.

Pages

Sunday, January 18, 2015

அதிரையில் நூற்றாண்டு காணவுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி !

அதிரையில் பல்லாயிரம் பேர் ஆரம்பக்கல்வி கல்வியறிவு பெறவும், பல்லாயிரம் மாணவர்களின் உயர்நிலை, மேற்படிப்புக்கான முதல் படியுமாகவும் விளங்கிவரும், ஆங்கிலேயர்கள் காலத்தில் தன்னார்வ தங்க மனிதர்களின் முயற்சியால் 'திண்ணைப்பள்ளியாக' துவங்கி 'ஆரம்பப்பள்ளியாக' தவழ்ந்து பின் 'ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியாக' எழுந்து, இன்று 2003 ஆம் ஆண்டு முதல் 'ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியாக' நடந்து கொண்டுள்ள ஆனால் என்றென்றும் சுற்றுவட்டாரவாசிகளால் 'சூனா வீட்டு பள்ளிக்கூடம்' என வரலாற்று பின்னனியுடன் அழைக்கப்படுகின்ற பள்ளிக்கூடம் சத்தமின்றி இன்னும் 5 ஆண்டுகளில் நுற்றாண்டை தொடவுள்ளது அதிரையர்களாகிய நம் அனைவருக்கும் பெருமை தானே!

1921 ஆம் ஆண்டுகளில் ஹாஜி க.செ. செய்யது முகம்மது அண்ணாவியார் மற்றும் க.செ நூர் முகம்மது அண்ணாவியார் அவர்களால் திண்ணைப்பள்ளிக்கூடமாக துவங்கிய இப்பள்ளிக்கூடம் பின்பு சூனா வீட்டு திண்ணைக்கு இடம் பெயர்ந்து பின் 17.10.1962 ஆம் தேதியில் 'அதிரையின் கல்வித்தந்தை' SMS. ஷேக் ஜலாலுதீன் அப்பா அவர்கள் அதிரை நகர பஞ்சாயத்து தலைவராக இருந்த காலத்தில் இன்றுள்ள புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அன்றைய தமிழக காங்கிரஸ் ஆட்சியில் தொழில்துறை அமைச்சராகவும் பின்னாளில் இந்திய ஜனாதிபதியுமான, அதிரையின் பக்கத்து கிராமம் ராஜமடத்தை சேர்ந்த திரு. R. வெங்கட்ராமன் அவர்களால் 20.09.1964 ஆம் நாள் ஆரம்பப்பள்ளிக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அந்த 50 வருட கட்டிடத்தின் இன்றைய பரிதாப நிலை :
தற்பொழுது இப்பள்ளிக்கூடத்தில் 2 ஆசிரியர்களும் (ஒருவர் பட்டதாரி மற்றொருவர் இடைநிலை) 5 ஆசிரியைகளும் (இருவர் பட்டதாரி மூவர் இடைநிலை) என எழுவர் பயிற்றுவிக்கின்றனர். மு. தமிழ்ச்செல்வி அவர்கள் தலைமையாசிரியையாக கடமையாற்றுகின்றார். அவர்களில் கலைச்செல்வி என்ற ஆசிரியை 1997 முதல் சுமார் 17 ஆண்டுகளாக இங்கேயே பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இன்றுள்ள பல்வேறு வகுப்பறை தொகுப்பு கட்டிடங்கள்:
வரலாற்றுப் பெருமைக்குரிய இந்த பள்ளிக்கூடத்தில் வருத்தப்படும் அளவுக்கு மாணவர் சேர்க்கையில் மிகப்பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது குறித்து அரசும், சம்பந்தப்பட்ட கல்வி அலுவலர்களும், அதிரை பேரூர் நிர்வாகமும், முஹல்லாவாசிகளும், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும், பகுதி கவுன்சிலர்களும், முன்னாள் மாணவர்களும் கட்டாயம் இப்பள்ளியின் மறுமலர்ச்சிக்கு மாற்றுத்தீர்வு காண முன்வர வேண்டும்.

