சிறப்பு மிக்க M.M.S குடும்பத்தின் மூத்த மகனாகிய மர்ஹூம் M.M.S சம்சுதீன் மரைக்காயர் அவர்களின் புதல்வர்களில் ஒருவராகிய M.M.S சேக் நசுருதீன் அவர்கள் மிகச் சில நாட்களில் உடல் நலக்குறைவில் இருந்து (11.12.2019) அன்று வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் மரணமடைந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அதிராம்பட்டினத்தில் அரசியல் உலகிலும், வணிகத்துறையிலும் கொடிக்கட்டிப் பறந்த புகழ்மிக்க M.M.S குடும்பத்தில், இரண்டாம் தலைமுறையாக வாழ்ந்துகொண்டிருக்கும் நபர்களில் தலைசிறந்த ஆளுமை மிக்கவராகத் திகழ்ந்தவர் ஹாஜி M.M.S சேக் நசுருதீன் அவர்கள்.
அரசியல் பாரம்பரியம் மிக்க வியாபாரத்தில் தமிழகமெங்கும் கோலோச்சிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும், நண்பர் M.M.S சேக் நசுருதீன் அவர்கள் மட்டும் ஏனோ ஆரம்ப காலத்தில் அரசு வேலைவாய்ப்பு ஒன்றினைத் தேர்ந்தெடுத்து 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி அப்பழுக்கற்ற எவ்வித ஊழல் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாத நேர்மையாளராகப் பணியாற்றி, பணி மூப்பு எய்தி ஓய்வு பெற்றவர். தான் பணியாற்றும் அலுவலகத்தில் தேவையான பணிகள் தொடர்பாகத் தேடி வருபவர்களுக்கு மனமுவந்து உதவி செய்து வந்த நல்லுள்ளம் படைத்தவர்.
அரசுப் பணியில் ஓய்வு பெற்று வந்தபின்னர். கடந்த 10 ஆண்டுகளாகத் தனது தந்தையாரும், சாச்சா மார்களும்செய்து வந்த ஊர் மக்களுக்கு ஆற்றவேண்டிய சமுதாயப்பணியில், தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். மனைவிக்குச் சிறந்த கணவனாகவும், பிள்ளைகளுக்குச் சிறந்த தந்தையாகவும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், ஊர் மக்களுக்கும் நல்ல பிள்ளையாக வாழ்ந்து வந்த M.M.S சேக் நசுருதீன் அவர்கள் யாரிடத்திலும் பணிவு, எல்லோரிடத்திலும் அன்பு, ஈருலக காரியங்கள் அனைத்திலும் நேர்மை, இவை மட்டுமின்றி தன்னைப் பொறுத்தவரை தனிமனித ஒழுக்கம் நிறைந்தவராக வாழ்ந்ததால் கண்ணியம் மிக்க சாச்சாமார்களுக்கு ஒப்பிட்டுப் பேசக்கூடிய தகுதியைப் பெற்றுத் திகழ்ந்தார்.
அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பில் M.M.S சேக் நசுருதீன் அவர்கள் தலைவராகவும், நான் செயலாளராகவும் பணியாற்றிய சில ஆண்டுகளில் அவரது ஆளுமையைப் பற்றி அறிந்துகொள்ள எனக்குப் பல வாய்ப்புகள் கிடைத்தன. ஒரு சபைக்கு தலைமை ஏற்று நடத்தும் தலைவருக்கு என்ன தகுதி வேண்டுமோ அத்தகுதிகளை அவர் பெற்றுத் திகழ்ந்தார். தலைவர் என்ற தகுதியில் யாரையும் அடக்கி ஆள வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், மஹல்லா உறுப்பினர்கள் ஆதரித்துப் பேசினாலும் சரி எதிர்த்துப் பேசினாலும் சரி அவர் என்னை ஒரு பார்வை பார்ப்பார். இருவரும் ஒருசிறு தலை அசைவில் உறுப்பினர்களின் பேச்சுக்கு யார் பதில் சொல்வது என்று தீர்மானித்து நானோ அல்லது அவரோ பதில் கூறுவோம். தவறுகளை ஆணவத்துடன் தட்டிக்கேட்காமல் அதை சுட்டிக்காட்டி தவறை உணர வைத்து பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் வல்லமை படைத்தவர். சில விசயங்களில் நான் சொல்வதே சரி என்று அடம்பிடிக்காமல் ~ விட்டுக்கொடுத்து வெற்றி பெற்றவர். மிக அருமையாய் மாதந்தோறும் நடந்து வந்த அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு சிலர் ஏற்படுத்தி விட்ட குளறுபடிகளால் தொடர்ந்து செயல்பட முடியாமல் போய்விட்டது. இந்த நிகழ்வு ஹாஜி M.M.S சேக் நசுருதீன் அவர்களுக்கும் எனக்கும் மிகுந்த வருத்தமாகவே இருந்து வந்தது. இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களிலாவது செயல்பாடற்று இருக்கும் அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு புத்தியிர் பெற நாமெல்லாம் உழைக்க வேண்டும்.
நமது ஊரில், பெரிய அமைப்புகளாய் செயல்பட்டு வரும் ஷம்சுல் இஸ்லாம் சங்கம், தாஜுல் இஸ்லாம் சங்கம் உள்ளிட்ட அதிரையின் அனைத்து மஹல்லா சங்கங்களும் முயற்சித்தால், இன்ஷா அல்லாஹ் இது நடக்கும்.
