.

Pages

Tuesday, December 31, 2019

மாநில அளவிலான குர்ஆன் ஓதும் கிராத் போட்டியில் அதிரை ஆலிம் மாணவர் சாதனை!

அதிரை நியூஸ்: டிச.31
அதிராம்பட்டினம் புதுமனைத்தெருவை சேர்ந்தவர் சாலிம் சேகுனா ஆலிம் இவரது மகன் அல் ஹாபிஸ் காரி எஸ்.அஹ்மத் ஜாபிர் (வயது 24). ஆலிம் மற்றும் பி.காம் பட்டதாரி மாணவர். இவர், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குர்ஆன் ஓதும் கிராத் போட்டிகளில் வெற்றி பெற்று பல்வேறு பரிசுகளை வாரிக் குவித்து வருகிறார்.

இந்தநிலையில், சென்னை இஸ்லாமியக் கலாச்சார அறக்கட்டளை, கீழக்கரை புஹாரி ஆலிம் அரபிக்கல்லூரி இணைந்து நடத்திய மாநில அளவிலான குர்ஆன் ஓதும் கிராத் போட்டி இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வடக்குத்தெரு பள்ளியில் சனிக்கிழமை (டிச.28) இரவு நடைபெற்றது. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஹாஃபிழ் மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் என  மொத்தம் 45 பேர் கலந்துகொண்டனர். இதில், குர்ஆன் ஓதும் கிராத் போட்டியில் அதிராம்பட்டினம் ஆலிம் மாணவர் எஸ்.அஹ்மத் ஜாபிர் முதலிடம் பிடித்து முதல் பரிசினை வென்றார்.

பிழையின்றி ஓதியது, மொழி உச்சரிப்பு, இனிமையான குரல்வளம் ஆகியன முதல் பரிசு தேர்விற்கு காரணமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, இஸ்லாமியக் கலாச்சார அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் அல்ஹாஜ் அஸ்ரப் புஹாரி தலைமையில் நடந்த பரிசளிப்பு விழாவில், போட்டியில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. 

'உங்கள் அன்பு அறிவிப்பாளர்' B.H அப்துல் ஹமீதுடன் பிரத்தியேக நேர்காணல் (வீடியோ)

அதிரை நியூஸ்: டிச.31
சிறப்பு விருந்தினராக முதன் முறையாக அதிராம்பட்டினம் வருகை தந்த 'உங்கள் அன்பு அறிவிப்பாளர்' பி.எச் அப்துல் ஹமீது அவர்களுடன் ஒரு பிரத்தியேக நேர்காணலை 'சமூக ஆர்வலர்' ஹாஜி எம். அப்துல் ரெஜாக் அவர்கள் நடத்தினார். இணைப்பில் அதன் காணொளி...

Monday, December 30, 2019

அதிரையில் ஆதரவற்ற பெண் சடலத்தை நல்லடக்கம் செய்த இஸ்லாமிய இளைஞர்கள்!

அதிராம்பட்டினம், டிச.30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளாக யாசகம் பெற்று வந்தவர் தேவி (வயது 54). இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அதிரையில் இயற்கை எய்தினார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், நெய்னா முகமது, ஆரிப், ஹசன் உள்ளிட்ட இஸ்லாமிய இளைஞர்கள் தானாக முன்வந்து காவல்துறை, கிராம நிர்வாக அலுவலர் அனுமதி பெற்று, தங்களது சொந்த செலவில் அடக்கம் செய்ய முன்வந்தனர். இதையடுத்து, அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் ஆம்புலன்ஸ் வாகனத்தில் வண்டிப்பேட்டை இடுகாட்டிற்கு உடல் எடுத்துச்சென்று இன்று திங்கட்கிழமை காலை நல்லடக்கம் செய்தனர். இஸ்லாமிய இளைஞர்களின் தன்னலமற்ற செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

Sunday, December 29, 2019

கால்பந்து போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற வெஸ்டர்ன் FC அணி!

அதிராம்பட்டினம், டிச.29
தஞ்சாவூர் முத்தையா நினைவு கால்பந்து கழகம் சார்பில், ஐவர் கால்பந்து தொடர் போட்டி, தஞ்சை கிட்டு மைதனாத்தில் டிச.28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இதில், அதிராம்பட்டினம், தஞ்சாவூர், கும்பகோணம், ஒரத்தநாடு உள்ளிட்ட மொத்தம் 23 அணிகள் பங்கேற்று விளையாடின. இதில், அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் FC, தஞ்சாவூர் ஜி புட்பால் கிளப் ஆகிய அணிகள் அரை இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்று விளையாடின. இதில், அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் FC அணியில், அன்சார் கான் (கோல் கீப்பர்), ஆதில் (கேப்டன்), அன்சார் கான், ரிஸ்வான், சதாஸ் கான், நவீத், ரியாவூதீன், நிஷாருதீன், அஃப்ரித்கான், முகமது ஆகிய வீரர்கள் கலந்துகொண்டு விளையாடினர்.

