் ஹமீது நன்றி கூறினார்.

இந்த கூட்டத்தில் ஏ. சேக் அப்துல்லா, கே.எஸ்.ஏ அப்துல் ரஹ்மான், ஏ. சாகுல் ஹமீது, ஆர். ஜமால் முஹம்மது, எம்.கே.எம் அபூ பக்கர், கே.எம் அப்துல் ரெஜாக், எம்.ஜே அப்துல் ரவூப் உள்ளிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தஞ்சை தெற்கு மாவட்ட பகுதி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கோட்டை அமீர் விருது பெற்ற ஹாஜி M.B அபூபக்கர் மாநில அமைச்சரை சந்தித்து வாழ்த்து !

நாடு முழுவதும் 67 ஆம் ஆண்டு குடியரசு தின விழா கடந்த 26 ந்தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு துறைகளில் சாதனை நிகழ்த்தியவர்களுக்கு குடியரசு தினத்தில் விருது வழங்கப்பட்டது.

இதில் அதிரை அஜ்ஜாவியத்துல் ஷாதுலியா ட்ரஸ்ட் நிர்வாக செயலாளரும், அதிமுக மாவட்ட சிறுபான்மை நலப் பிரிவு துணைத் தலைவருமாகிய ஹாஜி M.B. அபூபக்கர் அவர்களுக்கு தமிழக அரசின் உயரிய விருதாக கருதப்படுகிற 'கோட்டை அமீர்' விருதை தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் கடந்த 26 ந்தேதி நடந்த குடியரசு தின விழாவில் வழங்கி கெளரவித்தார்.

இந்நிலையில் மாண்புமிகு வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ஆர் காந்தி, பி.என் ராமச்சந்திரன், பி. சுப்பிரமணியன், எம். ஜெயபிரகாஷ் நாராயண், அதிரை பேரூராட்சி துணை தலைவரும், அதிமுக நகர செயலாளருமாகிய என்.பிச்சை, அதிமுக நகர துணை செயலாளர் முஹம்மது தமீம், கவுன்சிலர் சிவக்குமார், ஹனீபா ஆகியோர் உடனிருந்தார்.

ஷிர்க் ஒழிப்பு மாநாடு களத்திற்கு அதிரையிலிருந்து 56 வாகனங்களில் பயணம் !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருச்சி மாநகரில் இன்று ( 31-01-2016 ) மாபெரும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை நடத்தவுள்ளது.

இதையொட்டி இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று காலை தக்வா பள்ளி, வண்டிப்பேட்டை, தவ்ஹீத் பள்ளி உள்ளிட்ட பகுதியிலிருந்து 56 வாகனங்கள் மற்றும் விருப்பத்தின் பேரில் சொந்தமாக எடுத்து வந்த வாகனங்கள் ஆகியவற்றில் திரளானோர் மாநாடு களத்திற்கு பயணத்தை மேற்கொண்டனர். பெண்களுக்கு தனி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் 67 ம் ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சி ! [ படங்கள் இணைப்பு ]

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் 67 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் இன்று [ 31-01-2016 ] காலை 9 மணியளவில் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.

இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த காதிர் முகைதீன் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ.ஜலால் இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். காதிர் முகைதீன் கல்லூரி துணை முதல்வர் உதுமான் முகைதீன் முன்னிலை வகித்தார்.

வரவேற்புரை நிகழ்த்திய பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹபூப் அலி அவர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் அன்புடன் வரவேற்றார்.

முன்னதாக மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வீ. இராஜேந்திரன் ஏற்றி வைத்த ஒலிம்பிக் சுடரை விளையாட்டு வீரர்கள் கையில் ஏந்தியவாறு அதிரை பேருந்து நிலையத்திலிருந்து பள்ளி மைதானத்தை நோக்கி விரைந்து வந்தனர். இதைதொடர்ந்து அணிவகுப்பு மரியாதையுடன் விளையாட்டு போட்டிகள் ஒவ்வொன்றாக நடைபெற்றது.

விளையாட்டு போட்டிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹபூப் அலி மற்றும் உதவி தலைமை ஆசிரியர் ஆகியோரின் மேற்பார்வையில் உடற்கல்வி ஆசிரியர்கள், ராஜா, ஜெயகாந்தன் ஆகியோர் வழிநடத்தி சென்றனர். நிகழ்ச்சிகள் அனைத்தையும் தமிழ்துறை ஆசிரியர்கள் உமர் பாரூக், கோப்பெருஞ்சோழன் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.

