.

Pages

Monday, August 31, 2020

தஞ்சை மாவட்டம்: அனுமதி, தளர்வுகள், கட்டுப்பாடுகள் (முழு விவரம்)

அதிரை நியூஸ்: ஆக.31
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நாளை முதல்  ஊரடங்கு தளர்வுக் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் முன்னிலை இன்று (31.08.2020) நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடன், தளர்வுகளுடன் 30.09.2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கும், வெளி மாவட்டங்களிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருவதற்கும் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருபவர்கள் கண்டிப்பாக இ-பாஸ் பெற வேண்டும். ஆதார் கார்டு விவரங்கள் மற்றும் இதர விவரங்களை அளிக்கும்பட்சத்தில், உடனடியாக இ-பாஸ் கிடைத்துவிடும்.
   
கோவில்கள், மசூதிகள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் நிலையான இயக்க முறைகளின்படி, பொதுமக்கள் வழிபாடுகளுக்கு அனுமதிக்கப்படும். வழிபாட்டுத் தலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்திட கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும்.

அரசின் உத்தரவின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது மற்றும் தனியார் போக்குவரத்து இயக்கம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் நிலையான இயக்க முறைகளின்படி தொடங்கப்படும். அனைத்து வகையான வணிக வளாகங்களும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் இயங்குவதற்கு அனுமதி கிடையாது. அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. தேநீர் மற்றும் உணவகங்களில் இரவு 9 மணி வரை பார்சல் உணவு விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து தொழிற்சாலைகளும் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கிட அனுமதிக்கப்பட்டுள்ளது.

தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள், பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் நிலையான இயக்க முறைகளின்படி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. திறன் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்படும். அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து செயல்படுத்திட பொறுப்பு அலுவலர் ஒருவர் நியமிக்கப்படுவார். வங்கிகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படமாட்டாது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்தவொரு தளர்வுகளும் கிடையாது. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், சுற்றுலாத்தலங்கள் ஆகியவை செயல்பட அனுமதி கிடையாது.

மதம் சார்ந்த கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள், பொழுது போக்கு மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நடத்திட அனுமதி கிடையாது என கூறிய மாவட்ட ஆட்சியர்  கொரோனா தடுப்புபணியில் மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர், காவல்துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த அலுவலர்கள் மற்றும் இதரப்பணியாளர்கள் அலுவலர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை தொய்வின்றி செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் தெரிவித்தார்

தொடர்ந்து செய்தியாளர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தாவது:   
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 6494 நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 5543 நபர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கை 85 சதவீதத்திற்கு மேலே உள்ளது. தற்போது 837 நபர்கள் நல்ல நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 1,25,327 நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநில அளவில் கொரோனா பரிசோதனை அதிகளவில் செய்யப்படும் மாவட்டங்களில் தஞ்சாவூர் மாவட்டம் ஒன்றாகும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 3948 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு, 1,86,846 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 800-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
 
பொது மக்கள் காய்ச்சல் சளி இருமல் அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக சுய வைத்தியம் செய்யக்கூடாது அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்வதன் மூலம் கொரோனா நோய்த்தொற்று எளிதில் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள முடியும்.

மேலும், தனியார் மருத்துமனைகளில் அரசு அறிவத்த வழிகாட்டுதலின்படி கொரோனா சிகிச்சை மற்றும் கட்டணம் மேற்கொள்ள வேண்டும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துமனைகளை கண்காணிக்க இணை இயக்குநர் சுகாதரப்பணிகள் தலைமையில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதற்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதியதாக பிளாஸ்மா வங்கி தொடங்கப்படடுள்ளது இப்பிளாஸ்மா வங்கியில் 20க்கும் மேற்ப்பட்டோர்கள் பிளாஸ்மா தானம் வழங்க முன்வந்துள்ளனர்.

இதுவரை இருவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது  பிளாஸ்மா கொடையாளர்கள் தானம் வழங்க மாவட்ட  நிர்வாகத்தின் ( www.thanjai.nic.in  ) இணையதளத்தில் பதிவு செய்து பிளாஸ்மா தானம் வழங்கலாம்

பொதுமக்கள் அரசின் கொரோனா வைரஸ் தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். வீட்டை விட்டு வெளியே சென்றால் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அதேபோல் சமூக இடைவெளியை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் தெரிவித்தார்.
   
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், பட்டுக்கோட்டை  சார் ஆட்சியர் பாலச்சந்திரன், பயிற்சி ஆட்சியர் அமித் மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருததுரை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் திருமதி.ஜானகி ரவீந்திரன், தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் திருமதி.வேலுமணி, கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலர் விஜயன் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பேராவூரணியில் TNTJ அமைப்பினர் 26 யூனிட் இரத்தம் தானம் (படங்கள்)

பேராவூரணி, ஆக.31
கரோனா பேரிடரை முன்னிட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பேராவூரணி கிளை சார்பில், 123-வது இரத்த தானம் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் கே ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் முன்னிலை வகித்தார்.

முகாமை, பேராவூரணி காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். இதில், தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை குருதி பரிமாற்ற அலுவலர் மருத்துவர் வேல்முருகன், இரத்த வங்கி ஆலோசகர் கண்ணன் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவக்குழுவினர் கலந்துகொண்டு, 26 யூனிட் இரத்தத்தை டி.என்.டி.ஜே அமைப்பின் கொடையாளர்களிடமிருந்து தானமாகப் பெற்றனர்.

இந்நிகழ்வில், மாவட்டப் பொருளாளர் அஸ்ரப், மாவட்ட துணைச் செயலாளர் பாவா உள்ளிட்ட அவ்வமைப்பினர் பலர் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்து கலந்துகொண்டனர். முகாம் ஏற்பாட்டினை, பேராவூரணி கிளைத் தலைவர் முகமது கனி, செயலாளர் இலியாஸ், பொருளாளர் அல்லாபிச்சை, துணை தலைவர் ஷேக் அப்துல்லா, துணைச் செயலாளர் நசீர் மற்றும் கிளை மருத்துவ அணியினர் செய்திருந்தனர்.
 
