மழைக்காலம் வருகிறது- அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வைத்து இருக்க வேண்டுமென்ற அடிப்படை அறிவு நாட்டை நிர்வாகிப்போரிடம் இல்லாததன் விளைவே இப்படிப்பட்ட செய்திகளுக்குக் காரணம்.
எந்த ஒரு விபத்தும் நடந்து பல உயிர்கள் பலியான பிறகுதான் - பல அழிவுகள் ஏற்பட்ட பிறகுதான் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க அரசு விழித்துக் கொள்கிறது என்பது இது முதல்முறையல்ல. சென்னை மவுலிவாக்கம் அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்த விபத்தில் அறுபத்தி ஒரு உயிர்கள் பலியான பிறகுதான் இப்படிப்பட்ட கட்டிடங்கள் கட்டப்படுவதை ஒழுங்கு படுத்த விதிகள் விதிக்கபடுகின்றன. இந்தக் கட்டிடத்தின் விபத்துக்குக் கூட அந்தக் கட்டிடம் ஒரு நீர் நிலையில் கட்டபட்டதுதானே காரணம்? பற்றி எறியும் பஸ்ஸில் இருபத்தி இரண்டு உயிர்கள் பலியான பிறகுதான் பஸ்களில் தீயணைப்புக் கருவிகள் கட்டாயம் என்று விதி வகுக்கப்படுகிறது. இளம்பெண் ஒருத்தி பேருந்தில் வைத்து நாடு இரவில் மனித மிருங்கங்களால் கற்பழிக்கப்பட்டப் பிறகுதான் அத்தகைய குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதித்து சட்டம் நிறைவேற்றப்படுகிறது. அதேபோல் பெய்த மழை நீர் எல்லாம் கடலில் கலந்து கரையோர கெழுத்தி மீன்கள் கொழுத்த பிறகுதான் மழை நீரை தேக்குவது பற்றியும் ஆறுகள் தூர்வாருவதைப் பற்றியும் அரசு ஆலோசிக்கிறது.
புவி வெப்பமடைந்து வருவதால், உலகின் பல பகுதிகளிலும் பருவ நிலை மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. அதற்கு தமிழகமும் விதிவிலக்கல்ல. வரும் காலத்தில் தமிழகத்தில் பருவ மழைக்காலம் குறையும். ஆனால், மழையின் அடர்த்தி 10% முதல் 15% வரை அதிகரிக்கும். அதாவது 42 நாட்களாக இருக்கும் பருவ மழைக்காலம் 32 நாட்களாகக் குறைவது மட்டுமின்றி, நாள் முழுதும் பெய்யக்கூடிய மழை அளவு, 2 மணி நேரத்தில் பெய்யும். இதனை சமாளிக்க நமது நீர்நிலைகள் தயாராக இல்லையெனில், வெள்ளம் ஏற்படுவதுடன், மழை நீரை சேமிக்க முடியாமல் போகும்.
வெப்பம் அதிகரித்து வருவதால், பயிர்களுக்கு அதிக நீர் தேவைப்படும். கிணறுகளை வெட்டி, கிணற்றுப் பாசனம் செய்துவிடலாம் எனப் பலர் நினைக்கின்றனர். ஆனால், கால்வாய்களில் இருந்து கண்மாய்களுக்குச் செல்லும் நீரோட்டம் தொடர்ந்தால்தான் நிலத்தடி நீர் அதிகரிக்கும். கிணறுகளில் நீர் கிடைக்கும். மொத்தத்தில் கண்மாய்கள், குளங்கள் ,ஏரிகள் சீரமைப்பு இல்லையெனில், பல இழப்புகளை சந்திக்க நேரிடும். பால்குடமும் பன்னீர் குடமும் எடுப்பதில் செலுத்தும் பாதி கவனத்தை அரசு இதில் செலுத்தினால் கூட நீரை சேமிக்க முடியும்.
நாகை மாவட்டத்தில் வாய்க்கால்களை தூர்வாராததே பயிர்கள் நீரில் மூழ்கக் காரணம் என்று கூறுகிறார் திமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் விவசாய தொழிலாளர் அணியின் மாவட்ட அமைப்பாளருமான திரு ஜெகவீரபாண்டியன். இவர் மேலும் கூறும்போது , கடந்த காலங்களில் வறட்சி – தற்கொலை- கால்நடைகள் மர்மமாக இறந்தது- கரும்புக் கொள்முதலுக்கு பணம் வழங்கப் படாதது - இவற்றுடன் இருபது டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாக கலந்துவிட்டதாலும் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை பட்டியல் இடுகிறார் ( தி ஹிந்து தமிழ் 25/10/2014).
