.

Pages

Sunday, August 4, 2013

அமீரகத்தில் அயராது உழைக்கும் அதிரை பைக் மெஸ்ஸஞ்சர்ஸ் !

நமது அதிரைச்சகோதரர்கள் அனைத்து உலக நாடுகளிலும் நிறைந்து காணப்பட்டாலும் அன்று முதல் இன்று வரை பெரும்பாலானோரின் பிழைப்புக்கு கைகொடுத்து வரும் நாடுகளில் ஒன்றாக அமீரகம் திகழ்கிறது.
சரி விசயத்திற்கு வருவோம்...

துபாய் - நம் அதிரைச் சகோதரர்கள் அதிகமானோருக்கு புகலிடம் கொடுத்து வருகின்ற உன்னதமான நாடு. இங்கே உயர்நிலைப் பணியிலிருந்து கடைநிலை பணிவரை நம் சகோதரர்கள் பரவலாக பணிபுரிந்து வந்தாலும் அதிக எண்ணிக்கையாக மோட்டர் சைக்கிள் மெஸ்ஸஞ்ஜர் எனப்படும் பைக் ஓட்டும் பணியிலேயே உள்ளனர். காரணம் கல்வியில் பின்தங்கியிருக்கும் நம் சமுதாய மக்கள் பட்டப்படிப்பு படிக்காதவர்களுக்கும், பாதியிலேயே படிப்பை விட்டவர்களுக்கும் இங்கு பெரிதும் கை கொடுப்பது இந்த மோட்டர் சைக்கிள் மெஸ்ஸஞ்ஜர் பணியே !

மோட்டர் சைக்கிள் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக இவர்கள் செலவிடும் தொகை சுமார் 5 ஆயிரம் திர்ஹம் முதல் 10 ஆயிரம் திர்ஹம் வரை செலவு செய்து பெறுகின்றனர். இவ்வளவு தொகையை செலவழித்து ஓட்டுனர் உரிமம் பெறும் அவர்கள் ஏதாவது நிறுவனமொன்றில் பணியில் அமர்ந்தவுடன் அவர்கள் எதிர்பார்க்கும் சம்பளம் ஒரு சிலரை தவிர மற்றவருக்கு போதுமானதாகக் கிடைப்பதில்லை.

கை நிறைய சம்பளம் கணிசமாக கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே துபாய் வந்ததும் அதிகமான நமது அதிரைச் சகோதரர்கள் லைசன்ஸ் எடுக்க முயற்சிக்கின்றனர். காரணம் வர்த்தக நகரமான துபாய் அலுவலக வேலைகள் அதிகம் நிரம்பிக்கிடப்பதால் எப்போதும் சாலைகளில் வாகனப்போக்குவரத்து பரபரப்புடன் காணப்படும். ஆகவே கொடுக்கும் அலுவலக சம்பந்தப்பட்ட வேலையை குறித்த நேரத்தில் செய்து கொடுக்க இந்த மோட்டர் சைக்கிள் மெஸ்ஸஞ்ஜர்களால் மட்டுமே முடியும். ஆகவே அவரவர்கள் திறமைக்குத் தகுந்தபடி அலுவலக மெஸ்ஸஞ்ஜராகவும். கூரியர் சர்வீஸ் மெஸ்ஸஞ்ஜராகவும், ரெஸ்ட்டரண்ட் டோர் டெலிவரி செய்வதற்காகவும் மற்றும் பல அனைத்துப்பணிகளையும் துரிதமாக செய்வதற்காகவே இத்தகைய ஒரு பணிக்கு நல்ல வரவேற்ப்பு இருக்கிறது. ஆகவே நமதூர்ச் சகோதரர்கள் மட்டுமல்லாது பிற ஊர்ச் சகோதரர்களும் மோட்டார் சைக்கிள் லைசன்ஸ் எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதில் நமதூர்ச் சகோதரர்களின் எண்ணிக்கை அதிகப்படியாக உள்ளன.

