.

Pages

Monday, November 24, 2014

அதிரை அருகில் 'காசாங்காடு' கிராமத்தில் மது, புகையிலை, பீடி சிகரெட் விற்பனைக்கு தடை !

சாதி வேறுபாடு, மத வேறுபாடு, புகைப்பழக்கம், குடிப்பழக்கம் இல்லாத ஒரு ஊர் உள்ளதென்றால் அது தமிழ்நாட்டில் இருக்காது என்று தான் சொல்வார்கள், ஏனெனில் வருடத்திற்கு பல கோடிகளை வாரிகொடுக்கும் குலதொழிலாகவே குடிப்பழக்கம் மாறிவிட்டது.
'தமிழ்நாட்டுல குடிக்காதவன் ஒரு தொகுதிக்கு ஒருத்தன்தான் இருப்பான், அதுவும் நேத்து பொறந்த சின்ன குழந்தையாதான் இருப்பான்'னு வரும் சினிமா வசனத்திற்கு கைதட்டுவதும், பெருமைப்படுவதும் இங்குதான் நடக்கிறது. ஆண், பெண் எனும் குடிமக்கள் வெறும் ‘குடி’மக்கள் ஆகி வரும் நிலையில் முறையான கட்டுப்பாட்டுடன் 'நமக்கு நாமே' என்ற திட்டத்தின் மூலமாக  செழுமையாக ஒரு கிராமம் உண்டு என்றால், தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அதிரை அடுத்துள்ள மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 'காசாங்காடு' எனும் கிராமம் தான் அது.
இங்கு வேளாளர், அம்பலக்காரர், ஆதிதிராவிடர் என்ற மூன்று சமூகத்தினர் ஒற்றுமையாக, சமமாக வாழ்ந்து வருகின்றனர். ஒரு கிராமத்தில் எப்படி எல்லா விஷயங்களும் சாத்தியம் என்ற ஆச்சரியத்துடன், ஊர் மக்களிடம் பேசினோம்.
இந்த ஊரைப்பற்றி முதல் முதுநிலை பட்டதாரியும், முனைவருமான டாக்டர் உதயகுமார் கூறுகையில், ''இங்கு குடிப்பழக்கம் யாருக்கும் கிடையாது. டாஸ்மாக் கடையும் கிடையாது. மீறினால் கடுமையான அபராதம், சாதி வேற்றுமை இல்லை. அதனால் சாதி மாறி காதலித்தாலோ அல்லது திருமணம் செய்தாலோ எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை. கிட்டதட்ட 60 ஆண்டுகளாக இந்த ஊர் இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறது. இதற்கு காரணம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.விஸ்வநாதன் தான்.

அவர் காட்டிய விதிமுறைகளைத் தான் நாங்கள் இன்றும் பின்பற்றி வருகிறோம். அவர் இருந்தவரை மக்கள் அவரையே போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுத்தார்கள். அவரின் மறைவுக்குப்பின் (1991) தேர்தல் நடத்தி ஊர் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மேலும், ஆர்.விஸ்வநாதன் பெயரில் அறக்கட்டளை அமைத்து ஊருக்கு தேவையான அடிப்படை வசதிகளை நாங்களே செய்து கொள்கிறோம். கல்யாண மண்டபம், பள்ளி பிள்ளைகளுக்கு தேவையான உதவிகள், பள்ளி அளவில் சாதிப்பவர்களுக்கு உதவிதொகை வழங்கி வருகிறோம்.

மேலும் டாக்டர்கள், இன்ஜினியர்கள் என்று எங்கள் ஊரை சேர்ந்தவர்கள் பல்வேறு இடங்களில் வேலை பார்க்கிறார்கள். என் மகன் மருத்துவத்தில் முதுகலை படிப்பு முடித்துவிட்டு எங்கள் ஊரிலேயே சேவை செய்யும் முனைப்புடன் இருக்கிறார். மேலும் இங்கிருந்து சிங்கப்பூர் சென்றவர்கள் அதிகம். அவர்கள் செய்யும் உதவியும் எங்களுக்கு கிடைப்பது எங்கள் முன்னேற்றத்திற்கு மிகவும் உதவுகிறது” என்றார்.

