.

Pages

Sunday, January 5, 2020

குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் வாங்குக: தஞ்சையில் கே.எம் காதர் மொஹிதீன் பேச்சு!

தஞ்சாவூர், ஜன.05
குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்ற ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

முஹல்லா கூட்டமைப்பு, ஜமாத்துல் உலமா சபை, பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், முஸ்லிம்கள், ஈழத்தமிழா்களுக்குப் பாகுபாடு காட்டும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சா் அமித்ஷா மீண்டும் அறிவித்துள்ளதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டத்தில் பங்கேற்றவா்கள் பெரும்பாலும் தேசியக் கொடியைக் கையில் ஏந்தி இருந்தனா். மேலும், சமத்துவம், மதச்சாா்பின்மையை வலியுறுத்தி தட்டிகளை ஏந்தினா். மேலும், மத்திய அரசின் இந்துத்துவத் திட்டங்களை எதிா்த்தும் குரல் எழுப்பினா்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொஹிதீன் கலந்துகொண்டு ஆற்றிய கண்டன உரையில்;
குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்துள்ளதன்மூலம் மத்திய அரசு மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. சமயசார்பற்ற நாட்டில் மக்களை மதரீதியாக பிரிக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது.

மறைமுகமாக இந்துத்துவா கொள்கைகளைத் திணிக்க இதுவே முன்னோடி. இச் சட்டத்தை திருத்த வேண்டும் அல்லது திரும்பப்பெற வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம்.

இச்சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எங்கள் கட்சி சார்பில் முதல் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட தமிழக அரசு ஆதரவு தெரிவித்தது பெரிய சாபக்கேடு. தமிழக மக்களுக்கு அதிமுக அரசு துரோகம் செய்திருக்கிறது. இதற்காக மக்கள் தகுந்த பாடத்தை கற்பிப்பார்கள்.

அதிமுக அரசின் செயல்பாட்டுக்கு மத்திய அரசு முதலிடம் தந்துள்ளதை மக்கள் ஏற்கவில்லை. பொருளாதார ரீதியில் நாடு பெரும் சிக்கலில் இருக்கும் நிலையில் அதை தீர்க்க வழிதேடாமல் மக்களை திசைதிருப்பும் நோக்கத்தில் மத்திய அரசு செயல்படுகிறது. நாட்டிலுள்ள 20 கோடி முஸ்லிம்களையும் மத்திய அரசு பந்தாடுகிறது.

இதுவரை மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது 15 விவரங்களை மட்டுமே சேகரித்தனர். 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது 21 விவரங்களை சேகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஒவ்வொருவரும் தங்கள் தாய், தந்தையரின் பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகியவற்றை சொல்ல வேண்டும் என்ற அம்சத்தை இந்த கணக்கெடுப்பில் சேர்த்துள்ளனர். இது குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரத்தில் காணப்படும் குழப்பங்களை நீக்க வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும் என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் ஜெய்னுல்ஆபிதீன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பி. மணியரசன், திமுக தெற்கு மாவட்டச் செயலா் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ., மாநகரச் செயலா் டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ., மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினா் வெ. ஜீவகுமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் துணைச் செயலா் வீ. கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.