.

Pages

Tuesday, December 20, 2016

மாடித்தோட்டம் அமைத்து அசத்தும் இன்ஜினீயரிங் மாணவன்!

இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் படிக்கும்போது படிப்பின்மீது மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். படிப்பில் காட்டும் அக்கறைக்கு இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடும் நிலையும் இங்கு இருந்துதான் வருகிறது. அதிலும் இன்ஜினீயரிங் மாணவர்களின் நிலை இன்று மிகவும் மோசமாகி வருகிறது. இதற்கு மத்தியில் படிப்பிலும் கவனம் செலுத்திக்கொண்டு அத்துடன் மாடித்தோட்டம் அமைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார், திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஜெயராஜ். மாடித்தோட்டம் அமைப்பதையும் ஒரு பொழுதுபோக்காகவே ஆரம்பித்து செய்து வந்திருக்கிறார். அதன் பின்னர் ஜெயராஜின் நட்பு வட்டாரம் 'வானகம்' வரை போய் பயிற்சி எடுக்கும் அளவுக்கு விரிவானது. அப்போதிருந்தே நம்மாழ்வார் கொள்கைகளால் ஈர்க்கபட்டு இயற்கையின் மீது நாட்டம் கொண்டு மாடித்தோட்டத்தை அமைத்து கொடுத்து வருகிறார். மாடித்தோட்ட வேலைகளில் ஈடுபட்டிருந்த ஜெயராஜை சந்தித்தோம்.

“என்னோட அப்பா இன்ஜினீயர், அம்மா கல்லூரி பேராசிரியை. நான் ஒரே பையன். எனக்கு கல்லூரி முதல் வருஷம் படிக்கும்போதே எனக்கு இயற்கை மேல ஆர்வம் இருந்தது. என்னால விவசாயம் பண்ண முடியாது, ஆனால் மாடியில் தோட்டம் போடலாம்னு ஒரு எண்ணம் வந்தது. என் பெற்றோர்கிட்ட அனுமதி வாங்கி மாடித்தோட்டம் அமைச்சேன். இதையும் இயற்கையில செய்யணும்னு நம்மாழ்வார் ஐயாவோட வானகம் பயிற்சி பட்டறைக்கு போயி இயற்கையை பத்தி முழுமையா தெரிஞ்சுகிட்டேன். அவரோட வார்த்தைகளை நேர்ல கேட்க முடியலைனாலும், யூடியூப்ல அதிகமா கேட்பேன். நான் வானகத்துக்கு போனபோது அதிகமான இயற்கை வேளாண்மை செய்யும் நபர்களோட அறிமுகமும் கிடைச்சது. அதுக்கு பின்னாடி என்னோட வீட்ல மாடித்தோட்டம் முழுமையா அமைச்சேன். இப்போ பக்கத்துல இருக்குறவங்க எங்க வீட்லையும் மாடித்தோட்டம் அமைச்சு கொடுங்கனு கேக்குறாங்க.

இதுபோக தெருக்கூத்து, நாடக கலைகள்னு எல்லாமே நல்லா தெரியும். என்கிட்ட அக்கறையோட கேட்குறவங்ககிட்ட அதை தினமும் பராமரிக்கிறவங்கதான் மாடித்தோட்டம் அமைக்க எனக்கு உதவியா இருக்கணும்னு சொல்லிடுவேன். அபோதான் மாடித்தோட்டத்தின் அருமை அவங்களுக்கு புரியும். இயற்கையை உண்டாக்குறது எவ்வளவு கஷ்டமான அனுபவம்னு அவங்களுக்கு தெரியும். மாடித்தோட்டம் அமைச்சுக் கொடுத்த பின்னாடி அவங்களுக்கு மாடித்தோட்டம் பற்றிய வகுப்பெடுப்பேன்.  தரமான 50-க்கும் மேற்பட்ட நாட்டு விதைங்க என்கிட்ட இருக்கு. நானே விதையை வச்சு காய்கறி நாத்துக்களையும் உற்பத்தி செய்து கொடுக்குறேன். இதுவரைக்கும் 10-க்கும் மேல பயிற்சி வகுப்புகளை நடத்தியிருக்கேன்" என்றவர் தொடர்ந்தார்.

“என் வீட்ல இருக்குற குப்பைகளும் காய்கறி கழிவுகளும்தான் இங்க உரமா பயன்படுத்துறேன். மாட்டு எருவையும் மண்புழு உரத்தையும் அடியுரமா பயன்படுத்துறேன். மாடித்தோட்டத்துக்கு தண்ணீரை காலை, மாலை என இரு வேளைகளிலும் தெளிக்கணும். அடியுரம் கலக்கும்போது கொஞ்சம் தேங்காய் நார்களை சேர்த்துக் கொண்டால் தண்ணீரை தேக்கி வைக்கும். மீன் கழிவுகளையும் வாங்கிட்டு வந்து அதை பதப்படுத்தி நாட்டுச்சர்க்கரையை கலந்து அந்த உரத்தை பயிர்களில் தெளிப்பது மூலமா பயிரோட வளர்ச்சி அதிகமாகும். மீன் அமிலம், பஞ்சகவ்யா, மண்புழு உரம் என இதையும் நான் தயாரிச்சு விற்பனை செய்யுறேன். இதை அப்படியே கல்லூரியிலும் அமைச்சேன். என்னோட கல்லூரி இன்ஜினீயரிங் கல்லூரி என்பதால பழைய பேட்டரி டப்பாவை வச்சு தோட்டம் அமைச்சிருக்கேன். என்னோட ஜூனியர், சீனியர்னு என்கிட்ட அதிகமான மாணவர்களும் மாடித்தோட்டத்தை பத்தி கேட்டு தெரிஞ்சுக்குவாங்க. எங்க வீட்ல மார்கெட்ல போய் காய்கறிகள் வாங்குறது இப்போ கம்மியாயிடுச்சு. இப்போ பரவலாக விவசாய ஆர்வத்தை போக்குறது மாடித்தோட்டம் மட்டும்தான். மனசுக்கும், உடலுக்கும் ஆரோக்கியமானது. என்னதான் பொறியியல் படிப்புல இருந்தாலும் கூட எனக்கு வேளாண்மை பத்தின புரிதலையும், இயற்கை சார்ந்த விஷயங்களையும் மக்களுக்கு எடுத்துக்கொண்டு போறதுதான் என்னோட கனவு. இயற்கைக்காக மாறணும்ங்குறதுக்காக சூரிய ஒளி மின்சார தகடுகளை வாங்கி பொருத்தியிருக்கேன். இதுமூலமா கணிசமான மின்சாரத்தேவை குறையுது" என்றபடி விடைகொடுத்தார், மாடித்தோட்ட மாணவர்.

- ஹ.ச.ஷஃபியுல்லா (மாணவ பத்திரிகையாளர்)
நன்றி: விகடன்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.