விழாவில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் ஆதம் செய்யது முஹம்மது புஹாரி, முஹம்மது தமீம், கவுன்சிலர் அப்துல் லத்திப், ஹாஜா பகுருதீன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை சேர்மன் மரைக்கா இத்ரீஸ் அஹமது, பள்ளி ஆசிரியை ஆசிரியர்கள், அலுவலக ஆய்வாக பணியாளர்கள், ஊர் பிரமுகர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பள்ளியின் விளையாட்டு வீரர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தினார்கள். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று மாலை பரிசளிப்பு விழா நடைபெறும். இதில் அதிராம்பட்டினம் பாரத் ஸ்டேட் வங்கி மேலாளர் ஹமீத்கான் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துரை வழங்க இருக்கிறார்.

அதிரையில் ரெட் கிராஸ் உறுப்பினர்கள் கூட்டம் !

அதிரையில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி உறுப்பினர் கூட்டம் எதிர்வரும் [ 02-02-2016 ] அன்று செவ்வாய் கிழமை காலை 10.30 மணியளவில் அதிரை காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள செல்லியம்மன் சமுதாய கூடத்தில் நடைபெற உள்ளது. இதில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் குருதிக் கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் தஞ்சை, பட்டுக்கோட்டை மற்றும் அதிராம்பட்டினம் ரெட் கிராஸ் சொசைட்டி நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பித்து தரும்படி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிராம்பட்டினம் கிளை சார்பில் அன்புடன் அழைப்பு விடப்பட்டுள்ளது.

Saturday, January 30, 2016

சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் 'கோட்டை அமீர்' விருது பெற்ற ஹாஜி M.B. அபூபக்கர் அவர்களுக்கு பாராட்டு விழா !

தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் மதநல்லிணக்கத்துக்காக 'கோட்டை அமீர்' விருது வழங்கப்பட்டு வருகிறது. தகுதியானர்வர்களை தேர்ந்தெடுத்து இந்திய சுதந்திர தினம் - குடியரசு தினத்தன்று இந்த விருது வழங்கப்படும்.

இந்நிலையில் நாடு முழுவதும் 67 ஆம் ஆண்டு குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு துறைகளில் சாதனை நிகழ்த்தியவர்களுக்கு குடியரசு தினத்தில் விருது வழங்கப்பட்டது.

இதில் அதிரை அஜ்ஜாவியத்துல் ஷாதுலியா ட்ரஸ்ட் நிர்வாக செயலாளராக பொறுப்பில் இருப்பவர் ஹாஜி M.B. அபூபக்கர். இவருக்கு தமிழக அரசின் உயரிய விருதாக கருதப்படுகிற 'கோட்டை அமீர்' விருதை தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா கடந்த 26 ந்தேதி நடந்த குடியரசு தின விழாவில் வழங்கி கெளரவித்தார்.

இதையொட்டி சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் எதிர்வரும் 01-02-2016 அன்று திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் 'கோட்டை அமீர்' விருது பெற்ற ஹாஜி M.B. அபூபக்கர் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பித்து தரும்படி சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் அன்புடன் அழைப்பு விடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சம்சுல் இஸ்லாம் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

உலக நாடுகளை மிரட்டும் “ஜிகா வைரஸ்”! அறிகுறிகளும், தடுப்பு முறைகளும்

உலக நாடுகளே தற்போது பயந்து நடுங்கி கொண்டிருக்கிறது என்றால் அது “ஜிகா வைரசை” எண்ணித்தான். ஆப்பிரிக்காவின் உகண்டாவில் உருவாகி, அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய நாடுகள் என உலகம் முழுதும் பரவி வருகின்றது.

டெங்கு, சிக்கன்குன்யாவை பரப்பும் ’ஏடிஸ்’(Aedes) என்ற கொசுக்களால்தான் இந்த ஜிகா வைரஸ் நோயும் பரப்பப்படுகிறது. ஜிகா காடுகளில் வாழும் குரங்குகளிடமிருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவியது 1947 ம் ஆண்டிலே கண்டுபிடிக்கப்பட்டது. அதுவே பெயர் காரணமானது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட கொசுக்கள் கடித்தால் யாருக்கும் வரலாம்.

