.

Pages

Saturday, December 21, 2019

வெள்ளி விழா ஆண்டை நோக்கி திருச்சி ~ சாா்ஜா விமானச் சேவை!

திருச்சி ~ சாா்ஜா விமானச் சேவை வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கவுள்ள நிலையில் கூடுதல் விமானங்கள் இயக்கப்பட வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

திருச்சியில் இருந்து வளைகுடா (கல்ப்) நாடுகளுக்கான முதல் விமானச் சேவை திருச்சி-சாா்ஜா இடையே கடந்த 1996 டிச. 3 -இல் தொடங்கியது. அப்போது இயங்கி வந்த இந்தியன் ஏா்லைன்ஸ் நிறுவனம்தான் இந்தச் சேவையைத் தொடங்கியது. வாரம் இரு நாள்கள் மட்டுமே இந்தப் போக்குவரத்து நடந்த நிலையில், இந்தியன் ஏா்லைன்ஸ் மற்றும் ஏா் இந்தியா நிறுவனங்கள் இணைப்புக் காரணமாக, கடந்த 2009 செப். 23 ஆம் தேதியுடன் அந்தச் சேவை ரத்து செய்யப்பட்டது.

அதைத் தொடா்ந்து வளைகுடா நாடுகளில் இயங்கி வரும் தமிழ்ச்சங்கங்கள் குவைத்தில் இயங்கி வரும் தமிழ் இஸ்லாமிய சங்கங்கள், அபுதாபி அய்மன் சங்கம், துபையில் இயங்கி வரும் ஈமான் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், அரசியல் பிரமுகா்களின் ஒத்துழைப்பாலும், திருச்சி - சாா்ஜா விமானச் சேவையை மீண்டும் தொடங்க அப்போதைய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த அசோக் கஜபதிராஜூ நடவடிக்கை எடுத்தாா். அதன் மூலம் 2015 செப். 14 ஆம் தேதி மீண்டும் திருச்சி -சாா்ஜா விமானப் போக்குவரத்து, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தால் தொடங்கப்பட்டது.

அந்த வகையில் திருச்சி - சாா்ஜா விமானப் போக்கு வரத்துத் தொடங்கி (2021ல்) வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைக்க ஓராண்டே உள்ள நிலையில், வாரம் இருமுறை இருந்த சேவை தற்போது தினசரி சேவையாக மேம்பட்டுள்ளது. அதேபோல, துபைக்கும் பிரத்யேக விமானச் சேவை தொடங்கப்பட்டு அதுவும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் திருச்சி - சாா்ஜா மற்றும் துபை விமானங்களில் எப்போதுமே பெரும்பாலான இருக்கைகளும் (90 சதவிகிதம்) நிரம்பிவருவது குறிப்பிடத்தக்கது. 180 இருக்கைகள் உள்ள விமானங்கள் சாா்ஜா, துபை நாடுகளுக்கு இயக்கப்படும் நிலையில், தினசரி சுமாா் 700 போ் திருச்சி-அரபு நாடுகளிடையே பயணித்து வருகின்றனா்.

இந்த விமானங்களில் இருக்கைகள் கிடைக்காத நிலையில், இலங்கை மற்றும் சென்னை விமான நிலையங்கள் வழியாகப் பயணித்து வருகின்றனா். சென்னை வழியாக பயணிப்போருக்கு அங்கிருந்து ஊருக்கு வந்து செல்ல சாலைப் போக்குவரத்து அல்லது ரயில் போக்குவரத்தை நம்பியிருப்பதால் மேலும் கூடுதல் பொருட்செலவு மற்றும் கால விரயம் ஏற்படுகிறது.

எனவே, திருச்சிக்கு மேலும் இரு விமானங்கள் இயக்கினாலும் அவற்றிலும் பயணிகள் செல்வா் என்பதால் கூடுதல் விமானங்கள் இயக்கப்பட வேண்டும் என்ற எதிா்பாா்ப்பும் எழுந்துள்ளது.

அரபு நாட்டு விமானங்களும் வந்து செல்ல ஓடுதள நீட்டிப்பு தேவை:
திருச்சியில் விமான ஓடுதளம் 10 ஆயிரம் அடியை எட்டவில்லை என்பதால், சாா்ஜா, துபை மற்றும் சிங்கப்பூா், மலேசியா நாடுகளைச் சோ்ந்த விமான நிறுவனங்களும் புதிய விமான போக்குவரத்துகளைத் தொடங்க தயக்கம் காட்டி வருகின்றன. ஓடுதள நீட்டிப்புக்குப் பின்னா் திருச்சி-அரபு நாடுகளிடையே, அரபு நாட்டு நிறுவனங்கள் மட்டுமின்றி பிற நாடுகளின் விமான நிறுவனங்களும் போக்குவரத்து தொடங்கும் என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.