.

Pages

Thursday, April 30, 2015

அதிரை சேர்மனின் துண்டு பிரசுர நன்றி அறிவிப்பு !

அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடரவும், அதற்காக கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டி இன்று பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து நாளை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

இந்நிலையில் கோரிக்கை வெற்றி பெற காரணமாக இருந்த பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர், அதிரை அரசு மருத்துவமனை மருத்துவர், அதிரை காவல்துறையினர், அதிரை அனைத்து மஹல்லா நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், சமூக ஆர்வலர்கள் - ஊர் பிரமுகர்கள் - அதிரை பேரூராட்சியின் வார்டு கவுன்சிலர்கள் - உள்ளூர் இணையதளங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் தனது நன்றியை துண்டு பிரசுரங்கள் மூலம் தெரியப்படுத்தி வருகிறார். இந்த துண்டு பிரசுரங்கள் நாளை அதிரையில் நடைபெற இருக்கும் அனைத்து ஜும்மா பள்ளிகளிலும் விநியோகிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அதிரை பேரூராட்சி தலைவர் எஸ் எச் அஸ்லம் வெளியிட்டுள்ள துண்டு பிரசுரத்தில் கூறியிருப்பதாவது:

ஜி.கே வாசனுடன் அதிரை மைதீன் சந்திப்பு!

அதிரையை சேர்ந்தவர் அதிரை மைதீன். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தீவிர விசுவாசியான இவர் நமது சட்ட மன்ற உறுப்பினர் திரு. என் ஆர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ அவர்களின் நன்மதிப்பை பெற்றவர். இன்று அமீரகத்திலிருந்து தாயகம் திரும்பியவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட  ஜி.கே வாசன் அவர்களை அவர்களின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துக்கொண்டார். மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ஆர் மூப்பனார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

முன்னதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினராக கட்சி தலைமையகத்தால் நியமனம் செய்யப்பட்ட பட்டுக்கோட்டை ஏ.கே குமார் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துகொண்டார்.

24 மணி நேர சேவை அதிரை அரசு மருத்துவமனையில் சாத்தியமா !?

அதிரை பகுதிகளில் இரவு நேரத்தில் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவ முதலுதவி என்பது பெரும் குறையாகவே இருந்து வருகிறது. உள்ளூர் மருத்துவர்களும் இரவு நேரங்களில் கண் விழித்து நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்வது என்பது பெரும் அரிதாகவே இருக்கின்றது. அவசர மருத்துவத்திற்காக பெரும் சிரமத்துடன் தொலை தூரத்தில் உள்ள குறிப்பாக திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை போன்ற ஊர்களுக்கு செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிடுகின்றன. அதோடு மட்டுமல்லாமல் இந்த ஊரில் அமைந்துள்ள ஈசிஆர் சாலையில் அடிக்கடி வாகன விபத்துகளும் நடந்து வருகின்றன. விபத்தில் பாதிக்கப்பட்டோரை நீண்ட தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் போதே உயிர் இழப்புகளும் ஏற்பட்டு விடுகின்றது. ஆகவே இதுபோன்ற சிரமங்களை கருத்தில் கொண்டு அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடரவும், அதற்காக கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கவும், தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்க வலியுறுத்தி அதிரை பேரூராட்சி தலைவர், அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு, வர்த்தக சங்கம், பல்வேறு சமுதாய அமைப்புகள், உள்ளூர் அரசியல் கட்சிகள், மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், உள்ளூர் செய்தி இணையதளம் ஆகியோர் அவ்வப்போது சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள், சட்டமன்ற உறுப்பினர், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டவர்களிடம் நேரடியாக சந்தித்து வலியுறுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடரவும், அதற்காக கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கவும், தேவையான முதலுதவி உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில் அதிரையின் அனைத்து மஹல்லா ஜமாத் நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், ஊர் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், வார்டு கவுன்சிலர்கள், பெண்கள் உள்ளிட்டோர் ஆதரவோடும் மாபெரும் சாலை மறியல் போராட்டம் கடந்த [ 30-04-2015 ] அன்று நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர சேவைக்காக கூடுதல் மருத்துவரை நியமிப்பது என்றும், அதுவரையில் தற்காலிகமாக சுழற்சி முறையில் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களை கூடுதலாக பொறுப்பு வகிக்க அறிவுறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட சுமூக உடன்பாட்டை தொடர்ந்து, இன்று நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் விலக்கிகொள்வதாக அறிவிக்கப்பட்டது.

