தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இந்து முன்னணி சார்பில் 27 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் இன்று மாலை நடைபெற்றது.
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட 32 சிலைகள் வண்டிப்பேட்டை, சேர்மன் வாடி, பேருந்து நிலையம், ஈசிஆர் சாலை வழியாக ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு ஏரிபுறக்கரை கடலில் கரைக்கப்பட்டன.
முன்னதாக அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை அருகில் ஊர்வலத்தின் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அதிராம்பட்டினம் இந்து முன்னணி தலைவர் விஜயகுமார் தலைமை வகித்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பொதுச்செயலாளர் அருணாசலம் வரவேற்புரை ஆற்றினார். இந்து முன்னணி மாநில பேச்சாளர் இந்துமதி சிறப்புரை நிகழ்த்தினார்.
ஊர்வலத்தில் தஞ்சை மாவட்ட டிஐஜி செந்தில்குமார் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த்மேனன், 13 டிஎஸ்பிக்கள், 22 இன்ஸ்பெக்டர்கள், 46 சப்இன்ஸ்பெக்டர்கள், ஆயுதப்படை, சிறப்பு காவல்படை உட்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் வஜ்ரா வாகனம், கண்ணீர் புகைவண்டி, தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ், சிசிடிவி கேமிரா உள்ளிட்டவை பாதுகாப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டன.
மேலும் ஊர்வலம் செல்லும் பாதைகளின் முக்கிய பகுதிகளின் இணைப்பு சாலைகளில் வாகன வேக தடுப்பு தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஊர்வல பாதையில் வர்த்தக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஊர்வலத்தில் இந்து முன்னணி அமைப்பினர், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமவாசிகள் பலர் கலந்துகொண்டனர்.






சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிய காவல் துறைக்கு நன்றி !
ReplyDeleteகடைகள் அடைக்கப்பட்டு, பேருந்துகள் முடக்கப்பட்டு, ஆட்டோ ரிக்ஷாக்கள் மறிக்கப்பட்டு, வாகனங்கள் நிறுத்தப்பட்டு, பொதுமக்களை ஆறு மணி நேரத்துக்குப் பல இன்னல்களுக்கு ஆளாக்கி, காவல்துறை வெற்றிகரமாக(!) சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றிவிட்டனர்.
ReplyDelete