.

Pages

Thursday, November 30, 2017

மின்கம்பி அறுந்து விழுந்து 6 ஆடுகள் பலி ~ மயிரிழையில் உயிர் தப்பிய மூதாட்டி!

பேராவூரணி நவ.30
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அடுத்த புனல்வாசலில் மின் கம்பி திடீரென அறுந்து விழுந்ததில் 6 ஆடுகள் பலியாகின. ஆடுகளை ஓட்டிச்சென்ற மூதாட்டி அதிர்ஷ்டவசமாக சுதாரித்து கொண்டதால் உயிர் தப்பினார்.

பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பேராவூரணியை அடுத்த புனல்வாசல் தெற்குத்தெருவை சேர்ந்த விவசாயி சிமியோன் என்ற சின்னப்பன் (வயது 70) மனைவி சைனிஸ் மேரி (வயது 64) தனக்கு சொந்தமான ஆடுகளை அருகில் இருந்த தென்னந்தோப்பில் மேய்த்துக் கொண்டிருந்தார்.

மழை பெய்யவே மாலை 4.30 மணியளவில் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வீடு திரும்பினார்.  அப்போது, புதுப்பட்டினம் 1ம் நம்பர் வாய்க்கால்  அருகே தெற்குப்பகுதி வயலின் மேல் செல்லும்  உயர் அழுத்த மின் கம்பி திடீரென அறுந்து முன்னாள் சென்று கொண்டிருந்த ஆடுகள் மீது விழுந்துள்ளது. இதில் மூதாட்டி கண் எதிரே மின்சாரம் தாக்கி ஆடுகள் பலியானது. இதில் சுதாரித்து கொண்ட சைனிஸ் மேரி அதிர்ஷ்டவசமாக மயிரிழையில்  உயிர் தப்பினார்.

இச்சம்பவம் குறித்து  வருவாய்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மேலும் சிமியோன் என்ற சின்னப்பன் மகன் ஜெரோம் திருச்சிற்றம்பலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இறந்து போன ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ 40 ஆயிரம்  இருக்கும் எனக்கூறப்படுகிறது.

பூச்சி கட்டுப்பாடு: அதிரை அருகே விவசாயிகளுக்கு கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

அதிராம்பட்டினம், நவ.30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தாமரங்கோட்டையில், தஞ்சாவூர் ஆர்.வி.எஸ். வேளாண்மைக் கல்லூரியில் பயிலும் 4 ம் ஆண்டு மாணவிகள் 10 பேர் ராஜராஜேஸ்வரி தலைமையில் குழுவாக இணைந்து ஊரக வேளாண்மை அனுபவப் பயிற்சி திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுக்கு பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி  இயக்குநர் எஸ்.ஈஸ்வர் மேற்பார்வையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இம்மாணவிகள் பயிற்சியின் ஒரு பகுதியாக தாமரங்கோட்டை கிழக்கு கிராமத்தில் விதை வேலுமணி என்ற விவசாயி தென்னந்தோப்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செயல் விளக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அப்போது, குரும்பை உதிர்வைத் தடுக்க தென்னை மரத்தின் பென்சில் தடிமனுள்ள வேரில் ஊட்டச்சத்து மருந்தை 1 மரத்துக்கு 10 மில்லி என்ற விகிதத்தில் ஆண்டுக்கு 2 முறை செலுத்த வேண்டும் எனவும், அம்மருந்தை பயன்படுத்துவது குறித்தும் செயல் விளக்கம் அளித்தனர்.

அடுத்து, ஒருங்கிணைந்த எலி ஒழிப்பு திட்டத்தின் கீழ் வயல்களில் பானை பொறி மூலம் எலிகளை அழித்தல், திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பங்கள், ரசாயன பூச்சிக் கொல்லிக்குப் பதிலாக சோலார் விளக்குப் பொறி மூலம் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழி முறைகள் ஆகியன குறித்தும் செயல் விளக்கம் செய்து காட்டினர். மேலும், மானிய விலையில் சோலார் விளக்குப் பொறி கருவியை பெற விரும்புவோர் பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் முன் பதிவு செய்யலாம் என தெரிவித்தனர். 

அதிராம்பட்டினத்தில் 41.20 மி.மீ மழை பதிவு !

அதிராம்பட்டினம், நவ.30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், கடந்த சில நாட்களாக இடைவெளி விட்டு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று புதன்கிழமை இரவு முதல் இன்று வியாழக்கிழமை மாலை வரை அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்தது. மேலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று (நவ.30) வியாழக்கிழமை காலை 8.30 மணி நேர நிலவரப்படி அதிராம்பட்டினத்தில் 27.60 மி.மீ, மாலை 5.30 மணி நேர நிலவரப்படி 13.60 மி.மீ மழை பதிவாகியது.

தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக வல்லத்தில் 70 மி.மீ (காலை), கும்பகோணத்தில் 35 மி.மீ (மாலை), பட்டுக்கோட்டையில் 31.80 மி.மீ(காலை), 1.60 மி.மீ (மாலை), பேராவூரணியில் 13.20 மி.மீ (காலை), 2 மி.மீ (மாலை), மதுக்கூரில் 16.40 மி.மீ (காலை), 1.80 மி.மீ (மாலை) மழை பதிவாகியது.

பேராசிரியர் நியாஸ் அகமது திருமணம் ~ பிரமுகர்கள் வாழ்த்து (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ.30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் எம். நியாஸ் அகமது.
காதிர் முகைதீன் கல்லூரி வணிகவியல்துறை (சுயநிதி) உதவி பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது திருமணம், அதிராம்பட்டினம் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில், பள்ளிவாசல் இமாம் தலைமையில், ஜமாஅத் நிர்வாகிகள், குடும்பத்தார் முன்னிலையில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

இதில், சிறப்பு அழைப்பின் பேரில் காதிர் முகைதீன் கல்லூரிச் செயலர், முதல்வர், பேராசிரியர்கள், அரசியல் பிரமுகர்கள், ஜமாத்தார்கள், பஞ்சாயத்தார்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமகனை வாழ்த்தினர்.
 
 
 
 
 

'மிலாது நபி' தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் வரும் டிச.2 ந் தேதி மதுபானக் கடைகள் ~ பார்கள் மூட உத்தரவு!

