.

Pages

Thursday, April 9, 2015

'இசைமுரசு' நாகூர் ஹனிபா: எழுத்தறிஞரின் மறக்க இயலாத நினைவுகள் !

1967 ! தமிழ்நாட்டின் வரலாற்றுக்கு  மாற்றம் தந்த  தேர்தல் நேரம். அன்று பள்ளி இறுதி வகுப்புப் படித்துக் கொண்டிருந்த மாணவனான என்னிடம் ஒரு சிறிய நோட்டீஸ்  காண்பிக்கப்பட்டது. அதைக் காண்பித்தவர் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த டைரி என்று அழைக்கப்பட்ட மர்ஹூம் சேகு அப்துல் காதர் காக்கா அவர்கள். ( அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்வானாக!)

அந்த நோட்டீஸ் அச்சடிக்கப்பட்ட ஆண்டு 1952.

அதில் இருந்த விபரம்  என்னவென்றால் பட்டுக் கோட்டை காசாங்குளம் வடகரையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக் கூட்டத்துக்கான அறிவிப்பாகும்.  முக்கியபேச்சாளர் திருவாரூர் மு. கருணாநிதி. அந்த நோட்டீசில் இயக்கப் பாடல்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்த இடத்தில் நாகூர் இ. எம் ஹனிபா  என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்தக் கூட்டம் நடைபெற்ற காலம் ,  பராசக்தி திரைப்படம் வெளியான காலம்.
மெல்ல மெல்ல கலைஞர் புகழ் பெறத் தொடங்கிய காலம். அந்த நேரத்தில் அவரோடு இணைந்து பட்டி தொட்டி எங்கும் தனது திராவிட இயக்கப்பாடல்களைப் பாடி புகழ்பெறத் தொடங்கியவர்தான் இசை முரசு.
1952 க்கும் 1967 க்கும் இடைப்பட்ட காலத்தில் கருணாநிதி கலைஞர் கருணாநிதியாகவும் நாகூர் ஹனிபா இசை முரசு இ எம் ஹனிபாவாகவும் புகழ் பரிணாமம் பெற்று விளங்கத் தொடங்கிவிட்டார்கள்.

1967  ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் , ஓடி வருகிறான் உதய சூரியன் உள்ளமெல்லாம் இன்ப வெள்ளம் பொங்கிட ஓடி வருகிறான் உதய சூரியன் என்று நாகூர் ஹனிபாவின் குரல் ஒலிக்காத ஊர்களே  தமிழ் நாட்டில் இல்லை. அதிராம் பட்டினத்தில் குதிரை வண்டியில் ஒலிபெருக்கிகளைக் கட்டிக் கொண்டு அந்தப் பாடலை இசைக்கச் செய்து தெருவெங்கும் தேர்தல் பிரச்சாரம் நடக்கும். அந்தப் பாட்டைக் கேட்டுக் கொண்டே குதிரை வண்டிக்குப் பின்னால் நடந்துகொண்டே திமுகவுக்காகப் பிரச்சாரம் செய்தவர்கள் எல்லாம் இருந்தனர்.

அரசியலில் இது ஒரு பக்கம் என்றால் ஆன்மீகத்தில் அதிராம்பட்டினத்துக்கும் இ எம் ஹனிபா அவர்களுக்கும் இருந்த இணைப்பு ஒரு வரலாறாக ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நன்றியுடன் அவரால் நினைவு கூறப்படும்.

அன்றைய நாட்களில் அதிரைக் கடைத்தெரு சந்திப்பு அதாவது மெயின்ரோடு புதுத்தெரு ரோடு தக்வாப் பள்ளி செல்லும் ரோடு ஆகியவற்றின் சந்திப்பில் அன்றைய சீப் சைடு என்கிற கடை இருந்த இடத்தில் வருடந்தோறும் ஒவ்வொரு ஹஜ்ஜுப் பெருநாள் மாலையும் இஷாத் தொழுகைக்குப் பிறகு இசை முரசு அவர்களின் இன்னிசைக் கச்சேரி நடைபெறும். இந்த நிகழ்ச்சியைக் கடைத்தெரு வியாபாரப் பெருமக்கள் பொறுப்பேற்று நடத்துவார்கள்.  இது தவிர கடல்கரைத் தெரு மற்றும் காட்டுப் பள்ளி கந்தூரி நிகழ்வுகளிலும் அவரது இன்னிசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

எப்போதாக இருந்தாலும்  நிகழ்ச்சியைத் தொடங்கும் முன்பே அதிரையைச் சேர்ந்த அவரது முன்னேற்றத்துக்குக் காரணமான இரண்டு முன்னாள் நண்பர்களுக்கு நன்றி கூறியே  நிகழ்வைத் தொடங்குவார். அவர்களில் ஒருவர் மர்ஹூம் M.A.M.  பாட்சா மரைக்காயர் அவர்கள் மற்றும் இரண்டாமவர் “கோடை இடி” என்று கால்பந்தாட்டக் களத்தில் அறியப்பட்ட முகமது காசிம் பாய் அவர்கள் ஆவார்கள். அத்துடன் கால்பந்தாட்ட வீரர்  S S M  குல் முகமது அவர்களையும் குறிப்பிடுவார்.

