.

Pages

Monday, September 30, 2019

மிட்டாய் தாத்தாவுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கல்!

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ஆட்டக்காரத் தெருவைச் சேர்ந்த முதியவர் முகமது அபுசாலிக் அவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை உத்தரவின்படி முதியோர் உதவித்தொகைக்கான ஆணை இன்று (30.09.2019) வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் ஆட்டக்கார தெருவில் வசித்து வரும் முதியவர் முகமது அபுசாலிக் என்பவர் முதிர்ந்த வயதிலும் மிட்டாய் வியாபாரம் செய்து வருவதாக தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை உத்தரவின்பேரில், தஞ்சாவூர் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள் முதியவர் முகமது அபுசாலிக் வசிப்பிடத்திற்கு சென்று, அவருக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அதனடிப்படையில், மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்படி, தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மிட்டாய் வியாபாரம் செய்யும் முதியவர் முகமது அபுசாலிக் அவர்களுக்கு மாதாமாதம் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினை தஞ்சாவூர் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் இன்று (30.09.2019) வழங்கினார்.

அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை (அக்.01) மின்தடை!

அதிராம்பட்டினம், செப்.30
அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை (அக்.01) செவ்வாய்க்கிழமை மின்சார விநியோகம் இருக்காது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, காடந்தங்குடி, துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை, மதுக்கூர் நகர், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை அக்.01 ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அதிரையில் நவீன முறையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றக் கோரி, எம்.எல்.ஏ சி.வி சேகரிடம் AMS நிர்வாகிகள் மனு!

அதிராம்பட்டினம், செப்.30
அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் சுகாதார சீர்கேட்டை தவிர்க்க நவீன முறையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்தக் கோரியும், பாதாள சாக்கடைத்திட்டம் நிறைவேற்றக் கோரியும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ விடம் அதிரை மேம்பாடு சங்கமம் சார்பில் அதன் தலைவர் எம்.எஸ்.எம் முகமது யூசுப், ஏ.ஜெ அஸ்ரப் அலி ஆகியோர் இன்று திங்கட்கிழமை காலை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.  அப்போது, அதிராம்பட்டினம் பேரூராட்சி முன்னாள் துணை சேர்மன் ஏ.பிச்சை, அதிராம்பட்டினம் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் எம்.ஏ முகமது தமீம், முத்துக்கருப்பன், சங்கர், அன்வர் ஆகியோர் உடனிருந்தனர்.

அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பது:
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிராம்பட்டினம் தேர்வு நிலைப் பேரூராட்சி  21 வார்டுகளில், சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், தினமும் 10 டன் குப்பை  வரை சேகரமாகிறது. இவற்றை, பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள், சுய உதவிக்குழுவினர் என சுமார் 60 பேர் வரை அப்புறப்படுத்தி வருகின்றனர். குடியிருப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இப்பகுதியில் துப்புரவு பணியாளர்கள் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளது. மேலும், அதிராம்பட்டினம் பகுதிகளில் அன்றாடம் சேகரமாகும் குப்பைகளை இருப்பு வைக்கும் கிடங்கில் போதுமான இட வசதி இல்லை. இதனால், அதிராம்பட்டினம் பிரதான சாலைகளில் தேங்கும் குப்பைகளை ஏற்றிச்சென்று கிடங்கில் கொட்டுவதில் சுணக்கம் ஏற்படுகிறது. சாலைகளில் சிதறிக்கிடக்கும் குப்பைக் கழிவுகளை ஆடு, மாடு, நாய்கள் கிளறுவதன் மூலம் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு, அதிராம்பட்டினம் பகுதியில் 500 க்கும் மேற்பட்டோர் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக்கொண்டனர். இதில், சிலர் தீவிர சிகிச்சையும் எடுத்துக்கொண்டனர்.

எனவே, குப்பைக் கிடங்கை போதுமான இட வசதியில் விரிவாக்கம் செய்தோ அல்லது மாற்று இடத்தில் குப்பை கிடங்கு அமைத்து தர வேண்டும்,  அதிராம்பட்டினம் பேரூர் பகுதி துப்புரவுப் பணிக்கான ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் அன்றாடம் சேகரமாகும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து நவீன முறையிலான மாற்றுத் திட்டம் மூலம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டுமெனவும், இத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு, மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிரை பேரூர் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக உள்ளாத குறிப்பிட்டு இருந்தனர்.