எதிர்வரும் டிச. 2–ந் தேதி (சனிக்கிழமை) நபிகள் நாயகம் பிறந்தநாளை  (மிலாது நபி) முன்னிட்டு, தமிழ்நாடு மதுபானம் சில்லறை விற்பனை விதிகளின்படி, தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து ‘டாஸ்மாக்’ கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், எஃப்.எல்–2 உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள், எப்.எல்–3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சார்ந்த பார்கள் மற்றும் எப்.எல்–3(ஏ) உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் இயங்காது என மாவட்ட ஆட்சியர் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, November 29, 2017

தஞ்சை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் அறிவித்த 48 திட்டங்கள் (முழு விவரம்)

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று புதன்கிழமை
(29.11.2017) தஞ்சாவூரில் நடைபெற்ற டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கான சிறப்பு அறிவிப்புகளை அறிவித்தார்.

நெல் இரகத்திற்கு பெயரிடுதல்
1) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் இந்த ஆண்டு புதியதாக வெளியிடப்பட்ட நெல் இரகத்திற்கு “எம்.ஜி.ஆர் 100” என சற்று முன்னர் பெயரிட்டு, அந்த ரக நெல்லை பயனாளிக்கும் வழங்கினேன்.

பள்ளியை தரம் உயர்த்துதல் 
2) கும்பகோணம் நகரத்தில் எம்.ஜி.ஆர். படித்த யானை அடி நகராட்சி தொடக்கப் பள்ளியானது நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும்.  மேலும் அப்பள்ளிக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவுப் பள்ளி என்றும் பெயர் சூட்டப்படும்.  அப்பள்ளியில் சத்துணவு வழங்கப்படவில்லை என்பதை அறிந்தவுடன், அம்மாவின் அரசு, சத்துணவு திட்டத்தின் MGR படித்த பள்ளியில் உடனடியாக சத்துணவு மையம் தொடங்க ஆணையிட்டது.  தற்பொழுது அந்த பள்ளியில் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது.  இங்கேயே சத்துணவு சமைக்க தனி சமையலறை கட்டப்படும்.

புதிய கால்நடை கிளை நிலையம்
3) திருபணந்தாள் ஒன்றியத்தில் திட்டச்சேரி, திருவோணம் ஒன்றியத்தில் கிழமங்கலம் ஆகிய கிராமங்களில் இரண்டு புதிய கால்நடை கிளை நிலையம் அமைக்கப்படும்.

ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள்
4) கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் விவசாயிகளின் நலன் கருதி 2.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2000 மெ.டன் கொள்ளளவு கொண்ட கிடங்கும், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, தஞ்சாவூர் மற்றும் வல்லம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகங்களில் தலா
1.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1000 மெ.டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகளுமாக ஐந்து கிடங்குகள் நபார்டு வங்கி உதவியுடன் ஏற்படுத்தப்படும்.

5) பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் மின்னணு ஏலமுறை மென்பொருள் வசதி, மின்னணு ஏலக்கொட்டகை, பொதுவான வகைப்படுத்தும் கருவிகள் மற்றும் எடைமேடை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும். (1.02 கோடி ரூபாய்)

மின் வசதிகள்
6) தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூரில் மின் விநியோகத்தை மேம்படுத்தும் பொருட்டு, பந்தநல்லூரில் புதிய துணை மின் நிலையம் 4.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

7) மின் நகரில் புதிய 110/11 கி.வோ. துணை மின்நிலையம் 5.97 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

8) திருமலை சமுத்திரத்தில் புதிய 110/33-11  கி.வோ. துணை மின்நிலையம் 10.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

9) 110/11 கி.வோ. பூண்டி துணை மின் நிலையம், 2.59 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 110/33-11 கி.வோ. துணை மின் நிலையமாக தரம் உயர்த்தப்படும்.

10) 110/11 கி.வோ.  ஊரணிபுரம் துணை மின் நிலையம் 2.12 கோடி  ரூபாய் மதிப்பீட்டில் 110/33-11 கி.வோ. துணை மின் நிலையமாக தரம் உயர்த்தப்படும்.

11) தஞ்சாவூர் மின்பகிர்மான வட்டத்தில் புதியதாக கணினி முறையில் மின்தடை பழுது நீக்கும் மையம் ( Fuse off call centre) 44.95
இலட்சம்  ரூபாய் செலவில் நிறுவப்படும்.

12) பட்டுக்கோட்டைக்குட்பட்ட பேராவூரணி உப கோட்ட அலுவலகம்
35.00 இலட்சம்  ரூபாய் செலவில் பேராவூரணி கோட்ட அலுவலகமாக மாற்றி அமைக்கப்படும்.

ரெகுலேட்டர் அமைத்தல்
13) கும்பகோணம் வட்டம், கும்பகோணம் நகரத்தில் காவேரி ஆற்றின் குறுக்கே மைல் 57/7-ல் நடைபாலத்துடன் கூடிய ரெகுலேட்டர் அமைப்பதற்கு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

தளமட்டச் சுவர்கள் அமைத்தல்
14) கும்பகோணம் வட்டம், சுந்தரப் பெருமாள் கோயில் கிராமத்தில் அரசலாற்றின் குறுக்கே மைல் 52/3-4ல் தளமட்ட சுவர் அமைக்கப்படும்.  (5.30 கோடி  ரூபாய்)

15) திருவிடைமருதூர் வட்டம், பவுண்டரிகாபுரம் கிராமத்தில் மாங்குடி வாய்க்காலுக்கு நீர் வழங்கும் பொருட்டு கீர்த்திமன்னார் ஆற்றின் குறுக்கே மைல் 63/1-2ல் தளமட்ட சுவர் அமைக்கப்படும். (4 கோடி  ரூபாய்)

தடுப்பணைகள் அமைத்தல்
16) ஒரத்தநாடு வட்டம், தாலயமங்களம் கிராமத்தில் தாலயமங்களம் ஏரி வடிகாலின் குறுக்கே எல்.எஸ்.1.60 கி.மீ-ல் தடுப்பணை அமைக்கப்படும்.
(50 லட்சம்  ரூபாய்)

17) ஒரத்தநாடு வட்டம், வண்ணான்கொல்லைபட்டி கிராமத்தில் பனங்குளம் உபரி நீர்போக்கின் குறுக்கே எல்.எஸ்.2.00 கி.மீ-ல் தடுப்பணை அமைக்கப்படும். (70 லட்சம்  ரூபாய்)

18) ஒரத்தநாடு வட்டம், தோப்பு விடுதி கிராமத்தில் வண்ணான்வாரியின் குறுக்கே எல்.எஸ்.0.100 கி.மீ-ல் தடுப்பணை அமைக்கப்படும்.
(60 லட்சம்  ரூபாய்)

19) ஒரத்தநாடு வட்டம், அருமலை கிராமத்தில் அருமலை வடிகாலின் குறுக்கே எல்.எஸ்.1.250 கி.மீ-ல் தடுப்பணை அமைக்கப்படும்.  (50 லட்சம்  ரூபாய்)

20) ஒரத்தநாடு வட்டம், வெள்ளூர் மற்றும் தொண்டாரம்பட்டு கிராமங்களில் பட்டுவானாச்சி வடிகாலின் குறுக்கே முறையே எல்.எஸ்.6.50 கி.மீ மற்றும் எல்.எஸ்.11.00 கி.மீ-ல் தடுப்பணை அமைக்கப்படும்.  (95 லட்சம்  ரூபாய்)

மருத்துவ வசதிகள் 
21) JICA திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3.28 கோடி  ரூபாய் மதிப்பில் அதிநவீன உபகரணங்கள் வழங்கப்படும்.