இசை முரசு அவர்கள் பாடிய பல பாடல்கள் அரசியலிலும் ஆன்மீகத்திலும் பல தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கின்றன.

“ இறைவனிடம் கையேந்துங்கள்”  என்கிற  பாடல் ஒரு இஸ்லாமியர் என்றுதான் இல்லை . எந்த மதத்தினரும் பாடும் வகையில் அந்தப் பாடல் வரிகள் இருக்கும். “அல்லல் படும் மாந்தர்களே அயராதீர்கள் அல்லாஹ்வின் பேரருளை நம்பி நில்லுங்கள்” என்ற வரி அந்தப் பாடலில் வரும்வரை அந்தப் பாடல் ஒரு முஸ்லிம் பாடகரின் பாட்டு என்று யாருக்கும் தெரியாது. அல்லாஹ்வின் பேரருள்  என்று வருகின்ற வரிகளை அம்மாவின் பேரருளை என்று மாற்றிப் பாடிய சகோதர மதத்தவர்களும் வேளாங்கண்ணி போன்ற ஊர்களில் இருக்கவே செய்தார்கள்.      

"நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும் இதில் அடுத்தடுத்து கேட்பதற்கு அஞ்சுதே என் உள்ளம் யா அல்லாஹ்".

"கோமானே! சீமானே” 
அருள் மழை பொழிவாய் ரகுமானே!
"எங்கும் நிறைந்தோனே  இருகரம் ஏந்துகிறேன் அல்லாஹ் 
சங்கை மிகுந்தோனே சஞ்சலம் தீர்த்திடு யா அல்லாஹ்!
 உன்னையன்றி யார்தான் எனக்கு உதவிடுவார் அல்லாஹ்  ! 
என்று அவர் பாடிய பாடல்களைக் கேட்போர் தங்களின் துயரங்களைத் தாங்களே இறைவனிடம் முறையிடுவதாகவே உணர்ந்தனர்.

அதே நேரத்தில், சில கந்தூரி ஆதரவாளர்களை திருப்திப்படுத்த பல பாடல்களையும் பாடினார் என்பதையும் மறுக்க இயலாது . உதாரணமாக , ‘நமனை விரட்ட மருந்தொன்று விற்குது நாகூர் தர்ஹாவிலே’  என்ற பாடலையும் ‘அஜ்மீரின் ராஜா’ என்ற பாடலையும், ‘பகுதாதில் வாழும் ‘ என்கிற பாடலையும் குறிப்பிடலாம். நல்லவைகளை ஏற்போம் அல்லவைகளைத் தள்ளுவோம்.

“தூக்கத்திலும் உன்னை யோசிக்கிறேன் – என் 
துயரத்திலும் உன்னை நேசிக்கிறேன் 
தூயவனே உன்னை துதிக்கிறேன் – உன் 
துணையே கதியாய் நினைக்கிறேன். 
ஆசையுடன் உன்னை நாடுகிறேன்- அந்த 
ஆர்வத்திலேதான் பாடுகிறேன் 
இறைவா! உன்னைத் தேடுகிறேன் –அந்த 
ஏக்கத்திலேதான் பாடுகிறேன் . 
அல்லாஹு என அழைக்கின்றேன் – அந்த 
அழைப்பினில் ஆனந்தம்  அடைகின்றேன் 
ஆயிரம் முறை உன்னைத் துதிக்கின்றேன் – உன் 
ஆதாரம் நாடி அழைக்கின்றேன் .” – என்ற பாடலை மதங்களை மீறி முணுமுணுக்காத உதடுகளே இல்லை.

படிப்பினைகளை எளிய முறையில் பாமரர்க்கும் சொல்லிய விதத்தில் அமைந்த “ பிஸ்மில்லாஹ் என்று ஆரம்பம் செய்யுங்கள் “ , “ எல்லா நோய்க்கும் மருந்துண்டு குர் ஆனிலே “ என்ற பாடல்களும் “ அல்லாஹு அக்பர் என்று முழங்கும் அழகிய தலமே  பள்ளிவாசல் ! “ போன்ற பாடல்களும் ஈர்க்காத நெஞ்சங்களை எல்லாம் ஈர்த்தன.

