.

Pages

Thursday, May 14, 2020

கட்டுப்பாடு தளர்வு: வருவாய்த்துறை, உள்ளாட்சி துறை சூழ்நிலைக்கேற்ப முடிவுகளை மேற்கொள்ளலாம்: ஆட்சியர் தகவல்!

அதிரை நியூஸ்: மே.14
தஞ்சாவூர் மாவட்டம்,  மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்புப்பணிகள் மற்றும் குடிமராமத்து பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது :-
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வெளிமாநில பணியாளர்கள் அவர்களின் சொந்த மாவட்டத்திற்கு செல்வதற்கு விருப்பமுள்ளவர்களின் விவரங்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் விவரங்களை வாங்க வேண்டும். பீகாரைச் சேர்ந்த 1126 நபர்களும், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 406 நபர்களும், உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த 339 நபர்களும், ஜார்க்கண்டைச் சேர்ந்த 226 நபர்களும் என 30 மாநிலங்களைச் சேர்ந்த 3171 நபர்கள் அவர்களது சொந்த மாநிலத்திற்கு செல்ல விருப்பம் தெரிவித்து இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் தற்போது ஊரடங்கு உத்தரவு தளர்வு கொடுத்துள்ள காரணத்தினால், பணிபுரிய விருப்பமுள்ளவர்களின் விவரங்களைப் பெற்று, மீதமுள்ளவர்களுக்கு அவரவர் சொந்த மாநிலம் செல்வதற்கு வேண்டிய முன்னேற்பாடு பணிகளை தொடர்புடைய வருவாய்த்துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், தற்போது வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்குள் வரும் நபர்கள் மாவட்டத்தின் 8 சோதனை சாவடிகளிலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு,  அவர்கள் குறித்த விவரங்களைப் பெற்று, அவர்கள் வந்திருக்கும் அப்பகுதியை பொருத்து, கட்டுப்படுத்தப்பட்ட பகுதி அல்லது கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து வந்திருந்தால், அவர்களுக்கு பரிசோதனை செய்து, அதன் முடிவு வரும் வரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தங்க வைக்க வேண்டும். பரிசோதனை முடிவில் கொரோனா அறிகுறி தென்பட்டால், அவர்களை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், அறிகுறி இல்லை என்றால்,  அவர்கள் வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கவும் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை இணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களின் கைகளில் மஞ்சள் வில்லை அணிவித்து முத்திரையிட்டு, அவர்களின் வீடு முன்பு தனிமைப்படுத்தப்பட்ட வீடு என நோட்டீஸ் ஓட்டவேண்டும்.

தற்போது, கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என்பது கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் வீட்டினை மையமாக வைத்து, 5 கிலோமீட்டர் சுற்றளவில் கணக்கிடப்படுகிறது. தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படி, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் சிரமங்களை குறைப்பதற்காக, பாதிக்கப்பட்டவரின் தெரு மற்றும் தொடர்புடைய தெருக்களை மட்டும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக கணக்கிடவும், 28 நாட்கள் முடிவுற்று புதிய தொற்றுகள் ஏற்படாமலிருந்தால், அப்பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து விடுவிக்கவும் வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சூழ்நிலைக்கேற்ப முடிவுகளை மேற்கொள்ளலாம்.

நடப்பாண்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் 107 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. பணிகளுக்குரிய பாசனதாரர்கள் சங்கம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளையும், சங்கங்களை பதிவு செய்து, வரும் வாரங்களுக்குள் பணிகளை தொடங்கிட தேவையான நடவடிக்கைகளை பொதுப்பணித்துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். ஊரகப் பகுதிகளில் நடைபெற்றுவரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் விவசாயப் பணிகளுக்கு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, விவசாயிகள் பதிவு செய்துள்ள பணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணியாளர்களை பயன்படுத்திக்கொள்ள வேளாண் துறை அலுவலர்களும், ஊராட்சி அலுவலர்களும் கலந்தாலோசித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

வேளாண்மைத்துறை சார்பில் தற்போது நடைபெற்று வரும் வேளாண் பணிகளுக்கு தேவையான உரங்களை கையிருப்பு வைத்துக் கொள்ளவும்ää அடுத்த பருவத்திற்கு தேவையான நெல் விதைகளை கையிருப்பு வைத்துக் கொள்ளவும் அல்லது கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை வேளாண்மை துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் க்ளாஸ்டன் புஷ்பராஜ், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் திருமதி.உமா மகேஸ்வரி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர்(பொ) டாக்டர். மருததுறை, முன்னாள் முதல்வர் டாக்டர். குமுதா லிங்கராஜ், தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் திருமதி.வேலுமணி, கும்பகோணம் வருவாய்க் கோட்ட அலுவலர் வீராசாமி, வேளாண்மை துறை இணை இயக்குனர் ஜஸ்டின், சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர்.ரவீந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.