ஆனால் இந்தப்பணி செய்வோரின் நிலையை நினைத்துப்பார்த்தால் மனம் சற்று கனத்துத்தான் போகும். வேதனைப்படும். காரணம் கொளுத்தும் இந்த கோடை வெயிலிலும், கொட்டும் கொடும்பனியிலும் குடல் நடுங்கும் குளிரிலும் அயராது தன் பணியை துபையின் அகல பல நெடுஞ்சாலைகளைக் கடந்து தான் மேற்கொண்ட பணியினை நேரம் தவறாது செய்து கொண்டு வருகின்றார்கள்.துபையின் அனைத்து பிரதான சாலைகளிலும் நம் அதிரைச்சகோதரர்களின் மோட்டர் சைக்கிளை அனுதினமும் வலம் வரக் காணலாம். அது ஒரு புறம் இருந்தாலும் சாலைகளில் சில விபத்தினை சந்தித்தும் பல விபத்தினை தவிர்த்தும் நிதானித்து தன்னை ஒரு சர்க்கஸ் கலை நிபுணரைப்போல் நினைவில் கொண்டு கரணம் தப்பினால் மரணம் என்று சொல்லுமளவுக்கு சாகசங்கள் செய்து தன் குடும்பத்திற்காகவும், தனது மனைவி மக்களை நல்லபடி வாழவைப்பதர்க்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல முடியும். அத்தனை ஆபத்து மிக்க பணியிது.
அது மட்டுமல்லாது அலுவலக மேலாளரின் கெடுபிடி வாடிக்கையாளர்களிடமிருந்து புகார் வராத அளவுக்கு துரிதமாக பொருட்களையோ, டாக்குமெண்டுகளையோ கொண்டுபோய் சேர்ப்பது அலுவலக நேரத்திற்குள் அனைத்து வெளிவேலைகளையும் செய்துமுடிப்பது இத்தனைக்கும் நடுவில் துபையின் வாகன சட்டத்திற்குட்பட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டிச் செல்வது இப்படி பல மன உலைச்சல் இன்னல்களுக்கு நடுவில் இவர்களின்வாழ்க்கை இங்கு அமைந்துள்ளது.

தன் குடும்பத்திற்காக வருமானத்தை பெருக்கிக்கொள்ளும் நோக்கில் இத்தகைய உயிருக்கு உத்திரவாதமில்லாத ஒரு பணியை கையில் எடுத்துக்கொண்டு தன்னை அர்ப்பணித்து அல்லும் பகலும் அயராது உழைத்து மோட்டார் சைக்கிளை மூலதனமாக கொண்டு வாழ்க்கையை கழித்துவரும் இவர்களுக்காக இப்புனித மிக்க ரமலான் மாதத்தில் இறைவன் இவர்களின் ஆபத்தை நீக்கி என்றும் தான் எடுத்த பணியினை செவ்வனே செய்து சிறப்புடனே வாழ இறைவன் துணை நிற்க நாம் அனைவரும் துவா செய்வோமாக !

அதிரை மெய்சா
புகைப்படங்கள் : அதிரை பேக்ட் சிராஜ்

3 comments:

  1. தலையங்கத்தை படித்ததும் என் தம்பி நினைவு வந்துவிட்டது. கடந்த எட்டு ஆண்டுகளாக துபாயில் பணிபுரிகிறார்.

    அமீரகத்தில் மட்டுமல்ல எங்கேல்லாம் நம் சகோதரர்கள் இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனரோ அவர்களுக்கு இப்புனித மிக்க ரமலான் மாதத்தில் இறைவன் இவர்களின் ஆபத்தை நீக்கி சிறப்புடனே வாழ துவா செய்வோம்.

    ReplyDelete
  2. தன் குடும்பத்திற்காக வருமானத்தை பெருக்கிக்கொள்ளும் நோக்கில் இத்தகைய உயிருக்கு உத்திரவாதமில்லாத ஒரு பணியை கையில் எடுத்துக்கொண்டு தன்னை அர்ப்பணித்து அல்லும் பகலும் அயராது உழைத்து மோட்டார் சைக்கிளை மூலதனமாக கொண்டு வாழ்க்கையை கழித்துவரும் இவர்களுக்காக இப்புனித மிக்க ரமலான் மாதத்தில் இறைவன் இவர்களின் ஆபத்தை நீக்கி என்றும் தான் எடுத்த பணியினை செவ்வனே செய்து சிறப்புடனே வாழ இறைவன் துணை நிற்க நாம் அனைவரும் துவா செய்வோமாக !

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி... பயனுள்ள தகவல்...

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.