.

Pages

Thursday, January 8, 2015

பிலால் நகர் மக்கள் மீது பரிவு காட்டுமா அதிரை பேரூராட்சி மன்றம்!?

அதிரை பேரூராட்சியின் சார்பாக 2012-2013 ஆம் ஆண்டுக்கான நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் கீழத்தெரு மஹல்லாக்கு உட்பட்ட புதுக்குடி பகுதியில் அமைந்துள்ள செய்னாங் குளத்திற்கு தடுப்பு சுவர் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன்படி கடந்த பல மாதங்களாக குளத்தை புனரமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வந்தது. பல ஆண்டுகளாக குப்பை கழிவுகளாலும், கழிவு நீராலும் சூழப்பட்டு துர்நாற்றம் வீசி வந்த குளத்திற்கு விடிவுகாலம் பிறந்ததை கண்டு இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

செயனாங் குளத்திற்கு நீர் ஆதாராமாக அருகில் உள்ள அதிரை பெரிய ஜும்மா பள்ளி நிர்வாக பரமாரிப்பில் இருந்து வரும் செடியன் குளத்தில் தண்ணீர் முழுவதும் நிரம்பிய பிறகு, பிலால் நகர் பகுதியை ஒட்டி அமைந்துள்ள குளத்தின் வடிகாலில் இருந்து வழிந்து ஓடும் தண்ணீரை குழாய்கள் அமைத்து செய்னாங் குளத்திற்கு கொண்டு செல்வது என செயல்திட்டம் தீட்டப்பட்டது. அதன் படி அதிரை பேரூராட்சி சார்பில் செய்னாங்குளம் புரனமைப்பு பணியின் ஒரு பகுதியாக செடியன் குளம் வடிகாலில் இருந்து செய்னாங் குளம் வரை சுமார் 600 அடி தொலைவில் ஒரு அடி குழாய்கள் புதைக்கப்பட்டது. இந்த குழாய்கள் புதைப்பதன் மூலம் செடியன் குளத்திலிருந்து நிரம்பி ஓடும் தண்ணீர் வருடம்தோறும் பாதிப்படைந்து வரும் பிலால் நகர் குடியிருப்பு பகுதிக்கு செல்லாது என்ற ஒரு காரணமுமிருந்தாலும், குளத்திலிருந்து வீணாக வெளியேறும் தண்ணீரை அருகில் உள்ள செய்னாங் குளத்தில் நிரப்பி கொள்வது என்ற மற்றொரு காரணத்தால் இப்பகுதியினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

தண்ணீரை கொண்டு செல்வதற்காக புதைத்து வரும் குழாய்களின் சுற்றளவு சிறிதாக இருக்கிறது எனவும், குழாயின் சுற்றளவை சற்று பெரிய வடியில் அதாவது 2 அடி குழாய்களை ஏற்பாடு செய்யும்படி இப்பகுதியை சேர்ந்த ஆர்வலர் ஒருவர் சம்பந்தபட்டோரின் கவனத்துக்கு அப்போது எடுத்துச்சென்றார். எனினும் இதுதொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் அதிரை சுற்று வட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழை மற்றும் ஆற்று நீர் வருகையால் செடியன் குளம் நிரம்பி வழிந்தது. நிரம்பி வழியும் தண்ணீர் குழாய் மூலம் செய்னாங் குளத்திற்கு செல்லாமல் வழக்கம் போல் பிலால் நகர் குடியிருப்பில் புகுந்து சாலையெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இதையடுத்து எரிபுறக்கரை கிராம ஊராட்சி மன்றத்தின் சார்பில் அதிரை பேரூராட்சியின் அவசரக்கோலத்தில் முடிக்கப்பட்ட பணியால் பாதிப்படைந்த பிலால் நகரில் சூழ்ந்துள்ள வெள்ளப்பகுதிகளை ஜேசிபி இயந்திரத்தை கொண்டு அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியது. எனினும் கடந்த சில மாதங்களாக செடியன் குளத்திலிருந்து கசிந்து வெளியேறி வரும் பல லட்சம் லிட்டர் தண்ணீரால் தினமும் பிலால் நகர் பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த பாதிப்படைந்து வருகின்றனர்.

போர்க்கால நடவடிக்கையாக அதிரை பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் செடியன் குளத்தின் தண்ணீரை எடுத்து செல்வதற்காக புதைக்கப்பட்ட எந்தவொரு பயனுமில்லாமல் இருக்கும் ஒரு அடி குழாய்களை தோண்டி எடுத்துவிட்டு செயனாங் குளம் வரை தண்ணீர் சீராக செல்வதற்கு ஏற்ற முறையான வடிகால் அமைக்க இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிலால் நகர் மக்கள் மீது பரிவு காட்டுமா அதிரை பேரூராட்சி மன்றம் !?

பேரூராட்சி சார்பில் சுமார் 600 அடி தூரத்தில் போடப்பட்ட ஒரு அடி குழாய்
செயனாங்குளத்தில் குழாய் இணைக்கப்பட்டுள்ள காட்சி ( இந்த குழாய் வழியாக செடியன் குளத்தின் ஒரு சொட்டு தண்ணீர் கூட இதுவரையில் வந்தடையவில்லை)
ஏரிபுறக்கரை கிராம ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் சார்பில் தேங்கிய தண்ணீரை அப்புறப்படுத்தும் காட்சி.
ஏரிப்புறக்கரை கிராம ஊராட்சி மன்ற நிர்வாகம் தண்ணீர் சீராக செல்ல வழிவகை செய்தும் பிலால் நகர் பகுதிகளில் மீண்டும் தண்ணீர் சூழ்ந்துள்ள காட்சி

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    இது படிப்பதற்கு ஈசியாக இருந்தாலும், சிந்திப்பதற்கு மிகவும் கடினமாக ‎இருக்கின்றது, இந்த ஆக்கத்தில் கூறப்பட்ட அனைத்தும் உண்மை என்று ‎நூற்றுக்கு நூறு நம்புவதற்கு தகுதியானவைகளாக இருக்கின்றது.‎

    ஆனாலும், இதை நம்புவதற்கு அதிகாரிகள் மத்தியில் பல குளறுபடிகள் ‎நிலவுகின்றனர். இந்த குளறுபடிகள் நீங்கினால் ஒழிய, விடிவு காலம் ‎ஒருக்காலும் பிறக்காது.‎

    ஆகவே, மாவட்ட ஆட்சியரை நேரில் சந்திப்பதை தவிர வேறு ஒன்றும் ‎இல்லை என்று இதன் மூலம் தெரிவிக்கின்றேன்.‎

    இத்தனை ஆண்டு காலம் தூங்கினது போதும், இன்னும் ‎தூங்கணுமா??????? ‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. கோரிக்கைகள் மனுக்களாக கொடுத்தால் அரசு அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை ஆனால் பொது மக்களுக்கு இடயூர் ஏற்படுத்தும் வண்ணம் பஸ் மறியல் பண்ணினால் அதிகாரிகளுக்கு மேல் அதிகாரிகள் வந்து பிரச்னை என்னவென்று கேட்டு நடவடிக்கை எடுக்கப் படுகிறது. அரசு அதிகாரிகளே போராட்டம் நடத்தினால் தான் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களின் அகவிலைப்படி(ஊதியம் ) உயர்கிறது இதற்க்கு பெயர் தான் இந்தியா.

    மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசு என்று அரசியல் வாதி பேச்சும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்போம் என்ற கூவும் அதிகாரிகளின் பேச்சும் ஒன்றே, வெட்டிப் பேச்சு.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.