24 மணி நேர சேவை சாத்தியமா !?
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் அதிரை அரசு மருத்துவமனையில் தற்போது 3 மருத்துவர்கள் மட்டுமே பணி புரிகின்றனர். பேச்சுவார்த்தை முடிவின் படி, எதிர்வரும் மாத இறுதியில் கூடுதல் 1 மருத்துவர் நியமித்தாலும், 24 மணி நேர சேவை என்பது சாத்தியப்படாத ஒன்றாக இருக்கும் என்றும், 24 மணி நேர சேவை தங்கு தடையின்றி செயல்பட வேண்டுமெனில், குறைந்த பட்சம் 6 முதல் 7 மருத்துவர்கள் வரை மருத்துவமனையில் பணிபுரிந்தால் மட்டுமே சாத்தியம் என்று கூறுகின்றனர். அதுவும் உள்ளூரில் தங்கி இருக்கும் மருத்துவர்களாக இருக்க வேண்டும் எனவும், ஏற்கனவே மருத்துவமனையில் 4 மருத்துவர்கள் பணிபுரிந்தும் 24 மணி நேர சேவையை தொடர்ந்து செயல்படுத்த முடியவில்லை எனவும் கூறுகின்றனர்.

'பொதுவாக அதிரை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பெரும்பாலான மருத்துவர்கள் உள்ளூரில் தங்கி பணிபுரிவதில்லை என்றும், மாறாக இவர்கள் அருகில் உள்ள நகர் பகுதிகளில் தங்கி இருந்து அங்கிருந்து வாகனங்கள் மூலம் தினமும் மருத்துவமனைக்கு வந்து செல்வதால், இரவு நேரங்களில் ஒரு நோயாளிக்கு அல்லது விபத்தில் பலத்த காயமடைந்தவருக்கு அவசர சிகிச்சை வழங்க வேண்டுமெனில், மருத்துவர் மருத்துவமனைக்கு வரும் வரை காத்திருக்க வேண்டும். இதனால் காலதாமதம் ஏற்பட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் சிகிச்சை அளிக்க இயலாமல் போய்விடும்' என கூறுகின்றனர்.

மேலும் அதிரை அரசு மருத்துவமனையில் போதிய அவசர மருத்துவ உபகரணங்கள், அவசர உயிர் காக்கும் மருந்துகள் இல்லை என்ற குறையையும் முன்வைக்கின்றனர். விபத்தில் மரணமடைந்த ஒருவரின் உடல் பிரத பரிசோதனை செய்து உரியவரிடம் உடலை ஒப்படைப்பதில் சில நேரங்களில் காலதாமதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வரும் ஏழை நோயாளிகளை மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களில் குறிப்பிட்ட சிலர், கண்டு கொள்வதில்லை என்றும், அரசு மருத்துவர்கள் சொந்தமாக நடத்தி வரும் கிளினிக்கில் மருத்துவ ஆலோசனைக்கு செல்லும் நோயாளிகளுக்கு வாரி வழங்கும் முக்கியத்துவத்தை, அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் வழங்குவது இல்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.

அதே வேளையில் அதிரையை சுற்றி காணப்படும் கிராம மக்களை தவிர உள்ளூர் பொதுமக்கள் குறைந்த அளவே அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொள்கின்றனர் என்றும், இவர்களின் அன்றாட வருகை மிகவும் குறைவாக காணப்படுவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. குறிப்பாக பிரசவ சிகிச்சைக்கு பெண்கள் அரசு மருத்துவமனைக்கு வருவதில்லை என்றும், தேவையான மருத்துவ வசதிகள், பிரசவ மானியங்கள் ஆகியவற்றை அரசு அளித்தும், அரசு மருத்துவமனையில் பிரசவ சிகிச்சை எடுத்துக்கொள்ள தாய்மார்கள் தயங்குவதாக கூறப்படுகிறது.

