.

Pages

Friday, July 31, 2020

தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு இணையதளம் மூலம் பயிற்சி!

அதிரை நியூஸ்: ஜூலை 31
தஞ்சாவூர் மாவட்டம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) சார்பில் வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்குள்ளான பயிற்சி இணைய தள வழியாக 14 வட்டாரங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டு பயிற்சி அந்தந்த துறையின் தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது.

பயிற்சியானது ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு, நீடித்த நிலையான கரும்பு சாகுபடி, பயிர் காப்பீடு முக்கியத்துவம், இயற்கை வழி வேளாண்மை, மண் மற்றும் மண்வள அட்டை மேலாண்மை, இயற்கை வழியில் காய்கறிகள் பயிரிடல், தேனீ வளர்ப்பு, மல்பரி நாற்று வளர்ப்பு, கால்நடைகளுக்கு நுண்ணூட்ட கலவை, உள்நாட்டு மீன் வளர்ப்பு, சூரிய ஒளி மின்சக்தி பயன்பாடு வேளாண்மைத்துறை மற்றும் இதர துறைகள், தரம் வாய்ந்த விதை நெல் உற்பத்தி, ஒருங்கிணைந்த பண்ணையம் ஆகிய தலைப்புகளில் உள்மாவட்ட விவசாயிகளுக்கான பயிற்சிகள் 31.08.2020 வரை இணையதள வழியாக நடைபெறும்.

பி.கலைவாணன், மூத்த வேளாண் வல்லுநர் அவர்கள் 29.07.2020 அன்று ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். 30.07.2020 அன்று  நீடித்த நிலையான கரும்பு சாகுபடி (SSI in Sugarcane) என்ற தலைப்பில் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்திலிருந்து இணைய வழி பயிற்சி வழங்கப்பட்டது.

இதில் தஞ்சாவூர், பூதலூர், திருவையாறு, ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர் வட்டாரங்களிலிருந்து கரும்பு பயிரிடும் விவசாயிகள் காணொளி காட்சி மூலம் பயிற்சியில் கலந்து கொண்டனர். அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை, குருங்குளம் கரும்பு அலுவலர்                  முனைவர் ஜெ.இந்திரஜித் அவர்கள் கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார். அ.ஜஸ்டின், வேளாண்மை இணை இயக்குநர், தஞ்சாவூர், தி.பாலசரஸ்வதி, வேளாண்மை துணை இயக்குநர் (உபநி) மற்றும் த.கண்ணன், வேளாண்மை அலுவலர் (உபநி) ஆகியோர் கலந்து கொண்டனர். தி.பாலசரஸ்வதி, வேளாண்மை துணை இயக்குநர் (உபநி) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 

அமெரிக்கா நியூ ஜெர்சி வாழ் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜூலை 31
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் அமெரிக்கா நாட்டிலும் வசித்து வருகின்றனர். அமெரிக்கா நியூ ஜெர்சியில் வாழும் முஸ்லீம்கள் பெருநாளை இன்று வெள்ளிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

காலை 7.30 மணியளவில் அமெரிக்கா நியூ ஜெர்சி அல் வலீத் மஸ்ஜீத்தில் நடைபெற்ற பெருநாள் சிறப்புத் தொழுகையில் அதிரையர் ஒரே கலரில் உடை அணிந்து கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துகளை அன்புடன் பகிர்ந்துகொண்டனர்.
 
 

சவுதி ரியாத்தில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜூலை 31
இசுலாமியர்களின் தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாள் பண்டிகை, சவூதி, அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இன்று வெள்ளிக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, சவுதி ரியாத் நஸ்ரியாவில் உள்ள  கிங் ஃபஹாத் ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற பெருநாள் சந்திப்பு நிகழ்வில் ரியாத் வாழ் அதிரையர்கள் ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் தங்களின் பெருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.
 
 

துபையில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜூலை 31
தியாகத்திருநாளாம் ஹஜ் பெருநாள் பண்டிகையை துபையில் வாழும் இசுலாமியர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை கொண்டாடி மகிழ்ந்தனர்.

துபையில் தொழுகைக்கான நேரம் காலை 6.03 மணி என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, அங்கு வாழும் அதிரையர்கள் அவரவர் இல்லங்களில் தொழுகை நடத்தி, ஒருவருக்கொருவர் தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்.
 