ஊராட்சித் தலைவர் மு.சதாசிவம், ''எங்கள் ஊரில் கிட்டதட்ட 750 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இங்கு புகையிலை, சிகரெட், பீடி போன்றவை விற்க அனுமதியில்லை. அதேபோல், எந்தவொரு பிரச்னையானாலும் போலீஸுக்கு போவதில்லை. நாங்களே பஞ்சாயத்து வைத்து, ஊர் தலைவர் என்ற முறையில் பிரச்னைகளை தீர்த்துக்கொள்கிறோம். அதேபோல் சுகாதாரத்தை பொறுத்தவரை, தெருவுக்கு இரண்டு குப்பை தொட்டிகள் வைத்து முறையாக பயன்படுத்துகிறோம். எங்க ஊர்லேர்ந்து இந்திய தேசிய ராணுவ அமைப்பில் 32 பேர் இருக்கின்றனர். இன்னும் பல்வேறு இளைஞர்களை ராணுவத்தில் சேர ஊக்குவிக்கிறோம்'' என்றார்.

ஊராட்சித் துணைத் தலைவர் கோ.ராஜராஜசோழன், ''எங்க ஊர்ல பசுமைக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் ஆடுகளை நாங்கள் வளர்ப்பதில்லை. ஆடுகளுக்கு பதில் காடுகளே எங்களுக்கு பிரதானம். மேலும் 750 வகையான மூலிகைகள் இருக்கின்றன. ஆராய்ச்சிக்காக அப்பப்ப யாராவது வந்து சேகரிச்சுட்டு போவாங்க.
ஆதி திராவிடருடன் இணக்கமா இருந்தா பத்து லட்சம் தர்றதா அரசு சொல்லியிருந்தது. ஆனால் இன்னும் தரல. நாங்க ஊர்ல கழிவறைகளையும் கட்டி தர்றோம். அரசின் உதவி கிடைத்தால் இன்னும் உதவியாக இருக்கும். மேலும், கடந்த 2008 ஆம் ஆண்டு அரசின் விருதும் பெற்றிருக்கிறோம்'' என்றார்.

இந்த ஊரில், ஆரம்ப சுகாதார நிலையம், பஞ்சாயத்து அலுவலகம், கால்நடை மருத்துவனை, வள்ளுவர் படிப்பகம் என்று எல்லாம் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது. சாலைகள் கூட அடுத்தவர் நிலத்தை பாதிக்காத வண்ணம் சீரான தார் சாலைகளாக இருக்கிறது.
பெருநகரங்களில் கூட தூய்மையை விளம்பரத்தை பார்த்து கற்றுக்கொள்ளும் நம்மிடையே இப்படி விதிவிலக்காய் இருக்கும் கிராமங்களும் இருக்கதான் செய்கிறது. இப்படி நமக்கு நாமே என்று திட்டங்களை தீட்டி செம்மையாக இருக்கும் கிராமங்களை ஊக்குவித்தால், மற்ற கிராமங்களும் வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையாக வாழ வழி பிறக்கும். நாட்டின் முன்னேற்றமும் வேகமடையும். நமது வல்லரசு கனவு நினைவாகும்.
'கிராமங்களே நாட்டின் முதுகலும்பு' என்று சொன்ன மகாத்மா காந்தி கண்ட கனவு கிராமம் 'காசாங்காடு' என்றால் மிகையில்லை.

