.

Pages

Tuesday, January 13, 2015

கத்தி இன்றி ! இரத்தமின்றி !! அதிரையில் 50 ஆண்டு காலம் சேவை செய்த பெண்மணி !!!

அதிரையின் சாமானிய மக்களை பற்றி அவ்வப்போது பார்த்து வருகிறோம், அந்த வரிசையில் இன்று ஒரு பெண்மணியை பற்றி பகிர்ந்து கொள்ளப் போகிறோம் இன்ஷா அல்லாஹ்.

இன்றைய தலைமுறையிடம் சில பல ஆண்டுகளுக்கு முன்புவரை பிரசவங்கள் வீட்டில் தான் நடந்ததாக சொல்லிப்பாருங்கள் அவர்கள் உங்களை ஓரு வேற்றுகிரகவாசியை பார்ப்பது போல் பார்ப்பார்கள். இன்றைய தலைமுறையினர் கனவிலும் நம்ப முடியாத அளவுக்கு அனுபவ கை வைத்தியம் அற்றுப்போய் விட்டது.

இன்றைய உலகம் கல்வியில், விஞ்ஞான மருத்துவ நிபுணத்துவத்தில், பொருளாதாரத்தில் உயர்ந்துள்ளதாக பீற்றிக் கொள்ளக்கூடியதொரு காலகட்டம் ஆனால் நமது முன்னோர்களின் அனுபவத்தின் முன் ஒப்பிட்டால் முழுமையாக தோற்றுப்போன பொருளாதார சித்தாந்த உலகில் வாழ்கிறோம் என உறுதியாக சொல்ல முடியும், எப்படி?

உதாரணமாக சொல்வதாக இருந்தால், அதிரைவாசிகளான நாம் நமது வசதிவாய்ப்புகளுக்கு ஏற்ப உள்ளூர், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் என பிரசவ மருத்துவர்களை தேடி ஒடுகிறோம். இன்னும் சற்று வசதி கூடுதலாக உள்ளவர்கள் திருச்சி, சென்னை என செல்வதும் உண்டு ஆனால் எங்கு சென்றாலும் நமது முன்னோர்களான அனுபவ கை வைத்தியர்களிடம் பெற்ற பலனை பெறுகின்றோமா என்றால் இல்லை, இல்லை, இல்லவே இல்லை என அடித்து சொல்லலாம்.

ஏழ்மை நிலையில், சரியான சாப்பாடு, ஊட்டச்சத்து என எதுவுமற்ற நிலையில் வீட்டிலிருந்தவாறே குறைந்தது 5 முதல் 10 குழந்தைகள் வரை மிகச்சாதாரணமாக பெற்றுவிட்டு 40 நாள் ஓய்வுக்குப்பின் மீண்டும் உடல் உழைப்புக்கு திரும்பியவர்கள் நமது தாய்மார்கள் ஆனால் இன்று எல்லாவிதத்திலும் முன்னேறியுள்ளதாக மார்தட்டி கொள்ளும் உலகின் தற்கால பெண்மக்களால் இன்று எத்தனை குழந்தைகளை இயல்பாக பெற்றுக் கொள்ள முடிகிறது அல்லது எத்தனை மருத்துவர்கள் தாய்மார்களை கீறிக்கிழிக்காமல் பிரசவம் பார்க்கிறார்கள் என சொல்லுங்கள்?

விஞ்ஞானமும் மருத்துவமும் தாறுமாறாக வளர்ந்த இக்காலத்தில் தர்க்கரீதியாக, மருத்துவரீதியாக 10 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளுங்கள் 'நாங்கள் இருக்கிறோம்' (இதெல்லாம் வெறும் விளம்பர டயலாக் மட்டும் தான்) என நெஞ்சில் கை வைத்து சொல்ல வேண்டிய மருத்துவர்கள் இரண்டுக்கு மேல் பெற்றுக் கொள்ளாதீர் என ஏன் பல்வேறு பூச்சாண்டி காரணங்களை கூறி பயமுறுத்துகிறார்கள்?