22) மாரடைப்பு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முதல் உதவி சிகிச்சை அளிக்க ஏதுவாக, ஒரு கோடி  ரூபாய் மதிப்பில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (HUB), அதனைச் சார்ந்த கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருவையாறு மருத்துவமனைகள் (ளுயீடிமந) மாரடைப்பு சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்படும்.

23) தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 16 கோடி  ரூபாய் மதிப்பில் புற்று நோய்க்கான கதிரியக்க சிகிச்சை கருவி அமைக்கப்படும்.

24) தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 12 கோடி  ரூபாய் மதிப்பில் சீமாங்க் மையம் ஒப்புயர்வு மையமாக தரம் உயர்த்தப்படும்.

25) அரசு இராஜா மிராசுதார் மருத்துவமனையில் 15 இலட்சம்  ரூபாய் மதிப்பில் கட்டணமில்லா கருத்தரிப்பு மையம் அமைக்கப்படும்.

26) தஞ்சாவூர் மாவட்டத்தில் 75 இலட்சம்  ரூபாய் மதிப்பில் புதியதாக மருந்து கிடங்கு அமைக்கப்படும்.

27) தஞ்சாவூர் மாவட்டத்தில் பணியாற்றும் 309 கிராமப்புற சுகாதார செவிலியர்களுக்கு மருத்துவ புள்ளி விவரங்களை பதிவு செய்திட
30.90 இலட்சம்  ரூபாய் மதிப்பில் கையடக்க கணினிகள் (TABLETS) வழங்கப்படும்.

28) சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் 31.35 இலட்சம்  ரூபாய் மதிப்பில் விரிவான ஆரம்ப நல்வாழ்வு சேவைகள் வழங்கப்படும்.

29) பட்டுக்கோட்டை மற்றும் ஒரத்தநாடு அரசு மருத்துவமனைகளில் 4.20 கோடி  ரூபாய் மதிப்பில் முதல்நிலை பரிந்துரை மையம் அமைக்கப்படும்.

30) பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் Diplomat of National Board (DNB) மருத்துவ பட்ட மேற்படிப்புடன் 1.49 கோடி  ரூபாய் மதிப்பில் சீமாங் அறுவை அரங்கம் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவு ஏற்படுத்தப்படும்.

31) கும்பகோணம் அரசு மருத்துவமனையில் 1.25 கோடி  ரூபாய் மதிப்பில் டயாலிசிஸ், எண்டோஸ்கோப் உள்ளிட்ட அதிநவீன உபகரணங்கள், பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்களுக்கான தொற்று கிருமி நீக்கு பிரிவு, புற்றுநோயாளிகளுக்கான வலி நிவாரணம் மற்றும் ஆதரவு சிகிச்சை மையம் அமைக்கப்படும்.

32) வல்லம் அரசு மருத்துவமனையில் 16 இலட்சம்  ரூபாய் மதிப்பில் நவீன கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.   
புறவழிச்சாலை

33) கும்பகோணம் நகருக்கான மூன்றாம் கட்ட புறவழிச்சாலை 9.42.கி.மீ நீளத்திற்கு அமைக்கப்படும். இதற்கான நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. (28.00 கோடி  ரூபாய்)

பாலங்கள் 
34) சின்னப்புலிக்காடு–ராகவாம்பாள்புரம்  சாலையில் கி.மீ. 0/2-ல் பாலம் கட்டப்படும். (1.50  கோடி  ரூபாய்)

35) சாலியமங்கலம் - சடையர்கோயில்  சாலையில் கி.மீ. 7/4-ல் சிறு பாலம் கட்டப்படும். (1.50  கோடி  ரூபாய்)

36) ஊரணிபுரம் - கரியவிடுதி சாலையில் கி.மீ. 0/8-ல் பாலம் கட்டப்படும்.
(1.60  கோடி ரூபாய்)

37) இடையாத்தி கிராமத்தில் வெள்ளாளர் தெரு மற்றும் ஆதி திராவிடர் தெருவிற்கிடையே ழு.ஹ வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டப்படும்.
(1.75  கோடி  ரூபாய்)

38) திருநீலக்குடி – கடலங்குடி  சாலையில் கி.மீ. 0/6-ல் பாலம் கட்டப்படும். (1.98  கோடி  ரூபாய்)

39) அய்யம்பேட்டை - கணபதி அக்ரஹாரம் சாலை கி.மீ.1/10ல் குறுக்கிடும் காவேரி ஆற்றின் குறுக்கே கணபதி அக்ரஹாரத்தில் மதிப்பில் பாலம் கட்டப்படும்.  (10.80  கோடி  ரூபாய்)

40) திருவிசைநல்லூர் - திருபுவனம் சாலையில் கி.மீ.0/2ல் பாலம் கட்டப்படும்.
(2.60   கோடி  ரூபாய்)

41) புதுவிடுதி - வெட்டுவாக்கோட்டை - கறம்பக்குடி சாலையில் கி.மீ.3/6ல் பாலம் கட்டப்படும். (1.50  கோடி  ரூபாய்)

42) ரெட்டிப்பாளையம் கிராமத்தில் கொற்கை பஞ்சாயத்துக்கும் சேசம்பாடி பஞ்சாயத்துக்கும் இடையில் கி.மீ.0/4ல்  பாலம் கட்டப்படும். (1.98 கோடி  ரூபாய்)

43) நெய்வாசல் -  அரசப்பட்டு -  ஊசிமதகு சாலையில் கி.மீ.4/6ல்  பாலம் கட்டப்படும். (1.97 கோடி  ரூபாய்)

44) ஆலத்தூர் - புலவஞ்சி சாலையில் கி.மீ.1/2ல் பாலம் கட்டப்படும்.
(1.50  கோடி  ரூபாய்)

திட்ட அறிக்கை
45) திருவையாறு நகருக்கு புறவழிச்சாலை அமைக்க  விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

46) தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை – அறந்தாங்கி - சாயல்குடி  மாநில நெடுஞ்சாலை எண்.29யினை அதாவது தஞ்சாவூர் மாவட்ட சாலை பகுதி பட்டுக்கோட்டை முதல் ஆவணம் கைகாட்டி  வரை கிமீ 0/0-69/2 வரை 69.20 கி.மீ நீளம் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்துவதற்கு 3.2 கோடி ரூபாய் செலவில் தளஆய்வு மற்றும் சாத்தியக்கூறு திட்ட அறிக்கை தயாரிக்க
ப்பட்டு வருகிறது.