2014ம் ஆண்டு மார்ச் 3ம் திகதி ஜிகா வைரஸ் ஈஸ்டர் தீவு பழங்குடியினரிடமிருந்து பரவியதை சிலி நாடு கண்டறிந்தது. 2015ம் ஆண்டு மே மாதத்தில் வடகிழக்கு பகுதியிலிருந்து பரவுவதை பிரேசில் கண்டறிந்தது.

இந்த நோய் தாக்குவதால் உடனடியாக மரணம் நேர்வதில்லை என்றாலும், கவனிக்காமல் விடப்பட்டால் அதிகமாகி பெரிய பாதிப்புகள் ஏற்படலாம்.

ஜிகா வைரஸ் நோய் வலிமையோடு பரவுவதாக உலக சுகாதார நிறுவன தலைவர் மார்கரெட் சான் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

அறிகுறிகள்:
கொசு கடித்து 2-7 நாட்களில் நோய்க்கான அறிகுறிகள் தென்படும்.
காய்ச்சல்
தோல்களில் சொறிபோன்ற படர்வு
கை, கால்களின் மூட்டுகளில் வலி
தசை வலி
வறட்சி
உடலில் சோர்வும் ஏற்படுதல்

குழந்தைகள் மீதான தாக்கம்

இந்த நோய் குழந்தைகளிடம் பெருமளவில் பரவிவருகிறது. பிரேசிலில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்ப்பிணிகளுக்கு நோய் இருந்தால் குழந்தைகளுக்கு பரவுகிறது. இந்த நோயின் பாதிப்போடு பிறக்கும் குழந்தைகள் தலைசிறுத்து வினோதமாக பிறக்கின்றனர், மூளை பாதிக்கப்பட்டு அவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுகிறது.

இது எதிர்கால சந்ததியை பாதித்துவிடும் என்பதால் பாதிக்கப்பட்ட நாடுகள் பெண்களை கருத்தரிக்க வேண்டாம் என்று அறிவுறுத்துகின்றன.

பரவல் தடுப்பு நடவடிக்கை
ரத்த பரிமாற்றம் மற்றும் உடலுறவினாலும் இந்த நோய் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், எல்லா சமயத்திலும் உறுதியல்ல.

மனிதர்களை அதிகமாய் கொல்லும் உயிரினங்களில் ’டாப் டென்’ ல் முதல் இடத்தில் இருப்பது கொசுதான்.

அதனால், இந்த வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட ஒருவனும் கொசுக்களும் இருந்தால் போதும் அந்த பகுதி முழுதுமே நோய் பரவுவது உறுதி.

கனடா, சிலி நாடுகளை தவிர, எல்லா நாடுகளிலுமே ’ஏடிஸ்’ கொசுக்கள் இருக்கிறது.

ஆனால், எங்கு சென்றாலும் கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்வது மட்டுமே தடுப்பு நடவடிக்கையாக கூறப்படுகிறது.

கொசுக்கள் ஒழிப்பே நோய் தடுப்பு
நோய் பிடித்திருப்பதைவிட பரவுவதுதான் கொடியதாக உள்ளது. கொசு உற்பத்திக்கான சூழலை அழிப்பது.

கொசு கடிப்பதை குறிப்பாக பகல் நேரங்களில் தவிர்ப்பது ஜிகா, டெங்கு, சிக்கன்குன்யா உட்பட்ட அனைத்து நோய்களுக்கும் முன்னெச்சரிக்கையாகும்.

அருகில் தேங்கும் நீர்நிலைகள் சாக்கடையாகமல் அப்புறப்படுத்துவது. வீட்டின் பயன்பாட்டுக்குரிய நீர்பாத்திரங்களை மூடிவைப்பது.

கொசு உற்பத்தி மூலங்களான குப்பைகளை அகற்றுவது, அப்புறப்படுத்தும் வரை மூடிவைப்பது நிலத்தடி கழிவுநீர் கால்வாய்களும் தடைபடாமலும் திறந்துகிடக்காமலும் பார்த்துக்கொள்வது கொசு வளர்ச்சியை ஓரளவு ஒழிக்க உதவும்.

வீடுகளின் ஜன்னல்களிலும் படுக்கையறையிலும் கொசுவலை, மற்றும் தடுப்புமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
எங்கு சுற்றியும் இயற்கையிடமே சரண்
நவீன உலகத்தில் கொசு உற்பத்தி பெருகிவருவது எல்லா நாடுகளிலுமே பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

முன்பெல்லாம் ஓரிரு மாதங்கள் மட்டுமே கடித்த கொசுக்கள் இப்போது ஆண்டு முழுதும் கடிக்கிறது.