"காண கண் கோடி வேண்டும் காபாவை"என்ற பாடல்,   ஹஜ் கடமையின் முழுச்  செயல்பாடுகளையும்  நமது கண் முன் காட்சி படுத்தும்..

வரலாற்று நிகழ்வுகளை சொல்லும் வகையில் அமைந்த “ பெரியார் பிலாலின் தியாக வாழ்வைக் கூறுவேன் இதோ! “ போன்ற பாடல்களும் “ “பைத்துல் முக்கத்தஸ்”  போன்ற  பாடல்களும் பெரும் புரிந்துணர்வையும் தாக்கங்களையும்  ஏற்படுத்தின. பிற மத சகோதர்களும் எளிதில் புரிந்து கொள்ளும்  விதத்தில் அவை அமைந்து சிறந்தன.

பெண்களுக்கு அறிவுரைகள் சொல்லும் விதத்தில் அமைந்த “கண்ணுக்கு இமை போன்ற பெண்ணே! “ என்கிற பாடலும் குழந்தைகளுக்குப் பாடமாக அமையும் வண்ணம் “ பாங்கின் ஓசை கேட்கும் நேரம் பாப்பா எழுந்திரு கண்ணே பாப்பா எழுந்திரு ! காலை பஜ்ருத் தொழுது இறையை வணங்கி பாடம் படித்திடு “ என்கிற பாடலும் படிப்பினைகளை பந்திக்குக் கொண்டுவைத்த பாடல் விருந்துகள்.

பெங்களூர் ரமணி அம்மாள் என்பவர் ஒரு பிரமாதமான  பக்திப் பாடகி. அவர் பாடிய , பால் மணக்குது பழம் மணக்குது என்கிற பாடல் அந்தக் காலத்தில் மிகவும் புகழ் பெற்ற பாடலாகும். அந்தப் பாடலைத் தழுவி , “அருள் மணக்குது! அறம் மணக்குது! அரபு நாட்டிலே” என்ற  பாடலைப் பாடினார். அந்தப் பாடலில் ,

“எல்லோருக்கும் ஏற்ற வழி 
எம்மதமும் போற்றும் வழி 
அல்லாஹ் உந்தன் அன்பு வழி 
அமைத்தவர் யாராம் அண்ணல் நபிகள் நாதராம் 
அவர் பிறந்து வந்தாராம் – கண்களைத்  
திறந்து வைத்தாராம். “ என்ற   நெற்றியடியான அந்தப்பாடலின் வரிகளை இலகுவாக மறக்க இயலாது.

கடைய நல்லூரைச் சேர்ந்த ஆறுமுகம் என்கிற ஒரு ஆட்டோ ஓட்டும் தொழிலாளி இஸ்லாத்தைத் தழுவினார். அவரது ஆட்டோவில் எப்போதும் முழங்குவது இ எம் ஹனிபாவின் பாடல்கள்தான் . அவரை இஸ்லாத்தை தழுவும்படி தூண்டிய செயல் எது என்று பத்திரிகையாளர்கள் வினவியபோது அவர் சொன்னது , “ பகைவர்களையும் மன்னிக்கும் தன்மையுடைய பெருமானார் ( ஸல் ) அவர்களின் மாண்பை விளக்கும் இ எம் ஹனிபா பாடிய , “அதிகாலை நேரம் சுபுஹுக்குப் பின்னே”  என்கிற பாடல் என்னை மிகவும் சிந்திக்கத் தூண்டியது. அதன் விளைவே நான் இஸ்லாத்தைத் தழுவ காரணமாயிற்று “ என்றார். பெருமானார் ( ஸல்) அவர்களின் வரலாற்றில் இந்த சம்பவத்தைப் பற்றி சில சந்தேகங்கள் இருப்பது வேறு விஷயம். ஆனால் இந்த சம்பவம் ஒரு பாமரரைப் பாதித்தது என்பதே நாம் கவனிக்க வேண்டியதாகும்.

இப்படி எத்தனையோ இஸ்லாமிய பாடல்களை முஸ்லீம்கள் மட்டும் அல்லாமல் அனைத்து தரப்பு மக்களின் இதயங்களிலும் தீர்க்கமாகவும் திடமாகவும்  பதித்து விட்டு இசை முரசு இவ்வுலக வாழ்வை நீத்து  விட்டார்.

இன்று திமுகவின் பிரசார பீரங்கிகளாய் ஆயிரம் பேர் வந்தாலும் பட்டி தொட்டியெல்லாம் "கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே "பாடல் தொடங்கி பல கொள்கை பாடலை பாடி திமுகவை வளர்த்தவர்.