பொதுமக்களின் ஒத்துழைப்பை பொறுத்தே மருத்துவ பணிகளை முடிக்கிவிட முடியும் என்றும், பொதுமக்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை அறிந்துகொண்டு அரசுக்கு பரிந்துரைக்க இயலும் என்கின்றனர் மருத்துவ பணிகளோடு தொடர்புடையவர்கள்.

இறுதியாக மேலே குறிப்பிட்ட குறைகள் அனைத்தும் நிரந்தரமாக களையப்பட்டால் மட்டுமே அதிரை அரசு மருத்துவமனையில் முழுமையான 24 மணி நேர சேவை சாத்தியம் என்றும், இவற்றை சரிசெய்யப்படவில்லை என்றால் சாத்தியமில்லை என்கின்றனர் கடந்த 4 ஆண்டுகளாக அன்றாட அதிரை அரசியல் நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து வரும் சமூக ஆர்வலர்கள்.

அபூ இஸ்ரா
படங்கள் உதவி: அபூ முபாரக்

ஆங்கிலேய அடக்குமுறை சின்னம்: அறுத்தெறிந்த அஞ்சா நெஞ்சன் முகமது சாலியா !

ஆங்கிலேய  கிழக்கு இந்திய கம்பனி ஒன்றுபட்ட இந்தியர்கள் மீது நடத்திய அடக்குமுறையினை எதிர்க்க புறப்பட்ட மக்கள் புரட்சிதான் முதாலாம் விடுதலைப் போர், விடுதலைப் புரட்சி, சிப்பாய்க் கலவரம், என்று பல பெயர்களால் அழைக்கப்படும் 1857ஆம் ஆண்டு நடந்த புரட்சியாகும் என்று நீங்கள் அறிவீர்.

மீரட் நகரில் முதலாவதாக ஆரம்பித்த கலவரம் படிப்படியாக இந்தியாவெங்கும் பரவியது. இந்திய குறுநில மன்னர்கள் பலர் கும்பனி துப்பாக்கிக்குப் பயந்து  ஒடுங்கிப் போயிருந்தாலும், சீக்கிய மன்னர்கள் பலர் ஆங்கிலேயருக்கு ஆதரவாக இந்திய எழுச்சியினை  எதிர்த்தாலும், ஜான்சி நாட்டின் வீர மங்கை லக்ஷ்மி பாயும், அவுத் மாநில அரசியான பேகம் ஹசரத்தும், அவருடைய மகனார் பிர்ஜிஸ் காதிரும் கும்பனி ஆட்சியினை எதிர்த்துப் போரிட்டனர்.

அவுத் மாநிலத்தில் போரினை முன்னின்று நடத்தியவர் யார் என்று தெரிந்தால் உங்களுக்கு எல்லாம்  ஆச்சரியமாக இருக்கும். அவர்தான் மௌலவி அகமதுல்லா. இவர் சென்னையினைச் சார்ந்தாலும் அவுத் மாநிலத்தில் படைத் தளபதியாக இருந்து போரிட்டு இருக்கிறார்.

முதலாம் சுதந்திரப் புரட்சியில்  முக்கிய பங்காற்றியவர்களில் முகலாயிய சாம்ராஜ்ய  சக்கரவர்த்தி பகதுர்சா சபார் அவர்களின்  படைத்தளபதியான பக்த்கான், பெரேலி கான் பகதூர் கான், ஆகியோர் ஆவர். இவர்கள் அனைவரும் 1859ஆம் ஆண்டுக் கொல்லப்பட்டார்கள்.

வட இந்தியாவில் புரட்சிப் படைகளை இரும்புக் கரம் அடக்கி, புரட்சிப் படைத் தளபதிகளை ஈவு இரக்கமின்றி கொன்றுக் குவித்த கும்பனிக் கொடூரன் 'கர்னல் நீல்' ஆச்சரியமில்லை!