47) அய்யம்பேட்டை - கணபதிஅக்ரஹாரம் சாலையில்  கிமீ. 0/4 குறுக்கிடும் குடமுருட்டி ஆற்றின் குறுக்கே அய்யம்பேட்டையில் உயர்மட்ட பாலம் கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு  வருகிறது.

48) திருக்காட்டுப்பள்ளி - செங்கிபட்டி - பட்டுக்கோட்டை சாலை (ளுழ -99) கி.மீ. 5/10-6/2ல் வெண்ணாறு ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு  வருகிறது.
 





துபாய் போலீசாரின் அன்புடன் எச்சரிக்கும் குறுஞ்செய்தி!

அதிரை நியூஸ்: நவ.29
துபையில் அமீரக தேசிய தின உட்பட 3 நாள் விடுமுறை கொண்டாட்டங்களின் போது நிகழும் போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்கு கடும் தண்டனைகள் வழங்கப்படும் என நேற்று போலீஸார் அறிவித்திருந்த நிலையில் இன்று தற்செயலாக நடைபெறும் சிறு போக்குவரத்து குற்றங்களுக்காக வழக்குப் பதிவு செய்யப்படாததுடன் அபராதமும் விதிக்கப்படாது மாறாக வாகன ஓட்டி செய்த தவறை குறிப்பிட்டு அதை மீண்டும் செய்ய வேண்டாம் என அன்புடன் எச்சரிக்கும் குறுஞ்செய்தி மட்டுமே அனுப்பப்படும் என்றும், பெருங்குற்றங்கள் மற்றும் வேண்டுமென்றே நிகழ்த்தப்படும் போக்குவரத்து குற்றங்களின் மீது எத்தகைய கருணையும் காட்டப்படாது என்றும் துபை போலீஸார் விளக்கமளித்துள்ளனர்.

குறிப்பாக இயல்பான போக்குவரத்திற்கு சிறிது தடை ஏற்படுத்துவது, புதுப்பிக்கப்படாத வாகன லைசென்ஸூடன் இயக்குவது, சாலையில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடைஞ்சல் தருவது, குழந்தையுடன் வாகனம் ஓட்டி வரும் பெண் பார்க்கிங் கிடைக்காததால் சிறிது நேரம் சாலையோரம் காத்திருப்பது போன்ற இன்னும் பல தற்செயல் போக்குவரத்து குற்றங்கள்.

எனினும் துபையின் போக்குவரத்தை சீராக வைப்பதற்காகவும், குற்றங்களை தடுப்பதற்காகவும் சுமார் 600 போலீஸ் ரோந்து வாகனங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

சவுதியில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் நகைக்கடைகள் மீது நடவடிக்கை!

அதிரை நியூஸ்: நவ.29
சவுதியில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் நகைக்கடைகள் மீது நடவடிக்கை

சவுதி அரேபியாவில் உள்ள நகைக்கடைகளில் 100% சவுதி குடிமகன்கள் மட்டுமே வேலை பார்க்க வேண்டும் என்ற சட்டம் எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் தேதி முதல் கடுமையாக கண்காணிக்கப்பட உள்ளது. மீறி வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் தங்களுடைய ஒவ்வொரு வெளிநாட்டு ஊழியர்களுக்காகவும் தலா 20,000 ரியால்களை அபராதமாக செலுத்த நேரிடும் என தொழிலாளர் மற்றும் சமூகநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சவுதி முழுவதும் சுமார் 6,000 நகைக்கடைகள் உள்ளன. இவற்றில் சுமார் 25,000 பேர் வேலைவாய்ப்புக்களை பெற்றுள்ளனர். எனினும் கடந்த 16 வருடங்களில் சுமார் 50 சதவிகித சவுதியர்களே இத்துறையில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர், முழுமையாக வேலைவாய்ப்பை வழங்க முடியவில்லை என்ற குறையை தீர்ப்பதற்காகவே தற்போது அதிரடி நகர்த்தல்கள் செய்யப்படுகின்றன.

சவுதி செயல்படும் பல நகைக்கடைகளை நடத்துவது வெளிநாட்டு முதலாளிகளே. ஆவணங்களில் மட்டுமே சவுதிகாரர்கள் முதலாளிகளாக இருப்பார்கள். ஒரு சில கடைகளில் சவுதியரும் வெளிநாட்டினரும் பங்குதாரர்களாக இருப்பார்கள். இந்நிலையில் இந்த சட்டத்தால் சவுதியில் நகை வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சவுதி அரேபியர்களையும் வெளிநாட்டினரையும் ஒரளவு கலந்து வேலைக்கு வைத்துள்ள நிறுவனங்கள் சவுதியர்களுக்கு குறைந்த ஊதியத்தை வழங்கியும், அதிக நேரம் வேலை வாங்கியும், அவர்களை நகைக்கடை தொழிலை கற்றுக் கொள்ளவிடாமல் அந்நியப்படுத்தியே வைத்திருப்பதாகவும் அமைச்சகம் புகார் தெரிவித்துள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 

துபையில் காருக்குள் நடப்பதை போலீசார் கண்காணிக்கும் புதிய தொழிற்நுட்பம் !

அதிரை நியூஸ்: நவ.29
துபையில் விரைவில் காருக்குள் நடப்பதையும் போலீஸார் கண்காணிக்கும் செயற்கை அறிவு தொழிற்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

துபையில் போலீஸார் தங்களின் போலீஸ் வாகனத்திற்குள் இருந்தபடியே பிற வாகனங்களுக்குள் நடக்கும் போக்குவரத்து விதிமீறல் குற்றங்களை கண்டுபிடிக்கும் செயற்கை அறிவு தொழிற்நுட்பத்தை அறிமுகப்படுத்தவுள்ளனர்.

இந்தத் தொழிற்நுட்பத்தை துபை போலீஸாருக்கு உருவாக்கி கட்டமைத்து தருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை "Com-Iot Technologies" என்ற நிறுவனத்துடன் துபை போலீஸார் செய்து கொண்டுள்ளனர்.

குறிப்பாக போக்குவரத்து விதிமீறல்கள், வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பாவித்தல், உணவும் நீரும் அருந்துதல், தறிகெட்டு வாகனத்தை ஓட்டுதல் மற்றும் தேடப்படும் வாகனத்தை பிடிப்பதற்கும் இந்த புதிய தொழிற்நுட்பம் உதவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சொல்லப்படாததும், தனிமனித உரிமையும் எதிர்காலத்தில் செயற்கை அறிவால் என்ன பாடுபடுமோ தெரியவில்லை.

