.

Pages

Saturday, December 31, 2016

அதிரையில் ஈஎஸ்சி (ஜூனியர்) நடத்திய கைப்பந்து தொடர் போட்டி !

அதிராம்பட்டினம், டிச-31
அதிராம்பட்டினம் ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் - ஜூனியர் சார்பில் 3 ஆம் ஆண்டு நடத்திய கைப்பந்து தொடர்போட்டி காட்டுப்பள்ளி ஈஎஸ்சி மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இப்போட்டியில் அதிராம்பட்டினம், இளையான்குடி, கட்டுமாவடி வாய்மேடு, சூரப்பள்ளம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 16 அணிகள் கலந்துகொண்டு விளையாடினார். இதில் அரை இறுதி ஆட்டத்தில் அதிரை ஈஎஸ்சி, சூரப்பள்ளம், அதிரை ப்ரண்ட்ஸ், எஃப்எஸ்சி ஆகிய அணிகள் மோதினார்கள். இதில் சூரப்பள்ளம், அதிரை ப்ரண்ட்ஸ் ஆகிய அணிகள் இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றனர். பின்னர் இரு அணிகளும் விறுவிறுப்பாக ஆடி, ஆட்ட இறுதியில் சூரப்பள்ளம் அணி முதல் பரிசை தட்டிச்சென்றது.

பின்னர் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட மான் ஏ நெய்னா முகமது, அஜ்மல்கான் மற்றும் ஈஎஸ்சி நிர்வாகிகள் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

தொடக்கத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட முன்னாள் அதிரை சேர்மன் எஸ்.எச் அஸ்லம், சேக்தாவூது, அயூப்கான், சன் டீ முனாப் உள்ளிட்டோர் முதல் ஆட்டத்தை தொடங்கி வைத்து வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை அன்வர், முகைதீன், மர்ஜூக் மற்றும் ஈஎஸ்.சி நிர்வாகிகள் செய்தனர்.

செய்தி மற்றும் படங்கள்:
அன்வர் ( ஈஎஸ்சி )
 
 
 
 
 
 
 
 
 

பாம்பு கடித்து இறந்தவர் 40 வருடங்களுக்குப் பின் வீடு திரும்பிய அதிசயம் !

அதிரை நியூஸ்: டிச-31
உத்தர பிரதேச மாநிலம் மஜாஹ்வான் நகரின் அருகிலுள்ள இனாயத்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் 'விலாஸா' என்ற பெண்ணை 1976 ஆம் ஆண்டு கருநாகப் பாம்பு தீண்டியதை தொடர்ந்து பரிசோதித்த நாட்டு மருத்துவர் ஒருவர் அவர் இறந்து விட்டதாக அறிவித்தார்.

பின்பு இறந்தவருக்கான காரியங்களை செய்த குடும்பத்தினர் மத வழக்கப்படி கங்கைநதியில் விலாஸாவின் உடம்பை தூக்கி எரிந்துவிட்டு தங்களின் வழமையான வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர்.

இந்நிலையில், சிலதினங்களுக்கு முன் சுமார் 82 வயதில் 'விலாஸா' வீடு திரும்பினார். பேராச்சரியம் அடைந்த குடும்பமும் அவருடைய இருமகள்களான ராம் குமாரிக்கும், முன்னிக்கு தனது தாயை 40 ஆண்டுகள் கடந்த பின்பும் அடையாளம் காண்பதில் எந்த சிரமமும் இருக்கவில்லை.

பிழைத்து மீண்டது எப்படி?
கங்கை ஆற்றில் மிதந்தபடி சென்ற விலாஸாவின் உடலில் உயிரிருப்பதை கண்ட மீனவர்கள் மீட்டு தங்கள் கிராமத்தின் கோயிலில் சேர்த்தனர் ஆனால் அவருடைய பழைய ஞாபகங்கள் அனைத்தும் மறந்திருந்தன.

சுமார் 40 வருட மறதியான வாழ்க்கைக்குப் பின் திடீரென சுயநினைவு திரும்பிய 'விலாஸா'க்கு தனது வீட்டையும், கிராமத்தையும், மகள்களை பார்ப்பதற்காக தெளிவான அடையாளங்களை கூறி வந்தவரை கல்லறையிலிருந்து வந்தவரைப் போல் முதலில் பார்த்தாலும் பின்பு அனைவரும் மனதார ஏற்றுக் கொண்டனர்.

தினம் தினம் நான் செத்துப் பிழைக்கின்றேன் என்று அலுத்துக் கொள்கின்றவர்கள் மத்தியில் மெய்யாலுமே?(!) செத்துப் பிழைத்தவர், ஆச்சரியங்கள் நிறைந்த உலகம்.

Source: Times of India / Msn
தமிழில்: நம்ம ஊரான்

மத்திய அரசைக் கண்டித்து அதிரையில் 4 இடங்களில் தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் !

அதிராம்பட்டினம், டிச-31
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்டத்தின் சார்பில் பட்டுக்கோட்டை, மதுக்கூர், வல்லம் உட்பட பல்வேறு இடங்களில் தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை அதிரை பேருந்து நிலையம், மேலத்தெரு, செக்கடி மேடு, கடைத்தெரு உட்பட 4 இடங்களில் தெருமுனைபிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றது.