உதாரணத்திற்கு, 1997 ஆம் ஆண்டு சுமார் 634 மாணவர்களுடன் 5 ஆம் வகுப்பு வரை இயங்கிவந்த இப்பள்ளிக்கூடம் தரவுயர்வு பெற்று 2003 ஆம் ஆண்டு முதல் 8 வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது ஆனால் மாணவர் எண்ணிக்கை எத்தனை தெரியுமா? மொத்தம் 180 மட்டுமே. ஏன் இந்த படுபாதாள வீழ்ச்சி?

பெற்றோர்களின் ஆங்கில மோகமா அல்லது LKG மாணவர்களை கூட CBSE பள்ளியில் சேர்க்க விரும்பும் இன்றைய பெற்றோர்களின் அறியாமையா? அரசுப்பள்ளி என்ற இளக்காரமா அல்லது போதிப்பதில் மக்கள் காணும் குறையா? பாலைவன உழைப்பின் மதிப்பு தெரியவில்லையா? என கேள்விகள் நீள்கின்றன.

பள்ளியின் மாண்பும், மாணவர் சேர்க்கையும், கல்வித்திறனும் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டால் தான் எதிர்வரும் இப்பள்ளியின் நூற்றாண்டு (விழா) ஓர் அர்த்தமுள்ள ஒன்றாக அமையும் என நம்புகிறோம்.

வேண்டுதல்:
இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் இன்று உலகெங்கும் வியாபித்துள்ளீர்கள். நீங்கள் அனைவரும் உங்கள் ஆசிரியப் பெருமக்களுடனும், இன்னும் ஹயாத்தாக உள்ள ஒரு சில திண்ணைப்பள்ளிக்கூட மாணவர்களை கௌரவப்படுத்தும் வகையிலும், வெளிநாடுவாழ் அதிரையர்கள் அதிகமானோர் பெருநாள் விடுமுறையில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த வருட நோன்பு பெருநாளை தொடர்ந்து வரும் 24.07.2015 வெள்ளிக்கிழமை மாலையில் இப்பள்ளியின் மைதானத்தில் ஒரு ஒன்றுகூடலை நடத்தினால் என்ன? இந்த ஒன்றுகூடல் வழியாக இந்தப்பள்ளி மீண்டும் தலைநிமிர்ந்து நிற்க உதவலாமே!

மேலத்தெரு TIYA மற்றும் கீழத்தெரு இளைஞர் சங்கங்களின் தலைமையின் கீழ், அதிரையின் அனைத்து இணையதளங்கள் ஆதரவுடன் 'சூனா வீட்டு பள்ளிக்கூட' முன்னாள் மாணவர்களின் இவ்வொன்றுகூடல் நிகழ்ச்சி இணைந்து நடத்தப்பெற வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.

வரலாற்று நினைவூட்டல் ஒன்று: 
நேற்று (17.01.2015) மறைந்த தமிழக முதல்வர் MGR அவர்களின் 98வது பிறந்த நாள் அவரது கட்சியினரால் கொண்டாடப்பட்டதை அறிவீர்கள். மேற்காணும் புகைப்படத்தில் பள்ளிக்கட்டிடத்தின் பின்புறம் அமைந்துள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டி முதல்வராக இருந்தபொழுது MGR அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் இன்றைய பிலால் நகர் பொட்டல் காடாக இருந்தபொழுது தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒருமுறையும், இன்னொருமுறை ஹாஜா நகர் திடலுக்குமாக அதிரைக்கு 3 முறை வருகை தந்துள்ளார் என்ற விபரங்கள் ஒரு தகவலுக்காக பதியப்படுகின்றது.

களத்தொகுப்பு & எழுத்து வடிவம்:
ஜமால் (எ) J. ஆசிக் அஹமது
& அதிரை அமீன்

7 comments:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    இந்தப் பள்ளிக் கூடத்தைப்பற்றி நமதூர் வலை தளங்களில் பலதடவைகள் ‎வித்தியாசமான எழுத்து நடைகளால் பதியப்பட்டுள்ளது. அக்கறை ‎உள்ளவர்கள் அதிரையில் இருந்தும் கண்டும் காணாததுபோல் ‎இருக்கின்றனர்.‎

    இந்த விஷயத்தில் ஒற்றுமையுடன் முயற்சி செய்து செயல்பட்டால் ‎நிச்சயம் ஒரு விடிவு காலம் பிறக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை.‎

