அதிரை நியூஸ்: மே.31
தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தலைமையில் இன்று (31.05.2020) கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டுள்ள ஐந்தாம் கட்ட ஊரடங்கில் கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்தும், வணிக நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் எடுத்துரைத்தார். வணிக நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தல், கிருமி நாசினி தெளித்தல், கை கழுவுதல் ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
பின்னர், மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-
தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழக அரசின் உத்தரவின்படி தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி 25.03.2020 முதல் ஊரடங்கு உத்தரவானது தொடர்ந்து அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் கொரானா தொற்று நிலமையை கருத்தில் கொண்டு பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டது.
தமிழக அரசின் உத்தரவின்படி ஊரடங்கு உத்தரவானது 30.06.2020 நள்ளிரவு 12 மணிவரை நீட்டிப்பு செய்து நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சில தளர்வுகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபாடு செய்வதற்கும் மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கும் தடைவிதிக்கப்படுகிறது.
தங்கும் வசதியுடன் கூடிய ஓட்டல்கள் ரிசார்ட்டுகள் பிற விருந்தோம்பல் சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளது எனினும் மருத்துவத்துறை, காவல்துறை, அரசுஅலுவலர்கள் தனிமைப்படுத்தும் பணிகளுக்கு மட்டும் விலக்களிக்கப்படுகிறது.
வணிக வளாகங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. பள்ளிகள்,கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் செயல்பட தடை செய்யப்பட்டுள்ளது எனினும் இந்நிறுவனங்கள் இணையவழி கல்வி கற்றல் தொடரலாம்.
திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை கூடங்கள், மதுக்கூடங்கள், பொது அரங்குகள, கூட்ட அரங்குகள், சுற்றுலாதளங்கள், பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது.
அனைத்து வகையான சமுதாய அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட கட்டுப்பாடுகள் நோய் தொற்றின் தன்மைக்கேற்றவாறு தமிழக அரசின் அறிவுறுத்தலின் படியும் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும் இறுதி ஊர்வலங்கள் மற்றும் அனைத்து சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
மாநில பேருந்து போக்குவரத்தை 01.06.2020 முதல் நடைமுறைப் படுத்தும் பொருட்டு அரசின் சார்பில் எட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது அதில் தஞ்சாவூர் மாவட்டம் நான்காவது மண்டலத்தில் இடம் பெற்றுள்ளது. நான்காவது மண்டலத்தில் இடம்பெற்றுள்ள நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் உள்ள மொத்த இருக்கைகளில் 60 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பயணிகள் ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயக்க அனுமதிக்கப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட இடங்கள் தவிர மண்டலங்களுக்கு இடையிலும் மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி தடைசெய்யபட்டுள்ளது. மேலும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மண்டலத்துக்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ பாஸ் தேவையில்லை என்ற நிலையில், பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கவும் இ பாஸ் தேவை இல்லை .
தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றியே பொது போக்குவரத்திற்கான பேருந்துகள் இயக்கப்படும். அனைத்து வகையான வாகனங்களும் நான்காவது மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு இயக்க அனுமதிக்கப்படுகிறது அவைகளுக்கு இ பாஸ் தேவையில்லை.
வெளி மாநிலங்கள் சென்று வரவும் வெளிமாநிலங்களில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வரவும் மற்றும் பிறமண்டலங்கள் இடையே சென்றுவரவும் இ -பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் தொழில் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.
அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். எனினும், இயன்றவரை வீட்டிலிருந்து பணிபுரிவதைதனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்கவேண்டும். வணிகவளாகங்களை தவிர்த்து அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரியகடைகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம். ஒரேநேரத்தில் அதிகபட்சம் ஐந்து வாடிக்கையாளர்கள் மட்டுமே கடைக்குள் இருக்க வேண்டும். கடைகளில் குளிர்சாதன இயந்திரங்களை இயக்கக் கூடாது.
07.06.2020 வரை டீக்கடைகள், உணவகங்கள் மற்றும் காய்கறிகடைகள், மளிகை கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் வழங்கிட அனுமதிக்கப்படுகிறது.
08.06.2020 முதல் உணவகங்களில் சமூக இடைவெளியை பின்பற்றி அமர்ந்து உணவு அருந்திட அனுமதி அளிக்கப்படுகிறது. மொத்த இருக்கைகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது. நோய்க் கட்டுப்பாட்டுபகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எவ்விததளர்வுகளுமின்றி முழுமையாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்.
அனைத்து தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அத்தியாவசிய மற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும் மின் வணிக நிறுவனங்கள் மூலமாக வழங்கிடலாம். வுhடகை மற்றும் டாக்சி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து 3 பயணிகளுடன் இயக்க அனுமதிக்கப்படுகிறது.ஆட்டோக்களில்; ஓட்டுநர் தவிர்த்து 2 பயணிகளுடன் இயக்க அனுமதிக்கப்படுகிறது. சைக்கிள் ரிக்சாக்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144 ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும். தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின் படி எந்தவித மானதளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். அனைத்து தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் பணியாளர்களை வீட்டிலிருந்த படிபணிபுரிய ஊக்குவிப்பதோடு தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
பொதுமக்கள் இ- பாஸ் அனுமதியில்லாமல் தனியார் போக்குவரத்துக்கு அரசினால் அனுமதிக்கப்பட்டாலும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் கட்டட உரிமையாளர்கள் இந்நோய்த் தொற்றைதடுக்கும் வகையில் அவர்களது பகுதிக்குள் பிரவேசிப்பவர்கள் மீது குறிப்பாக வீட்டு வேலை செய்பவர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகள் போன்ற வெளிநபர்கள் உள்ளே பிரவேசிக்க தேவையான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் திருமதி.வேலுமணி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.