அந்தக் கொடூரனுக்கு எங்கே சிலை வைத்தார்கள் தெரியுமா ஆங்கிலேயர்கள். சென்னை மாநகர மத்தியில் அமைந்திருக்கும் ஸ்பென்சர் எதிர்புறத்தில் வெண் கலத்தால் சிலை அமைத்தார்கள். அந்தக் கொடூரனுக்கு தமிழகத்தின் தலைநகரில் சிலையா என்றுக் கொதித்து எழுந்த மதுரை இளம் சிங்கம் முகமது சாலியா தனது நண்பனான சுப்ராயளுடன் சென்னை நோக்கி 1927 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் புறப்பட்டார்கள் அவர்கள் கையில் துப்பாக்கியில்லை, வெடிகுண்டு இல்லை. மாறாக வெறும் சுத்தியலும், கோடாரியும் தான் அவர்கள் ஆயுதம். கையில் கிடைத்த ஆயதங்களைக் கொண்டு ஒரு ஏனியினை வைத்து கர்னல் நீல் சிலைமீது ஏறி பீடத்திலிருந்து வெட்டிச் சாய்த்தனர். அவர்களுக்கு ஆதரவாக இருந்த 21 போராட்ட வீரர்களும் கைது செய்து சிறைத் தண்டனைப் பெற்றனர். அதன் பின்பு அந்த சிலை ஆங்கிலேயர் ஆட்சி செய்தது வரை நிறுவப்படவில்லை.

இப்போது அந்த சிலை எங்கே இருக்கின்றது தெரியுமா ? சென்னை எழும்பூர் காட்சியகத்தில் ஆதிக்க ஆங்கிலேயரின் காட்சிப் பொருளாக இருக்கின்றது.
1858 ஆம் ஆண்டு இந்திய விடுதலைப் புரட்சியினை அடக்கினாலும், அந்தப் புரட்சி கும்பனி ஆட்சிக்கு சாவு மணியடித்து பிரிட்டிஸ் அரசின் நேரடிப் பார்வைக்கு இந்திய நிர்வாகம் வந்தது.

டெல்லி செங்கோட்டை ஆண்ட முகலாய சாம்ராஜ்யம், மற்றும் மராட்டிய சாம்ராஜ்யம் முடிவிற்கு வந்தது.

அன்று முதல் சுதந்திரப் புரட்சிக் கனல் தெறிக்க அந்நிய சிலை உடைக்க முகமது சாலியா, அவரது தோழர் சுப்புராயலு ஆகியோர் அண்ணன் தம்பியாக இணைந்து செயலாற்றினர். ஆனால் சுதந்திரத்திற்கு ஒரு வேர்வை கூட சிந்தாத ஆட்சியாளர்கள் இந்திய முஸ்லிம்களை அன்னியர் என்றும், ஓட்டுரிமையினை பறியுங்கள் என்றும், அரசியல் சாசனம் வழங்கிய சலுகைகளைப் பறியுங்கள் என்றும், ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் துவேசமான குரல் எழுப்பி வருவது வேதனையாக இல்லையா உங்களுக்கு ?

டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ்(ஓ)
ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி 
எழுத்தாளர்  
சமூக ஆர்வலர்

துபாயில் இந்திய இளைஞர்கள் நடத்திய கிரிக்கெட் போட்டி !

‪‪
துபை: துபையில்கடந்த வெள்ளிகிழமை  (24.04.15) கூத்தாநல்லூர் இளைஞர்களின் கே.என்.ஆர் யுனிடி -யின் நண்பர்கள் சார்பாக முதலாமாண்டு கிரிக்கெட் போட்டி தேரா ஹயாத் ரிஜென்சி பின்புறம் உள்ள மைதானத்தில் நடைப்பெற்றது.

அமீரக வாழ் கூத்தாநல்லூர் சகோதரர்கள் அபுதாபி,சார்ஜா, ராஸ் அல்கைமா போன்ற பகுதிகளிலுமிருந்து வந்து கலந்து கொண்டனர்.