 
 
 
 

அதிராம்பட்டினத்தில் SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.31
புதிய தேசியக் கல்விக் கொள்கை ரத்து செய்ய வேண்டும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை கைவிட வேண்டும், கிரிமினல் சட்டங்களில் திருத்தம் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சி சார்பில், நாடு தழுவிய பிரச்சார இயக்கம் கடந்த ஆக.25 ந் தேதி தொடங்கி வரும் ஆக.31 வரை  நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கோரிக்கைகளை வலியுறுத்தி அக்கட்சியினர், அதிராம்பட்டினம் பேருந்து நிறுத்தம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

நிகழ்வுக்கு, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர்
எஸ்.அகமது அஸ்லம் தலைமை வகித்தார். இதில், அக்கட்சியின், தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என்.முகமது புஹாரி கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

அதிராம்பட்டினம் பேரூர் செயற்குழு உறுப்பினர் எம். ஜர்ஜீஸ் அகமது வரவேற்றார். இணைச் செயலாளர் சி. அகமது கண்டன கோஷம் எழுப்பினர். நிறைவில், அதிராம்பட்டினம் பேரூர் கிளைத் (1) தலைவர் எம்.ஐ. ஜமால் முகமது நன்றி கூறினார்.

இதில் அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் துணைத்தலைவர் இசட்.சம்சுதீன், செயலாளர் எஸ்.எம். சாகுல் ஹமீது, பொருளாளர் என்.எம் ஷேக்தாவுது, செயற்குழு உறுப்பினர் ஏ.ஜெ அசாருதீன் உள்ளிட்ட பலர் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
 
 
 
 
 

Sunday, August 30, 2020

மரண அறிவிப்பு ~ அவிஸோ ஏ.ஷேக் அப்துல்லா (வயது 38)

அதிரை நியூஸ்: ஆக.30
அதிராம்பட்டினம், இராமநாதபுரம் மாவட்டம், தொளுவாரூர் மர்ஹூம் ஹாஜி ஏ.அப்துல் ஹமீது அவர்களின் மகனும், புதுக்கோட்டை மாவட்டம் புதுவைக்காடு அப்துல் முத்தலிப் அவர்களின் மருமகனும், தரகர் தெரு மவ்லவி முகமது சேக் அப்துல்லா மரைக்காயர் அவர்களின் மைத்துனரும்,  முகமது ஜுபைர் அவர்களின் தகப்பனாரும், ஏரிப்புறக்கரை அவிஸோ மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் காப்பக நிறுவனர் அவிஸோ ஷேக் அப்துல்லா (வயது 38) அவர்கள் இன்று இரவு 8 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.)

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

புதுப்பட்டினத்தில் SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.30
புதிய தேசியக் கல்விக் கொள்கை ரத்து செய்ய வேண்டும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை கைவிட வேண்டும், கிரிமினல் சட்டங்களில் திருத்தம் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சி சார்பில், நாடு தழுவிய பிரச்சார இயக்கம் கடந்த ஆக.25ந் தேதி தொடங்கி வரும் ஆக.31 வரை  நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கோரிக்கைகளை வலியுறுத்தி அக்கட்சியினர், புதுப்பட்டினம் பேருந்து நிறுத்தம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.

நிகழ்வுக்கு, அக்கட்சியின் புதுப்பட்டினம் கிளைத் தலைவர்
எஸ்.ரபீக்கான் தலைமை வகித்தார். இதில், அக்கட்சியின், தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என்.முகமது புஹாரி கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

இதில் அக்கட்சியினர் பலர் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
 
 

Saturday, August 29, 2020

தஞ்சாவூா் மாவட்டத்தில் தேசிய மாதிரி ஆய்வு திட்ட கணக்கெடுப்பு!

அதிரை நியூஸ்: ஆக.29
தஞ்சாவூா் மாவட்டத்தில் தேசிய மாதிரி ஆய்வு திட்டக் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மாவட்டத்துக்கு உள்பட்ட சில நகா்ப்புற மற்றும் கிராமப்புறக் கணக்கெடுப்புப் பகுதிகளில் தஞ்சாவூா் மாவட்ட புள்ளியியல் அலுவலகக் களப்பணியாளா்களால் தேசிய மாதிரி ஆய்வு 78 ஆவது சுற்றுக்கான புள்ளி விவரங்கள் சேகரிக்கும் பணி நிகழாண்டு ஜனவரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தேசிய மாதிரி ஆய்வு திட்டத்தின் (ஜனவரி 2020 - டிசம்பா் 2020) 78 ஆவது சுற்றில் மாவட்டத்தில் 12 நகா்ப்புற மற்றும் 16 கிராமப்புற மாதிரிகளில் கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது.

இக்கணக்கெடுப்பில் தெரிவு செய்யப்பட்ட சில குடும்பங்களில் வாழ்வாதாரம் குறித்த செலவின விவரம், சுற்றுலா சாா்ந்த செலவின விவரங்கள், சுகாதாரம், கல்வி, மருத்துவம், தகவல் தொடா்பு, வேலைவாய்ப்பு, அடிப்படை கட்டமைப்பு வசதிகள், இடப்பெயா்ச்சி மற்றும் விவசாயம் சாா்ந்த பணிகள் உள்ளிட்ட புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

தங்களிடமிருந்து பெறப்படும் விவரங்கள் முற்றிலும் ரகசியமாக வைக்கப்பட்டு, திட்டமிடல், கொள்கை வகுத்தல் மற்றும் ஆய்வு போன்ற நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.புள்ளியியல் துறை சாா்ந்த கணக்கெடுப்பு அலுவலா்கள் தகவல் சேகரிக்கத் தோ்ந்தெடுக்கப்பட்ட வீடுகளுக்கு அடையாள அட்டையுடன் வருகை புரியும்போது, அவா்களுக்கு முழுமையான தகவல்கள் அளித்து கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

SDPI கட்சி சார்பில் அதிராம்பட்டினத்தில் இரு வேறு இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.29
புதிய தேசியக் கல்விக் கொள்கை ரத்து செய்ய வேண்டும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை கைவிட வேண்டும், கிரிமினல் சட்டங்களில் திருத்தம் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சி சார்பில், நாடு தழுவிய பிரச்சார இயக்கம் கடந்த ஆக.25ந் தேதி தொடங்கி வரும் ஆக.31 வரை  நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, எஸ்டிபிஐ கட்சி அதிராம்பட்டினம் பேரூர் சார்பில், தெருமுனைப் பிரச்சாரம், அதிராம்பட்டினம் பெரிய கடைத்தெரு முக்கம், பழைய அஞ்சலக சாலை ஆகிய இரு வேறு இடங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எஸ்.அகமது அஸ்லம் தலைமை வகித்தார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எஸ்.முகமது ஜாவித் முன்னிலை வகித்தார்.

