இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:
ஏழை எளிய மக்களும், சாமானியர்களும் அரசுக்கு தங்களது குறைகளைத் தெரிவித்து உரிய தீர்வு பெறும் நோக்கத்துடன் முதலமைச்சரின் தனிப்பிரிவு இயங்கி வருகிறது. இந்தப் பிரிவின் மூலம் நேரடியாகவும், அஞ்சல் வழியாகவும், முதலமைச்சரின் தனிப் பிரிவின் இணையதளம் மூலமாகவும் மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் அந்தந்தத் துறைகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
"அம்மா அழைப்பு மையம்':
பொதுமக்களின் குறைகளை விரைந்து பெற்று, அவற்றைக் களைந்திடும் நோக்கில், கணினிவழி தொலைபேசி அழைப்பு ஒருங்கிணைத்தல், குரல் பதிவு மற்றும் பிரித்தறிதல் போன்ற புதிய தகவல் தொழில்நுட்ப வசதிகளுடன், 24 மணிநேரமும் செயல்படும், கட்டணமில்லா தொலைபேசி சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, கட்டணமில்லாத தொலைபேசி எண்ணான 1100 மூலம் எங்கிருந்தும், எப்போதும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். இந்தப் புதிய திட்டத்துக்கு "அம்மா அழைப்பு மையம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கு 15,000: புதிய திட்டத்தின் முதல்கட்டமாக, நாளொன்றுக்கு 15 ஆயிரம் அழைப்புகளை ஏற்கும் வகையில், 138 அழைப்பு ஏற்பாளர்களுடன் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தேவைக்கேற்ப அழைப்பு ஏற்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
முதல்வர் ஜெயலலிதா இந்தப் புதிய மையத்தை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார். இந்த மையத்தின் மூலம், பொதுமக்களிடமிருந்து அழைப்பு பெறப்பட்டு, அழைப்பவர் விவரம், குறைகள் ஆகியன கணினியில் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக்கு மின்னஞ்சல், தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பி வைக்கப்படும். அதுமட்டுமின்றி, எந்தத் துறையின், எந்த அதிகாரிக்கு அவரது குறைகள் குறித்த விவரம் அனுப்பப்பட்டுள்ளது என்ற விவரம் அழைத்தவருக்கு செல்லிடப்பேசியில் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.
மேலும், அவரது குறை குறித்து சம்பந்தப்பட்ட துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த விவரமும் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் கு. ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், பொதுத் துறை முதன்மைச் செயலாளர் யத்தீந்திர நாத் ஸ்வேன், தகவல் தொழில் நுட்பவியல் துறை முதன்மைச் செயலாளர் தா.கி. ராமச்சந்திரன், முதலமைச்சரின் தனிப் பிரிவின் சிறப்பு பணி அலுவலர் சந்தோஷ் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னையில் தலைமை அழைப்பு மையம் அம்மா அழைப்பு மையத்தின் தலைமை அலுவலகம், சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வருகிறது. பாண்டி பஜாரில் செயல்படும் இந்த அலுவலகத்தில் அம்மா அழைப்பு மையத்துக்கான அனைத்துக் கருவிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு 150 பேர் வரை பணியாற்றி வருகின்றனர். 24 மணி நேரமும் செயல்படும் என்பதால், ஒவ்வொரு பணியாளருக்கும் முறைப்பணி என்ற அடிப்படையில் பணி கொடுக்கப்பட்டுள்ளது. புதிய திட்டம் தொடங்கப்பட்ட செவ்வாய்க்கிழமையன்று, அம்மா அழைப்பு மையத்துக்கு ஏராளமான அழைப்புகள் வந்ததாக அதில் பணியாற்றுவோர் தெரிவித்தனர்.
தொடர்ந்து "பிஸி': அம்மா அழைப்பு மையத்தைத் தொடர்பு கொண்ட பலரும் உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கருத்துத் தெரிவித்தனர். இதனால், ஒவ்வொருவரும் தொடர்ந்து அந்த எண்ணைத் தொடர்பு கொண்டே இருக்க வேண்டியிருந்ததாகத் தெரிவித்தனர்.
இந்தத் திட்டத்துக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து அழைப்பாளர்கள் மற்றும் கணினியின் எண்ணிக்கைகள் அதிகரிக்கப்படும். அப்போது பொதுமக்கள் இன்னும் எளிதாகத் தொடர்பு கொள்ள வழி ஏற்படும் என அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
எப்போ அழைத்தாலும் பிசி பிசியாகத்தான் இருக்கும் அதனால ஹலோ என்று கூறாமல் அம்மா என்று கூறினால் இணைப்பு கொடுக்கப்படும். இது ரகசியம்.
ReplyDelete