விளக்க வீடியோ: pic.twitter.com/p2AeD4dGzB

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

துபையில் சம்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA) நடத்தும் போட்டிக்கான தங்க நாணயப் பரிசுகள் அறிவிப்பு!

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் சனிக்கிழமை, டிசம்பர்-2, 2017 ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA) அமீரக கிளை சார்பில் துபாய் முஷ்ரிஃப் பூங்காவில் (Mushrif Park) நடைபெற இருக்கும் ஒன்று கூடல்  (Get together) நிகழ்வில் அமீரகம்வாழ் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற இருப்பதை அறிவித்திருந்தோம். அவற்றில் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த தங்கக்காசு (Gold Coins) பரிசுகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கபட உள்ளன.

அவற்றின் விபரம் வருமாறு:
முதல் பரிசு: Gold Coin, ஒரு பவுன் (ஒருவருக்கு)
இரண்டாம் பரிசு : Gold Coin, முக்கால் பவுன் (ஒருவருக்கு)
மூன்றாம் பரிசு : Gold Coin, அரை பவுன் (ஒருவருக்கு).
ஆறுதல் பரிசு : Gold Coin, கால் பவுன் (ஒருவருக்கு)

இவைகள் தவிர நவம்பர் 30 மற்றும் டிசம்பர்-1 துபாய் அல் மனார் செண்டரில் நடைபெறும் இஸ்லாமிய மார்க்க நிகழ்ச்சியிலிருந்து சில கேள்விகள் கேட்கப்பட்டு, சரியான விடை சொல்லும் ஒருவருக்கு கால் பவுன் தங்கக்காசு(Gold Coin) சிறப்புப் பரிசாக வழங்கப்படும்.

ஆகவே, சம்சுல் இஸ்லாம் சங்கம் மஹல்லாவாசிகள் காலம் தாழ்த்தாமல் காலை 9-மணிக்குள் நிகழ்ச்சி நடைபெறும் முஷ்ரிஃப் பூங்காவிற்க்கு (Mushrif Park) வருகை தந்து நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற ஒத்துழைக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பு:
1) வாகன வசதி இல்லாத நமது சங்க மஹல்லா பேச்சிலர்களுக்கு (Bachelors) மட்டும் துபாய் தேரா-வெஸ்ட் ஹோட்டல் அருகிலிருந்து வாகன வசதி செய்யத் திட்டமி்ட்டுள்ளதால் நாளைக்குள் (30-11-2017 வியாழன் இரவு 8:00 மணிக்குள்) முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் ஏற்பாடு செய்யப்படும் என்பதால் கிளை நிர்வாகிகளிடம் அதை உறுதி செய்துகொள்ளவும்.

2) அமீரகத்தில் விசிட்டில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும், நமது ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்காக வெளிநாடு மற்றும் தாயகத்திலிருந்து  வந்திருப்பவர்களுக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேவையுள்ளோர் துபாய் கிளை நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.

இவண்,
ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA) அமீரக கிளை

வெளிநாட்டு இந்தியர்கள் PIO அட்டைகளை OCI அட்டைகளாக மாற்ற காலக்கெடு!

அதிரை நியூஸ்: நவ. 29
வெளிநாட்டு இந்தியர் தங்களின் PIO அட்டைகளை OCI அட்டைகளாக டிசம்பர் 31க்குள் மாற்ற வேண்டும்

துபை இந்தியத் துணைத் தூதரகம் (The Consul General of India in Dubai) அறிவித்துள்ளபடி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் PIO (Person of Indian Origin) என்ற அடையாள அட்டை உள்ளவர்கள் எதிர்வரும் 2017 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் வெளிநாடு வாழ் இந்தியக் குடிமகன் OCI (Overseas Citizen of India) என்ற அட்டைக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். தவறுபவர்கள் 1,010 திர்ஹம் (275 டாலர்) அபராதம் செலுத்த நேரிடும்.

இந்த அட்டைகளை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பை (conversion) 2017 டிசம்பர் 31 ஆம் தேதிக்கு மேல் நீடிக்கும் திட்டமில்லை என கறாராக அறிவித்துள்ளது இந்திய துணைத் தூதரகம். இக்கெடுவிற்கு பின் வருபவர்கள் சுமார் 1,010 திர்ஹம் செலுத்தியே புதுப்பிக்க வேண்டும். புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு 1,010 என்ற கட்டணமே வசூலிக்கப்படும்.

இது நம்மைப் போன்றவர்களுக்கானது அல்ல என்றாலும் இந்த கார்டுகளை எடுப்போருக்கு உதவலாம்.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

ஓமனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பெண்கள் தீயில் கருகி உயிரிழப்பு!

அதிரை நியூஸ்: நவ. 29
ஓமன் நாட்டின் பர்கா மாகாணத்தின் அல் சலாம் பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 35 வயதுடைய தாய், அவருடைய 7 முதல் 15 வயது வரையுள்ள 5 பெண் குழந்தைகள், 28 வயதுடைய சகோதரி மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் என 8 பெண்கள் மரணமடைந்தனர். தந்தை காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தீயணைப்புத் துறையினர், திடீர் தீயால் பரவிய புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியதாலேயே அவர்கள் மரணமடைந்திருக்கலாம் என்றும், மின் சாதனங்களை சரியாக முறையில் கையாளுமாறும் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

துபையில் 2 நாள் இஸ்லாமிய மாநாட்டு நிகழ்ச்சிகள் ~ பங்கேற்க அழைப்பு!

அதிரை நியூஸ்: நவ.29
அமீரக துபையில் உள்ள அல் குஸ் பெளலிங் சென்டர் அருகில் அமைந்துள்ள அல் மானார் இஸ்லாமிக் சென்டரில் ' இறுதி நாள் தீர்ப்பு மாநாடு - என்ற பெயரில் 2 நாட்கள் இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது.  இதில், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து தலை சிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பங்கேற்கின்றனர். இதில், சிறப்புரைகள், பயிலரங்கம், போட்டிகள், கண்காட்சிகள், ஆலோசனை மையம், நினைவூட்டல்கள், இஸ்லாமிய அங்காடிகள் ஆகியவை இடம்பெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் அமீரக வாழ் அணைத்து சமூக சகோதரர்கள் திரளாக பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது.