இதில், அக்கட்சியின், அதிராம்பட்டினம் பேரூர் இணைச் செயலாளர் சி. அகமது, அதிராம்பட்டினம் பேரூர் செயற்குழு உறுப்பினர் எம். ஜர்ஜீஸ் அகமது ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப்பேசினர்.

முன்னதாக, அதிராம்பட்டினம் பேரூர் கிளைத் (1) தலைவர் எம்.ஐ. ஜமால் முகமது வரவேற்றார். நிறைவில், கிளைப் (1) பொருளாளர் இத்ரிஸ் அகமது நன்றி கூறினார். இதில் அக்கட்சியினர் பலர் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்துகொண்டனர்.
 
 
 

தஞ்சை மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்கு பிளாஸ்மா தானம் அளிக்க ஆட்சியர் வேண்டுகோள்!

கோப்பு படம்
அதிரை நியூஸ்: ஆக.29
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக வாளகத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி (28.08.2020) அன்று பிளாஸ்மா வங்கியை தொடங்கி வைத்தார். அப்பிளாஸ்மா வங்கிற்கு பிளாஸ்மா தானம் வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மாவட்ட வளர்ச்சிப்பணி மற்றும் கரோனா நோய்த்தடுப்புப் பணி ஆய்வுக் கூட்டத்திற்கு வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதியதாக பிளாஸ்மா வங்கியை தொடங்கி வைத்துள்ளார்.

கரோனா நோய் தடுப்பு பணிக்காக தமிழக முதல்வர் அவர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிளாஸ்மா சிகிச்சை முறையில் சிகிச்சை மேற்கொள்ள பிளாஸ்மா தேவைப்படுவதால் ஏற்கனவே கரோனா தொற்று ஏற்பட்டு குணமான நபர்கள் 28 நாட்களுக்குப் பிறகு அதிகப்பட்சமாக 90 நாட்களுக்குள் 18 முதல் 55 வயதுக்குள்ள ஆண் பெண் இருபாலர் 55 கிலோ கிராமிற்கு மேல் உள்ள நபர்கள் தாங்களே முன்வந்து பிளாஸ்மா தானம் வழங்கலாம். இயல்பான எப்பொழுதும் மற்ற இரத்ததானம் செய்ய கடைப்பிடிக்கப்படும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

பிளாஸ்மா தானம் கொடையாளர்கள் 28 நாட்கள் இடைவெளிவிட்டு மறுமுறை பிளாஸ்மா தானம்  அளிக்கலாம் அதிகப்பட்சமாக இரண்டுமுறை மட்டுமே தானம் அளிக்கலாம்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதற்காக பிளாஸ்மா கொடையாளர்கள் அதிகமாக பிளாஸ்மா கொடை வழங்கி பல உயிர்களை காக்க முன் வருமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்தராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் தையல் இயந்திரங்கள் வழங்கல்!

பட்டுக்கோட்டை, ஆக.29
பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கத்தின் சார்பில், வாழ்வாதார உதவியாக 5 பெண் பயனாளிகளுக்கு ரூ 30 ஆயிரம் மதிப்பிலான தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.பைசல் அகமது தலைமை வகித்தார். இந்நிகழ்வில், செயலாளர் சக்திவேல், பொருளாளர் சுல்தான் இப்ராஹிம், ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநர் வழக்குரைஞர் ஜெய வீரபாண்டியன், சங்க முன்னாள் தலைவர் ரமேஷ், அலெக்சாண்டர், அருள் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 

அதிரை பைத்துல்மால் சார்பில் உயர் கல்விக்கான உதவித்திட்டம் அறிவிப்பு!

அதிரை நியூஸ்: ஆக.29
அதிரை பைத்துல்மால் அமைப்பின் சார்பில் உயர் கல்விக்கான உதவித்திட்டம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி உதவித் தொகை-2020:
தொழிற் படிப்பு – மருத்துவம், பொறியியல், தொழிற்நுட்பம் – படிக்கும் ஏழை / எளிய மாணவர்களுக்கு தகுதி அடிப்படையில் கல்வி உதவித் தொகையை வழங்கி ஊக்குவிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற்படிப்பு படிக்க விரும்பும் தகுதியான ஏழை, எளிய மாணவர்கள் தங்களது மதிப்பெண் பட்டியல் மற்றும் கல்வி சம்பந்தப்பட்ட சான்றிதழ்களுடன் அதிரை பைத்துல்மால் அலுவலகத்திற்கு நேரில் வந்து விசாரிக்கலாம். அதிராம்பட்டினம் நகரில் பிறந்து, வளர்ந்து, படித்த மாணவர்கள் மட்டும் இந்த கல்வி உதவித் தொகையைப் பெறத் தகுதி உடையவர்கள்.

முழுமையான உயர்கல்வி உதவித்திட்டம் – 2020:
அதிராம்பட்டினம் நகரில் பிறந்து, வளர்ந்து +2 தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று, தொழிற்படிப்பு படிக்க விரும்பும் ஏழை, எளிய மாணவர்களுக்கு முழு படிப்புச் செலவை அதிரை பைத்துல்மால் ஏற்றுக் கொள்ளும். உதவிப்பெற விரும்பும் மாணவர்கள் இத்திட்டத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள அதிரை பைத்துல்மால் அலுவலகத்தை அனுகவும்.