வரலாற்று ரீதியாக பார்ப்போமானால், நமது முன்னோர்கள் மிகவும் புத்திசாலிகள். 100 ஆண்டுகளாக தமிழகக் கண்மாய்கள் சங்கிலித்தொடர் அமைப்பு கொண்டிருக்கின்றன. சங்கிலித்தொடரின் முதல் கண்மாய் நீர்ப்பிடிப்புப் பகுதியில் அமைந்திருக்கும். முதல் கண்மாய் நிரம்பியதும் உபரி நீர், கால்வாய் வழியாக அடுத்த கண்மாயில் பாயும். அந்தந்தப் பகுதிகளில் விழும் மழைநீர் அப்பகுதியில் உள்ள கண்மாய்களில் சேரும். இப்படியாக அனைத்துக் கண்மாய்களிலும் வரிசையாக நீர் நிரம்பி, கடைமடைப் பகுதிகளில் இருக்கும் விவசாயிகளும் பலன் பெற்றனர். தற்போது கண்மாய்களை இணைக்கும் கால்வாய்களும் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் சங்கிலித்தொடரும் அறுந்து போயுள்ளது.
உதாரணத்துக்கு அதிராம்பட்டினம் போன்ற ஊர்களின் பழமையான நீர்ப்பாசன முறைகளை நமது நினைவுக்குக் கொண்டுவந்தாலே எவ்வளவு அறிவுபூர்வமாக நமது முன்னோர்கள் சங்கிலித்தொடராக தண்ணீர் பரிவர்த்தனை செய்து இருக்கிறார்கள் என்பது புரியும். முதலாவதாக சி . எம். பி . வாய்க்காலில் வரும் தடைபடாத தண்ணீர் காட்டுக் குளத்தை நிரப்பி பிறகு மரைக்கா குளத்தை நிரப்பும் அதன் பின் செக்கடிக் குளத்தை நிரப்பும் . இன்னொரு புறம் கரிசல்மணி ஏரிக்கு வரும் நீர் அதை நிரப்பிவிட்டு ஆலடிக் குளத்தையும் மன்னப்பன் குளத்தையும் பிள்ளைமார் குளத்தையும் தொடர்ந்து ஒட்டியே அருகிலிருக்கும் குளத்தையும் நிரப்பும். ஆலடிக் குளம் நிரம்பி வழிந்ததும் அந்த நீர் சேர்மன் வாடி வழியாக ஓடும் வாய்க்காலில் ஓடி அங்கிருக்கும் குளத்தை நிரப்பி வழிந்து மெயின் ரோட்டை ஒட்டி ஒரு வாய்க்காலாக ஓடி செல்லியம்மன் கோயில் குளத்தை நிரப்பும். அந்தக் குளம் நிரம்பி வழிந்ததும் இன்றைய பேருந்து நிலையம் பஞ்சாயத்து போர்டு அலுவலகத்தின் வழியாக ஓடி தரகர் தெரு கினியாங்குளத்தை நிரப்பி விட்டு ஆறுமுகங்கிட்டங்கித் தெருவை ஒட்டியுள்ள அப்பன்குண்டு, சிவன் கோயில் குளம் அதைத்தொடர்ந்து பெரியதைக்கால் தெருவின் அருகில் இருக்கும் நாயக்கர் குளத்தையும் நிரப்பிவிட்டு சுண்ணாம்புக்காரத்தெருவழியாக கடலில் கலக்கும். இன்னொரு முனையில் இராஜாமடம் ஏரி நிரம்பி வழியும் நீர், மகிழங்கோட்டை வழியாக செடியன் குளத்துக்கும் ரயில்வே கேட் வாய்க்கால் வழியாக இ சி ஆர் சாலை ஏரிப்புரகரை சாலை திருப்பத்தில் ஓடி எம் எஸ் எம் நகர் உட்புறம் இருக்கும் காதர்சா மரைக்காயர் குளத்தை நிரப்பி மீண்டும் கடற்கரை சாலை வழியாக ஓடி ஏரிப்புரகரை திருப்பத்தில் இருக்கும் பாலத்தின் வழியாக வாழைக்குளம், வெட்டிக் குளம் போன்ற குளங்களுக்கும் நீரை அளித்து நிரப்பிவிட்டு இரயில்வே பாலம் வழியாக கடலில் கலக்கும். இப்போது இந்த அமைப்புகள் சரிவர இயங்குகின்றனவா என்பதை ஊரின் பொறுப்பில் உள்ள இளையவர்கள் சுற்றிப் பார்க்க வேண்டும். இயன்றால் இவற்றை சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மீண்டும் இந்த முறை ஏற்பட இடையூறாக இருக்கும் தடைகளை நீக்க ஆக்கப்பணிகளை முடுக்கிவிடவேண்டும்.