ஆறுகள், ஏரிகள், குளங்கள், ஓடைகள் என நன்னீர் நிலைகள் அருகிப்போனது.

அங்கெல்லாம் குப்பைகள் பெருகிப்போனது. அனைவரும் அறிந்ததே, அதற்கும் கொசு வளர்ச்சிக்கும் தொடர்புகள் உண்டு.

தவளை, தும்பிகள் போன்ற சிறு உயிரினங்கள் கொசுக்களையும் அதன் வளர்ச்சிக்கான கருக்களையும் உணவாக்கிக் கொண்டதால், கொசுக்களின் வளர்ச்சி கட்டுப்பாட்டில் இருந்தது. இயற்கை நீர்நிலைகள் குறைவால் அந்த உயிர்களும் குறைந்தன.

இந்த உலகில் எந்த ஒரு உயிரினம் குறைந்தாலும் அழிந்தாலும் அதன் எதிர் விளைவு எதிர்காலத்தில்தான் தெரியவரும்.

கொசுக்களை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை நாடுகள் நாடுவது நிச்சயம் வெற்றிபெறும்.

எங்கோ ஒரு காட்டில் விலங்குகளுக்கோ, நாகரீகமடையாத பழங்குடியினருக்கோ ஒரு கொடிய தொற்றுநோய் இருந்தாலும் அது ஒட்டு மொத்த உலக சமுதாயத்தையும் பாதிக்கிறது. அதை தடுப்பது போராட்டமாகிறது. நோயிலும் உலகம் ஒரு குடும்பமாகிறது.

ஒழிக்கமுடியாத கொசுக்களே இதற்கு இடைத்தரகர் வேலைபார்க்கிறது. இதிலிருந்தாவது, மனிதனுக்கு முழுஇயற்கை சூழலை பாதுகாக்கும் பொறுப்பு தேடிவந்துள்ளதை புரிந்துகொள்ளலாம்.

-மருசரவணன்
Image Courtesy- Getty Images

தற்கொலைதான் தீர்வா ?

லக நல்வாழ்வு நிறுவனம் வெளியிட்டுள்ள கணக்கீட்டின்படி உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் 10 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதாவது ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒருவர் தற்கொலை செய்கின்றார்.

பெரும்பாலான தற்கொலைகள் அற்பக் காரணங்களுக்காகவே நடைபெறுகின்றன. தற்கொலை சாவு போர் சாவுகளை விட அதிகமானதாக கணக்கிடப் பட்டுள்ளது.

இந்தியாவில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் போகின்றது. கடந்த இருபது வருடங்களில் தற்கொலை நிகழ்வுகள் 3 விழுக்காடு மிகுந்துள்ளன. அதிலும் குறிப்பாக 15 முதல் 29 அகவைவரை உள்ளவர்கள் மிகுதியான அளவில் தற்கொலை செய்கின்றனர். தமிழகத்திலும் தற்கொலைகள் அதிக அளவில் நடைபெறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் யாருக்குத் தோன்றுகிறது? என்று சிந்திக்கும் பொழுது மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், மது, போதை மருந்துகளுக்கு அடிமையானவர்கள், குடும்பம்-தனிப்பட்ட வாழ்வில் ஏற்படும் சிக்கல்களின் காரணமாக மன அழுதத்திற்கு ஆளானவர்கள், பொருள்நிலைச் சிக்கல்கள், வேலை வாய்ப்பின்மையால் சலிப்பு அடைந்தவர்கள், கடுமையான நோய் பீடித்தவர்கள், குறிப்பாகத் தனிமையில் வாடுபவர்கள் இவர்களிடமே தற்கொலை செய்யும் எண்ணம் மேலோங்குவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அவமானம், தேர்வில் தோல்வி, காதல், கடன் என்று சிறிய சிறிய சிக்கல்களைக் கூட எதிர்கொள்ள முடியாமல் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்கின்றனர். தற்கொலைக்கு பிறகு ஏற்படும் பாதிப்பு குறித்து இவர்கள் அறிவதில்லை. ஒருவர் செய்து கொள்ளும் தற்கொலையால் குடும்பத்தினர் மற்றுமின்றி நண்பர்கள், சுற்றியுள்ளவர்கள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர்.

தீர்வு:
பெருகி வரும் தற்கொலைகளை தடுப்பதற்குரிய வழிவகைகளை ஆராய வேண்டும்.பிள்ளை வளர்ப்பு என்பது மிக முக்கியமான ஒரு கடமையாகும். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் நல்ல அடிப்படை உறவு வேண்டும்.