மரண அறிவிப்பு ~ ஜெமிலா அம்மாள் (வயது 85)

அதிரை நியூஸ்: ஆக.29
அதிராம்பட்டினம், கீழத்தெரு மொங்கப்பிச்சை வீட்டைச் சேர்ந்த மர்ஹும் முகமது சேக்காதியார் அவர்களின் மகளும், கோரப்பத்தை மர்ஹூம் முகமது சுல்தான் அவர்களின் மனைவியும், எம்.எஸ் முகமது யூசுப், எம்.எஸ் முகம்மது முகைதீன் ஆகியோரின் தாயாரும், தாஜூதீன், நவாஸ்கான் ஆகியோரின் மாமியாரும்,  ஹாஜா சரீப், முகமது மர்ஜுக் ஆகியோரின் வாப்புச்சாவும், ஹாஜா முகைதீன், அப்துல் பாசித், ஹாஜா மொய்னூதீன் ஆகியோரின் உம்ம்மாவுமாகிய ஜெமிலா அம்மாள் அவர்கள் (வயது 85) அவர்கள் நேற்று இரவு நெசவுத்காரத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (29-08-2020) காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Friday, August 28, 2020

அதிராம்பட்டினம் பகுதியில் ரூ 35.28 கோடியில் 336 அடுக்குமாடி குடியிருப்புகள்!

அதிரை நியூஸ்: ஆக.28
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து (28-08-2020) அன்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்குப் பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு.பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்...

கஜா புயல் மறு சீரமைப்புத் திட்டத்தின் கீழ், அதிராம்பட்டினம் பேரூராட்சி – ஏரிப்புறக்கரை திட்டப்பகுதியில் 336 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ரூபாய் 35.28 கோடிக்கும் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது எனவும், பட்டுக்கோட்டை வட்டம், ராஜாமடம் அருகே  அக்னியாற்றின் குறுக்கே ஒரு தடுப்பணையும்,  பொன்னவராயன் கோட்டை கிராமத்தில் நசுவினி ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணையும், ஏனாதி கிராமத்தில் மகாராஜசமுத்திரம் ஆற்றின் குறுக்கே தடுப்பணையுடன் கூடிய ஒரு நவீன நீரேற்று பாசனத் திட்டம் ஆகிய 3 திட்டங்களுக்கு ரூபாய் 32 கோடிக்கான மதிப்பீடு அரசின் பரிசீலனையில் உள்ளது. பட்டுக்கோட்டை வட்டம், தம்பிகோட்டை கிராமம், அமெரிக்குளம் ஏரிக்கு பாமணியாற்றில் ரூபாய் 16 கோடி மதிப்பீட்டில் நீரேற்று பாசனத்திட்டம் அமைத்து நீர் வழங்கும் பணி அரசின் பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்தார். 

தஞ்சையில் தமிழக முதல்வர் (படங்கள்)

அதிரை நியூஸ்: ஆக.28
இன்று (28.8.2020),  தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு.பழனிசாமி  தலைமையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
இன்றைய தினம், தஞ்சை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதோடு, இந்த மாவட்ட தொழிற் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிற கொரோனா வைரஸ் இந்தியாவிலும், தமிழகத்திலும் பரவி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து அரசு இயந்திரங்களும் முடுக்கிவிடப்பட்டு போர்க்கால அடிப்படையில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத் துறை, ICMR மற்றும் மருத்துவ நிபுணர்கள் அளிக்கின்ற ஆலோசனையின்படி நம்முடைய மருத்துவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து, குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, இறப்பு சதவிகிதம் குறைந்திருக்கிறது.

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றுப் பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சித் துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 6,108 நபர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 5,209 நபர்கள், சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 107 நபர்கள். 27.8.2020 அன்று மட்டும் பாதிக்கப்பட்வர்கள் 122 நபர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 124 நபர்கள், சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 1 நபர், தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் 792 நபர்கள். தஞ்சாவூர் மாவட்டத்தில் 27.8.2020 வரை நடைபெற்ற மொத்த பரிசோதனைகள் 1,25,494. 27.8.2020 அன்று மட்டும் நடைபெற்ற பரிசோதனைகள் 2,187. இந்த மாவட்டத்தில் உள்ள பரிசோதனை நிலையம் ஒன்று. ஒரு நாளைக்கு சராசரியாக 1,200 பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அரசு மருத்துவமனையில் 15 இடங்களில் 1,534 படுக்கை வசதிகளும், தனியார் மருத்துவமனையில் 6 இடங்களில் 260 படுக்கை வசதிகளும் உள்ளன. அதேபோல, கோவிட்கேர் சென்டருக்காக 3 அரசு கட்டடங்களில் 1,235 படுக்கை வசதிகளும் உள்ளன. கோவிட்கேர் சென்டருக்கான 2 அரசுக் கட்டடங்களில் 560 படுக்கைகளும், தனியார் கட்டடத்தில்  90 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. நோய்த் தடுப்பு பொருட்கள் தேவையான அளவிற்கு கையிருப்பில் உள்ளன. N95 முகக்கவசம், மும்மடிக் கவசம், PPE Kits, RTPCR Kits என அனைத்தும் போதிய அளவு கையிருப்பில் உள்ளன.

இம்மாவட்டத்தில் நடத்தப்பட்ட 2,227 காய்ச்சல் முகாம்களில் 1,04,658 நபர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். எந்தப் பகுதியில் நோய்த் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டாலும், மாவட்ட நிர்வாகத்திற்கோ, சுகாதாரத் துறைக்கோ, வருவாய் துறைக்கோ, உள்ளாட்சித் துறைக்கோ தகவல் தெரிவிக்கப்பட்டால், நடமாடும் மருத்துவக் குழு அங்கே நேரடியாகச் சென்று, அங்கிருப்பவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தி, நோய் அறிகுறி தென்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளித்து குணமடையச் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

கும்பகோணம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மையக் கட்டடம் ரூபாய் 22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மையக் கட்டடம் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.  முதலமைச்சரின் சிறப்புக் குறை தீர்க்கும் திட்டத்தின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 33,880 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, 21,362 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 2019-20ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கின்ற ஏழை, எளிய மக்கள் வீட்டுமனைப்பட்டா வேண்டுமென்று விண்ணப்பித்த 6,179 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலமாக வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அதில், 9,053 கிலோ மீட்டர் எடுத்துக்கொள்ளப்பட்டு ரூபாய் 52 கோடி மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் 3,445 வீடுகள் ஒதுக்கப்பட்டு அதில், 2,737 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டுகளில் 25,728 பணிகள் தொடங்கப்பட்டு இதுவரை 15,437 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 692 குக்கிராமங்களைச் சேர்ந்த  1 லட்சத்து 33 ஆயிரத்து 854 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க ரூபாய் 106 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. வல்லம் பேரூராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டத்திற்கு ரூபாய் 34.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது, இந்த ஆண்டு டிசம்பரில் இப்பணிகள் நிறைவுபெற்று பயன்பாட்டிற்கு வரும்.