முன்பு கண்மாய்களையும் ஏரிகளையும் குளங்களையும் அந்தந்தப் பகுதி விவசாயிகள் முஹல்லாவாசிகள் தெரு ஜமாத்கள் மழைக்காலத்திற்கு முன்பு தூர்வாரும் பழக்கம் இருந்தது. இதை ‘வெட்டு எடுப்பது’ என்று கூறுவார்கள். இதற்கான செலவுகளை அந்தந்தத் தருவாரே ஏற்பார்கள். அது ஒரு அழகிய நிலாக்காலம். மழையையும் ஏரித்தண்ணீரையும் எதிர்பார்த்து கணவனுக்காக காத்திருக்கும் மனைவிபோல் நீர்நிலைகள் காத்திருக்கும் . இன்று இந்த வேலைகளை நாம் செய்கிறோமா? உள்ளூராட்டிசி அமைப்புகள் செய்கின்றனவா ?
அதேபோல் ஏரிகளில் படிந்து இருக்கும் சென்ற வருடத்து வண்டல்மண்ணை அள்ளிச் செல்வதற்கு விவசாயிகள் அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள். இந்த வண்டல்மண் தென்னந்தோப்புகளில் மரங்களின் கீழ் கொட்டப்படும். அதற்கு வண்டல்மண் அள்ளுவது என்று பெயர். மழைக்காலத்திற்கு முன்பு கண்மாயில் சேர்ந்துள்ள வண்டல் மண்ணை மாட்டுவண்டிகளில் வழக்கமாக வருடந்தோறும் விவசாயிகள் அள்ளுவார்கள். இதனால், அரசுக்கு எந்தச் செலவுமின்றி நீர்நிலைகள் தூர்வாரப்பட்டன ; விவசாயிகளுக்கும் வண்டல் மண் கிடைத்தது.
ஆனால் யானை கொள்ளை போவது தெரியாமல் எறும்புக்கு தடை விதிப்பதுபோல் , “ அரசு வண்டல் மண் அள்ளுவதற்கு பல கட்டுப்பாடுகள் விதித்ததால், கண்மாய்கள் கேட்பாரின்றிக் கிடக்கின்றன" என்கிறார், ஓய்வு பெற்ற நீரியல் மற்றும் வேளாண்மை பொறியாளரான இரா. வேங்கிடசாமி. 1959 – Tamilnadu Minor Mineral Construction Act - என்ற சட்டத்தின் வாயிலாக வண்டல் மண் அள்ளும் செயல்பாட்டில் பல கட்டுப்பாடுகள் கொண்டு வந்திருப்பதை கடுமையாக எதிர்க்கிறார் இவர்.
வண்டல் மண் அள்ளச்செல்லும் ஒரு விவசாயி கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார், கனிமவளத் துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுத்தான் வண்டல் மண் அள்ளப்பட வேண்டும் என அச்சட்டத்தின் ஷரத்துக்கள் கூறுகின்றன. சாதாரண ஒரு விவசாயி, வண்டல் மண் அள்ளுவதற்காக இவ்வளவு அலுவலக்ன்கள் ஏறி இறங்கி போண்டாவும் டீயும் குடித்துக் கொண்டு அரசு அதிகாரிகளிடம் அனுமதி வாங்க முடியுமா?. வண்டல் மண்ணை அள்ளும் ஒரு விவசாயி, அந்த மண்ணைக் கொண்டு தனது நிலத்தை வளப்படுத்த பயன்படுத்துவானே தவிர, அமெரிக்காவுக்கா ஏற்றுமதி செய்யபோகிறார்? அதேபோல் சட்டி பானைகள் செய்பவர்களும் தேவையான களிமண்ணை எடுப்பதிலிருந்து தடை செய்யப்பட்டு இருக்கிறார்கள். வண்டல் மண் மற்றும் களிமண் அள்ளுவதில் கோடையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தால், தற்போது வரை கண்மாய்கள் தூர்வாரப்பட்டிருக்கும், அரசுக்கும் செலவு குறைந்திருக்கும்" என்கிறார், திரு. இரா. வேங்கிடசாமி. இவரது இந்தக் கருத்துக்கு நமது கண்முன்னே இருக்கும் உதாரணம் சேண்டாக்கொட்டை செல்லிக் குறிச்சி ஏரியாகும். இத்தகைய தடையால் இந்த ஏரி ஒரு அகன்ற பாத்திரத்தின் நிலையில் இருந்து ஒரு சோற்றுத்தட்டை அளவுக்கு ஆகிவிட்டது. நீரை சேகரிக்க இயலாததால் புதுக் கோட்டை உள்ளூர், நடுவிக்காடு, தொக்காலிகாடுப் பகுதியில் தென்னை மரங்கள் கோடையில் நிலத்தடி நீரை உறிஞ்ச இயலாமல் கருகுகின்றன.