கூட்டத்திற்கு அவ்வமைப்பின் அதிரை பேரூர் தலைவர் முகமது அஜாருதீன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான், பி.எஃப் அமைப்பின் மாவட்டத் தலைவர் ஹாஜா அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட பேச்சாளர் எம். சாகுல் ஹமீது கலந்துகொண்டு 3 இடங்களிலும், மாவட்ட பொதுச் செயலாளர் ஹாஜி சேக் 1 இடத்திலும் கண்டன உரை நிகழ்த்தினார்கள். இக்கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 

குளிருக்கு போர்வை வழங்கிய லயன்ஸ் சங்கம்: "இல்லாதோருக்கு கொடுங்கள்" திருப்பித் தந்த மூதாட்டி

பேராவூரணி டிச-31
பேராவூரணி லயன்ஸ் சங்க மாதாந்திரக் கூட்டம் வியாழன் அன்று மாலை நடைபெற்றது. பின்னர் நள்ளிரவில்பேராவூரணியில் சாலையோரங்களிலும், பேருந்து நிலையங்களிலும்,  இரவில் கொட்டும் பனியில் குளிரில் படுத்து உறங்கிய ஆதரவற்றவர்களுக்கு பேராவூரணி லயன்ஸ் சங்கத் தலைவர் பொறி. மு.கனகராஜ் தலைமையில் 22 நபர்களுக்கு போர்வை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் லயன்ஸ் மணடலத்தலைவர் எஸ்.கே. இராமமூர்த்தி, சங்க செயலாளர் பொறி.கே. இளங்கோ, பொருளாளர் கே. கிருஷ்ணமூர்த்தி,
உறுப்பினர்கள் எம்.நீலகண்டன், செ.இராமநாதன், சரவணன், பொறி.ஜெயக்குமார், பொறி.குட்டியப்பன், சுப்பையா ஆகியோர் கலந்துகொண்டனர்.

நெகிழ்ச்சி
போர்வை வழங்கிக் கொண்டிருந்த லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கடைகளில் கையேந்தி யாசகம் பெற்று பிழைப்பு நடத்தும் தெருவோரம் உறங்கிக் கொண்டிருந்த ஒரு மூதாட்டியை எழுப்பி, போர்வையை வழங்க முற்பட்ட போது, தன்னிடம் போர்வை இருப்பதாகவும், போர்வை இல்லாத, தேவைப்படும் யாருக்காவது வழங்குமாறு கூறி, பெற்றுக்கொள்ள மறுத்து விட்டார்.

மூதாட்டியின் செயலால் நெகிழ்ந்து போன லயன்ஸ் சங்க நிர்வாகிகள் அம்மூதாட்டிக்கு பண உதவிகளை செய்து திரும்பினர்.

தன் தேவைக்கும் அதிகமாக கிடைத்தாலும் வாரிச் சுருட்டிக் கொள்ள நினைக்கும் இக்காலத்தில் தன்னிடம் போர்வை இருப்பதாகவும், இல்லாதவர்க்கு வழங்கிடுமாறும் கூறி அம்மூதாட்டி லயன்ஸ் சங்கத்தினரை நெகிழ வைத்து விட்டார்.

மல்லிபட்டினம் அருகே வியாபாரிடம் வெள்ளிக் கொலுசு திருட்டு !

மல்லிபட்டினம், டிச-31
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிபட்டினம் அருகே கொலுசு வியாபாரியிடம் கொலுசை பறித்து சென்ற இருவரில் ஒருவரை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் ஆர்.வெங்கடாசலம் (62) கொலுசு வியாபாரி. கடலோர கிராம பகுதிகளில் சைக்கிளில் சென்று வீடு வீடாக வியாபாரம் செய்பவர். வியாழக்கிழமை அன்று மல்லிப்பட்டினம் சென்று வியாபாரம் செய்து விட்டு சேதுபாவாசத்திரம் வந்து கொண்டிருந்த போது சுடுகாடு அருகே சைக்கிளை நிறுத்திவிட்டு இயற்கை உபாதையை கழித்துள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சைக்கிளில் இருந்த ஒரு கிலோ வெள்ளி கொலுசை எடுத்துகொண்டு தப்பிவிட்டனர். இதுகுறித்து சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்ததில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில் ஒருவரான சேதுபாவாசத்திரம் கடற்கரை தெருவை சேர்ந்த மா.மாதவன் (23) என்பவரை கைது செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். கொலுசுடன் தப்பி சென்ற மற்றொருவரை தேடி வருகின்றனர்.

அசர வைக்கும் அதிரை விருந்தோம்பல்: 'தினமணி' ஆண்டு மலரில் இடம்பெற்ற படைப்பு !

அதிராம்பட்டினம், டிச-31
விருந்தோம்பலுக்கு பெயர்பெற்ற ஊர்களில் அதிராம்பட்டினமும் ஒன்று. உற்றார் - உறவினர்கள் - நண்பர்கள் படைசூழ விருந்தாளிகளிடம் சகோதரத்துவ அன்பை வெளிப்படுத்தும் விதமாக அருகிலே நின்று விருந்து உபசரிக்கப்படும் உயர்ந்த பண்பு பிறரை மெய்சிலிர்க்க வைக்கும்.