கும்பகோணம் ஒன்றியத்திற்குட்பட்ட 134 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் ரூபாய் 110 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, பரிசீலனையில் உள்ளது. கும்பகோணத்தில், அம்ருத் திட்டம் மூலம் ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கும்பகோணம், திருப்பனந்தாள், திருவிடைமருதூர் ஒன்றியத்திற்குட்பட்ட 67 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.  பாபநாசம் மற்றும் அம்மாபேட்டை ஒன்றியங்களுக்குட்பட்ட 252 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு முழு மதிப்பீடு தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் ரூபாய் 944 கோடி மதிப்பீட்டில் 48 எண்ணிக்கையிலான சீர்மிகு நகரத் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தஞ்சாவூர் மாநகராட்சி புதிய அலுவலகக் கட்டடம் ரூபாய் 6.50 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு என்னால் திறக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் ரூபாய் 70 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணி ஜனவரி மாதம் 2021-ல் நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். தஞ்சாவூர் மாநகராட்சியில் கொள்ளிடம் ஆற்றில் புதிய குடிநீர் ஆதாரத்தை உருவாக்குதல், பழுதடைந்த குடிநீர் பிரதான மற்றும் பகிர்மான குழாய்கள் மாற்றும் பணிகள் ரூபாய் 192 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் எதிர்கால மக்கள் தொகைக்கேற்ப குடிநீர் வழங்க இயலும். இத்திட்டம் 19.2.2021-க்குள் நிறைவுபெறும், மக்களுடைய பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு அரசால் திட்டமிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 14,468 மகளிர் சுய உதவிக் குழுக்களில்
1,95,318 மகளிர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் இவர்களுக்கு ரூபாய் 1034.57 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. நடப்பு 2020-21ஆம் ஆண்டில் இச்சங்கங்களுக்கு ரூபாய் 695 கோடி கடனுதவி வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூபாய் 124.20 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 2016 சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கையில், நான் முதலமைச்சரானவுடன் உழைக்கும் மகளிருக்கு மானியத்துடன் கூடிய அம்மா இரு சக்கர வாகனம் வழங்கப்படும் என்று சொன்னதைப்போல், ஒவ்வொரு இருசக்கர வாகனத்திற்கும் ரூபாய் 25 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இதுவரை, மூன்று ஆண்டுகளில் 8,531 மகளிருக்கு மானியமாக ரூபாய் 21.26 கோடி வழங்கப்பட்டுள்ளது.
பொதுப்பணித் துறையைப் பொறுத்தவரை கடந்த 3 ஆண்டுகளில்
295 குடிமராமத்துப் பணிகள் சுமார் ரூபாய் 39 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு ஒரு சிலப் பணிகள் தவிர்த்து மற்ற பணிகள் எல்லாம் முடிவடைந்துள்ளன. 2020-21ஆம் ஆண்டு ரூபாய் 35.38 கோடி மதிப்பீட்டில் 109 குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 69 பணிகள் முடிவுற்று, 40 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. 2020-21ஆம் ஆண்டில் ரூபாய் 22.92 கோடி மதிப்பீட்டில் 165 பணிகள் 945 கிலோ மீட்டர் நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 933 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் முடிவு பெற்றுள்ளன.

கல்லணையில் காவேரி, வெண்ணாறு மற்றும் கொள்ளிடம் தலைப்பு மற்றும் மணற்போக்கி ஆகியவற்றில் பழைய துருப்பிடித்த அடைப்புப் பலகைகளை மாற்றி ரூபாய் 8.53 கோடி செலவில் புனரமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாசன மேலாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் ரூபாய் 233.58 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, அதில் இம்மாவட்டத்தில் ரூபாய் 117 கோடி  மதிப்பீட்டில் 27 பணிகள் துவங்கப்பட்டு, ரூபாய் 100.14 கோடி மதிப்பீட்டில் 22 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. காவேரி, வெண்ணாறு மற்றும் அக்னியாறு ஆகிய ஆறுகளில் 99 நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டுமானங்கள் அமைக்கும் திட்டம்
ரூபாய் 49 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. பாபநாசம் வட்டம், ராஜகிரி கிராமம், குடமுருட்டி ஆற்றின் குறுக்கே ரூபாய் 2.50 கோடி மதிப்பீட்டில் திருமலைராஜன் குடமுருட்டி நீரொழுங்கி புனரமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது.

நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் பயன் பெறும் வகையில் காவேரி உப வடிநிலப்பகுதிகளில் உள்ள பாசன அமைப்புகளை விரிவுபடுத்துதல், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்தின் கீழ் ரூபாய் 3,384 கோடிக்கான மதிப்பீடு அரசின் பரிசீலனையில் உள்ளது. திருவிடைமருதூர் வட்டம், விநாயகம் தெரு கிராமம் மற்றும் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், வேம்பக்குடி கிராமங்களுக்கு இடையே அணைக்கரை அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கீழணைக்கு அருகில் ரூபாய் 650 கோடி மதிப்பீட்டில் புதிய நீரொழுங்கி அமைக்கும் பணி அரசின் பரிசீலனையில் உள்ளது.

காவேரி படுகையில் நீர் பாசன உள்கட்டமைப்பின் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் கல்லணை கால்வாயை மேம்படுத்தும் திட்டம் ரூபாய் 2,298.75 கோடிக்கு ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன்  செயல்படுத்தப்பட உள்ளது. இதில் முதற்கட்டமாக இத்திட்டத்திற்கு ரூபாய் 300 கோடிக்கு 2020-2021 வரவு செலவு திட்டத்தில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை வட்டம், ராஜாமடம் அருகே  அக்னியாற்றின் குறுக்கே ஒரு தடுப்பணையும்,  பொன்னவராயன் கோட்டை கிராமத்தில் நசுவினி ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணையும், ஏனாதி கிராமத்தில் மகாராஜசமுத்திரம் ஆற்றின் குறுக்கே தடுப்பணையுடன் கூடிய ஒரு நவீன நீரேற்று பாசனத் திட்டம் ஆகிய 3 திட்டங்களுக்கு ரூபாய் 32 கோடிக்கான மதிப்பீடு  அரசின் பரிசீலனையில் உள்ளது. பட்டுக்கோட்டை வட்டம், தம்பிகோட்டை கிராமம், அமெரிக்குளம் ஏரிக்கு பாமணியாற்றில் ரூபாய் 16 கோடி மதிப்பீட்டில் நீரேற்று பாசனத்திட்டம் அமைத்து நீர் வழங்கும் பணி அரசின் பரிசீலனையில் உள்ளது.