நமது தந்தையர்களும் ஒரு காலத்தில் பர்மா, இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா என வெளிநாட்டு சபுறாளிகளாக இருக்கும் நிலையில் தான் நமது தாய்மார்கள் நம்மை சுகப்பிரசவம் மூலம் பெற்றெடுத்தனர் ஆனால் இன்று கர்ப்பிணிகளிடம் கணவர் எங்கே உள்ளார் என கேட்டு சிகிச்சை அளிப்பதேன்? வழுக்கட்டாயமாக அறுவை சிகிச்சை மூலம் பிள்ளைகளை பிறக்க வைத்து விட்டு இரண்டுக்கு மேல் பெற்றால் தாயின் உயிருக்கு ஆபத்து என மிரட்டுவது தான் இவர்கள் பெற்ற கல்வியின் தரமா?

ஆக, மனிதம் குழிதோண்டி புதைக்கப்பட்டு பணம் கோலோச்சும் இக்காலத்தில், வெறும் கைகளால் சுமார் 50 வருடம் அனுபவ மருத்துவ சேவையாற்றிய 'ஆமினா அம்மாள்' அவர்களை இன்றைய தலைமுறை கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும் நன்நோக்கில் நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்.

இன்று சுமார் 80 வயது மதிக்கத்தக்க, வெற்றிலைக்காரத் தெருவை சேர்ந்த 'ஆமினா அம்மாள்' அவர்கள் தனது திருமணத்திற்கு பின் மேலத்தெருவில் நிரந்தரமாக கணவருடைய வீட்டில் குடியேறி இன்று வரை அங்கேயே வாழ்ந்து வருகிறார்கள் (கவனிக்க: கணவர் பொண்டாட்டி வீட்டுக்குப் போகவில்லை).

அவரது மாமியார் இபுறாஹிம்மா மற்றும் மாமியாரின் தாயார் ரெங்கத்தம்மா (இப்பெயரின் உச்சரிப்பு எமக்கு சரியாக வரவில்லை) அவர்களின் மூலம் தங்களின் மருத்துவ சமூக பாரம்பரிய சேவையான பிரசவம் பார்த்தலை கற்றுக் கொண்ட ஆமினம்மா அவர்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் மேலத்தெரு சுற்றுவட்டார பெண்கள் அனைவருக்கும் பிரசவம் பார்த்துள்ளனர். இவர்களின் கையால் பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் சுகமாய் பிறந்துள்ளனவாம் (நாங்கள் உட்பட), ஒரே நாளில் 3, 4 தாய்மார்களுக்கு கூட பிரசவம் பார்த்துள்ளார்களாம்.

கடந்த 10 ஆண்டுகளாக ஓய்வெடுத்துவரும் நிலையில், ஒரு காலத்தில் பெண்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டால் கூப்பிடு ஆமினம்மாவை என்று அவர்களின் வாழ்க்கை பரபரப்பான ஒன்றாக இருந்துள்ளது மேலும் கர்ப்பிணிகளின் வயிற்றை தடவிப் பார்த்தே குழந்தை வயிற்றினுள் இருக்கும் கோணம், குழந்தையின் தலைக்கு மேல் நஞ்சுக்கொடி இருத்தல், கொடி சுற்றுதல், தண்ணீர் குடம் உடைதல், பிரசவ வலி ஏற்பட்ட பெண்களுக்கு குழந்தை பிறக்கும் தோராயமான நேரம் என அனைத்தையும் சொல்லிவிடுவார்களாம்.

வழக்கொழிந்து போய்விட்ட செந்தூரம், காசுக்கட்டி, ராஸ்னா, ஜன்னிக்கல் உரைத்தல் போன்ற கை மருத்துவ முறைகளை பற்றி கேள்விப்படுவோருக்கு இன்று மிக அதிசயமாகவே தெரியும். மேலும் வயிற்றுவலி, தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம், கைக்குழந்தைகளுக்கு உறம் விழுதல் போன்றவைகளுக்கும் கை மருத்துவம் பார்ப்பவர்களாகவும் திகழ்ந்துள்ளார்கள்.

ஆமினம்மா அவர்களுக்கு 3 ஆண் மற்றும் 1 பெண் என நால்வர் வாரிசுகள் என்றாலும் யாரும் அவர்களுடைய சேவையை கற்றுக் கொள்ளவும் இல்லை, தொடரவுமில்லை. இந்த சேவை அவர்களுடன் முற்றுப்பெருவது நமது சமூகத்தின் நஷ்டமே.

