அதிரை நியூஸ்: செப்.30
அதிராம்பட்டினம், நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை எஸ்.மாலதி தலைமை வகித்தார். முகாமில், ஆசிரியர்கள் ஏ.கிருஷ்ணவேனி, எஸ். உமா ராணி, கே. விஜயலட்சுமி, எஸ். டேவிட் ஆரோக்கிய ராஜ், கே. கலாதேவி, பி.அமுதா, ஏ.கனிமொழி மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
முகாமில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் 40 மாணவர்கள் பள்ளியில் புதியதாகச் சேர்க்கப்பட்டனர். இதனால், பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக இணைந்த மாணவர்களுக்கு புத்தகங்கள், எழுதுகோல், புத்தகப்பை உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
2020 - 2021 ம் கல்வியாண்டில் பள்ளியின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு, நடுத்தெரு, புதுத்தெரு, முத்தம்மாள் தெரு, பிலால் நகர், காலியார் தெரு, வெற்றிலைக்காரத் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பெற்றோர்களைச் சந்தித்து மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டியதன் அவசியம், பள்ளியில் வழங்கப்படும் செயல் வழிக்கற்றல் பயிற்சி, உடற்கல்வி, விளையாட்டு வகுப்புகள், கணினிப் பயிற்சி, காணொளி வழிக்கல்வி, நீதிபோதனை வகுப்புகள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசால் வழங்கப்படும் சலுகைகள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது.
இதுகுறித்து பள்ளித்தலைமை ஆசிரியை எஸ்.மாலதி கூறியது;
அதிராம்பட்டினம், நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு முடிய சேர்க்கை கடந்த (17-08-2020) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கட்டணம் கிடையாது. புத்தகம், பை, நோட், வண்ண பென்சில்கள் மற்றும் கணித வடிவியல் பெட்டி, சீருடை, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.
மேலும், செயல் வழிக்கற்றல் பயிற்சி, உடற்கல்வி, விளையாட்டு வகுப்புகள், கணினிப் பயிற்சி, காணொளி வழிக்கல்வி, நீதிபோதனை வகுப்புகள் ஆகியவை நடத்தப்படுவது குறித்து பெற்றோர்களை வீடு வீடாக சென்று சந்தித்து அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்து பயன்பெற வேண்டுமென பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு, கிராமக்கல்விக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.