.

Pages

Thursday, January 21, 2016

அதிரையில் மீனவர்கள் சிறை பிடித்த 4 படகுகள் விடுவிப்பு: அமைதி பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு !

அதிராம்பட்டினம், ஜனவரி 21
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் கடலோரப்பகுதிகளில் இரட்டை மடி, ரேஸ் மடி வலை விரித்து ஆழம் குறைந்த பகுதிகளில் மீன் பிடிப்பதை தடுக்க கோரியும், பல லட்சம் மதிப்புள்ள வலைகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த ( 06-01-2016 ) அன்று அதிரை பேரூந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டத்தை நடத்த இருந்தனர்.

இதையடுத்து பட்டுக்கோட்டை சப் கலெக்டர் ராஜசேகரன், பட்டுக்கோட்டை ஏ.எஸ்.பி அரவிந்மேனன்,  மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் உமா, பட்டுக்கோட்டை தாசில்தார் சேதுராமன், அதிரை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சேதுபாவா சத்திரம் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் கடலோரப்பாதுகாப்பு குழும காவல் நிலைய போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் நாட்டுப்படகு 37 மீனவ கிராம பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் அதிகாரிகள் தரப்பில் இரட்டை மடி வலை பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆவண செய்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து மீனவர்கள் நடத்த இருந்த சாலை மறியல் போராட்டம் அப்போது கைவிடப்பட்டது.

இந்நிலையில் கடந்த ( 18-01-2016 ) அன்று அதிரை கடல் பகுதியில் இரட்டை மடி வலை பயன்படுத்தி விசை படகுகள் மூலம் காரைக்கால் பகுதி மீனவர்கள் மீன் பிடிக்கும் தகவல் மீனவர்களுக்கு கிடைத்தது. இதையடுத்து 150 க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க பயன்படுத்திய படகுகளை சுற்றி வளைத்து சிறை பிடித்து கரைக்கு கொண்டு வந்தனர்.

தகவலறிந்த மீன்வளத்துறை சார் ஆய்வாளர் கர்ணன், அதிராம்பட்டினம் கடலோர பாதுகாப்பு காவல் உதவி ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் நாட்டுப்படகு மீனவர்கள் சிறை பிடித்து வந்த 4 படகுகளும் காரைக்கால் பகுதியை சேர்ந்தது எனவும், படகுகளில் இருந்த 27 மீனவர்களும் காரைக்கால், நாகை மாவட்ட பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

இந்நிலையில் சிறை பிடித்த 4 படகுகள் கடந்த 2 நாட்களாக அதிராம்பட்டினம் கலோரப்பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்தது. இதை அடுத்து நேற்று ( 20-01-2015 ) அதிராம்பட்டினம் கரையூர் தெரு மாரியம்மன் கோயில் வளாகத்தில் நாகை மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குனர் சுப்பராஜ், காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குனர், தஞ்சை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் உமா ஆகியோர் தஞ்சை மாவட்ட நாட்டு படகு 37 மீனவ கிராம பிரதிநிதிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பேச்சுவார்த்தையில், நாகை மாவட்டம் கோடியக்கரை மேற்கு பகுதியை நோக்கி காரைக்கால், நாகை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விசைப்படகுகள் மீனவர்கள் மீன் பிடிக்க வரக்கூடாது என்றும், தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலை பயன்படுத்தவது தெரியவந்தால், வலை பறிமுதல் செய்யப்படும் என்றும், அரசு வழங்கும் டீசல் மானியம் நிறுத்தப்படும் என்றும், மீண்டும் மீறினால் படகு உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் மீனவர்களோடு கடல் பகுதியில் சுழற்சி முறையில் ரோந்தில் ஈடுபடுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று கரையூர் தெரு கிராம பஞ்சாயத் தலைவர் கிருஷ்ணன் தலைமையில் தஞ்சாவூர் மாவட்ட கிராம மீனவர்கள், காரைக்கால், நாகை மாவட்ட மீனவ சங்க பொறுப்பாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து சிறை பிடித்து வைத்திருந்த 4 படகுகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு நாட்டுப்படகு மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.