தன்னுடைய அரசு வேலை பணி ஓய்வுக்குப் பின்னர் எல்லா ஓய்வூதியர்களைப் போல், டி.வி பார்த்துக்கொண்டும், பேப்பர் படித்துக்கொண்டும், நண்பர்களோடு வீண் பேச்சுக்கள் பேசிக்கொண்டும், மேலும் பொருள் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வேறு ஏதும் சுய தொழில் புரிந்துகொண்டு இருந்து விடாமல், தனது எஞ்சிய காலத்தை மறுமைக்குப் பயனுள்ள வகையில் நண்பர் M.M.S சேக் நசுருதீன் அவர்கள் அமைத்துக்கொண்டார்கள்.
தனது சாச்சாமார் செய்து வந்த அரசியலைத் தவிர்த்து விட்டு சமூகப் பணிகளை மனமுவந்து ஏற்றுச்செய்து வந்தார். அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் தலைவர் பதவியும், மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் பதவியும், பெரிய கண்ணியத்திற்குரிய பதவிகள் என்றாலும் இவர் இவற்றைப் போராடிப் பெறவில்லை. அவர்தம் தகுதியறிந்து அவ்விரு பதவிகளும் அவரைத் தேடி வந்தன அப்பதவிகளை அலங்கரிக்கும் வண்ணம் அவற்றை ஏற்றுக்கொண்டு திறம்பட செயலாற்றினார்.
M.M.S சேக் நசுருதீன் அவர்கள் தலைமைப்பணி காலத்தில் உயிரூட்டப்பட்டதுதான் TIYA என்று சுருக்கமாக அழைக்கப்படும் தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்கம். இந்த TIYA, தற்போது ஊரின் சுற்றுப்புறக் சூழல் பாதுகாப்பிலும், தூய்மைப்பணியிலும், ஊர் மக்களின் சுகாதரப் பணிகளிலும், இளைஞர்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் துறைகளிலும் முன்னேற்றம் காண்பதற்காக, அருமையான செயல்பாடுகளைச் செய்து வருகிறது. இந்த சிறப்புகள் அனைத்திலும் இறை அருளால் M.M.S சேக் நசுருதீன் அவர்களுக்கு மிகப்பெரிய பங்குண்டு.
அன்புச் சகோதர நண்பரே உங்கள் பிரிவில் உங்கள் மனைவி மக்கள் ஆலமரம் போல் பரந்து விரிந்த உங்க குடும்பமும் ஆழ்ந்த துயருற்றிருக்கிறோம். வல்ல இறைவன் நாம் எல்லாரும், மறுமை நாளில் ஜன்னத்துல் ஃபிர்தோஸ் என்னும் சுவர்க்கத்தில் சந்தித்து மகிழ உங்களுக்கும் எங்களுக்கும் அருள் புரிவானாக!
யா இறைவா! M.M.S சேக் நசுருதீன் அவர்களின் பிரிவுத்துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய பொறுமையை எங்கள் அனைவருக்கும் அவரது மனைவி, மக்கள், குடும்பத்தவர் அனைவருக்கும் வழங்குவாயாக!
அன்னாரது கபுரை விசாலமாக்கி, வெளிச்சமாக்கி, கேள்விகளை லேசாக்கி, கபுரின் வேதனைகள் இல்லாமல் ஆக்குவாயாக!
நல்லடியார்கள், புதுமாப்பிளைமார்கள் போல் கபுருகளில் ~ கியாம நாள் வரை உறங்கிக்கொண்டிருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளதே அதேபோன்று கபுரின் வாழ்க்கையை எங்கள் நண்பருக்கு வழங்குவாயாக!
எங்கள் நண்பர் ஒழுக்கமுள்ள நல்ல பிள்ளைகளைப் பெற்றவர், ஆலிம்களையும், மூத்தோர்களையும் பிரியமுடன் நேசித்து கண்ணியப்படுத்தக்கூடிய பண்புள்ளவர்களுடைய துஆவெல்லாம் கிடைக்கக்கூடிய பாக்கியத்தை வழங்குவாயாக!
அவர்தலைமை ஏற்று சங்கப்பணிகள் கியாம நாள் வரை சிறப்பாக நடந்துவர அருள் புரிய்வாயாக ஆமீன்!
கனத்த மனத்துடனும்,
நீர்வழியும் கண்களுடனும்,
என்றும் அன்புடன்,
பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர்
(மாவட்டத் தலைவர், அரிமா சங்கம், அதிராம்பட்டினம்)
Masha Allah I have very much appreciated this article. May Allah blessing him peaceful.
ReplyDeleteவருத்தப்படுகிறேன், அவரை பிரிந்து வாழும்
ReplyDeleteஅன்னாரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற
என்னிடம் வார்த்தை இல்லை
யா அல்லாஹ் உயரிய ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் சொர்க்கத்தை நஸிப்பாக்குவயாக,
ReplyDeleteதுயரத்தில் வாடும் பிள்ளைகள்,குடும்த்தார்களுக்கு உன் சலாத்தையும் ரஹ்மத்தையும் வழங்குவயாக அமீன்.