இலவச அனுமதி
பெண்களுக்கு தனியிட வசதி
குழந்தைகள் விளையாட தனியிடம்
வாகன ஏற்பாடு

முன்பதிவு அவசியம்
மேலதிக தகவல் மற்றும் தொடர்ப்பு: 00971 50 589 4284

தகவல்: அதிரை அமீன்
 

அதிரை ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் புதிதாக பொதுநல மருத்துவமனை திறப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ.29
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலை காதிர் முகைதீன் கல்லூரி எதிரே அமைந்துள்ள ஆதம் நகர் ~ எம்.எஸ்.எம் நகர் நுழைவாயில் அருகே புதிதாக 'ஸ்கை கேர் கிளினிக்' என்ற பெயரில் பொதுநல மருத்துவச் சேவை இன்று புதன்கிழமை காலை முதல் தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை பிரபல மருத்துவர் டி.ஏ.கே. ரத்தினம் பிள்ளை தலைமை வகித்து,, மருத்துவமனையை திறந்து வைத்து வாழ்த்திப்பேசினார்.

இதுகுறித்து மருத்துவர் டி.ஏ.கே. ரத்தினம் பிள்ளை பேரனும், ஸ்கை கேர் மருத்துவமனை மருத்துவர் எஸ். சந்துரூ எம்.டி கூறியது;
பட்டுக்கோட்டையில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ சேவையில் ஈடுபட்டுவரும் பிரபல மருத்துவர் டி.ஏ.கே. ரத்தினம் பிள்ளை.  எனது தாதாவான இவர் பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றவர். பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்களுக்கு ரூ.10 கட்டணத்தில் மருத்துவச்சேவை ஆற்றி வருகிறார். இவரது வழிகாட்டுதல் பேரில் எனது மருத்துவ சேவையை அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதி பொதுமக்களுக்கு வழங்க உள்ளேன். இம்மருத்துவமனையில் மருத்துவத்தில் அனுபவமிக்க மருத்துவர்களால் பொதுநலம் சம்பந்தப்பட்ட அனைத்து வகை மருத்துவ ஆலோசனைகள், பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இப்பகுதி பொதுமக்கள் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். என்றார்.

இந்நிகழ்ச்சியில், மருத்துவர் டி.ஏ.கே. ரத்தினம் பிள்ளை குடும்பத்தினர், நண்பர்கள், அதிரை பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
மருத்துவமனை வேலை நேரம்: 
காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும்.
 

அமீரக கொர்பக்கான் துறைமுகம் அருகே 16 மீட்டர் நீளமுள்ள திமிங்கிலம் கரை ஒதுங்கியது (படங்கள்)

அதிரை நியூஸ்: 29
அமீரக, ஷார்ஜா கொர்பக்கான் கன்டெய்னர் துறைமுகம் அருகே 16 மீட்டர் நீளமுள்ள திமிங்கிலம் கரை ஒதுங்கியது.

ஷார்ஜா கொர்பக்கான் கன்டெய்னர் துறைமுகம் அருகே சுமார் 16 நீட்டர் நீளமுள்ள கூன்முதுகு திமிங்கிலம் (Humpback Whale) இறந்தநிலையில் மிதந்து கொண்டிருந்ததை மீனவர்களின் தகவலின் பேரில் கரைக்கு இழுத்து வந்தனர் ஷார்ஜா அதிகாரிகள்.

இந்த திமிங்கிலம் ஆப்பிரிக்க முனையை (Africa Horn) நோக்கி இடம்பெயரும் (Migrate) போது கப்பலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்று சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இதன் எழும்புக்கூடு 'கல்பா' நகரில் (kalba) அடுத்த வருடம் திறக்கப்படவுள்ள பாதுகாக்கப்பட்ட கடல்வாழ் உயிரின காட்சிசாலையில் வைக்கப்படும் என்றும், இதன் மரபணு (DNA) கல்வி ஆராய்ச்சிகளுக்காக சேகரிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

ஓமன் வளைகுடா (Gulf of Oman) எனப்படும் இக்கடல் பிராந்தியத்தில் நீலத் திமிங்கிலம் (Blue Whale), துடுப்புத் திமிங்கிலம் (Fin Whale), ஸ்பேர்ம் திமிங்கிலம் (Sperm Whale) மற்றும் கூன்முதுகு திமிங்கிலங்கள் (Humpback Whale) பொதுவாக காணப்படும் பிரமாண்ட கடல்வாழ் உயிரினங்களாகும்.

சமீபகாலங்களில் கொலைகார திமிங்கிலங்கள் (Killer Whales) என்று அறியப்படும் ஓர்கா (Orca) திமிங்கிலங்களும் அதிக எண்ணிக்கையில் ஓமனின் முஸந்தம் தீபகற்ப பகுதியில் (Oman's Musandam Peninsula) தென்படத் துவங்கியுள்ளன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 
 

அமீரகத்தில் டிசம்பர் மாத சில்லரை பெட்ரோல் விலை உயர்வு!

அதிரை நியூஸ்: நவ.29
கடந்த 2 வருடங்களாக சரிந்து வந்த கச்சா எண்ணெய் விலையில் சற்று உயர்வு காணப்படுகிறது. அமெரிக்கா சந்தைகளில் பேரல் 60 டாலர்களுக்கு சற்றே அதிகமாக விலை போவதால் அமீரகத்திலும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல் சில்லரை விலையில் லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்துள்ளன. டீசல் மட்டும் 9 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

அடைப்புக்குறிக்குள் சென்ற மாத விலை ஒப்பீட்டுக்காக,
சூப்பர் 98 : 2.15 திர்ஹம் (2.03 திர்ஹம்)
ஸ்பெஷல் 95: 2.04 திர்ஹம்         (1.92 திர்ஹம்)
ஈ பிளஸ் 91 : 1.97 திர்ஹம் (1.85 திர்ஹம்)
டீசல் : 2.20 திர்ஹம் (2.11 திர்ஹம்)

Source: Gulf news
தமிழில்: நம்ம ஊரான் 

அபுதாபியில் 4 நாட்களுக்கு இலவச பார்க்கிங் அறிவிப்பு!

அதிரை நியூஸ்: நவ.29
அமீரக தியாகிகள் தினம், மீலாதுன்னபி மற்றும் தேசிய தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு எதிர்வரும் நவம்பர் 30 தேதி நள்ளிரவு முதல் டிசம்பர் 4 ஆம் தேதி காலை 8 மணிவரை அனைத்து தரை மேற்பரப்பு வாகன நிறுத்துமிடங்கள் (surface-level parking) அனைத்திலும் கட்டணமின்றி நிறுத்திக் கொள்ளலாம்.

