இந்நிலையில் அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடரவும், அதற்காக கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கவும், தேவையான முதலுதவி உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில் அதிரையின் அனைத்து மஹல்லா ஜமாத் நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், ஊர் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், வார்டு கவுன்சிலர்கள், பெண்கள் உள்ளிட்டோர் ஆதரவோடும் மாபெரும் சாலை மறியல் போராட்டம் கடந்த [ 30-04-2015 ] அன்று நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர சேவைக்காக கூடுதல் மருத்துவரை நியமிப்பது என்றும், அதுவரையில் தற்காலிகமாக சுழற்சி முறையில் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களை கூடுதலாக பொறுப்பு வகிக்க அறிவுறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட சுமூக உடன்பாட்டை தொடர்ந்து, இன்று நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் விலக்கிகொள்வதாக அறிவிக்கப்பட்டது.
24 மணி நேர சேவை சாத்தியமா !?
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் அதிரை அரசு மருத்துவமனையில் தற்போது 3 மருத்துவர்கள் மட்டுமே பணி புரிகின்றனர். பேச்சுவார்த்தை முடிவின் படி, எதிர்வரும் மாத இறுதியில் கூடுதல் 1 மருத்துவர் நியமித்தாலும், 24 மணி நேர சேவை என்பது சாத்தியப்படாத ஒன்றாக இருக்கும் என்றும், 24 மணி நேர சேவை தங்கு தடையின்றி செயல்பட வேண்டுமெனில், குறைந்த பட்சம் 6 முதல் 7 மருத்துவர்கள் வரை மருத்துவமனையில் பணிபுரிந்தால் மட்டுமே சாத்தியம் என்று கூறுகின்றனர். அதுவும் உள்ளூரில் தங்கி இருக்கும் மருத்துவர்களாக இருக்க வேண்டும் எனவும், ஏற்கனவே மருத்துவமனையில் 4 மருத்துவர்கள் பணிபுரிந்தும் 24 மணி நேர சேவையை தொடர்ந்து செயல்படுத்த முடியவில்லை எனவும் கூறுகின்றனர்.
'பொதுவாக அதிரை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பெரும்பாலான மருத்துவர்கள் உள்ளூரில் தங்கி பணிபுரிவதில்லை என்றும், மாறாக இவர்கள் அருகில் உள்ள நகர் பகுதிகளில் தங்கி இருந்து அங்கிருந்து வாகனங்கள் மூலம் தினமும் மருத்துவமனைக்கு வந்து செல்வதால், இரவு நேரங்களில் ஒரு நோயாளிக்கு அல்லது விபத்தில் பலத்த காயமடைந்தவருக்கு அவசர சிகிச்சை வழங்க வேண்டுமெனில், மருத்துவர் மருத்துவமனைக்கு வரும் வரை காத்திருக்க வேண்டும். இதனால் காலதாமதம் ஏற்பட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் சிகிச்சை அளிக்க இயலாமல் போய்விடும்' என கூறுகின்றனர்.
மேலும் அதிரை அரசு மருத்துவமனையில் போதிய அவசர மருத்துவ உபகரணங்கள், அவசர உயிர் காக்கும் மருந்துகள் இல்லை என்ற குறையையும் முன்வைக்கின்றனர். விபத்தில் மரணமடைந்த ஒருவரின் உடல் பிரத பரிசோதனை செய்து உரியவரிடம் உடலை ஒப்படைப்பதில் சில நேரங்களில் காலதாமதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வரும் ஏழை நோயாளிகளை மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களில் குறிப்பிட்ட சிலர், கண்டு கொள்வதில்லை என்றும், அரசு மருத்துவர்கள் சொந்தமாக நடத்தி வரும் கிளினிக்கில் மருத்துவ ஆலோசனைக்கு செல்லும் நோயாளிகளுக்கு வாரி வழங்கும் முக்கியத்துவத்தை, அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் வழங்குவது இல்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.
அதே வேளையில் அதிரையை சுற்றி காணப்படும் கிராம மக்களை தவிர உள்ளூர் பொதுமக்கள் குறைந்த அளவே அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொள்கின்றனர் என்றும், இவர்களின் அன்றாட வருகை மிகவும் குறைவாக காணப்படுவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. குறிப்பாக பிரசவ சிகிச்சைக்கு பெண்கள் அரசு மருத்துவமனைக்கு வருவதில்லை என்றும், தேவையான மருத்துவ வசதிகள், பிரசவ மானியங்கள் ஆகியவற்றை அரசு அளித்தும், அரசு மருத்துவமனையில் பிரசவ சிகிச்சை எடுத்துக்கொள்ள தாய்மார்கள் தயங்குவதாக கூறப்படுகிறது.
பொதுமக்களின் ஒத்துழைப்பை பொறுத்தே மருத்துவ பணிகளை முடிக்கிவிட முடியும் என்றும், பொதுமக்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை அறிந்துகொண்டு அரசுக்கு பரிந்துரைக்க இயலும் என்கின்றனர் மருத்துவ பணிகளோடு தொடர்புடையவர்கள்.
இறுதியாக மேலே குறிப்பிட்ட குறைகள் அனைத்தும் நிரந்தரமாக களையப்பட்டால் மட்டுமே அதிரை அரசு மருத்துவமனையில் முழுமையான 24 மணி நேர சேவை சாத்தியம் என்றும், இவற்றை சரிசெய்யப்படவில்லை என்றால் சாத்தியமில்லை என்கின்றனர் கடந்த 4 ஆண்டுகளாக அன்றாட அதிரை அரசியல் நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து வரும் சமூக ஆர்வலர்கள்.
அபூ இஸ்ரா
படங்கள் உதவி: அபூ முபாரக்
அரசு மருத்துவமனை முழுமையாக பொதுமக்கள் பயன்படுத்தாதற்கு முக்கிய காரணங்கள் சில உள்ளன, இலவசம் என்ற பெயரில் மருத்துவ முகாம் இதன் மூலம் புது மருத்துவ மனைகள் பிரபலப் படுத்தப் படுகிறது. அரசு மருத்துவர் தனியாக கிளினிக் தொடங்கி விடுகிறார்கள், கிளினிக்கில் பார்பவர்கள் அதே மருத்துவரிடம் அரசு மருத்துவமனை செல்ல கொவ்ர பிரச்னை. இன்ஸ்டன்ட் உணவு போல மெடிக்கல் சென்றுநோய்க்கான மருந்து வாங்கி செல்வதால், இதயெல்லாம் விட ஏழை மக்கள் அதிக தூரம் நடக்க இயலாமையால் அங்கே செல்வதில்லை. போதிய மருத்துவ வசதில்லை என்பது உண்மைதான்; டெங்கு நோய் சிகிச்சைக்கு ராஜாமடம் அரசு மருத்துவமனைக்கு தான் மக்கள் செல்வதை பார்க்கலாம். அரசு நடமாடும் மருத்துவ சிகிச்சை மூலம் இதனை மேம்படுத்தலாம்.
ReplyDelete