இது மட்டுமின்றி, 1984 ஆம் ஆண்டு வனத்துறையால் கொண்டுவரப்பட்ட சமூகக் காடுகள் திட்டமும் வண்டல் மண் அள்ள முடியாமல் போனதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. விறகுத் தேவைக்காக மழையில்லாத காலங்களில் கண்மாய்களில் மலை வேம்பு போன்ற மரங்கள் வளர்க்கப்பட்டன. இவை பயன் தர 7, 8 ஆண்டுகளாகும். வளர்க்கப்படும் மரங்களுக்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதற்காக வண்டல் மண் அள்ள, விவசாயிகள் கண்மாயினுள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், மண் நிரம்பிய நீர்நிலைகளின் நீரைத் தேக்கிவைக்கும் அளவும் கொள்ளளவும் குறைந்தது. இப்படி கொள்ளளவு குறைந்ததால், நீர்நிலைகளில் 5 மாதங்களுக்குக்கூட நீர் தேங்குவதில்லை. இதனால், மீன் வளர்க்கும் தொழிலும் குறைந்துவிட்டது. நீர்நிலைகளில் மீன் வளர 3, 4 மாதங்களாவது நீர் தேங்கியிருக்க வேண்டும். நீர்நிலைகள் நீர் இன்றி கண்ணீர் வடிக்கும் நிலையில் இருப்பதால், விவசாயிகள் பலர் விவசாயத்தை விட்டு வேறு தொழில்களுக்கு மாறி வருகின்றனர்.
காவிரி, கொள்ளிடத்தில் மட்டுமே 100 டி.எம்.சி. தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. அதனைத் தேக்கிவைத்தாலே நமது பிரச்சினைகளில் பாதி குறைந்து விடும்" என்கிறார், தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்கத்தலைவர் சாமி. நடராஜன். மேலும் தஞ்சை முழுவதும் 4,000 ஏரிகள் உள்ளன. குறிப்பாக பூதலூர் ஒன்றியத்தில் மட்டும் 100 ஏரிகள் உள்ளன. அவை எதுவுமே சரியாக தூர்வாரப்படாமல் இருக்கின்றன. மேலும், மழைநீர் வடிந்து ஓடும் வாய்க்கால்கள் இல்லை என்பதால், மழை நீரைத் தேக்கும் வாய்ப்பே இல்லை. மேலும் ஏரிகளை ஆக்கிரமித்து பல தனியார் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கது திருச்சி-தஞ்சை நெடுஞ்சாலையில் உள்ள, ‘காடா ஏரி" என்கிறார்.
1934ம் ஆண்டுவரை ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்துமே ஏரிப்பாசனம் மட்டுமே செய்யப்பட்டன. குறிப்பாக ஒரத்தநாடு தாலுகாவில் மட்டுமே ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு ஏரி அமைக்கப்பட்டு அங்கு பாசனம் நடந்தது. 1978 வரையிலுமே ஏரிகளைக்கொண்டே பாசனம் நடந்து இருக்கிறது. ஆண்டுதோறும் ஏரி, குளங்கள் தூர்வார பெரும் தொகை ஒதுக்கப்படுகிறது, அது என்ன ஆகிறது என்றே தெரிவது இல்லை. இந்த ஆண்டும் 18 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஒரத்தநாடு கண்ணந்தங்குடியில் சிங்கனேரியைத் தூர்வார 70 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது அந்த ஏரியும் இன்றுவரை தூர்வாரப்படவில்லை. கக்கரை ஏரி, வெள்ளையங்கிரி ஏரி, கொக்கு வடிகால் ஏரி உள்ளிட்ட பல ஏரிகள் இப்போது தூர்ந்து போய்விட்டன. பல ஏரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அழிந்து போய்விட்டன" என்கிறார், தமிழக விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் கக்கரை ஆர். சுகுமாறன்.
இவைகளுக்கெல்லாம் தீர்வுகள் யாவை ?