பட்டுக்கோட்டை அக்னியாற்றின் குறுக்கே பண்ணவயல் ஏரிக்கு நீர் வழங்கும் பொருட்டு ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் ஒரு அணைக்கட்டு கட்டும் பணி அரசின் பரிசீலனையில் உள்ளது. பேராவூரணி, வில்லுனிவயல், அம்புலியாற்றின் குறுக்கே ரூபாய் 10.17 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.

பாபநாசம் மற்றும் வெண்ணாற்றின் குறுக்கே முனியூர் மற்றும் விக்ரமனார்  கால்வாய்களுக்கு  நீர் வழங்கும் பொருட்டு ரூபாய் 9 கோடி மதிப்பீட்டில் ஒரு தளமட்டச் சுவர் அமைக்கும் திட்டம்,  தஞ்சாவூர் சமுத்திரம் ஏரியை ரூபாய் 9 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும்  திட்டம், பாபநாசம், வெட்டாற்றின் குறுக்கே சுரைக்காயூர் மற்றும் காவலூர் வாய்க்கால்களுக்கு தண்ணீர் வழங்க ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் தளமட்டச் சுவர் கட்டும் பணி, பாபநாசம் வெண்ணாற்றின் குறுக்கே படுகை மட்டத்தை  நிலைப்படுத்துதல், நஞ்சுமனார் வாய்க்காலுக்கு நீர் வழங்கும் திட்டத்திற்கு  ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் தளமட்டச்சுவர் அமைக்கும் திட்டம் ஆகியவை அரசின் பரிசீலனையில் உள்ளன.

நெடுஞ்சாலைத் துறையில் பல பணிகளை மேற்கொண்டு இருக்கிறோம். தஞ்சாவூர் மாவட்டத்தில் கபிஸ்தலத்தையும், அரியலூர் மாவட்டம், மேலராமநல்லூர் பகுதியை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் உயர்மட்டப் பாலம் அமைக்க விரிவான திட்ட  அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.  கும்பகோணம் புறவழிச்சாலை கட்டம்-3,  9.42 கிலோ மீட்டர் நீளத்தில் அமையவுள்ளது, இதற்காக 28 கோடி மதிப்பில் நிலம் எடுக்கின்ற பணிக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. திருக்காட்டுப்பள்ளி நகருக்கு ரூபாய் 3.20 கோடி நீளத்திற்கு புறவழிச்சாலை அமைக்க நில எடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. பட்டுக்கோட்டை நகருக்கு 14.40 கிலோ மீட்டர் நீளத்தில் புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. திருவையாறு நகருக்கு சுமார் 6.75 கிலோ மீட்டர் நீளத்திற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் நிலம் எடுப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

சென்னை-கன்னியாகுமரி தொழில் வடத் திட்டம் மூலம் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம்-சீர்காழி சாலையில் சுமார் 15 கிலோ மீட்டர் நீளத்தில் ரூபாய் 140 கோடி மதிப்பீட்டிலும்,  தஞ்சாவூர்-மன்னார்குடி சாலையில் சுமார் 16 கிலோ மீட்டர் நீள சாலை ரூபாய் 95 கோடி மதிப்பீட்டிலும், கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் 5.6 கிலோ மீட்டர் நீள சாலை ரூபாய் 48 கோடி மதிப்பீட்டிலும் சாலைகளை இருவழித் தடமாக அகலப்படுத்த நில எடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.

நிரந்தர வெள்ள நிவாரணப் பணித் திட்டத்தில் 8 பாலப் பணிகள் ரூபாய் 76.27 கோடி மதிப்பீட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி பரிசீலனையில் இருக்கிறது.  கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கல்லணையில் ரூபாய் 90.96 கோடி மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது, இவ்வாண்டு இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.

மீன்வளத் துறையில், பட்டுக்கோட்டை வட்டம், கீழத்தோட்டம் மீனவ கிராமத்தில் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்கு தளம் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வேளாண்மைத் துறையில்,  கடந்த ஆண்டு தமிழ்நாட்டிலேயே அதிக பரப்பில் 1,92,191 ஹெக்டேர் நெல் சாகுபடி மற்றும் 10,74,462 மெட்ரிக் டன் அளவு நெல் உற்பத்தி செய்யப்பட்டு முதலிடம் வகித்த மாவட்டம் என்ற பெருமையை தஞ்சாவூர் மாவட்டம் பெற்றுள்ளது. நடப்பாண்டு குறுவை நெல் சாகுபடி செய்திட 1,08,000 ஏக்கர் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 1,45,602 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது.  இது கடந்த 35 ஆண்டுகளில் அதிகபட்ச சாதனை என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

டெல்டா மாவட்ட வேளாண் பெருமக்கள் கோரிக்கைகளை உணர்ந்து  காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம் இயற்றியதன் மூலம் டெல்டா பகுதியில் வேளாண் தொழில்களுக்கு பாதுகாப்பு ஏற்பட்டுள்ளது. 

பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 3,54,645 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 705 கோடியே 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான தொகுப்பு திட்டத்தின் கீழ் 462 கோடியே 41 இலட்சம் ரூபாய் மறுசீரமைப்பு பணிகளுக்காகவும்,  இடுபொருள் மானியமாகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில்  வழங்கப்பட்டுள்ளது. 2016-2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக, பாதிக்கப்பட்ட  92 ஆயிரத்து 466 விவசாயிகளுக்கு  இடுபொருள் நிவாரண உதவித்தொகையாக 108 கோடியே 32 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

நுண்ணீர் பாசனத் திட்டத்தில், கடந்த 4 ஆண்டுகளில் ரூபாய் 24 கோடியே 96 இலட்சம் மானியத்தில் நுண்ணீர் பாசன அமைப்புகள் 21 ஆயிரத்து 234 ஏக்கரில் நிறுவப்பட்டுள்ளன. 2020-21ல் இத்திட்டத்திற்கு ரூபாய் 38 கோடியே 19 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. 1657 விவசாயிகளுக்கு 1657 வேளாண் இயந்திரங்கள் 19 கோடியே  62 இலட்சத்து 11 ஆயிரம் ரூபாய் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. தரமான இடுபொருட்களை இருப்பு வைக்க 8 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் ரூபாய் 12 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளன. மேலும், பாபநாசம் மற்றும் திருவிடைமருதூரில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்களும்,  சீதாம்பாள்புரத்தில் துணை வேளாண்மை விரிவாக்க மையமும் கட்டப்பட்டு வருகின்றன.

