.

Pages

Sunday, December 29, 2019

அதிரை FM, 4-வது ஆண்டு தொடக்க விழா ~ நேயர்கள் சந்திப்பில் B.H அப்துல் ஹமீது பங்கேற்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.29
'நமது சமூகம், 'நமது நலன்', என்பதை குறிக்கோளாகக் கொண்டு, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, மதுக்கூர், மல்லிபட்டினம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளின் சமூக மேம்பாடு, கல்வித் தரம், ஆரோக்கியம், மருத்துவம், விவசாயம், தொழில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் மேம்பாட்டிற்காக, அதிராம்பட்டினம் தொழில் அதிபர் ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்களால் சமூக பண்பலை வானொலி நிலையம் அதிராம்பட்டினத்தில் நிறுவப்பட்டது. இந்நிலையத்தை, கடந்த 18-12-2016 அன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்  ஆ.அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், சமூக பண்பலை வானொலியின் 4-வது ஆண்டு தொடக்க விழா ~ நேயர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அதிரை FM ~ 90.4 நிறுவனர் ஹாஜி எம்.எஸ் தாஜுதீன் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக இலங்கை சர்வதேச வானொலி அறிவிப்பாளர் பி.எச் அப்துல் ஹமீது கலந்துகொண்டு பேசியது;
'அந்தக்காலத்தில் சமூக வானொலியின் முக்கியத்துவம் உணரப்படவில்லை. ஆனால், இப்போது அதன் அவசியம் உணரப்பட்டுள்ளது. வானொலி என்பது அன்றும், இன்றும், இனி என்றும் மிக சக்தியுள்ள ஒரு சாதனம். அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை பலர் மறந்திருக்கும் நிலையில்,  சமூக வானொலிகளால் மட்டும்தான் அந்த பெரும்பணியை முன்னெடுத்துச் செல்ல முடியும். காரணம், சமூக வானொலியில் அரசியல், சமயம் போன்றவை ஒலிபரப்ப அனுமதியில்லை. சமூக மேம்பாடு, விவசாயம், கல்வி, வேலை வாய்ப்பு, தொழில்வளம், மீனவர் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மருத்துவம் போன்ற மக்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சிகள் ஒலிப்பரப்படுகிறது. வெறும் பொழுதுபோக்கை மையமாகக்கொண்டு இயங்கும் வானொலிகள் மத்தியில், மக்களின் கவனத்தை சமூக வானொலிகள் திருப்பி விடுகின்றன. மக்களுக்கு முதலில் தேவை கல்வி, அதையடுத்து தகவல், அதனை அடுத்துதான் பொழுதுபோக்கு. எனவே, சமூக வானொலிகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. மேலை நாடுகளில் இந்த சமூக வானொலிகள் பெரும் பணியை ஆற்றிருக்கின்றன. நேயர்கள் வட்டம் சிறிதாக இருந்தாலும் கூட தன்னைத்தானே மேம்படுத்திகொள்ள வேண்டும். தன்னுடைய வாழ்வியலை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கை பொழுதுகளை வீணாக்காமல் நினைக்கும் ஒவ்வொருவரும் இந்த சமூக வானொலியின்பால் செவிகளை திருப்புவார்கள்' என்றார்.

மேலும், சமூக வானொலியில் ஒலிப்பரப்பாகும் நிகழ்ச்சி பற்றிய கருத்து, சமூக மேம்பாட்டிற்கு வானொலியின் பங்கு, வானொலியில் பணியாற்றிய தனது அனுபவங்கள் உள்ளிட்ட நேயர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பி.எச் அப்துல் ஹமீது பதிலளித்துப் பேசினார். 

முன்னதாக, பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் வரவேற்றுப்பேசினார். பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர் விருந்தினர் அறிமுக உரை நிகழ்த்தினார். என்.இசட். அகமது முனாவர் வாழ்த்துரை வழங்கினார். மு.செ.மு ராஃபியா, நிலைய அறிவிப்பாளர் கண்ணன் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்தளித்தனர். நிறைவில், இப்ராஹிம் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில், அதிரை FM ~ 90.4 நிகழ்ச்சி தயாரிப்புக்குழுவினர், நிலைய அறிவிப்பாளர்கள், வானொலி நேயர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.