அதிராம்பட்டினத்தில் பாதாள சாக்கடைத் திட்டம்:
அதிராம்பட்டினம் தேர்வுநிலை பேரூராட்சி 21 வார்டுகளை உள்ளடக்கியது. 12.80 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. இப்பகுதியில், தற்போது சுமார் 70 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். கடந்த 2011 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா, அதிராம்பட்டினம் பேரூராட்சியில் ரூ.23.73 கோடி மதிப்பீட்டில் புதிதாக பாதாள சாக்கடை திட்டத்தை அறிவித்து இருந்தார்.  இதன் பின்னர், சில பல காரணங்களால் மற்றொரு பகுதிக்கு இந்த திட்டம் கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றப்பட்டது. எனவே, அதிராம்பட்டினம் பேரூர் பகுதியில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் வருவாய் ஆகியவற்றை கருத்தில் கொண்டு  அம்மா அறிவித்த இந்த திட்டத்தை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டுமென மனுவில் கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ சி.வி சேகர் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
 
 

மரண அறிவிப்பு ~ செ.மு.மீ சேக் முகமது (வயது 73)

அதிரை நியூஸ்: செப்.30
அதிராம்பட்டினம், கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் செ.மு.மீ முகமது மீரா லெப்பை அவர்களின் மகனும், மர்ஹும் செ.மு.மீ கமாலுதீன், மர்ஹும் செ.மு.மீ  அல்லா பிச்சை, மர்ஹும் செ.மு.மீ முகமது அமீன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹும் சாகுல் ஹமீது, மர்ஹும் ஆர்.என் கனி ஆகியோரின் மைத்துனரும், நசுருதீன், அயூப், ஹாஜா மைதீன், நெய்னா முகமது ஆகியோரின் தாய் மாமாவுமாகிய, தீன் மெடிக்கல்ஸ், பிஸ்மி மெடிக்கல்ஸ் சேர்ந்த முகமது மீரா, முகமது சித்திக், முகமது தாஜுதீன், முகமது சம்சுதீன், முகமது ரஹ்மத்துல்லா, ஹாஜா அலாவுதீன், மேலத்தெரு நிஜாம், சேட் ஆகியோரின் சிரிய தகப்பனாரும், அசரப், முகமது ஆதில் ஆகியோரின் பெரிய தகப்பனாரும், அலி முகமது, முகமது அலி, ரபீக் அகமது ஆகியோரின் மாமனாரும், சாகுல் ஹமீது அவர்களின் தகப்பனருமாகிய செ.மு.மீ சேக் முகமது (வயது 73) அவர்கள் இன்று (30-09-2019) அதிகாலை லாவண்யா திருமண மஹால் பின்புறம் அமைந்துள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று ((30-09-2019) காலை 11 மணியளவில் கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

ஒரு மழைக்கே வெள்ளக்காடான பிலால் நகர் (படங்கள்)

அதிரை நியூஸ்:செப்.30
வருடாவருடம் பிலால் நகர் மக்கள் துன்பங்களை அனுபவிக்க வேண்டுமென்பது அரசு விதியா? என தெரியவில்லை.

இன்று அதிகாலை முதல் பெய்த கனமழையில் பிலால் நகர் கிட்டதட்ட முழங்கால் அளவு நீரில் மிதக்கின்ற நிலையில் இன்னும் மழைக்காலம் எஞ்சியுள்ளதால் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் பிலால் நகர்வாசிகள்.

பிலால் நகர் என்பதற்கு பதில் அரசு நிர்வாகத்தால் கைவிடப்பட்ட "அனாதை நகர்' என அழைப்பதே சாலப்பொருத்தம். ஏரிப்புறக்கரை ஊராட்சி அதிகாரிகள், பட்டுக்கோட்டை ஒன்றிய ஊராட்சித்துறை அதிகாரிகள் எல்லோருக்கும் வரிவசூல் செய்யும் போது மட்டுமே ஞாபகத்தில் வந்து செல்லும் அவலநிலை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தொடரும் என தெரியவில்லை.

பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர் அவர்களும் இதர ஆளுங்கட்சி பிரமுகர்களும் உடனடி கவனம் செலுத்தி பிலால் நகரின் பிரதான சாலையை முறையான வடிகால் வசதியுடன் உயர்த்தி தார் சாலையாக அமைத்து தர வேண்டும்.

பல வருட தொடர் கோரிக்கையான செடியன்குளம் வடிகால் வாய்க்காலில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றி முன்புபோல் நீர் தடங்களின்றி செய்னாங்குளத்திற்குள் செல்லவும் வழியேற்படுத்த வேண்டும் இல்லையேல் மழைநீரும் செடியங்குள நீரும் வழிந்தோடும் போது பிலால் நகர் மக்கள் இன்னொரு கஜா புயல்கால துன்பங்களை சந்திக்க நேரிடும்.

அதிரை அமீன்
 

அதிராம்பட்டினத்தில் பலத்த மழை!

அதிராம்பட்டினம், செப். 30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நள்ளிரவில் தொடங்கிய மழை, இன்று (செப்.30) திங்கட்கிழமை அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. அவ்வப்போது லேசாக இடி இடித்தது.