6 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் பரிவர்த்தனைக் கூடங்கள்  7  கோடியே  60 இலட்சம்  ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளன. 

87 விவசாயிகளுக்கு சூரிய சக்தி பம்புகள்  ரூபாய் 4 கோடியே 69 இலட்சத்து 44 ஆயிரம் மானியம் கொடுக்கப்பட்டுள்ளன.

கடந்த மூன்றாண்டுகளில் 5 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும்,

7 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தஞ்சை மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 2011ல் முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து இன்று வரை பல கல்லூரிகளை அம்மாவின் அரசு தஞ்சை மாவட்டத்திற்கு கொடுத்திருக்கிறது. பேராவூரணியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செங்கிப்பட்டியில் அரசு பொறியியல் கல்லூரி, பாபநாசத்தில் பாலிடெக்னிக் கல்லூரி, ஈச்சங்கோட்டையில் வேளாண் கல்லூரி, ஒரத்தநாட்டில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருபுவனத்தில் ஐ.டி.ஐ என பல கல்லூரிகளை இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும், இங்குள்ள ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவிகள் உயர்கல்வி, தொழிற் கல்வி படிக்கும் சூழ்நிலையை  அம்மாவின் அரசு  உருவாக்கித் தந்திருக்கிறது. தஞ்சை நகரத்தை மாநகராட்சி ஆக்கியதும் மாண்புமிகு அம்மாவின் அரசு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கஜா புயல் மறு சீரமைப்புத் திட்டத்தின் கீழ் பட்டுக்கோட்டை நகராட்சி – கரம்பியம் திட்டப்பகுதியில் 720 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ரூபாய் 76.38 கோடிக்கும், பெருமகளூர் பேரூராட்சி – வளயன்லயன் திட்டப்பகுதியில் 168 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ரூபாய் 15.96 கோடிக்கும், அதிராம்பட்டினம் பேரூராட்சி – ஏரிப்புறக்கரை திட்டப்பகுதியில் 336 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ரூபாய் 35.28 கோடிக்கும் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம்  பகுதிகளில் சொந்த இடத்தில் கான்க்ரீட் வீடு கட்டும் திட்டத்திற்காக 7977 வீடுகள் கட்ட ரூபாய்  239.31 கோடிக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

தொழில் துறையைப் பொறுத்தவரை, இந்த மாவட்டத்தில் 4,586 சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதன்மூலம் 24,726 நபர்கள் வேலைவாய்ப்பை பெற்றிருக்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் MSME திட்டத்தின் கீழ் 9,278 நிறுவனங்களுக்கு ரூபாய் 122 கோடி கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

CORUS திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 1,152 சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூபாய் 132.31 கோடி கடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
பொதுப்பணித் துறையின் சார்பாக தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு பாசனம் நவீனப்படுத்தும் திட்டத்தில், சுமார் 22 பணிகள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. இன்னும் 5 பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆகவே தஞ்சாவூர் மாவட்டத்திற்கு தேவையான திட்டங்களை அம்மாவின் அரசு தொடர்ந்து நிறைவேற்றிக்  கொண்டிக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

கேள்வி – தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை அளித்திட அதிக கட்டணத்துடன் தனி பேக்கேஜ் வசூலிப்பது தொடர்பாக...
பதில் – தனியார் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு இவ்வளவு கட்டணம் தான் வசூலிக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிக கட்டணம் எங்காவது வசூலிக்கப்பட்டு, அது குறித்து அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி – காவேரி – கோதாவரி இணைப்பு திட்டம் குறித்து...
பதில் – காவேரி – கோதாவரி திட்டம் ஒரு மிகப் பெரிய திட்டம். அது ஒரு நீண்ட காலத் திட்டம். அம்மாவின் அரசு இதை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது. அதற்காக நமது இரண்டு அமைச்சர்களை ஆந்திராவிற்கு அனுப்பி, ஆந்திர முதலமைச்சர் அவர்களை சந்தித்து அவர்களுடைய எண்ணத்தை தெரிந்து கொண்டோம். இது தொடர்பாக நானும் கடிதம் எழுதியிருந்தேன். தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொண்டேன். காவேரி – கோதாவரி இணைப்பு திட்டம் ஆந்திரா மாநிலம் வழியாக வரவேண்டும். ஆகவே நீங்கள் எங்களுக்கு உதவ வேண்டும் என்று சொன்னோம். அவர்களும் உதவுவதாக நல்ல செய்தியை சொல்லியிருக்கிறார்கள். அதற்கு பிறகு தெலுங்கானா முதலமைச்சர் அவர்களை சந்திக்க மீன்வளத் துறை அமைச்சர் அவர்களையும், உள்ளாட்சித் துறை அமைச்சர் அவர்களையும் அனுப்பி வைத்தேன். அவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தென் மாநிலத்தில் இருக்கின்ற முதலமைச்சர்கள் ஒன்றாக இணைந்து இந்த காவேரி – கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்வோம் என்று சொல்லியிருக்கிறார்கள். முதல் கட்டமாக இது குறித்து பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறோம்.

கேள்வி – விவசாயத்திற்கென தனி பட்ஜெட் அறிவிக்கப்படுமா...
பதில் – அதுக்கு தான் வேளாண்மைத் துறை இருக்கிறதே. ஒவ்வொரு துறைக்கும் தனி பட்ஜெட் அறிவிக்க முடியாது.  மானியக் கோரிக்கையில் அந்தந்த அமைச்சர்கள் எந்தெந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளையும் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். அது எல்லா மாநிலங்களிலும் அப்படி தான் இருக்கிறது.