பிரபல தமிழ் நாளிதழ் 'தினமணி' ஆண்டு மலருக்காக தனது பிறந்த மண்ணின் விருந்தோம்பல் பெருமையை 'அதிரை நியூஸ்' இணையதள ஊடக ஆசிரியர் எம்.நிஜாமுதீன் ( சேக்கனா நிஜாம் ) அவர்கள் எழுதிய அழகிய படைப்பு இன்று ( 31-12-2016 ) காலை வெளியிடப்பட்டுள்ளது.
 

Friday, December 30, 2016

அதிரையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

அதிரையில் வரும் கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது - தண்ணீர் பயன்பாட்டில் சிக்கனம் தேவை என சமூக ஆர்வலர் முஹம்மது அப்துல் காதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

29-12-2016 நிலவரப்படி, தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு 904.59 மி.மீ மழையும், 2015 ஆம் ஆண்டு 1,121.97 மி.மீ, நடப்பாண்டில் ( 2016 ஆம் ஆண்டு ) 619.62 மி.மீ மழை பெய்துள்ளது. இவை கடந்தாண்டு பெய்த மழையை வீட நடப்பாண்டில் பாதியாக குறைந்துள்ளது.

அதிரையில் 2016 ஆம் ஆண்டு பெய்த மொத்த மழையின் அளவு 61 செ.மீ. இது அதிரையின் சராசரி மழை (124 செ.மீ)யை  விட மிகவும் குறைவு. (Refer - Below screenshot image - Data collected from Regional Meteorological Centre, Chennai).  சொல்ல போனால் பாதி அளவு கூட மழை பெய்யவில்லை. டிசம்பர் மாதத்துடன் மழை காலம் முடிகிறது. பின் வரும் மாதங்களும் (ஜனவரி முதல் மே வரை) தென்னிந்தியாவில் வறண்ட காலமாக (மழை அதிகம் பெய்யாத காலமாக உள்ளது). இதனால் அதிரையில் நிலத்தடி நீர் மிகவும் குறையும் அபாயம் உள்ளது.
போதுமான மழை பெய்யாத காரணம் ஒரு பக்கம் இருந்தாலும், காலத்தில் கட்டாயத்தால் பெருகி வரும் கட்டிடங்களும், மறைந்து வரும் மண் சாலைகளும், தரையாக மாறிவரும் வீட்டின் கொல்லை புறங்களும் மழை நீரை பூமியில் உறிஞ்சாமல் சாக்கடையில் தள்ளி விடுகிறது. இதனால் குறைந்த அளவு பெய்த மழையிலும் சொற்ப அளவு தண்ணீர் தான் நிலத்தில் சேருகிறது.

தற்போது, பெரும்பாலான வீடுகளில் ஆழ்துளை கிணறு (Bore Well)  கொண்டு தான் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறோம். நிலத்தடி நீர் தான் அனைவருக்கும் நீர் ஆதாரமாக விளங்குகிறது. அதுவும் குறைந்து விட்டால் அதிரையில் வரும் கோடை காலங்களில் அன்றாட தண்ணீர் தேவைக்கு மிகவும் சிரமப்படும் அளவுக்கு மோசமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இதனால் தண்ணீரை வீண் விரயம் செய்யாமல் சிக்கனமாக பயன் படுத்துவோம்.

முடிந்த வரை அனைத்து அதிரை வாசிகளுக்கு இந்த செய்தியை சேர்ப்போம். தேவைப்பட்டால், இந்த தகவலை நகல் எடுத்து தங்கள் வீட்டினுள் உள்ள அனைத்து Water Tape அருகிலும் ஒட்டி வைத்து கொள்ளுங்கள்.

- முஹம்மது அப்துல் காதர்

பட்டுபோன 135 மரங்கள் பொது ஏலம் !

ஒரத்தநாடு வட்டம், ஈச்சங்கோட்டை கால்நடை பெருக்குப் பண்ணையில், பட்டுபோன 135 மரங்களை வருகின்ற 04.01.2017 அன்று  பண்ணை வளாகத்தில் பொது ஏலமிடப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியது:
ஒரத்தநாடு வட்டம், ஈச்சங்கோட்டை கால்நடை பெருக்குப் பண்ணையில் பட்டுப்போன 135 மரங்கள் பொது ஏலம் அரசு விதிமுறைகளின்படி பகிரங்கமாக நடத்தப்படும். இப்பண்ணையில் உள்ள 135 பட்டுப்போன மரங்களை மட்டும் கையகப்படுத்திக் கொள்வதற்கான பகிரங்க பொது ஏலம் 04.01.2017 அன்று காலை 11.30 மணிக்கு இப்பண்ணை கால்நடை பெருக்கு பண்ணை அலுவலகத்தில் ஏலம் நடத்தும் குழுவினரால் ஏலம் நடத்தப்படும்.

ஏலத்தில் கலந்து கொள்ளும் நபர்கள் தனித்தனியாக ஏலம் முன் வைப்புத் தொகையாக ரூ.5000 (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) பொது ஏலம் நடைபெறும் தினத்தன்று காலை 10.100 மணி முதல் 11.00 மணிக்குள் துணை இயக்குநர் அலுவலகத்தில் செலுத்தி தனது பெயர், முழு முகவரி ஆகியவற்றை பதிவு செய்து கொண்டு அதற்கான டோக்கன் பெற்று கொண்டு, பொது ஏலத்தில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காவல் துறை உதவியுடன் பொது ஏலம் நடத்தப்படும்.