விறுவிருப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில், 2-0 என்ற கோல் கணக்கில், அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் FC அணி மூன்றாமிடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றது. அணியின் நட்சத்திர வீரர்கள் சதஸ்கான், நிசார் ஆகியோர் தலா ஒரு கோல் போட்டனர்.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில், ரூ. 10 ஆயிரம் ரொக்கப்பரிசு, சுழற்கோப்பை வழங்கப்பட்டன. தவிர, தொடர் போட்டியில் சிறந்த கோல் கீப்பருக்கான சிறப்புப் பரிசு மற்றும் கேடயப்பரிசினை அணியின் வீரர் அன்சர்கான் பெற்றார்.
சிறந்த கோல் கீப்பருக்கான பரிசு பெற்ற அன்சர்கான் 

மரண அறிவிப்பு ~ ஹாஜி S.M அப்துல் வாஹித் (வயது 80)

அதிரை நியூஸ்: டிச.29
அதிராம்பட்டினம், கீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் மஹமூது அவர்களின் மகனும், மர்ஹூம் இ.மு சாகுல் ஹமீது அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஏட்டையா என்கிற அப்துல் வாஹிது, மர்ஹூம் நெய்னா முகமது ஆகியோரின் மைத்துனரும், சாகுல் ஹமீது அவர்களின் சகலையும், இப்ராஹிம்ஷா, மர்ஹூம் முகமது அலி ஆகியோரின் மச்சானும், தாஹா துல்கருணை, மர்ஹூம் முகமது யூசுப் ஆகியோரின் மாமனாரும், பதருல் ஜமான், அன்சாரி ஆகியோரின் பெரிய தகப்பனாரும், நெய்னா முகமது, ஹாஜி நூர் முகமது, பகுருதீன், ஹாஜா முகைதீன், முகமது முகைதீன் ஆகியோரின் தகப்பனாரும், அப்துல் ஹக்கீம் அவர்களின் பாட்டனாருமாகிய ஹாஜி S.M அப்துல் வாஹித் (வயது 80) அவர்கள் இன்று பகல் 3 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (30-12-2019) பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

அதிரை FM, 4-வது ஆண்டு தொடக்க விழா ~ நேயர்கள் சந்திப்பில் B.H அப்துல் ஹமீது பங்கேற்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.29
'நமது சமூகம், 'நமது நலன்', என்பதை குறிக்கோளாகக் கொண்டு, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, மதுக்கூர், மல்லிபட்டினம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளின் சமூக மேம்பாடு, கல்வித் தரம், ஆரோக்கியம், மருத்துவம், விவசாயம், தொழில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் மேம்பாட்டிற்காக, அதிராம்பட்டினம் தொழில் அதிபர் ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்களால் சமூக பண்பலை வானொலி நிலையம் அதிராம்பட்டினத்தில் நிறுவப்பட்டது. இந்நிலையத்தை, கடந்த 18-12-2016 அன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்  ஆ.அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், சமூக பண்பலை வானொலியின் 4-வது ஆண்டு தொடக்க விழா ~ நேயர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அதிரை FM ~ 90.4 நிறுவனர் ஹாஜி எம்.எஸ் தாஜுதீன் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக இலங்கை சர்வதேச வானொலி அறிவிப்பாளர் பி.எச் அப்துல் ஹமீது கலந்துகொண்டு பேசியது;
'அந்தக்காலத்தில் சமூக வானொலியின் முக்கியத்துவம் உணரப்படவில்லை. ஆனால், இப்போது அதன் அவசியம் உணரப்பட்டுள்ளது. வானொலி என்பது அன்றும், இன்றும், இனி என்றும் மிக சக்தியுள்ள ஒரு சாதனம். அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை பலர் மறந்திருக்கும் நிலையில்,  சமூக வானொலிகளால் மட்டும்தான் அந்த பெரும்பணியை முன்னெடுத்துச் செல்ல முடியும். காரணம், சமூக வானொலியில் அரசியல், சமயம் போன்றவை ஒலிபரப்ப அனுமதியில்லை. சமூக மேம்பாடு, விவசாயம், கல்வி, வேலை வாய்ப்பு, தொழில்வளம், மீனவர் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மருத்துவம் போன்ற மக்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சிகள் ஒலிப்பரப்படுகிறது. வெறும் பொழுதுபோக்கை மையமாகக்கொண்டு இயங்கும் வானொலிகள் மத்தியில், மக்களின் கவனத்தை சமூக வானொலிகள் திருப்பி விடுகின்றன. மக்களுக்கு முதலில் தேவை கல்வி, அதையடுத்து தகவல், அதனை அடுத்துதான் பொழுதுபோக்கு. எனவே, சமூக வானொலிகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. மேலை நாடுகளில் இந்த சமூக வானொலிகள் பெரும் பணியை ஆற்றிருக்கின்றன. நேயர்கள் வட்டம் சிறிதாக இருந்தாலும் கூட தன்னைத்தானே மேம்படுத்திகொள்ள வேண்டும். தன்னுடைய வாழ்வியலை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கை பொழுதுகளை வீணாக்காமல் நினைக்கும் ஒவ்வொருவரும் இந்த சமூக வானொலியின்பால் செவிகளை திருப்புவார்கள்' என்றார்.