ஆமினம்மா அவர்களுடைய மருத்துவ சேவையினால் பிரசவிக்கப்பட்ட நாம் ஒவ்வொருவரும் அந்த தாயின் உடல் நலத்தின் மீதும், அவர்களின் மருத்துவ சிகிச்சைகளுக்காகவும் இறைவனிடம் துஆ செய்யவும், நம்மால் இயன்றவகையில் நாமே மனமுவந்து உதவவும் கடமைபட்டுள்ளோம்.

குறிப்பு:
இந்த கட்டூரையை இன்றைய மருத்துவர்களுடன் ஒப்பீட்டு எழுத தூண்டிய ஒரு சில காரணிகள் வருமாறு:
1. ஒருமுறை ஒரு இளம் கர்ப்பிணிப் பெண் சிகிச்சைக்காக சென்ற இடத்தில் மார்க்கம் தெரியாத அந்த முஸ்லீம் பெண் மருத்துவர் 'ஏண்டி உனக்கு இந்த வயசுல தேவையா...... என சொற்களால் சுட, ஹலாலான திருமணத்தின் மூலம் கர்ப்பமான அந்த இளம்பெண் கூனிக்குறுகி நின்றார்.

2. ஒருமுறை இன்னொரு பெண் பிரசவத்திற்காக சென்ற போது இது ஆபரேசன் கேஸ் என பயமுறுத்த, பெற்றோர்கள் உடனடியாக அந்தப் பெண்ணை வேறு மருத்துவமனையில் சேர்க்க அங்கே சுகப்பிரசவமானது.

3. இன்னொரு முறை, இன்னொரு கர்ப்பிணியை அங்கிருந்த டாக்டர் இது சிக்கலான கேஸ் கட்டாயம் கத்தி வைக்க வேண்டும் என மிரட்டிக் கொண்டிருந்த நிலையில் ஏதோவொரு அவசர வேலையாக அந்த மருத்துவர் வெளியே சென்று விட்டு திரும்புவதற்குள் அந்தப் பெண்ணுக்கு சுகப்பிரசவமாகி இருந்தது.

என்பன போன்ற பல நூறு காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம் என்றாலும் ஆமினம்மா அவர்களின் சேவையை பற்றி சொல்ல வந்த இடத்தில் எளிய நடைமுறை இஸ்லாமிய சிந்தனைகளை படிக்கத் தவறி, படிக்கும் காலத்தில் இஸங்களின் சிந்தனைகளால் பாதிக்கப்பட்டுள்ள மனிதாபிமானமற்ற பணப்பேய்களை பற்றி தற்போதைக்கு அதிகம் பேச வேண்டாம் என நினைக்கின்றோம்.

வேண்டுதல்: 
அதிரை சீனியர் சகோதரர்களே! நாம் இங்கே குறிப்பிடும் அனுபவ மருத்துவர் 'ஆமினம்மா' அவர்களை போல் உங்களுடைய வாழ்வில் பலரை சந்தித்திருப்பீர்கள், அதிரையின் ஒவ்வொரு தெருவிலும் பல ஆமினம்மாக்கள் வாழ்ந்திருப்பார்கள், அவர்களை பற்றி நினைவுகூர்ந்து தயவுசெய்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

எண்ணமும் எழுத்தும் 
ஆமினம்மா அவர்களின் மகளார் உதவியுடன்
S. அப்துல் காதர் & அதிரை அமீன்

6 comments:

  1. இப்படியாக நாம் நம் ஊர் பழமை திறமைகளை, அறிவு வழிகாட்டலை நவீனத்தின் பெயரால் இழந்து வருகிறோம். இது மிகவும் வேதனைக்குரியதே.

    எச்செயலும் அதன் பலனைப் பொறுத்தும், அதன் முடிவில் அதன் வெளிப்பாடு நிலையை வைத்து கணிக்கும் போக்கும் நம்மில் மறைந்து வருவதும் வருத்தத்திற்குரியதே.

    மாற்றங்களை விரும்பும் நம்மில் இவ்வாறு மாற்றங்கள் ஏற்படுவதும் வியப்பில்லையே !