முன்பணம் செலுத்தி டோக்கன் பெற்றுக் கொண்டவர்கள் தவிர வேறு நபர்கள் இந்த பொது ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.  ஏலத்தில் கலந்து கொண்ட ஏலதாரர்களுள் அதிக ஏலத்தொகைக்கு ஏலம் கோரும் நபருக்கு ஏலம் உறுதி செய்யப்படும்.

பொது ஏலம் முடிந்தவுடன் ஏலம் நடத்தும் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு தீர்வு செய்யப்படும்.  ஏலதாரர் கேட்ட அதிகபட்ச ஏலத்தொகை முழுவதையும் வரிகள் உள்பட அன்றே விவசாயப் பிரிவில் ரொக்கமாக செலுத்திவிட வேண்டும். பணத்தை செலுத்த கால அவகாசம் வாய்மொழியாகவோ அல்லது எழுத்து மூலாகவோ வரும் கோரிக்கைகளோ அல்லது விண்ணப்பங்களோ ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

மேலும் ஏலம் உறுதி செய்யப்பட்ட பின்பு 135 பட்டுப்போன மரங்களை பற்றி ஏதாவது காரணம் தெரிவித்து தனது பெயரில் உறுதி செய்யப்பட்ட ஏலத்தை ரத்து செய்துவிடும்படி கோரும் எந்தவிதமான கோரிக்கையும் ஏற்க இயலாது. மேலும் அவர் ஏல முன் வைப்புத் தொகை இழக்க நேரிடும்.

ஏலம் உறுதி செய்யப்பட்ட நபர் தவிர ஏலத்தில் கலந்து கொண்டவர்களின் டேவணித் தொகை ஏலம் முடிந்தவுடன் 04.01.2017 அன்றே திருப்பித் தரப்படும்.

ஏலம் எடுத்த நபர், ஏலம் எடுத்த 135 பட்டுப்போன மரங்களை மட்டும் ஏலம் உறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து 1 மாத காலத்திற்குள் எடுத்து செல்ல அனுமதிக்கப்படும்.  மேற்காணும் காலத்திற்கு பிறகு பண்ணையிலிருந்து எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படாது.

பண்ணையில் தீ மூட்டுதல், அடுப்பு எரித்தல் கூடாது.  ஏலம் தீர்வு செய்யப்பட்ட பிறகு இயற்கை இன்னல்கள் அல்லது வேறு பிற காரணங்களினால் 135 பட்டுப்போன மரங்களுக்கு சேதாரம் ஏற்பட்டால் அதற்கு இப்பண்ணை பொறுப்பேற்காது.

பொது ஏலம் நடப்பதற்கு முன் விவசாயப் பிரிவில் உள்ள 135 பட்டுப்போன மரங்களை மட்டும் வேளாண்மைப் பிரிவு பண்ணை மேலாளர் அனுமதி பெற்ற அரசு வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் பார்வையிட்டுக் கொள்ளலாம்.
 
ஏலம் நடத்தும் குழுவினரின் முடிவே இறுதியானது.  பொது ஏலத்தை நடத்தவும் மறு தேதிக்கு தள்ளி வைக்கவும், அல்லது நிர்வாகக் காரணங்களினால் ரத்து செய்யவும் பொது ஏலம் நடத்தும் குழுவினருக்கு முழு அதிகாரம் உண்டு.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள்  தெரிவித்துள்ளார்கள்.

சென்னையில் அதிரையர் வஃபாத் !

அதிராம்பட்டினம், ஆலடித்தெரு ஹாஜி ஹாஃபிழ் மர்ஹூம் செ.அ.மு முகம்மது இப்ராஹிம் அவர்களின் மகனும், மர்ஹூம் சேக் மதீனா, மர்ஹூம் முகம்மது ஃபாருக் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் பி.மு. அஹ்மது கபீர், எஸ்.எம்.ஏ ஃபாரூக் ஆகியோரின் மைத்துனரும், சபீக் அகமது, சித்திக் அகமது ஆகியோரின் தகப்பனாரும், அப்துல் ஹாதி, முகம்மது இப்ராகிம் ஆகியோரின் மாமனாரும், சென்னை சிந்தாரிப்பேட்டை ஃபாம்கோ பிரிண்டர்ஸ் ஹாஜி செ.அ.மு. அப்துல் பாரி அவர்கள் சென்னை சிந்தாதிரிப்பேட்டை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (31-12-2016 ) காலை 8 மணிக்கு சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

எகிப்திய மம்மிகளுக்கு முற்பட்ட பழமையான மம்மிகள் குறித்த தகவல் !

அதிரை நியூஸ்: டிச-30
சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்து பிரமீடுகளுக்குள் பாடம் செய்து வைக்கப்பட்டுள்ள மம்மிகள் குறித்தே நாம் பரவலாக அறிந்து வைத்துள்ளோம் ஆனால் சுமார் 7,400 வருடங்களுக்கு முற்பட்ட மம்மிகள் தென் அமெரிக்க கண்டத்தின் பெரு மற்றும் சிலி நாட்டு கடற்கரை பிரதேசங்களில் கிடைக்கப் பெற்றுள்ளன.