மேலும், ரெஸிடென்ஸியல் பகுதிகளில் காணப்படும் பார்க்கிங்குகள் வழமையாக தினமும் இரவு 9 மணிமுதல் அடுத்த நாள் காலை 8 மணிவரை நடைமுறையில் உள்ள சட்டங்களின்படியே தொடரும். (Motorists are advised to follow residential parking regulations, which come into force between 9pm and 8pm every day)

அபுதாபி போக்குவரத்து துறையின் வாடிக்கையாளர் சேவை மையங்கள் அனைத்தும் மேற்படி 4 நாட்களும் மூடப்பட்டிருக்கும் என்றாலும் கால் சென்டர்கள் தொடர்ந்து 24 மணிநேரமும் இயங்கும், வாடிக்கையாளர்கள் 80088888 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

Tuesday, November 28, 2017

டெல்லியில் கன்னத்தில் அறைந்து கொண்ட பயணியும், விமான நிறுவன மேனேஜரும்

அதிரை நியூஸ்: நவ.28
டெல்லியில் இன்று காலை இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 3 பகுதிக்கு அஹமதாபாத் செல்வதற்காக பெண் பயணி ஒருவர் வந்தார் எனினும் அவர் தாமதமாக வந்ததாக கூறி ஏர் இந்தியா விமானத்தில் பறக்க அனுமதி மறுக்கப்பட்டார்.

பயணி ஏர் இந்தியாவின் டூட்டி மேனேஜரிடம் கொண்டு செல்லப்பட்டார், அங்கும் அவர் விமான நிறுவன சட்டங்களை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதன் விளைவாக பயணி முதலில் அந்தப் பெண் மேனேஜர் கன்னத்தில் அறைய, மேனேஜர் திருப்பி அறைய என அடித்து விளையாடி அசிங்கப்பட்டனர்.

பெண் பயணி போலீஸாரிடம் புகார் கொடுத்ததை தொடர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டு பிரச்சனையை அமைதியாக அத்துடன் முடித்துக் கொண்டனர் என டெல்லி விமான நிலைய DCP சஞ்சய் பாட்டியா தெரிவித்தார்.

அதெல்லாம் சரி, ரூல்ஸ் பயணிகளுக்கு மட்டும் தானா? அரசியல்வாதிகளுக்காக விமானங்கள் பல மணிநேரம் காத்திருக்கும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறுகிறதே அது என்ன கணக்கு?

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

நண்பரை அவமதித்து வாட்ஸப் செய்தி அனுப்பிய பெண்ணுக்கு 1 லட்சம் டாலர் அபராதம்!

அதிரை நியூஸ்: நவ. 28
நண்பரை அவமதித்து வாட்ஸப் செய்தி அனுப்பிய குவைத் பெண்ணுக்கு 1 லட்சம் டாலர் அபராதம்

குவைத்தில் நண்பர் ஒருவருடன் ஏற்பட்ட மனத்தாங்கலை அடுத்து அவரை அவமதிக்கும் வாசகங்களை கொண்ட வாட்ஸப் செய்தி ஒன்றை அவருக்கு அனுப்பினார், நண்பர் (ஆணா பெண்ணா என்று தெரியவில்லை) குவைத் சைபர் கிரைம் துறையில் புகார் அளிக்க, செய்தி அனுப்பிய பெண்ணுக்கு 30,000 குவைத் தினார்ககள் (சுமார் 1 லட்சம் டாலர்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளார் என குவைத்தை சேர்ந்த  El Rdar என்ற செய்தித்தளம் தெரிவித்துள்ளது.

அவர் அனுப்பிய செய்தி இது தான் "You have no shame and your parents failed to properly bring you up," இதில் கடும் அபராதம் விதிக்கும் வகையில் என்ன உள்ளது என்பதை கண்டுபிடித்துக் கொள்ளவும். தீர்ப்பை தொடர்ந்து வழமைபோல் சமூக ஊடகங்களில் வாதப் பிரதிவாதங்கள் கொடிகட்டி பறக்கின்றது.

பொதுவாக வளைகுடா அரபு நாடுகளில் வாட்ஸப் போன்ற சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்துவோர் மீது கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. கடந்த மாதம் 2 சவுதி பெண்கள் வாட்ஸப் மூலம் ஒருவரையொருவர் வசைமாறி பொழிந்து கொண்டனர். விளைவு இருவருக்கும் தலா 10 கசையடியுடன் பிரச்சனை முடிவுக்கு வந்தது என Okaz பத்திரிக்கை தெரிவித்திருந்தது.

மேலும் Okaz பத்திரிக்கை தெரிவிப்பதாவது, சவுதியில் கடந்த 6 மாதங்களில் சுமார் 220 சைபர் கிரைம் வழக்குப் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.

அமீரகத்திலும் பேஸ்புக், வாட்ஸப் போன்ற சமூக ஊடக பயன்பாடு குறித்து வழிகாட்டல் நெறிமுறைகள் உள்ளன. 2012 ஆம் ஆண்டின் சைபர் கிரைம் சட்டப்படி, சமூக ஊடகங்களில் இஸ்லாம், நன்னம்பிக்கைகள் மற்றும் நல்லொழுக்க நெறிகளை அவமதிக்கும் கருத்துக்களை பரப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

மேலும் தனியுரிமை மீறல், அவதூறு போன்றவற்றை பரப்புவது, மற்றொருவருடைய புகழை கெடுக்கும் வகையில் அனுமதியின்றி தனிநபர் தகவல்களை பரப்புவது, பதிவது போன்றவையும் சைபர் கிரைம் சட்டத்தின்படி நடவடிக்கைகளுக்கு உட்பட்டவையே.

Source: StepFeed / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

துபையில் இருந்து மும்பை வந்த பயணிகளை கதறவிட்ட ஏர் இந்தியா நிறுவனம்!

அதிரை நியூஸ்: நவ.28
துபையிலிருந்து மும்பை வந்த பயணிகளை கதறவிட்ட ஏர் இந்தியா நிறுவனம்

தெண்டச் சம்பள ஊழியர்களுக்கு அடையாளமாக யாரையாவது முன்னுதாரணமாக நிறுத்த வேண்டியிருந்தால் தாராளமாக ஏர் இந்தியா ஊழியர்களை முன்னிறுத்தலாம் என்று சொல்லுமளவிற்கு உச்சி முதல் பாதம் வரை உருப்படாத விமான நிர்வாகத்தை செய்பவர்கள் ஆனால் தங்களின் சுய தேவைகளுக்கு மட்டும் கொடி பிடிக்க, வேலைநிறுத்தம் செய்ய வெட்கப்படாதவர்கள்.