இளைஞர்களுக்கிடையை பரஸ்பர ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக இந்த போட்டி நடத்தப்பட்டது. போட்டி ஏற்பாட்டை கே.என்.ஆர் யுனிடி நண்பர்கள் அனைவரும் செய்திருந்தனர் 

பிரபல நாளிதழ்களில் வந்த மருத்துவமனை 24 மணி நேர சேவை தொடர்பாக நடத்திய பேச்சுவார்த்தை குறித்த செய்தி !

அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடரவும், அதற்காக கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டி நேற்று பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதை தொடர்ந்து அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில் இன்று நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

இதுதொடர்பாக இன்று காலையில் வெளிவரும் பிரபல தமிழ் நாளிதழ்களில் வந்துள்ள செய்தி:
 

அதிரையில் TNTJ நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் அறிவிப்பு !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளை - பட்டுக்கோட்டை ஐ கேர் ஆப்டிக்கல்ஸ் ஆகியோர் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் நமதூர் நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கில் எதிர்வரும் [ 03-05-2015] அன்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற இருக்கிறது. இதில் பிரபல கண் மருத்துவர் எஸ். காசி விஸ்வநாதன் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்க இருக்கிறார். அதிரை மற்றும் அதனைச்சுற்றி வசிக்கும் பொதுமக்கள் முகாமில் கலந்துகொண்டு பயனடைய அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

துபாயில் நடைபெற்ற குடும்ப சங்கம நிகழ்ச்சி!

துபையில் காயல் அஸ்ஹர் ஜமாஅத் அமீரகம் (KAJA) ஏற்பாடு செய்திருந்த குடும்ப சங்கம நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. பர்துபையிலுள்ள அல் முஸல்லா டவரில் 24.04.2015 வெள்ளியன்று நடந்த இந்நிகழ்ச்சி மாலை 8.00 மணியளவில் ஆரம்பமானது.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக மௌலவி அப்துல் பாஸித் புகாரீ அவர்கள் “பெற்றோர்களின் பொறுப்புகள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இந்த நவீன யுகத்தில், இன்றைய இளம் தலைமுறை சமூகவலைத்தளங்களில் மூழ்கியுள்ள நிலையில், நம் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும், எப்படி உபதேசிக்க வேண்டும் என்பது குறித்து குர்ஆன் வசனங்களையும், நபிமொழிகளையும் மேற்கோள்கள் காண்பித்து மிக அழகாக உரையாற்றினார். அதன் மூலம் பெற்றோர்களின் பொறுப்புகள் குறித்த புதிய விழிப்புணர்வு ஏற்பட்டது.

    காயல் அஸ்ஹர் ஜமாஅத் அமீரகத்தின் மூத்த ஆலோசனைக் குழு உறுப்பினர் விளக்கு தாவூத் ஹாஜியார் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். மூத்த செயற்குழு உறுப்பினர் சகோ. இம்தியாஸ் அஹமத் அவர்கள் முன்னிலை வகித்தார்.

முன்னதாக இறைமறை வசனங்களை ஓதி இளவல் அஹமத் தாஹிர் அவர்கள் நிகழ்ச்சியைத் துவக்கி வைக்க, அந்த இறைமறை வசனங்களை இளவல் அபூபக்கர் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

    பின்னர் காயல் அஸ்ஹர் ஜமாஅத் அமீரகத்தின் பொதுச் செயலாளர் சகோ. ஃபிர்தவ்ஸ் அவர்கள் வரவேற்புரையாற்றினார். “அருள்மழை பொழியும் அல் ஜாமிஉல் அஸ்ஹர்” என்ற தலைப்பில் மூத்த ஆலோசனைக் குழு உறுப்பினர் சகோ. டி.ஏ.எஸ். மீரா ஸாஹிப் அவர்கள் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் குறித்த அறிமுகவுரை நிகழ்த்தினார். அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் அந்தக் காலத்திலேயே அஸ்ஹர் ஏற்படுத்திய மாற்றங்களை அவர் பட்டியலிட்டுக் காட்டினார்.