மம்மிக்களை பாடம் செய்யும் முறையில் எகிப்து மம்மிக்களும் தென் அமெரிக்க மம்மிக்களும் முற்றிலும் வேறுபட்டவை. தென் அமெரிக்க கடற்கரை பிரதேசங்களில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த 'சின்ச்சோரோ' (Chinchorro) இன மக்கள் பெரும்பாலும்; தங்களின் சிறுவயது குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் உடல்களை பாடம் செய்துள்ளனர். உடல்களிலிருந்து தோலை அகற்றி பின் சதை நீக்கப்பட்ட உடல்களுக்குள் களிமண், செடிகள் மற்றும் மரங்கள் கலந்த கலவையை கொண்டு எழும்புக்கூட்டை நிரப்பிய பின மீண்டும் அகற்றிய தோலை உடல் மேல் சுற்றி வைத்துள்ளனர்.

1903 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 180 சின்ச்சோரோ மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இத்தகைய மம்மிக்கள் பல கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் திறந்தவெளியில் சிலைகள் போல் இறுகியநிலையில் கிடைத்துள்ளன. இந்த மம்மிக்களை சாண்டியாகோ நகரின் மருத்துவமனையில் ஸகேன் செய்யப்பட்டு கூடுதல் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதன் மூலம் வரலாற்று குறிப்புக்கள் எதையும் விடாது வெறும் மம்மிக்களை மட்டுமே விட்டுவிட்டு அழிந்துபோன சின்ச்சோரோ இனம் பற்றிய கூடுதல் விபரங்கள் கிடைக்கலாம் என கருதப்படுகிறது.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

அமீரகத்தில் ஜனவரி முதல் கார் இன்ஸூரன்ஸ் பிரிமியம் தொகை உயர்வு!

அதிரை நியூஸ்: துபாய், டிச-30
அமீரக இன்ஸூரன்ஸ் கட்டுப்பாட்டுத்துறையின் (The UAE Insurance Authority) புதிய அறிவிப்பின்படி, 2017 ஜனவரி 1 ஆம் தேதி முதல் சலூன் வகை கார்களுக்கும், வகை கார்களுக்கும் முற்றிலும் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் (Fully Comprehensive Insurance) பிரிமியம் தொகை ஏற்றப்பட்டுள்ளது.

சலூன் வகை கார்கள் திர்ஹம் 1,300 வரையிலும் (சராசரியாக 114 திர்ஹம் கூடுதல்), SUV வகை கார்கள் 2.000 வரையிலும் (சராசரியாக 428 திர்ஹம் கூடுதல்) புதிய பிரிமியம் செலுத்த நேரிடும் என்றாலும் சலூன் வகை கார்களின் மொத்த மதிப்பில் 5 சதவிகிதத்திற்கு மிகாமலும், SUV வகை கார்களின் மொத்த மதிப்பில் 7 சதவிகிதத்திற்கு மிகாமலும் பிரிமியம் வசூலிக்கப்பட வேண்டும்.

பிரிமியம் தொகைகள் கார்களின் தயாரிப்பு வருடம், பயன்பாட்டில் உள்ள ஆண்டுகள், மாடல் போன்ற பல காரணிகளை முன்வைத்தே பல இன்ஸூரன்ஸ் நிறுவனங்களாலும் ஏற்ற இறக்கமுள்ள பிரிமியத் தொகைகள் தீர்மானிக்கப்படுகின்றன. இந்த பிரிமியம் ஏற்றம் மூலம் சுமார் 50,000 திர்ஹம் மற்றும் அதற்கு குறைவான மதிப்புள்ள கார்களை வைத்திருப்போரே பாதிக்கப்படுவர்.

ஆடம்பரக் கார்கள் மற்றும் 1 லட்சம் திர்ஹத்திற்கு மேல் மதிப்புடைய கார்களுக்கான பிரிமியம் தொகையில் இதுவரை எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை.

அதேவேளை, கார்களுக்கு விபத்துக்கள் ஏதும் நேரிட்டால் சம்பந்தப்பட்ட ஒட்டுனரின் மீது தவறில்லாத நிலையில் இன்ஸூரன்ஸ் நிறுவனங்கள் விபத்துக்குள்ளான வாகனங்களுக்கு பதிலாக அதேபோன்ற மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்தோ அல்லது நாள் ஒன்று 300 திர்ஹம் வீதம் கணக்கிட்டோ 10 தினங்களுக்கு வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Source: Khaleej Times & Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

மரண அறிவிப்பு ( அப்துல் பரக்கத் அவர்கள் )

அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் கா.மு முஹம்மது எஹ்யா அவர்களின் மகனும், மர்ஹூம் செ.மு. சேக்நூர்தீன் அவர்களின் மருமகனும்,  பக்கீர் முகமது அவர்களின் சகோதரரும், ஜெய்லானி அவர்களின் தகப்பனாரும், பாருக், ஜலீல், ஆரிப் ஆகியோரின் மாமானாருமாகிய அப்துல் பரக்கத் வர்கள்  நேற்று இரவு வஃபாத்தாகிவிட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா இன்று (30-12-2016 ) காலை 10 மணியளவில் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Thursday, December 29, 2016

துபாயில் கட்டாய மருத்துவ இன்ஸூரன்ஸ் சட்டம்: அலைமோதும் கூட்டம் !