    குறிப்பு:-‎
    கட்டுரையின் ஆதங்கமான வரிகள் மனதை கடுமையாக நெருடுகின்றன.‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
    Replies
    1. இந்த விஷயத்தை நாம் இப்படியே விட்டு விடக்கூடாது. தன்னிறைவு ‎திட்டத்தின் கீழ் மூன்றில் ஒரு பங்கை நாம் செலுத்தினால் மீதம் உள்ள ‎பங்கை அரசிடமிருந்து பெற்று மற்ற வேலைகளை ஆரம்பிப்பதற்கு ‎வசதியாக இருக்கும்.‎

      இதில் TIYA முயற்சி செய்தால், கூடவே நானுன் உடன் இருந்து ‎செயல்படுவேன். இது உறுதி.‎

      Delete
  2. அரசு அதிகாரிகளே தன் பிள்ளையே கான்வென்டில் தான் சேர்க்கிறாங்க அவங்களுக்கு தெரியும் அரசு பள்ளி எப்படி இருக்குதுன்னு. சுத்தமான அடிப்படை வசதி அரசு பள்ளியில் பார்ப்பது அரிது, இவ்வளவு ஏன் அங்கே பணிபுரியும் ஆசிரியர்களின் பிள்ளைக்கூட பிரைவட் ஸ்கூலில் தான் படிக்கும்,

    பாலைவனத்தில் கஷ்டப்பட்டாலும் தன் பிள்ளை நல்லா இருக்கணும் என்று நினைத்து தான் கல்விக்கு நல்ல இடத்தை தேர்வுசெய்கிரார்கள். வருமைக்காரனமாக தன் பிள்ளை படிக்க நாடும் இடம் தான் அரசு பள்ளி. தகுதியான ஆசிரியர்களை நியமிப்பதில்லை அவர்களுக்கு தேவை லஞ்சம். சில பள்ளிகளில் ஆசிரியர்களே வராமல் இருப்பதை பார்க்கலாம், என்ன ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டது?

    ஈரோட்டில், கலெக்டர் ( அனந்த குமார் ) தன் மகளை பஞ்சாயத்து ஸ்கூலில் சேர்த்தார் இதே போல் உயர் பதவியில் உள்ளவர்கள் முன் வரவேண்டும்.
    பட்ஜெட்டில் இலவசத்துக்கு கோடி கோடி ஒதுக்கப் படுகிறது கல்வி மேம்பாட்டுக்கு சொற்பமே! அரசு தான் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் .

    முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து நல்லமுடிவு எடுங்கள் அதுவே மற்ற அரசுபள்ளிகளுக்கு முன்னுதரமானதாக இருக்கட்டும்.

    ஹாஜா நகரில் எங்கே திடல் உண்டு? MGR ,தரகர் தெரு திடலுக்கு தான் வந்தார்.

    ReplyDelete
  3. நானும் 1 முதல் 5 வரை இங்கு தான் படித்தேன்

    நன்றி அதிரை நியுஸ்க்கு

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும்
    1921 ஆம் ஆண்டுகளில் ஹாஜி க.செ. செய்யது முகம்மது அண்ணாவியார் மற்றும் க.செ நூர் முகம்மது அண்ணாவியார் அவர்களால் திண்ணைப்பள்ளிக்கூடமாக துவங்கியது என திருத்தி உண்மைச் செய்தியை எழுதியதற்கு நன்றி

    ReplyDelete
  5. நல்லதொரு நினைவூட்டல். அது ஒரு பொற்காலம்.நானும் எனது ஆரம்பக் கல்வியை இந்தப் பள்ளிக் கூடத்தில் தான் தொடங்கினேன்

    இப்பதிவைப் படித்ததும் எனது ஆரம்பப் பள்ளித் தோழர்கள் நினைவில் வந்து நின்றனர்.. பதிவிற்கும் நினைவூட்டியமைக்கும் மிக்க நன்றி. சகோ. ஜமால் (எ) J. ஆசிக் அஹமது & அதிரை அமீன் அவர்களே.!

    ReplyDelete
  6. Good remember s article and I will try to meet to old students together in the school on this year EID

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.