.

Pages

Tuesday, January 6, 2015

சுண்டல் விற்கும் பிஎச்டி மாணவர் !

படிப்புக்காக தனது அண்ணனுடன் கைகோர்த்து சுண்டல் வாளியை தூக்கியபடி, புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் சுண்டல் விற்பனை செய்து வருகிறார், பிஎச்டி பட்டதாரியான பழனிராஜ்.

புதுச்சேரி கடற்கரை மற்றும் நேரு வீதி பகுதியில் மாலை நேரத்தில் கையில் சுண்டல் வாளியுடன் சுறுசுறுப்பாக சுண்டல் விற்பனை செய்யும் ஒரு இளைஞரை பலரும் பார்த்திருப்பார்கள். ஆனால், அவர் பிஏ, எம்ஏ, எம்பில் முடித்து தற்போது பிஎச்டி படிப்பவர் என்பது பலரும் அறியாத விஷயம்.

பரபரப்பான வியாபாரத்துக்கு நடுவே பிஎச்டி படிக்கும் இளைஞர் பழனிராஜை நேரில் சந்தித்தபோது, ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:
“எங்களுடைய குடும்பம் மிகவும் ஏழ்மையானது. அப்பா சுப்பிரமணியன், துணிக்கடையில் விற்பனையாளராக இருந்தார். அம்மா சரஸ்வதி, 2 அக்காள், 2 அண்ணன், 1 தங்கை என மொத்தம் 6 பேர். வறுமையான சூழலில் அக்காள்களுக்கு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடுமையான பண பிரச்சினை காரணமாக வீட்டில் உள்ள ஆண் குழந்தைகளை வேலைக்கு அனுப்ப எங்கள் குடும்பம் முடிவு செய்தது.

அப்போது, 1998-ம் ஆண்டு நான் 8-ம் வகுப்பு படித்தேன். என்னையும், மற்றொரு அண்ணன் சரவணக் குமாரையும் வேலைக்கு போகுமாறு வீட்டில் தெரிவித்தனர். எங்களுக்கு படிக்க ஆசை. அதனால் புதுச்சேரி கடற்கரையில் அமர்ந்து யோசித்தோம். அப்போதுதான், பீச்சில் சுண்டல் விற்பனை செய்ய முடிவு எடுத்தோம்.

முதலில் சுண்டல் விற்பனை செய்வது மிகவும் கஷ்டமாக இருந்தது. நான் மிகவும் அமைதியானவன். கூவி விற்கக்கூடத் தெரியாது. சில சமயம் சுண்டல் விற்காமலேயே போய்விடும். அதை என்ன செய்வது என்று தெரியாது. வீட்டிலோ வறுமை. சரியான ஆடை கூட இருக்காது.

அதனால், அண்ணனின் ஆடையை போட்டுக் கொள்வேன். இந்த நிலையில், சுண்டல் விற்றவாறே நான் படிப்பது பள்ளியில் பலருக்கும் தெரிய வந்தது. நான் அப்போது புதுச்சேரியில் உள்ள வீரமாமுனிவர் அரசு பள்ளியில் படித்து வந்தேன். எனது நிலையை உணர்ந்த என்னுடைய ஆசிரியர்கள் பத்மாவதி, பாலசுந்தரம், ராமதாஸ் ஆகியோர் உதவி செய்தார்கள்.

சுண்டல் விற்றவாறே படித்து, 10-ம் வகுப்பில் 442 மார்க் எடுத்தேன். அதையடுத்து வஉசி அரசு மேல்நிலைப ்பள்ளியில் சேர்ந்தேன். பின்னர் மேல்படிப்பு படிக்கும் ஆசையுடன் தாகூர் கல்லூரியில் பிஏ தமிழ் சேர்ந்தேன். அதன்பிறகு, எம்ஏ, எம்பில் முடித்து விட்டு, கடந்த 2010 முதல் வைணவ சிற்றிலக்கியங்கள் பற்றி பிஎச்டி பண்றேன். 12 ஆழ்வார்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன்.

படிப்புக்கு இடையே 2008-ல் நெட் தேர்விலும், 2013-ல் ஜேஆர்எப் (இளநிலை ஆராய்ச்சியாளர்) தேர்விலும் தேர்ச்சி பெற்றதால் பல்கலைக்கழகத்தில் இருந்து உதவித் தொகை கிடைக்க தொடங்கியுள்ளது. எனினும், இப்போதும் நான் சுண்டல் விற்கிறேன்.