அதிரை நியூஸ்: துபாய், டிச-29
துபையில் வசிக்கும் அனைவரும் 2016 ஜூன் மாதத்திற்குள் கட்டாய மருத்துவ இன்ஸூரன்ஸ் செய்திருக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டு பின்பு அது 2016 டிசம்பர் இறுதிவரை நீட்டிக்கப்பட்டது, மேலும் கால அவகாச நீட்டிப்பு இல்லை என்றும் தவறுபவர்கள் மாதம் ஒன்றுக்கு 500 திர்ஹம் அபராதம் செலுத்துவதுடன் அவர்களுக்கு புதிய விசாக்கள் மறுக்கப்படுவதுடன் விசா புதுப்பித்தலும் செய்யப்படாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

துபையில் வசிக்கும் சுமார் 98 சதவிகிதத்தினர் (சுமார் 4 மில்லியன்) ஏற்கனவே இன்ஸூரன்ஸ் எடுத்திருக்கும் நிலையில் சுமார் 80,000 பேர் மட்டுமே இன்னும் எஞ்சியிருக்கின்றனர். இவர்களில் பலர் உடனிருக்கும் கணவன் அல்லது மனைவி, குழந்தைகள் மற்றும் வீட்டுப் பணியாளர் போன்றோரே அதிகம்.

அடிப்படை அத்தியாவசிய இன்ஷூரன்ஸ் தொகுப்பு (Basic essential package) எனப்படும் திட்டத்தின் பிரிமியம் தொகை சராசரியாக 565 திர்ஹம் முதல் 650 திர்ஹம் மட்டுமே அடக்கம். இத்தகைய அடிப்படை மருத்துவ இன்ஷூரன்ஸ் திட்டத்தை அமீரகத்தில் செயல்படும் 50 கம்பெனிகளில் 9 கம்பெனிகள் மட்டுமே வழங்குகின்றன.

இந்நிலையில், வரும் டிசம்பர் 31 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள காலக்கெடுவால் அனைத்து இன்ஷூரன்ஸ நிறுவனங்களும் கடைசிநேர பொதுமக்களால் ஈக்களை போல் மொய்க்கப்பட்டுள்ளது.

முக்கிய இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வசூலிக்கும் அடிப்படை மருத்துவ இன்ஷூரன்ஸூக்கான பிரிமியம் பற்றிய விபரம்:
1. வீட்டுப் பணியாளர்களுக்கு திர்ஹம் 656 முதல் 650 வரை
2. மனைவியர்களுக்கு திர்ஹம் 1,650 முதல் 1,750 வரை (மகப்பேறு உடையவர்கள் கூடுதலாக செலுத்த நேரிடும்)
3. குழந்தைகளுக்கு திர்ஹம் 625 வரை

இந்த கட்டாய இன்ஷூரன்ஸ் திட்டம் துபைக்கு மட்டுமே பொருந்தும்.

கடைசி செய்தி:
இன்று பகல் சுமார் 12 மணியளவில் துபை சுகாதாரத்துறை அறிவித்துள்ளபடி, இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் அளவுக்கு அதிகமான (கடைசி நேர) மக்களால் நிறைந்து வழிவதால் மீண்டும் காலநீட்டிப்பு வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது என்றாலும் கடைசி தேதி எது என அறிவிக்கப்படவில்லை, இன்று அல்லது நாளை தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

அமீரகத்தில் கடும் பனிப்பொழிவு !

அதிரை நியூஸ்: துபாய், டிச-29
அமீரக தேசிய வானிலை மைய அறிவித்தலின்படி, அமீரகத்தில் நிலவும் கடும் பனிப்படலாம் மேலும் 5 நாட்களுக்கு நீடிக்கும் என அறிவித்துள்ளதை தொடர்ந்து போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருவதுடன் டிரைவர்கள் அதிக கவனத்துடன் இயங்குமாறும், கண்ணாடிகளை சுத்தமாவும், விளக்குகளை எரியவிட்டவாறு செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

அமீரகத்தில் காலை வேளைகளில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் சாலை போக்குவரத்தும் விமான போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அமீரகத்தின் அனைத்து விமான நிலைய தகவல்களும் தெரிவிக்கின்றன. ஒரு சில விமானங்கள் பிற விமான நிலையங்களுக்கும் தற்காலிகமாக திருப்பிவிடப்பட்டன.

பல விமானிகளுக்கு இதுபோன்ற கடும் பனிப்படல காலத்தில் விமானத்தை தரையிறக்கும் அனுபவமும் அதற்கான சிறப்பு லைசென்ஸ் இல்லாதவர்களும் திருப்பிவிடப்பட்டனர். சில எமிரேட்ஸ் விமானங்கள் பெட்ரோல் நிரப்புவதற்காக துபை வேல்டு சென்ட்ரல் விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டு மீண்டும் துபை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டன.