தோழமையான உறவை சிறுவயதிலிருந்தே பெற்றோர்கள் உறுவாக்கி அது வளர வளர மேம்படுத்த வேண்டும். இதன் மூலம் பெற்றோரை ஒரு பிள்ளைகள் நண்பர்களாக கருத முடியும். இதனால் பிள்ளைகளுக்கு எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் பெற்றோரிடம் பகிர்ந்து, அதன் மூலம் தீர்வுப் ஏற்பட முயற்சி மேற்கொள்ள வாய்ப்பாக அமையும்.

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் அளிக்க வேண்டியது பெற்றோர்கள்தான் என்று அழுத்தமாக சொல்கிறார் சென்னை தரமணி வாலன்ட்ரி ஹெல்த் சர்வீஸ் மனநல ஆலோசகர் மாலா.

குழந்தைப் பருவத்திலிருந்தே சூழ்நிலைகளுக்கேற்ப வாழுதல், தன்னம்பிக்கை, சிக்கல்களை எதிர்கொள்ளுதல், தேவை ஏற்படின் பிறருடைய உதவியை நாடுதல் போன்ற பண்புகளை குழந்தைகளிடம் பெற்றோர்கள் விதைக்க வேண்டும்.

அதேபோல ஆன்மீக நெறியில் நாட்டம், சமூகத்தில் உள்ளவர்களுடன் நெருங்கிப் பழகுதல், சரியான முறையில் உடல்நலத்தைப் பேணுதல், புகை, மது போன்ற தீய பழக்கங்களில் இருந்து விலகியிருத்தல் போன்றவை மூலமும் தற்கொலை மனப்பான்மையைக் களையெடுக்க முடியும்.

தற்கொலை குறித்த விழிப்புணர்வு பரப்புரை, அதற்கான காரணம், தவிர்க்கும் காரணிகள் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் பரவலாக்கப்பட வேண்டும். குறிப்பாகக் குழந்தைப் பருவம் முதல் இளமைப் பருவம் வரை உள்ளவர்களுக்குத் தற்கொலை ஒரு சமூகக் குற்றம் என்று உணர்த்த வேண்டும்.

தற்கொலை முயற்சி செய்பவர்களுக்கு நெறியுரைகள், அறிவுரைகள் வழங்குவதற்குரிய மையங்களை அதிக அளவில் ஏற்படுத்த வேண்டும். தற்கொலை எண்ணத்தைத் தூண்டக்கூடிய சமூக, (திரைப்படம், டி.வி.சீரியல்கள் போன்ற) கலை, பண்பாட்டுக் காரணிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். அரசுகள் தற்கொலைகளைத் தடுக்க தனிப்பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும்.

-இப்னு ஹசன்

அதிரை அருகே புதிய சார்பதிவக கட்டிடம் திறப்பு !

அதிராம்பட்டினம், ஜன 29
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை பதிவு மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள இரண்டாம் புலிக்காடு சார்பதிவகம் அலுவலகத்தின் 2014-2015 ஆம் ஆண்டின் படி புதிய கட்டிடம் கட்ட ரூ 55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் காணொளி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

திறப்பு விழா நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை சப் கலெக்டர் ராஜசேகரன், மாவட்ட பதிவாளர் வடிவழகி, சேதுபாவாசத்திரம் ஒன்றிய தலைவர் சுந்தரராஜன், ஊராட்சி மன்ற தலைவர் சண்முகநாதன், இரண்டாம் புலிகாடு சார்பதிவாளர் (பொறுப்பு ) செல்வகணபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தஞ்சையில் மினி மாராத்தான் ஓட்டப்போட்டி !

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் திருவிழாவினை முன்னிட்டு அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்திலிருந்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மினி மாராத்தான் ஒட்டப்பந்தயத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

இந்த மினி மாராத்தான் ஒட்டப்பந்தயம் சத்யா விளையாட்டு அரங்கத்திலிருந்து பெரிய கோயில் மற்றும் முக்கிய வீதிகளில் வழியாக அரண்மனை வளாகத்தில் நிறைவடைந்தது.

இந்நிகழ்ச்சியில் பயிற்சி ஆட்சியர் திரு.தீபக் ஜேக்கப், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.க.பாபு, மாவட்ட சுற்றுலா அலுவலர் திரு.ராஜசேகரன், கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குநர் திரு.இரா.குணசேகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.