ஆ.மேரி செல்வ இஸ்ரேலியா
மாணவப் பத்திரிகையாளர் -  விகடன் நியூஸ்
பரிந்துரை : 'கவியன்பன்' அதிரை கலாம்

8 comments:

  1. பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் ஒவ்வொருவரும் ஒரு கிராமத்தை தத்துதெடுக்க வேண்டுமென பிரதமர் உத்தரவு விட்டுள்ளார் அதனடிப்பாட்டில் நம்ம எம்பி இந்த கிராமத்தை தேர்வு செய்யலாம், அரசியல் வாதிகளுக்கு நோகாமல் நொங்கு தின்ன தான் ஆசை,
    அதிரைக்கு வருவோரை வரவேற்ப்பது டாஸ்மாக் தான் அதானே எல்லையில் உள்ளது, இதனை எதிர்த்து மக்கள் என்றைக்கு போராட்டம் நடத்துவார்களோ?

    காசன்காடு மற்ற கிராமங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது -பாராட்டுக்கள் இதிலிருந்து நம் தெருவை சுத்தமாக வைத்துக்கொள்ள முயற்சிப்போமா?

    ReplyDelete
  2. முதலில் நமது ஊர் எல்லையில் அமைந்துள்ள டாஸ்மார்க் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்!

    ReplyDelete
  3. முதலில் காசாங்காடு கிராமமக்களுக்கு பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்.!

    இங்குவாழும் மக்கள் ஒற்றுமையுடனும் மனிதனுக்கு கேடுவிளைவிக்கும் மது புகை மற்ற போதைப் பொருளை கிராமத்திற்குள் தடை செய்து வைத்திருப்பதை கேட்கவே சந்தோசமாக இருக்கிறது. இப்படி இந்த காசாங்காடு கிராமமக்களின் ஒற்றுமையை கேள்விப்படும்போது மனம் மகிழ்ச்சியடைவதுடன் நமதூர் வாசிகளும் ஒன்றுபட்டு நமதூரை இப்படி கொண்டுவர முயற்ச்சிப்பார்களா.? என்று நினைத்து ஏக்கமாக உள்ளது.

    ReplyDelete
  4. We need to learn lots of from them

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. நாங்கள் காதிர் முஹைதீன் பள்ளி படிக்கும் காலங்களில் கால் பந்து விளையாடுவதற்கு அங்கு சென்றுள்ளோம். மிகவும் அருமையான கிரமாம் .எங்கு சென்றாலும் பச்சை போல் காண முடியும். அங்கு தொட்டால் சினிங்கி செடி எல்லாம் தொட்டு விளையாடி இருக்கிறோம் .மனிதனுக்கு கேடு தரும் விசங்களை அனுமதிக்காமல் வாழும் எமது மக்களுக்கு என் அன்பான வணக்கங்கள் . வாழ்க நலமுடன் .

    ReplyDelete
  8. மிக்க நன்றி . யான் பரிந்துரை செய்த இந்த ஆக்கத்தை உடன் பதிவுக்குள் கொண்டுவந்து விட்டீர்கள். நமது ஊருக்குப் பக்கத்தில் உள்ள ஊர் நமக்குப் படிப்பினையைச் சொல்லிக் கொடுப்பதை எண்ணிப்பார்த்தேன் . நமதூரின் பேரூராட்சிப் பெருந்தலைவர் சகோதரர் அஸ்லம் அவர்களுக்கும் பார்வைக்கு அனுப்பி விட்டேன். இந்த ஆக்காத்தை ஆனந்த விகடனில் பார்த்தது முதல் ஆனந்தம் என் நெஞ்சில் ஆட்கொண்டது. பக்கத்தில் இருந்தும் பார்க்காமல் போனோமே என்ற ஆதங்கமும் என்னை வாட்டுகின்றது. இத்தளத்தின் ஆசிரியர் நிஜாம் அவர்களுக்கு ஒரு கனிவான வேண்டுகோள் " நீங்கள் ஓர் ஊடக ஆசிரியர் என்பதால் காசாங்காடு என்னும் இந்த அழகிய கிரமாத்திற்குச் சென்று மேலும் நேர்காணல் செய்து பதிக

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.