துபையில் மட்டும் நேற்று அதிகாலை 4 மணிமுதல் 9 மணிமுதல் வரை 119 சிறு வாகன விபத்துக்கள் நடந்துள்ளன. மேலும் 1,892 பேர் தொலைபேசி வழியாக புகாரும் தெரிவித்துள்ளதாக துபை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

அஜ்மான் தனியார் மருத்துவமனையில் தீ !

அதிரை நியூஸ்: அஜ்மான், டிச-29
நேற்றிரவு சுமார் 10.30 மணியளவில் அஜ்மான் தம்பே மருத்துவமனையின் (Thumbay Hospital) (முன்னாள் GMC மருத்துவமனை) அவசரகால பிரிவில் திடீரென தீப்பற்றியதை தொடர்ந்து மருத்துவ குழுவினர், நோயாளிகள் உட்பட அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

அஜ்மான் தீயணைப்பு வீரர்களால் தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. தீயால் பாதிக்கப்படாத மருத்துவமனையின் மற்றொரு பகுதி அவசரகால பிரிவாக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

மரண அறிவிப்பு ( சுலைஹா அம்மாள் அவர்கள் )

அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் சேக்தாவூது அவர்களின் மகளும், மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் அப்துல் மஜீது அவர்களின் சகோதரியும்,  ஜமால் முகம்மது அவர்களின் மாமியாரும், முஹம்மது புஹாரி, சாகுல் ஹமீது, ரபி அகமது, சகாபுதீன், பைசல் அகமது ஆகியோரின் உம்மம்மாவுமாகிய ( பெரியம்மா ) சுலைஹா அம்மாள் அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகிவிட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Wednesday, December 28, 2016

11 லிட்டர் இரத்த தானம் செய்து அதிராம்பட்டினம் இளைஞர் சாதனை !

அதிராம்பட்டினம், டிச-28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் அஜ்மீர் ஸ்டோர் ஏ. சாகுல் ஹமீது. சமூக ஆர்வலரான இவர் 'மணிச்சுடர்' இதழின் அதிராம்பட்டினம் பகுதி நிருபராகவும், 'அதிரை நியூஸ்' இணையதளம் நேர்காணல் நடத்துனராகவும் இருந்து வருகிறார்.

கடந்த 9 ஆண்டுகளாக ஆர்வத்துடன் தானாக முன்வந்து இரத்த தானம் செய்து வருகிறார். இதுவரையில் 30 தடவை இரத்தம் வழங்கி மொத்தம் 10 லிட்டர் 500 மில்லி கிராம் இரத்தம் வழங்கி உள்ளார். இந்நிலையில் இன்று புதன்கிழமை அதிரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை-2 நடத்திய இரத்த தான முகாமில் கலந்துகொண்டு 31 வது முறையாக இரத்தம் வழங்கினார். இதுவரையில் 10.850 லிட்டர் இரத்தம் வழங்கி சாதனை புரிந்துள்ளார்.

தொடர்ந்து செய்து வரும் இவரது இரத்த தான சேவையைப் பாராட்டி கடந்த ஜூன் மாதம் அதிரை சமூக நல அறக்கட்டளை சார்பில் 'சேவை விருது' வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தஞ்சையில் கடந்த ஆண்டு நடைபெற்ற இரத்ததான ஒருங்கிணைப்பாளர் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் இவருடைய குருதிக்கொடை சேவையை பாராட்டி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த திரு. பாஸ்கரன் அவர்கள், தஞ்சை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தேசிய தன்னார்வ இரத்ததான விழாவில் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் இ. அஹமது எம்பி, பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அப்துல் ரஹ்மான் எம்பி, பட்டுக்கோட்டை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் திரு. என்.ஆர். ரெங்கராஜன் எம்எல்ஏ ஆகியோரிடம் பாராட்டுதலை பெற்றுள்ளார். மேலும் அதிரை லயன்ஸ் சங்கம் வழங்கிய குருதிக்கொடையாளர் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

அமீரகத்தில் 2017 ஜனவரி மாத பெட்ரோல் சில்லறை விலையில் ஏற்றம்!

அதிரை நியூஸ்: துபாய், டிச-28
கடந்த இரு வருடங்களாக சர்வதேச சந்தையில் கடும் வீழ்ச்சியடைந்த வந்த கச்சா எண்ணெய் விலையை மீண்டும் உயர்த்தும் நோக்கில் பெட்ரோலிய உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பு 2017 ஜனவரி 1 ஆம் தேதி முதல் நாளொன்றுக்கு மொத்த உற்பத்தியிலிருந்து 1.8 மில்லியன் பேரல் அளவுக்கு உற்பத்தியை குறைக்க முடிவு செய்ததை தொடர்ந்து மீண்டும் கச்சா எண்ணெய் விலையில் சற்றே ஏற்றம் காண துவங்கியுள்ளது.

அமீரகத்தில் மாதாமாதம் பெட்ரோல் சில்லறை விலை சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் 2017 ஜனவரி மாத்திற்கான விலை அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 11 காசுகளும், டீசல் 13 காசுகளும் ஏற்றப்பட்டுள்ளன.

குறிப்பு: ஒப்பீட்டுக்காக அடைப்புக்குறிக்குள் 2016 டிசம்பர் மாத விலை குறிப்பிடப்பட்டுள்ளது.