1. நீர்நிலைகள் கோடைகளில் கட்டாயமாக தூர்வாரப்பட வேண்டும். நாம் குறிப்பிட்டுள்ள நீர்நிலைகளின் சங்கிலித் தொடர் பகிர்வு முறைகள் புதுப்பிக்கப்பட வேண்டும். வண்டல் மண் மற்றும் களிமண்ணை அள்ளிச் செல்ல விவசாயிகளை அனுமதிக்க வேண்டும்.
2. நீர்நிலைகளைப் போலவே கால்வாய்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இடையூறுகள் இல்லாமல் பாய்ந்து செல்லும் வகையில் கால்வாய்களின் தடைகள் திட்டமிட்டு அகற்றப்பட வேண்டும்.
3. உள்ளூராட்சி அமைப்புகளிடம் இருக்கும் அதிகாரங்களுடன் நீர்நிலைகளுக்கென தூர்வார செப்பனிட ஒரு அதிகார அமைப்பைத் தொடங்க வேண்டும். கண்மாய்கள் போன்ற நீர்நிலைகளைப் பராமரிக்கும் பொறுப்பை அந்த அமைப்பிடம் கொடுக்க வேண்டும்.
4. நகர்ப்பகுதிகளில் தற்போது பாதி ஆக்கிரமிப்பில் இருக்கக் கூடிய கண்மாய்களை மீட்டெடுத்து, அவற்றை மீண்டும் மழைநீர் வடிகாலாக மாற்ற வேண்டும். நீர் நிலைகளை ஆக்கிரமிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5. தமிழக அரசால் 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் ‘ஏரிகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல்’ சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன்படி அரசுக்குச் சொந்தமான ஏரி ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இதற்காக ஒவ்வொரு ஏரியிலும் ஆக்கிரமிப்புகள் துல்லியமாகக் கணக்கிடப்பட வேண்டும். ஆக்கிரமிப்பு செய்துள்ள பல ஏரிகளில் எல்லைகள் காணாமல் போயுள்ளன. இதனால், ஏரி நிலம் எவ்வளவு என்பதை பொதுப்பணித்துறையினரால் கணக்கிட முடிவதில்லை.
இப்போது இன்னும் மழை பொழிய இருக்கிறது. மேட்டூர் அணை இந்த வருடம் இரண்டாம் முறையாக, 100 அடிக்கு மேல் நிரம்பி இருக்கிறது என்கிற மகிழ்வான செய்திகளும் நமக்காக வந்திருக்கின்றன. மழையை வேண்டி மடி ஏந்தும் நாம் அந்த மழை தரும் தண்ணீரை பராமரிக்காமல் அலட்சியப்படுத்துவது இறைவனால் கூட பொறுத்துக் கொள்ள முடியாத மன்னிக்கமுடியாத குற்றம்.


பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
நடந்த ஒவ்வொரு விஷயத்தையும், நடக்கவேண்டிய ஒவ்வொரு விஷயத்தையும் பிட்டு பிட்டு வைத்து விட்ட இந்த கட்டுரையை பாராட்டுகின்றேன். புற்றுநோய் முற்றிய நிலையில் ஒரு நல்ல மருந்து கிடைத்தாற்போல் கிடைத்த இந்தக் கட்டுரை தந்த வழிகளை வைத்து முற்றிய புற்றுநோய்களை அழித்துவிடலாம்.
யார் தயார்?
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com
ஆய்வுக் கட்டுரையில் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் நிறைய உள்ளன. அவசியம் அனைவரும் அறியவேண்டிய ஆக்கம்.
ReplyDeleteஆய்வில் கூறிய கருத்துகள் சிந்திக்க வைக்கின்றன. இவற்றை செயல்படுத்தினால் நன்றாக இருக்கும்.
ReplyDeleteமழை நீர் சேகரிப்புத் திட்டம், நல்லத் திட்டம்தான். ஆனாலும் அதனைக்கொண்டு வந்துப் பஞ்சாயாத்துப் போர்டுகளுக்கு வருமானத்தைச் சேகரிக்கச் செய்தத் திட்டத்தை விடக் கட்டுரையில் குறிப்பிட்டதைப்போல் ஏரி, குளம், கண்மாய்கள் தூர் வாரப்பட்டாலே நிலத்தடி நீர் மட்டம் உயரும், பாதுகாக்கப்படும். விளம்பர அரசியலில் மக்கள் நலன்கள் புறக்கணிக்கப்படுவது ஆச்சரியம் அல்ல. மனநீதி, மனுநீதி உள்ள அதிகார வர்க்கம் அவசியம் படிக்கவேநடியக் கட்டுரை.
ReplyDelete