மேலும், சமூக வானொலியில் ஒலிப்பரப்பாகும் நிகழ்ச்சி பற்றிய கருத்து, சமூக மேம்பாட்டிற்கு வானொலியின் பங்கு, வானொலியில் பணியாற்றிய தனது அனுபவங்கள் உள்ளிட்ட நேயர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பி.எச் அப்துல் ஹமீது பதிலளித்துப் பேசினார். 

முன்னதாக, பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் வரவேற்றுப்பேசினார். பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர் விருந்தினர் அறிமுக உரை நிகழ்த்தினார். என்.இசட். அகமது முனாவர் வாழ்த்துரை வழங்கினார். மு.செ.மு ராஃபியா, நிலைய அறிவிப்பாளர் கண்ணன் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்தளித்தனர். நிறைவில், இப்ராஹிம் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில், அதிரை FM ~ 90.4 நிகழ்ச்சி தயாரிப்புக்குழுவினர், நிலைய அறிவிப்பாளர்கள், வானொலி நேயர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மரண அறிவிப்பு ~ கா.மு.செ அப்துல் பரகத் (வயது 85)

அதிரை நியூஸ்: டிச.29
அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் கா.மு.செ முகமது மீரா சாஹிப் அவர்களின் மகனும், மர்ஹூம் ம.செ செய்யது அலாவுதீன் அவர்களின் மருமகனும், கா.மு.செ காவண்ணா என்கிற காதர் நெய்னா மலை, மர்ஹூம் முகமது யூனுஸ், ஜமால் முகமது, மர்ஹூம் தாஜுல் முகமது ஆகியோரின் சகோதரரும், ம.செ அமீர் அம்சா, கா.மு.செ ஜெஹபர் சாதிக், மர்ஹூம் என்.எம்.எஸ் ஹபீப் ரஹ்மான், கா.மு.செ தப்ருல் ஆலம் ஆகியோரின் மாமனாரும், கமருல் ஜமான், முகமது மீரா சாஹிப் ஆகியோரின் தகப்பனாருமாகிய கா.மு.செ அப்துல் பரகத் (வயது 85) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (30-12-2019) காலை பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Saturday, December 28, 2019

அதிரை அமீனுக்கு அமமுக ஆதரவு!

அதிராம்பட்டினம், டிச.28
பட்டுக்கோட்டை ஒன்றியம், ஏரிப்புறக்கரை கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு சுயேட்சை வேட்பாளராக 'கை உருளை' சின்னத்தில் போட்டியிடும், அதிரை அமீன் என்கிற முகமது அமீனை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆதரிப்பது, அவரது வெற்றிக்காக பாடுபடுவது என அக்கட்சியின் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் எஸ்.டி.எஸ் செல்வம் தலைமையில், அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் ஏ. ஜமால் முகமது, இணைச் செயலாளர் அய்யாவு, விவசாயப் பிரிவு செயலாளர் சரவணன், ஏரிபுறக்கரை ஊராட்சி பொறுப்பாளர் ராகவன் உள்ளிட்ட அக்கட்சியினர் வேட்பாளர் அதிரை அமீனிடம் தங்களது ஆதரவைத் தெரிவித்துக்கொண்டனர்.

மேலும், பட்டுக்கோட்டை ஒன்றிய 18-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அறிக்கன் விளக்கு சின்னத்தில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ஆர். லட்சுமணனை ஆதரிக்க கோரிக்கை விடுத்தனர்.
 

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆதரவற்றோருக்கு போர்வைகள் வழங்கல் (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.28
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில், குளிரில் வாடும் ஆதரவற்ற 90 பேருக்கு வெள்ளிக்கிழமை இரவு போர்வைகள் வழங்கப்பட்டன.

தற்போது பனிகாலமாக இருப்பதால் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், பேருந்து நிலையம், வழிபாட்டுத்தலங்கள், கடைவீதிகளில் ஆதரவற்ற நிலையில் உள்ள முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், யாசகம் பெற்று வாழும் ஏழைகள் குளிரில் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில், ஆதரவற்ற 90 பேருக்கு போர்வைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க  தலைவர் எம்.அப்துல் ஜலீல் தலைமை வகித்தார். செயலாளர் எம்.நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை சங்கத்தின், கலாம்-20 முதுமையை மதிக்கலாம் பிரிவின் மாவட்டத் தலைவர் பேராசிரியர் எஸ்.பி கணபதி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், லயன்ஸ்  மாவட்டத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர், சங்க நிர்வாகிகள் என்.ஆறுமுகச்சாமி, எம். முகமது அபூபக்கர், முல்லை ஆர். மதி, வரிசை முகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.