சூப்பர் 98 – 1.91 திர்ஹம் (1.80)
ஸ்பெஷல் 95 – 1.80 திர்ஹம் (1.69)
ஈ பிளஸ் - 1.73 திர்ஹம் (1.62)
டீசல் - 1.94 திர்ஹம் (1.81)

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

பணிப்பெண் வீட்டுக்கு சென்ற பஹ்ரைன் வெளியுறவு அமைச்சர்: குவியும் பாராட்டுக்கள்

அதிரை நியூஸ்: பஹ்ரைன், டிச-28
பஹ்ரைன் வெளியுறவு அமைச்சராக 2005 ஆம் ஆண்டு முதல் பணியாற்றிவரும் ஷேக். காலித் பின் அஹ்மது அல் கலீபா அவர்கள் தன்னுடைய வீட்டில் சுமார் 21 ஆண்டுகள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் போன்று ஈடுபாட்டுடன் பணியாற்றிய முன்னாள் வீட்டுப்பணிப்பெண் 'லைலா' என்ற கேரள பெண்ணின் கொல்லத்தில் உள்ள வீட்டிற்கு சென்று அளவளாவி மகிழ்ந்தார்.

இந்த சந்திப்பை நெகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் அமைச்சர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டதை தொடர்ந்து பலரும் அமைச்சரின் மனிதநேய பண்பை பாராட்டி வருகின்றனர். அமைச்சர் ஷேக். காலித் அவர்களின் டிவிட்டர் பக்கத்தை சுமார் 244,000 பின் தொடரும் நிலையில் இதுவரை 13,500 பேருக்கு மேல் வாழ்த்தி டிவீட் செய்துள்ளனர், அது இன்னும் கூடிக்கொண்டே செல்கின்றது.

அமைச்சர் ஷேக். காலித் அவர்கள் 2015 ஆம் ஆண்டுக்கான 'சிறந்த அரேபிய அரசியல்வாதி' என சமூக வலைத்தளவாசிகளால் தேர்வு செய்யப்பட்டு துபையில் நடைபெற்ற விழாவில் கவுரவிக்கப்பட்டார். மேலும், 2013 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து இருமுறை சமூக வலைதளம் மற்றும் சிறந்த ஊடக ஆளுமையாளர் என்ற விருதையும் வென்றுள்ளார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

மீண்டும் ஒரு விமான விபத்து ( படங்கள் )

அதிரை நியூஸ்: டிச-28
நேற்று டெல்லியில் தவிர்க்கப்பட்ட விமான விபத்து குறித்த செய்தியை பதிவிட்டிருந்தோம். அந்த செய்தியின் தகவல் தொடர்ச்சியாக, உலகின் முதலாவது பெரிய விமான விபத்து என வர்ணிக்கப்படும் டெனரீப் (Tenerife North Airport) விமான நிலைய விபத்து பற்றி குறிப்பிட்டிருந்தோம்.

இன்று அதே டெனரீப் விமான நிலையத்திலிருந்து மொரோக்கோ நோக்கி புறப்பட்ட குட்டி விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாரால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே டெனரீப் கடற்கரையில் விழுந்து நொறுங்கியது. எனினும், 3 பயணிகளுள் ஒருவர் மட்டும் பலத்த காயத்துடனும் விமானியும் பிறரும் சிறு காயங்களுடன் தப்பினர். மேலும், கடற்கரையில் குழுமியிருந்த மக்களும் சிதறி ஓடியதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

மேலும் தொடர்ந்து விமான விபத்து குறித்த செய்திகளை எழுதாமலிருக்க இறைவனை வேண்டுகிறோம்.

Source: Mirror / Msn
தமிழில்: நம்ம ஊரான்
 
 
 

அதிரையில் நடந்த இரத்ததான முகாம்:100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

அதிராம்பட்டினம், டிச-28
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளை-2 மற்றும் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய இரத்த தானம் முகாம் இன்று [ 28-12-2016 ] புதன்கிழமை நடுத்தெரு ஆய்ஷா மகளிர் அரங்கில் நடைபெற்றது.

முகாமிற்கு கிளைத்லைவர் பஜால் முகைதீன் தலைமை வகித்தார். அவ்வமைபின் மருத்துவ அணி பொறுப்பாளர்கள் வல்லம் ஜாபர், முஹம்மது அவூன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் இரத்த கொடையாளர்களிடமிருந்து 63 யூனிட் இரத்தம் தானம் பெறப்பட்டது.

முன்னதாக தஞ்சை மீனாட்சி மருத்துமனை மருத்துவக்குழுவினர் இரத்தம் தானம் செய்ய முன்வந்தவர்களுக்கு இரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு, ஹீமோகுளோபின் அளவு, உடல் எடை ஆகியவை பரிசோதித்தனர்.

இம்முகாமில் தமிழக தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளை-1, கிளை-2 நிர்வாகிகள் - உறுப்பினர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமான குருதி கொடையாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று இரத்த தானம் செய்தனர். இரத்தக் கொடையாளர்கள் அனைவருக்கும் ஜூஸ், பிஸ்கட், பேரிட்சை பழங்கள் வழங்கப்பட்டன. முகாம் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நடந்தது. முகாம் ஏற்பாட்டினை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளை-2 செய்தது.