கேள்வி – சம்பா சாகுபடி நடந்து கொண்டிருக்கிறது. தண்ணீர் நமக்கு மேட்டூரில் 2 மாதங்களுக்கு தான் இருக்கிறது. அக்டோபர் - நவம்பர் - டிசம்பர் மாதங்களில் பருவமழை பொய்கின்ற காலத்தில் மேட்டூரில் போதிய தண்ணீர் இருப்பு வைப்பதற்கு...
பதில் – கற்பனையான கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. எல்லோரும் மழை பொழியும் என்று எதிர்பார்க்கிறோம். நமக்கு கிடைக்க வேண்டிய பங்குநீர் கிடைப்பதற்கு ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பு கொடுத்திருக்கிறது. நாம் கடுமையாக முயற்சி எடுத்து கொண்டுதான் இருக்கிறோம். ஒவ்வொரு மாதமும் காவேரி மேலாண்மை ஆணையம் கூட்டப்படுகிறது. அங்கே நம்முடைய கருத்துகளை எடுத்து சொல்கின்றோம். நமக்கு எவ்வளவு நீர் தேவைப்படும் என்ற விவரங்களை தெரிவிக்கிறோம். ஒவ்வொரு மாதத்திற்கு எவ்வளவு நீர் கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. அதன்படி நாம் கேட்டு பெற்றுக் கொண்டு இருக்கிறோம்.

கேள்வி – வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து...
பதில் – புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காலத்திலும் சரி, இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா காலத்திலும் சரி, சட்டமன்ற தேர்தல் வந்தாலும் சரி, நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும் சரி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் தான் தேர்தலை சந்தித்திருக்கிறோம். அந்த நிலைப்பாடு தான் தொடரும். நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும்  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் தான் தேர்தல் நடந்திருக்கிறது. ஆகவே எந்த தேர்தல் வந்தாலும் எங்கள் கூட்டணியை பொறுத்தவரைக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் தலைமை வகிக்கும்.

கேள்வி – தமிழ்நாட்டில் இயற்கை வேளாண் கொள்கை குறித்து...
பதில் – இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டு தான் இருக்கிறோம். இயற்கை வேளாண் கொள்கை தொடர்பாக அரசினுடைய பரிசீலனையில் இருக்கிறது.

கேள்வி – மைக்ரோ ஃபினான்ஸ் நிறுவனங்கள் இந்த கொரோனா காலத்திலும்  கடன் பெற்றவர்களிடம் கட்டாய பண வசூல் செய்கிறார்களே....
பதில் – இப்படிப்பட்ட புகார் அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வரப்பட்டால் அரசு அதற்குண்டான நடவடிக்கையை எடுக்கும்.
 
 
 
 
 

மரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஆமினா அம்மாள் (வயது 75)

அதிரை நியூஸ்: ஆக.28
அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.க.மு.கி முகைதீன் சாஹிப் அவர்களின் மகளும், மர்ஹூம் அகமது முஸ்தபா  அவர்களின் மனைவியும், மர்ஹூம் எம்.எஸ் முகமது உமர், அப்பாஸ் முகைதீன், மர்ஹூம் மீரா சாஹிப். அகமது கபீர், அப்துல் ரெஜாக் ஆகியோரின் சகோதரியும், அகமது உதுமான், மர்ஹூம் ராஜிக் அகமது. அப்துல் மாலிக் ஆகியோரின் தாயாரும். ஹாமீது முபாரக், ஷிஃப்லி  முகமது ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா ஆமினா அம்மாள் (வயது 75) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (28-08-2020) மாலை 5 மணியளவில் மரைக்கா  பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

மரண அறிவிப்பு ~ ஹாஜி பகுருதீன் (வயது 56)

அதிரை நியூஸ்: ஆக.28
அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் த.ப அப்துல் ஜப்பார்  அவர்களின் மகனும், ஹாஜி் த.ப சுல்தான் அப்துல் காதர் அவர்களின் சகோதரர் மகனும், தங்கவாப்பு என்கிற மு.அ முகமது முகைதீன் அவர்களின் மைத்துனரும், தப்ரே ஆலம் அவர்களின் சகோதரரும், ஹாஜா சரீப் அவர்களின் தாய் மாமாவும், ஹஃபிஸ் அவர்களின் தகப்பனாரும், சாகுல் ஹமீது அவர்களின் மாமனாரும், தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஹாஜி பகுருதீன் (வயது 56) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (28-08-2020) மாலை 5 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Thursday, August 27, 2020

மரண அறிவிப்பு ~ ஹாஜிமா ரஷினா அம்மாள் (வயது 65)

அதிரை நியூஸ்: ஆக.27
அதிராம்பட்டினம், மேலத்தெரு வாத்தி வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி வி.எம் அப்துல் மஜீது அவர்களின் மனைவியும், எஸ். அப்துல் காதர், எஸ். முகமது புஹாரி ஆகியோரின் சகோதரியும், எம். மாஜுதீன் அவர்களின் மாமியாரும், சிராஜுதீன், அப்துல் சாதிக், சாகுல் ஹமீது, மர்ஹூம் முகமது இக்ராம், கைசர் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா ரஷினா அம்மாள் (வயது 65) அவர்கள் இன்று இரவு மேலத்தெரு சவுக்குகொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (28-08-2020) காலை 9.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

தமிழக முதல்வர் நாளை (ஆக.28) தஞ்சை வருகை: முன்னேற்பாடு பணிகள் ஆய்வு (படங்கள்)

அதிரை நியூஸ்: ஆக.27
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை 28.08.2020 அன்று வருகைப் புரிவதை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பங்குபெறும் நிகழ்ச்சிகளின் முன்னேற்பாட்டுப் பணிகளை வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் ஆகியோர் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பயனாளிகள் மற்றும் தொழில் முனைவோர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு தகுந்த ஏற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக மேற்கொள்ள அறிவுறுத்தினார்கள்.

நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைவரும் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் எனவும், முதல்வர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் சிறப்பாக செய்திட கேட்டுக்கொண்டார்கள்.

இவ்வாய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன், மாவட்ட திட்ட அலுவலர் பழனி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும், காவல்துறை அலுவலர்களும் கலந்துக் கொண்டனர்.