தாழ்வானப் பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. வானம் மேகம் மூட்டத்துடன் காட்சி தருவதால், இப்பகுதியில், மீண்டும் மழை பெய்யும் என எதிர் பார்க்கப்படுகிறது.

Sunday, September 29, 2019

காதிர் முகைதீன் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.29
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி இயற்பியல் துறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் (பொ) எம்.முகமது முகைதீன் தலைமை வகித்து உரை ஆற்றினார்.

இயற்பியல் துறை தலைவர் பேராசிரியை ஏ. ஆயிஷா மரியம் வரவேற்றுப் பேசினார். கல்லூரி துணை முதல்வர் பேராசிரியர் எம். முகமது முகைதீன், முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எஸ்.பி கணபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பேராசிரியர் என்.சேகர், 'முன்னாள் மாணவர்களின் முக்கியத்துவம்' பற்றியும், பேராசிரியர் எஸ். ஞானசரவணன், மாணவர்கள் ~ ஆசிரியர்கள் நல்லுறவு குறித்தும் பேசினர்.

விழாவில், கடந்த ஆண்டுகளில் இயற்பியல் துறையில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் 60 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, கல்லூரி காலங்களில் நிகழ்ந்த மலரும் நினைவுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிவில், கல்லூரி இயற்பியல்துறை பேராசிரியர் ஏ.என் விக்னேஸ்வரன் நன்றி கூறினார்.
 

மரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)

அதிரை நியூஸ் செப்.29
அதிராம்பட்டினம், 'கல்வித்தந்தை' மர்ஹூம் ஹாஜி எஸ்.எம்.எஸ் சேக் ஜலாலுதீன் அவர்களின் குடும்பத்தை சேர்ந்த எஸ். முகமது அஸ்லம் அவர்களின் பேரனும், எம். அப்துல் ஹாதி அவர்களின் மகனுமாகிய ஃபாஹிம் (வயது 19) அவர்கள் இன்று அதிகாலை சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று (29-09-2019) இரவு இஷா தொழுகைக்கு பின் மண்ணடி மஸ்ஜித் மாமூர் பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடைபெறும். பின்னர், ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

'நீர் வளம் காப்போம்', 'மழை நீர் சேகரிப்பு' விழிப்புணர்வு பேச்சுப் போட்டி (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.29
நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், நீர் வளம் காப்போம், மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேச்சுப் போட்டி, ஆய்ஷா மகளிர் அரங்கில் (செப். 28) சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் (ஓய்வு) எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன். தலைமை வகித்து, போட்டியை தொடங்கி வைத்துப் பேசினார். நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் எஸ்.எச் அஸ்லம் வரவேற்றுப் பேசினார்.

இதில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 'நீர் வளம் காப்போம்', 'மழை நீர் சேகரிப்பு', 'நீராதாரம், உயிராதாரம்' ஆகிய தலைப்புகளின் கீழ், கீழோர் பிரிவில் 6,7,8,9 ஆகிய வகுப்புகளுக்கும், மேலோர் பிரிவில் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டன.

இதில், இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, கரையூர் தெரு அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளி, ஈ.பி.எம்.எஸ் பள்ளி, காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளிகள், ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, பிரிலியண்ட் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 26 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

போட்டி நடுவர்களாக, கல்வியாளர் எஸ்.எம் நூர்முகமது, முதுகலை
ஆசிரியர்கள் ஆர். உஷா, ஏ.அஜுமுதீன் ஆகியோர் பொறுப்பேற்று நடத்தினர்.

போட்டி முடிவில், கீழோர் பிரிவில், மாணவர்கள் கே.விஷாலினி (ஆக்ஸ்போர்டு பள்ளி), ஏ. தஸ்பீஹா (ஈ.பி.எம்.எஸ் பள்ளி), ஆர்.நித்யஸ்ரீ (ஆக்ஸ்போர்டு பள்ளி) ஆகியோரும், மேலோர் பிரிவில், எச்.நஹீதா (ஈ.பி.எம்.எஸ் பள்ளி), ஏ.அருள்தேவி (ஆக்ஸ்போர்டு பள்ளி), எஸ்.சரிகா ( ஆக்ஸ்போர்டு பள்ளி) ஆகியோரும் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர். இவர்களுக்கு நினைவுப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், போட்டியில் பங்குபெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியினை, அவ்வமைப்பின் ஆலோசகர் மு.காதர் முகைதீன் தொகுத்தளித்தார். முடிவில், அவ்வமைப்பின் பொருளாளர் ஏ.எஸ் அகமது ஜலீல் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், அவ்வமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், நீர் நிலை ஆர்வலர்கள், பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.