 

ஜப்பானில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜூலை 31
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் ஜப்பான் நாட்டிலும் வசித்து வருகின்றனர். ஜப்பானில் வாழும் முஸ்லீம்கள் பெருநாளை இன்று வெள்ளிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஜப்பான் அஷிகஹா யமஸ்டசோவில் உள்ள நூர் மஸ்ஜீத்தில் நடைபெற்ற பெருநாள் சிறப்புத் தொழுகையில் அதிரையர்கள் ஒன்றாகக் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்.

இங்குள்ள, நூர் மஸ்ஜித்தில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆண்களுக்கு காலை 5.30 மணி, 7.15 மணி, 8 மணி ஆகிய வேளைகளிலும், பெண்களுக்கு காலை 9.15 மணிக்கும் பெருநாள் சிறப்புத் தொழுகை தனித்தனியாக நடத்தப்பட்டது.

 
 
 

தென் கொரியாவில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜூலை 31
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் தென் கொரியா நாட்டிலும் வசித்து வருகின்றனர். இங்கு வாழும் முஸ்லீம்கள் பெருநாளை இன்று வெள்ளிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தென் கொரியா கீம்ஹே நகரில் நடைபெற்ற பெருநாள் சிறப்புத் தொழுகையில் அங்கு வசிக்கும் 10 க்கும் மேற்பட்ட அதிரையர்கள் பங்கேற்றனர். பின்னர், ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டு, செல்பி எடுத்துக்கொண்டனர்.
 
 

Thursday, July 30, 2020

'EIA 2020' சட்ட வரைவை வாபஸ் பெறக்கோரி அதிராம்பட்டினத்தில் இணைய வழிப்போராட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 30
மத்திய அரசு கொண்டுவரும்  'EIA 2020' சட்ட வரைவுக்கு எதிராகவும், அவற்றை திரும்ப பெறக் கோரியும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டம், அதிராம்பட்டினம் கிளை சார்பில், இணைய வழிப் போராட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத்தலைவர் அதிரை கே. ராஜிக் முகமது தலைமையில், அதிராம்பட்டினம் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டு, 'EIA-2020' சட்ட வரைவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகையை கையில் ஏந்தியவாறு முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்து, தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.
 
 
 
 
 
 
 

ஜல்ஜீவன் திட்ட செயல்பாடு குறித்து ஆட்சியர் ஆய்வு (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜூலை 30
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம், வண்ணாரபேட்டை ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்ட செயல்பாடு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் இன்று (30.07.2020) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜல்ஜீவன் எனப்படும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். மத்திய அரசால் அனைத்து மாநிலங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் நடப்பாண்டில் 159  கிராம ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அடுத்த நான்கு வருடங்களுக்குள் தஞ்சாவூர் மாவட்ட ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் குடிநீர் இணைப்பு வழங்கப்படவுள்ளது.

தரமான குடிநீர், தேவையான அளவு குடிநீர், அனைத்து நேரங்களிலும் குடிநீர் வழங்குவதே ஜல்ஜீவன் திட்டத்தின் நோக்கமாகும். கிராமத்திலுள்ள நீராதாரங்களை கண்டறிந்து அவற்றை சரிசெய்து நீர் வளத்தை பெருக்குவதன் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கிட முடியும். பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஒருங்கிணைத்து ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 6 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் உள்ளன. 589 ஊராட்சிகளில்  2260 குக்கிராமங்கள் உள்ளன. மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 159 ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வரும்  2024 ஆண்டுக்குள் மீதமுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலுள்ள அனைத்து வீடுகளிலும் குடிநீர் இணைப்பு வழங்கப்படவுள்ளது.

அதற்கு தேவையான ஆழ்குழாய் போர் மூலம் தண்ணீர் எடுப்பதற்கு,  நிலத்தடி நீரை பெருக்கவும், குளம், ஏரி, மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைத்து சேமிக்க வேண்டும். மழையே இல்லாவிட்டாலும், தண்ணீர் கிடைக்கும் வகையில் இந்த திட்டத்தின் மூலம் அமைக்கப்படும். இந்த திட்டத்தை கிராம சபா கூட்டம் மூலம், தண்ணீரை சேமிக்கும் வகையில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிக்கு கொண்டு சென்று, அதிலிருந்து வீடுகளுக்கு கொண்டு செல்வது, எப்படி பயன்படுத்துவது பற்றி முடிவு செய்து கொள்ள வேண்டும். ஊராட்சியிலுள்ளவர்கள் நிலத்தடி நீர் மட்டும் பெருக்குவதற்கு உறுதி செய்ய வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் 100 சதவீதம் அனைத்து வீடுகளுக்கு தண்ணீர் வழங்கப்படும்.

தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம், வண்ணாரப்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள நீர்நிலைகளை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் நீர்நிலைகளுக்குக்கான வரத்து வாய்க்கால்களில் நடந்தே சென்று தலைப்பு பகுதிவரை பார்வையிட்டு, வரத்து வாய்க்கால் முறையாக தூர்வாரப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, வண்ணாரப்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட தெருக்களில் தண்ணீர் முறையாக வருகிறதா என நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, ஒரு குடும்பத்திற்கு தேவையான நீரின் அளவு, தற்போது பயன்படுத்தப்படும் தண்ணீர் அளவு ஆகியவை குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம் ரெட்டிபாளையம் ஊராட்சி அங்கன்வாடி மைய கட்டிடத்தில் நடைபெற்ற காய்ச்சல் கண்டறியும் முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராமசாமி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர். ரவீந்திரன், தஞ்சாவூர் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
 
 
 

மரண அறிவிப்பு ~ ஹாஜிமா ரஹ்மத் அம்மாள் (வயது 79)

அதிரை நியூஸ்: ஜூலை 30
அதிராம்பட்டினம், நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு மஹ்தூம் நெய்னா அவர்களின் மகளும், மர்ஹூம் மு.செ.மு முகமது சேக்காதி அவர்களின் மனைவியும், முகமது இப்ராஹீம், மர்ஹூம் முகமது தம்பி ஆகியோரின் சகோதரியும், மு.செ.மு சபீர் அகமது அவர்களின் தாயாரும், மர்ஹூம் சேக் மதீனா, மு.செ.மு ஜெஹபர் சாதிக் ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா ரஹ்மத் அம்மாள் (வயது 79) அவர்கள் இன்று புதுமனைத்தெரு ஹனீப் பள்ளிவாசல் அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (31-07-2020) காலை 8.30 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

அதிரையில் தமுமுக, மமக தஞ்சை தெற்கு மாவட்ட புதிய அலுவலகம் திறப்பு (வீடியோ, படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 30
தமுமுக, மமக தஞ்சை தெற்கு மாவட்ட புதிய அலுவலகம் திறப்பு மற்றும் கொடியேற்றும் நிகழ்வு அதிராம்பட்டினத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, தமுமுக அமைப்பின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எம். நஸ்ருத்தீன் ஸாலிகு தலைமை வகித்தார்.

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச்செயலாளர் வழக்குரைஞர் தஞ்சை ஐ.எம் பாதுஷா கலந்துகொண்டு, தமுமுக, மமக தஞ்சை தெற்கு மாவட்ட புதிய அலுவலகத்தை திறந்து வைத்து பேசியது;
'கரோனா ஊரடங்கு காலத்தில், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழக அமைப்பை சேர்ந்த களப்பணியாளர்கள் அனைத்து சமுதாயத்தினருக்காக தமிழகம் முழுவதும் பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர். குறிப்பாக, கரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களை அவரவர்களின் மத நெறிமுறைகள் படி அடக்கம் செய்யும் பணியை தமிழகம் முழுவதும் எவ்வித தயக்கமின்றி செய்து வருகின்றனர். இந்தப்பணி என்பது சாதாரணமானப் பணி அல்ல. உயிரைப் பணையம் வைத்து அர்பணிப்போடு செய்துவரும் பணி' என்றார்.

இதையடுத்து, கடைத்தெரு தமுமுக, மமக அலுவலகம், தக்வா பள்ளிவாசல் முக்கம் ஆகிய 2 இடங்களில் தமுமுக, மமக கொடி ஏற்றி வைத்து, கொள்கை முழக்கமிட்டனர்.

இந்நிகழ்வில், தமுமுக மாநில இளைஞர் அணி செயலாளர் மதுக்கூர் ஃபவாஸ், தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் மதுக்கூர் முகமது சேக் ராவூத்தர், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் அ.சாதிக் பாட்சா, தமுமுக அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எச்.செய்யது புஹாரி, செயலாளர் நியாஸ் முகமது, துணைத்தலைவர் எம்.நெய்னா முகமது, துணைச்செயலாளர்கள் அகமது அஸ்லம், அஸ்ரப் அலி, பொருளார் முகமது யூசுப், மமக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது, துணைச்செயலாளர் அஸ்லம், பீர் முகமது, அதிரை பேரூர் தமுமுக மருத்துவ அணி செயலாளர் சகாபுதீன் மற்றும் தமுமுக, மமக மாவட்ட, அதிராம்பட்டினம் பேரூர், கிளை நிர்வாகிகள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைபிடித்து கலந்துகொண்டனர்.