.

Pages

Sunday, July 19, 2020

தஞ்சை மாவட்டம் முழுவதும் அடுத்து ஒரு வாரத்திற்கு காய்ச்சல் கண்டறியும் முகாம்: ஆட்சியர் தகவல்!

அதிரை நியூஸ்: ஜூலை 19
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வருவாய்க் கோட்ட அலுவலகத்தில் கும்பகோணம் நகராட்சி பகுதியில் கரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தலைமையில் இன்று (19.07.2020) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட சுமார் 20 தெருக்களில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் தொடர்புடைய அலுவலர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது :-
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 1131 நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் இதுவரை 508 நபர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் வல்லம் கொரோனா சிகிச்சை மையத்தில் 607 நபர்கள் நல்ல நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மூலம் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் கும்பகோணம் பகுதியில் அதிக நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாராசுரம் காய்கறி மார்க்கெட்டுக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகமானதால், கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கும்பகோணம் நகராட்சி பகுதியில் மட்டும் 259 நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட 20 தெருக்களில் தலா மூன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்த 20 தெருக்களும் நாளை முதல் கட்டுப்படுத்தப்பட்ட  பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படவுள்ளது. 20 தெருக்களிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு, வெப்ப அளவு கண்டறியும் கருவி மற்றும் பிராணவாயு அளவு கண்டறியும் கருவி ஆகியவற்றின் மூலம் அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்படவுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் சுமார் 450 வெப்ப அளவு கண்டறியும் கருவிகள் மற்றும் பிராண வாயு அளவு கண்டறியும் கருவிகள் வழங்கப்பட்டு, காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் அனைத்து இடங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து வீடுகளிலும் காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களின் கைகளில் அடையாள வில்லைகளும், வீட்டின் முன்புறம் தனிமைப்படுத்தப்பட்டதற்கான வில்லைகளும் ஒட்டப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் அடுத்த ஒரு வாரத்திற்கு காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் முழுவீச்சில் நடைபெற உள்ளது.

கும்பகோணம் பகுதி வணிகர்கள் மாலை 4 மணிக்குள் கடைகளை மூட முடிவெடுத்திருப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டுக்கள் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. அனைத்து கடை உரிமையாளர்களும் வணிகர் சங்கத்தின் முடிவை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கும்பகோணம் பகுதியில் கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை உயரும்பட்சத்தில், வல்லம் கொரோனா சிகிச்சை மையம் போல கும்பகோணத்திலும் கொரோனா சிகிச்சை மையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தேவையான அளவு 108 அவசர ஊர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் நகரத்தில் ஆறு இடங்களில் காய்கறி மார்க்கெட்டுகளும்ää இரண்டு இடங்களில் மீன் மார்க்கெட்களும் தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மார்க்கெட்டுக்கும் கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்புக் குழுக்கள் மூலம் சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி மற்றும் கைகழுவும் அமைப்பு ஏற்படுத்துதல் ஆகியவை தீவிரமாக கண்காணிக்கப்படவுள்ளது.

கும்பகோணம் பகுதியில் கடந்த வாரம் கொரோனா நோய்த்தொற்று அதிக எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ளதால், வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து முழுவீச்சில் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு பொதுமக்கள் மிகுந்த கவனத்துடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும். நமது பழக்கவழக்க முறைகளை கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு ஏற்றார்போல் மாற்றிக்கொள்ள வேண்டும். தற்போது ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆற்று கரையோரங்களில் வழிபடுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ராமு, சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் ரவீந்திரன், கும்பகோணம் வருவாய்க் கோட்ட அலுவலர் விஜயன், கும்பகோணம் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், கும்பகோணம் நகராட்சி ஆணையர் லெட்சுமி, கும்பகோணம் நகர் நல அலுவலர் பிரேமா மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர், மாவட்ட ஆட்சித் தலைவர் கும்பகோணம் சுமங்கலி மஹாலில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெறுவதையும், கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் அன்னை பொறியியல் கல்லூரியில் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்கள் அமைப்பது குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.