![]() |
மாதிரி படம் |
திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மக்களுக்கு வரப்பிரசாதமாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையும் இயங்கி வருகிறது.
இங்கு இதய சிகிச்சை, குழந்தைகள் நலம், பொது மருத்துவம், சிறுநீரகவியல், கண் மருத்துவம், பல் மருத்துவம், புற்றுநோய் சிகிச்சை உள்ளிட்ட 33 பிரிவுகள் இயங்கி வருகின்றன. இங்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து தினமும் 5,000-க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும், 2,000-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதியளித்தது.
தற்போது கட்டடப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் எலக்ட்ரிக்கல் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து, பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உயர் அலுவலர்கள் கூறியது:
ரூ.150 கோடியில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவக் கட்டடங்களின் 2 மாடிகள் கொண்ட முதல் பிரிவில் முதல் மாடியில் தீவிர சிகிச்சை பிரிவும், 2-ஆவது மாடியில் 5 அறுவை சிகிச்சை அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. கீழ்தளத்தில் அறுவை சிகிச்சை பின் கவனிப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான கட்டடப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
5 மாடிகள் கொண்ட 2-ஆவது பிரிவில் அதிநவீன சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளன. ஒரு மாடி கொண்ட 3-ஆவது பிரிவில் அதிநவீன மருத்துவ ஆய்வகம், இதய சிகிச்சைக்கான ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது கட்டடங்களில் தீயணைப்பு சாதனங்கள் பொருத்தும் பணிகளும், மின்சார வயர்கள் பதிப்பு மற்றும் எலக்ட்ரிக்கல் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதுதவிர, பல்வேறு சிறப்பு சிகிச்சைகளுக்காக ரூ.55 கோடியில் கேத் லேப், ஆய்வகக் கருவிகள் உள்ளிட்ட அதிநவீன மருத்துவக் கருவிகள் வாங்கப்பட்டு, விரைவில் பொருத்தப்பட உள்ளன. தீவிர சிகிச்சைப் பிரிவில் 100 படுக்கைகளும், இதர சிகிச்சைப் பிரிவுகளில் 200 படுக்கைகளும் விரைவில் அமைக்கப்பட உள்ளன. இப்பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்பட்டு, அடுத்த 4 மாதங்களுக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இதன் மூலம் நோயாளிகள் உயர்சிகிச்சைக்காக சென்னை, பெங்களூர் செல்லாமல் அனைத்து அதிநவீன சிகிச்சைகளும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே கிடைக்கும் என்றனர்.
20,196 சதுர அடியில் கட்டடங்கள்
மூன்று பிரிவுகளாக நடைபெற்று வரும் இக்கட்டடப் பணிகளில், பிரதான கட்டிடம் 19,396 சதுர அடியில் 5 மாடிகளுடனும், 800 சதுர அடியில் இரண்டாவது கட்டடம் 2 மாடிகளுடனும், மூன்றாவது கட்டடம் ஒரு மாடியுடனும் என மொத்தம் 20,196 சதுர அடியில் கட்டப்பட்டு வருகிறது.
ரூ.150 கோடி திட்ட மதிப்பீட்டில் ரூ. 80 கோடியில் கட்டுமானம் மற்றும் மின் பகிர்மானத்திற்காகவும், உயரிய மருத்துவ உபகரணங்களுக்காக ரூ.55 கோடியும், தீயணைப்பு பாதுகாப்பு சாதனங்களுக்கு ரூ. 80 லட்சமும், சி.சி.டிவி கண்காணிப்பு கேமராக்களுக்கு ரூ.30 லட்சமும், சோலார் மின் வசதிக்காக ரூ.50 லட்சமும், தொலைத்தொடர்பு வசதிக்காக ரூ.30 லட்சமும், ரூ.13.1 கோடி இதர செலவினங்களுக்கும் ஒதுக்கப்பட்டு, உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.
அதிநவீன சிகிச்சை பிரிவுகள்
தஞ்சை பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் இதய மருத்துவ சிகிச்சை பிரிவு, இதய அறுவை சிகிச்சை பிரிவு, மூளை நரம்பியல் மருத்துவம், மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை, சிறுநீரக சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை, ஒட்டுறுப்பு, குடல் இரைப்பை சிகிச்சை பிரிவு, குடல் இரைப்பை அறுவை சிகிச்சை பிரிவு, ரத்தநாள அறுவை சிகிச்சை பிரிவுகள் அமைய உள்ளன.
நன்றி: தினமணி (26-11-2017)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.