‘உணர்வாய் உன்னை’ புகழ் சகோ. ஜலாலுத்தீன் அவர்கள் பின்னர் திருக்குர்ஆனைப் புரிதல் குறித்த சிறப்புரையாற்றினார். திருக்குர்ஆனில் ஒரு வார்த்தை மாறினாலும் எவ்வளவு பெரிய பிழைகள் ஏற்படும் என்பதை உதாரணங்கள் மூலம் விளக்கியது பார்வையாளர்களை ஈர்த்தது.

இறுதியில் பொருளாளர் முஹம்மத் ரியாஸ் அவர்கள் நன்றியுரை நவின்றார். மொத்த நிகழ்ச்சியையும் செய்தித் தொடர்பாளர் எம்.எஸ். அப்துல் ஹமீது அவர்கள் தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் குடும்பத்துடன் திரளாகக் கலந்து சிறப்பித்த காயல் சகோதர, சகோதரிகளிடம் கருத்துப் படிவம் வழங்கப்பட்டு நிகழ்ச்சி குறித்த கருத்துரைகள் எழுதி வாங்கப்பட்டன. அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது. இறுதியில் கஃப்பாராவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

செய்தி மற்றும் படங்கள்:
முதுவை ஹிதாயத்
 
 
 
 
 
 

Wednesday, April 29, 2015

அதிரையில் பரபரப்பான விற்பனையில் கொத்துப் புரோட்டா !

அதிரையின் அனைத்து பகுதியிலும் விரல் விட்டு எண்ணிக்கொண்டே வந்தால், புரோட்டாக் கடைகளின் எண்ணிக்கை 50 ஐ தாண்டும். அந்தளவிற்கு இரவு வேலை உணவாக தினமும் பெரும்பாலான உள்ளூர் மக்கள் சாப்பிடுகின்றனர்.

அதிரை புரோட்டா என்றாலே நா ஊறும் அளவுக்கு தனி ருசி அதுவும் இரவு நேரக் கடைகளில் விற்பனையாகும் பொரிச்சப் புரோட்டாவிற்காக அலைமோதும் கூட்டங்கள் ஏராளம்.

இந்நிலையில் இன்று இரவு கடைத்தெரு பகுதியில் அமைந்துள்ள அனைத்து உணவகங்களிலும் கொத்து புரோட்டோ, முர்தபா விற்பனை களை கட்டியுள்ளது. ஒரு நபர் சாப்பிடும் அளவில் உள்ள ஒரு கொத்து புரோட்டோ  ₹ 50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை பெரும்பாலான அதிரையர்கள் வீட்டிற்கு வாங்கிச் செல்கின்றனர்.

இந்த பகுதியின் கடைகளில் தயாரிக்கும் கொத்து புரோட்டோவில் ஏற்படும் நறுமணமும், இங்கு எழுப்பப்படும் ஓசையும், மின்னொளியும் அனைவரையும் சுண்டி இழுக்கின்றன. இதனால் கூட்டம் அதிகமாகவும், பரபரப்பாகவும் காணப்படுகிறது.
 
  

அதிரை சேர்மனின் நன்றி அறிவிப்பு !

அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடரவும், அதற்காக கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டி இன்று பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து நாளை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இன்று இரவு அதிரை பேரூந்து நிலைய பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறிய நிகழ்ச்சியொன்றில் கோரிக்கை வெற்றி பெற காரணமாக இருந்த பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர், அதிரை அரசு மருத்துவமனை மருத்துவர், அதிரை காவல்துறையினர், அதிரை அனைத்து மஹல்லா நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், சமூக ஆர்வலர்கள் - ஊர் பிரமுகர்கள் - அதிரை பேரூராட்சியின் வார்டு கவுன்சிலர்கள் - உள்ளூர் இணையதளங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் தனது நன்றியை அன்புடன் தெரிவித்துக்கொண்டார். இதில் அனைவரும் கலந்துகொண்டனர்.