நேற்றிரவு துபையிலிருந்து புறப்பட்ட ஏர் இந்திய விமானம் அதன் மரபணு கட்டளைக்கு ஏற்ப சுமார் 1.30 மணிநேரம் தாமதமாக மும்பை புறப்பட்டுச் சென்றது. இந்த கால தாமதத்தின் போது ஏற்கனவே ஏற்றப்பட்டிருந்த பயணப்பொதிகள் பலவற்றை மறுபடியும் கீழே இறக்கியதை பல பயணிகள் பார்த்துள்ளனர் என்றாலும் விமானி எரிபொருள் பிரச்சனையின் (Some Fueling issue) காரணமாக தாமதமாவதாக அறிவித்துள்ளார். விமானம் துபையில் தாமதமான போது உள்ளிருந்த பயணிகளுக்கு தண்ணீரைக் கூட பலருக்கு தரவில்லை, கிடைத்த மிகச்சிலர் அன்றைய அதிர்ஷ்டஷாலிகள்.

மும்பை வந்திறங்கி பெல்ட்டில் (Concourse) காத்திருந்தபோது தான் தெரிந்தது சுமார் 50 பயணிகளின் பயண உடைமைகளை துபையிலேயே இறக்கி வைத்துவிட்டு அதைப் பற்றி எதையுமே பயணிகளுக்கு முறைப்படி அறிவிக்காமல் அழைத்து வந்த கள்ளத்தனம்.

ஏர் இந்தியாவின் இந்த சிறப்பான பணியால் ஒரு தம்பதி மும்பையிலிருந்து ஜெய்ப்பூர் செல்ல வேண்டிய விமானத்தை தவறவிட்டுள்ளனர். தனது திருமணத்திற்கான ஆடைகள் மற்றும் பொருட்களுடன் சென்ற ஒரு மணப்பெண்ணும் தவித்துப் போனார். இப்படி ஒவ்வொரு பயணியின் பின்னும் ஒரு சோக வடுவை ஏற்படுத்தியது ஏர் இந்தியா.

மேலும், தாமதமாக புறப்பட்ட போதும் தண்ணீர் தராதவர்கள் விமானம் தரையிறங்கிய பின் பெல்ட்டில் பல மணிநேரம் உடமைகளுக்காக காத்திருந்தபோதும் தண்ணீரையோ, சிற்றுண்டிகளையோ ஏற்பாடு செய்து தர ஏர் இந்திய நிர்வாகத்தினர் யாரும் முன்வரவில்லை.

பயணிகளுக்கு முறைப்படி அறிவித்துவிட்டே பயணப்பொதிகளை இறக்கினோம் என்று திருவாய் மலர்ந்த ஏர் இந்திய அதிகாரி ஒருவர், இறக்கப்பட்ட உடமைகள் ஜெட் ஏர்வேஸ், இன்டிகோ விமானங்களில் ஏற்றப்பட்டு விட்டதாகவும் எஞ்சியவை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கொண்டு வரப்படும் என்றும் சொன்னவர், இறுதியாக இவை எங்களின் கைகளை மீறிச் சென்ற விஷயம் என பொறுப்பான பதிலை கூறி அசத்தினார்.

தனியார் மயப்படுத்தலை நியாயப்படுத்த எத்தனை உத்திகள்?

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

அமீரக தேசிய தின கொண்டாட்டத்தில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை (முழு விவரம்)

அதிரை நியூஸ்: நவ.28
அமீரக தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு சாலைகளில் அத்துமீறும் வாகனம் ஓட்டிகள் கடும் தண்டனைகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அமீரக தேசிய தின கொண்டாடத்தின் பெயரில் வாகன ஓட்டிகள் பிற வாகன ஒட்டிகள் மற்றும் பிற சாலை பயனர்களுக்கு ஆபத்து நேரிடும் வகையில் நடந்து கொள்வது, சாலையின் நடுவில் வாகனங்களை நிறுத்துவது, அதிக சப்தமெழுப்பும் வாகனங்களை இயக்குவது, வாகனத்திலிருந்து குப்பைகளை எறிவது, நுரை தெளிப்புக்களில் ஈடுபடுவது போன்ற அத்துமீறல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் அபராதங்கள் விதிக்கப்படும் என துபை போலீஸ் எச்சரித்துள்ளது.

அமீரக தேசிய தின கொண்டாடட்களின் போது ஒழுங்கீனமான நடத்தை மற்றும் ஆபத்தான முறையில் வாகன இயக்கம் ஆகியவற்றிற்காக 2000 திர்ஹம் அபராதம், 23 கரும்புள்ளிகள் மற்றும் 60 நாள் வாகன முடக்கம் போன்ற தண்டனைகளை பெற நேரிடும். முக்கிய சந்திப்புக்கள், இன்டெர் செக்ஷன்கள் போன்றவற்றுடன் மொபைல் ரேடார்கள் மூலமும் காவல் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.

குற்றமும் தண்டனையும்:
1. ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டினால் 2,000 திர்ஹம், 23 கரும்புள்ளிகள் மற்றும் 60 நாட்களுக்கு வாகன முடக்கம்.
2. முறையான காரணமின்றி நடுவழியில் வாகனத்தை நிறுத்தினால் 1,000 திர்ஹம் அபராதம் மற்றும் 6 கரும்புள்ளிகள்.
3. அதிக சப்தமெழுப்பும் வாகனத்தை இயக்கினால் 2,000 திர்ஹம் அபராதம் மற்றும் 12 கரும்புள்ளிகள்.
4. அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் காணப்படும் கண்ணாடி மறைப்புக்கு (Window Tint) 1,500 திர்ஹம் அபராதம்.
5. அனுமதி பெறாத வாகன ஊர்வலம் நடத்தினால் 500 திர்ஹம் அபராதம், 4 கரும்புள்ளிகள் மற்றும் 15 நாட்களுக்கு வாகன முடக்கம்.
6. அனுமதி பெறாமல் வாகனத்தின் மீது எழுதினால் அல்லது போஸ்டர் ஒட்டினால் 500 திர்ஹம் அபராதம்.
7. பிறருக்கு தொந்தரவு ஏற்படும் வகையில் காருடைய ஹாரன் அல்லது ஸ்டீரியோ சத்தங்களை உயர்த்தினால் 400 திர்ஹம் அபராதம் மற்றும் 4 கரும்புள்ளிகள்.
8. போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காவிட்டால் 400 திர்ஹம் அபராதம் மற்றும் 4 கரும்புள்ளிகள்.
9. போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தினால் 400 திர்ஹம் அபராதம்.
10. வாகனத்திலிருந்து குப்பைகளை வெளியே எறிந்தால் 1,000 திர்ஹம் அபராதம் மற்றும் 6 கரும்புள்ளிகள்.
11. வேண்டுமென்றே நம்பர் பிளேட்டை மறைத்துச் சென்றால் 400 திர்ஹம் அபராதம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்