    உண்மைகள் ஒளிந்துக்கொண்டுள்ளன. மாயைகள் தோகை விரித்து ஆடுகின்றன. மனிதன் புலன்களில் பட்டவைகளில் சிந்திக்கும் கோணம் அமைக்கின்றான். உண்மைகளைத் தேடுவதில் ஒதுங்கிக்கொள்கிறான். அதனால் முன்னோர்கள் வழி பழமை என ஏளனம் செய்கிறான். என்ன அறியாத்தனம் !

    ReplyDelete
  2. ஐயா,‎
    இதுபோல் எங்கள் ஊரிலேயும் நிறைய பெண்கள் உண்டு, அவர்களுடைய ‎கை பக்குவத்துக்கு இணை வேறு ஒன்றும் இல்லை, இந்த நவீன ‎காலத்தில் இப்படி ஒரு அம்மா இருப்பது கடவுளுக்கு நன்றி சொல்லணும். ‎இந்த அம்மா நீடூழி வாழட்டும்.‎

    ReplyDelete
  3. எத்தனையோ ஜீவராசிகளை நாம் பார்க்கத்தான் செய்கின்றோம் அவைகள் அனைத்தும் இயற்கையான பிரசவமாகதான் நடைபெறுகின்றன
    மனித இனம் மருத்துவத்தால் ஏமாற்றப்பட்டுள்ளோம் இதற்க்கு முக்கிய காரணம் பழகீணமும் பணமும்தான்,
    கீழத்தெரு சகோதர் நெய்னாம்பிள்ளை அவர்களுடைய தாயார் காலம்சென்ற மரியங்கனியம்மையாரை இந்த சேவையில் அவரகளுக்கு அடுத்தப்படியாக தான் மற்றவர்களை ஒப்பிடமுடியும்.

    ReplyDelete
  4. நல்லதொரு ஆக்கம் அவர்கள் நலமுடன் வாழ துஅஆச்செய்வோம்

    ReplyDelete
  5. வீட்டில் பிரசவம் பார்ப்பதை அரசு தடை செய்தது இதற்கும் சில காரணங்கள் உண்டு ஆனால் மருத்துவர்கள் இல்லாத டெஸ்ட் எடுத்து பணபரிக்க கற்றுக்கொண்டார்கள்; எல்லாமே ஆபரேஷன் தான், குழந்தை பிறந்தால் " சுக பிரசவமா !!!!!" என ஆச்சரியமா என கேட்டு சந்தோசபடுகிறோம். மருத்துவர்கள் தகுந்த உபகரங்களை பயன்படுத்துகிறார்கள் என்றால் இல்லை ஒரிசா -புபநேஸ்வரில் ஒரு டாக்டர் சைக்கிளக்கு பயன்படுத்தும் பம்பை ஆபரேஷன்க்கு பயன்படுத்திகிறார் இது எந்தளவுக்கு ஆபத்து என்று நமக்கு தெரியும் ஆனால் அவர்....

    இப்போ மேற்க்கத்திய நாடுகளில் பிரசவத்திற்கு டாக்டர் வீட்டுக்கு வருவார்கள் ஆனால் பெண்கள் ஹாஸ்பிடல் வரவேண்டாம் என்ற முறை அறிமுகபடுத்தி உள்ளார்கள். சிக்கலான கேஸ் மட்டும் ஹாஸ்பிடலில் அனுமதியாம், இதை தான் " FREE HOME DELIVERY " என்று சொல்லுகிறார்களோ.

    அன்று நாம் பயன்படுத்திய மருத்துவ முறை இன்று மேற்கத்திய நாடுகள் கடைபிடிக்கிறார்கள், அவன் பயன்படுத்தும் முறை கையாண்டு வேதனை அனுபவிக்கிறோம்,

    பாட்டி ஆமினா அம்மா அவர்களுக்கு நீண்ட ஆயுளை அல்லாஹ் கொடுப்பானாக.

    ReplyDelete
  6. ஆமினாம்மாவை எனக்கு நன்கு பரிட்ச்சயம் உண்டு. ஆனால் பார்த்து நீண்ட நாள் ஆகிறது. மருத்துவ வசதி இல்லாத அந்தக் காலத்தில் இவர்களின் பணியை யாரும் மறந்திட முடியாது. இவர்களைப் போன்று இன்னும் பலர் அப்போது இருந்தார்கள் இறைவன் உதவிகொண்டு இன்னும் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ துவா செய்வோம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.