எனது தந்தையால் வேலைக்கு செல்ல முடியவில்லை. அதனால், காலையில் எழுந்து சுண்டல், வடை, பஜ்ஜிக்கு தேவையான பொருட்களை வாங்கி வீட்டில் தருவேன். எனது அம்மா அதை தயாரிப்பார். நான் பல்கலைக்கழகம் சென்று விட்டு வீடு திரும்பிய பிறகு மாலை 6 மணிக்கு மேல் சுண்டல், சமோசா, போளி, கட்லெட், பஜ்ஜி, வடை ஆகியவற்றை எடுத்துக் கொண்டு பீச், நேரு வீதிக்கு விற்க வருவேன். விற்பனையை முடித்து விட்டு இரவு 10 மணிக்கு வீடு திரும்புவேன்.

பல்கலைக்கழக உதவித் தொகை கிடைத்தாலும் இந்த சுண்டல் வியாபாரம் மூலமாக எனது சகோதரிகள் திருமணத்துக்கு வாங்கிய கடனை அடைக்க முடிகிறது. என்னுடன் சுண்டல் விற்பனை செய்த எனது அண்ணன் சரவணக்குமார் தற்போது எம்ஏ, எம்பில், பிஎட் முடித்து அரசு பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். மற்றொரு அண்ணன் பாலமுருகன் பிளாட்பாரத்தில் துணி விற்கிறார்.

நமக்குள் ஆசையும், முயற்சியும் இருந்தால் நம்மை ஊக்கப்படுத்த சமுதாயத்தில் பலரும் உள்ளனர் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. சுண்டல் வாங்குவோர் தொடங்கி, பள்ளி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், நண்பர்கள் என பலரும் அளித்த ஊக்கம்தான் பிஎச்டி வரை என்னை கொண்டு வந்துள்ளது” என்று தன்னம்பிக்கையுடன் பேசுகிறார் பழனிராஜ்.

நன்றி: தமிழ் ஹிந்து

4 comments:

  1. நம் உடல் சீராக இயங்குவதற்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகின்றது .அதே போல் ஒரு செயலின் வெற்றிக்கு முயற்சி தேவைப்படுகின்றது. தன்முனைப்பு இல்லாத மனிதனைப் பொம்மையாக உலகம் பார்க்குமெயொழிய சக மனிதனாகப் பார்ப்பதில்லை.

    வேலை இல்லா இளைன்னரகளுக்கு பழனிராஜ் ஒரு மாடல் ரோல் தான்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    இந்த தம்பதிக்கு இப்படி யொரு மகன் கிடைத்ததற்கு அவர்கள் மாதவம் ‎செய்துருக்க வேண்டும். இன்றைய சூழலில் இதை பார்க்கும்போது ‎வியப்பாக இருக்கின்றது, காரணம் எத்தனை பிள்ளைகள் இப்படி ‎குடும்பத்தை தாங்குகின்றன?.‎

    மனதில் உறுதி, விடா முயற்சி, தன்னம்பிக்கை, மன வலிமை, துடிப்பு, ‎துணிச்சல் இவை அனைத்தும் ஒருங்கே கிடைத்துவிட்டால் எதையும் ‎சாதித்து விடலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம்.‎

    இந்தப் பிள்ளையை நான் வாழ்த்தி பாராட்டுகின்றேன்.‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  3. சொகுசாக வாழ நினைக்கும் இன்றைய காலத்து இளைஞர்களுக்கு மத்தியில் வறுமையிலும் வருங்கால நோக்கத்தில் உறுதியாய் இருந்து தன்னம்பிக்கையுடன் சுண்டல் விற்று படிக்கும் இம்மாணவர் பாராட்டப் படவேண்டியவர். இவருடைய வருங்காலம் சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. கஷ்டம் பொருளாதாரத்தின்னால் ஏற்படும்போது தாம்ஈட்டும் சிறு தொகை மதிப்பில், மதிப்பில் பெரியதாக இருக்கும் இதை கல்லூரிகாலங்களில் கட்டாய பயிற்சியாக நிர்பந்திக்கப்படவேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.