தமிழ் மீது தீராத பற்று கொண்ட இசைமுரசு பாடிய "பாண்டியர் ஊஞ்சலில் ஆடி வளர்ந்த பைந்தமிழ் அணங்கே! "என்ற பாடல் தமிழ் மொழியின் சிறப்பை விளக்கும்..

அண்ணா அவர்கள் இறந்து போன நேரத்தில் ஆறுதலாகப் பாடிய “தமிழ் இருக்கும் திசை எல்லாம் தேடுகிறேன் உன்னை ! எங்கே சென்றாய்? எங்கே சென்றாய்? எங்களை ஏங்கவிட்டு எங்கே சென்றாய் ? “  என்று பாடி அண்ணா இறந்த போது துன்ப உணர்வு கொண்ட  பலரின் உணர்வுகளை தனது குரலால்   வெளிப்படுத்தினார்.

திமுக ஒன்றாக இருந்த காலத்தில் எம்ஜியாரைப் பற்றி
காய்ந்து சிவந்தது சூரிய காந்தி 
கனலில் தொய்ந்து சிவந்தது காய்ச்சிய தங்கம் 
ஆய்ந்து சிவந்தது அறிஞர் தம் நெஞ்சம் –தினமும் 
ஈந்து சிவந்தன எம்ஜியார் இருகரமே ! 
எங்கள் வீட்டுப் பிள்ளை ! ஏழைகளின் தோழன் ! 
தங்க குணம் கொண்ட  எங்கள் மன்னன் 
மக்கள் திலகம்  எங்கள் எம்ஜியார்  அண்ணன் – என்று பாடினார்.
ஆனால்  எம்ஜியார்  திமுகவில் இருந்து விலக்கப்பட்டபோது – அதன்பின் அதிமுக என்று புதிய கட்சி கண்டபோது ,
“வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா 
வஞ்சகரின் சூழ்ச்சியிலே வீழ்ந்ததடா! சாய்ந்ததடா” என்று சாடினார்.

ஓரிரு  திரைப்படங்களில் மட்டும்  பலரின் வேண்டுகோளுக்கு இணங்க பாடினார். பாவமன்னிப்பு என்ற படத்தில் எல்லோரும் கொண்டாடுவோம் என்ற பாடலின் தொடக்கத்தில் இசை முரசு அவர்கள் முழங்கும் பாங்கொலி பலரை ஈர்த்தது. பிற மதத்தவர்கள் ,  அதன் பொருளைக் கேட்டுத் தெரிந்து கொண்ட செய்திகளெல்லாம் உள்ளன.

கலைஞர் முதல்வராக இருந்த போது தமிழ்நாடு வக்பு வாரியத்தலைவராக சிலகாலம் பணியாற்றினார். வாணியம்பாடி தொகுதியில்  திமுகவின் சார்பில் சட்டமன்ற உறுப்பினருக்கான இடைத் தேர்தலில் போட்டி இட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். சிலகாலம் தமிழக மேலவை உறுப்பினராகவும் பணியாற்றினார்.

மத நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர்  இசைமுரசு. அவரது குரல் அடங்கி இருக்கலாம். அவர் வாழ்ந்தகாலத்தில் அவரது குரல் சாதித்த சாதனைகள் ஏராளம். அவரது பாடல்களைப் பற்றி ஒரு தரப்பில் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனாலும் அனைத்தையும் மீறி அவர் மீது ஈர்ப்பு  இருப்பதை மறுக்க இயலாது. அல்லாஹ் அவரை பொருந்திக் கொள்வானாக!

இறைவனிடம் இசைமுரசுக்காக கை ஏந்துவோம் ! அவன் இல்லை என்று சொல்வதில்லை. பொறுமையுடன் கேட்டுப் பார்ப்போம் அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை.
இப்ராஹீம் அன்சாரி M.Com.,
எழுத்தாளர் - சமூக ஆர்வலர் - மகளிர் கல்லூரி துணை முதல்வர்

16 comments:

  1. மத நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர் இசைமுரசு. அவரது குரல் அடங்கி இருக்கலாம். அவர் வாழ்ந்தகாலத்தில் அவரது குரல் சாதித்த சாதனைகள் ஏராளம். அவரது பாடல்களைப் பற்றி ஒரு தரப்பில் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனாலும் அனைத்தையும் மீறி அவர் மீது ஈர்ப்பு இருப்பதை மறுக்க இயலாது. அல்லாஹ் அவரை பொருந்திக் கொள்வானாக!

    ReplyDelete
  2. மத நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர் இசைமுரசு. அவரது குரல் அடங்கி இருக்கலாம். அவர் வாழ்ந்தகாலத்தில் அவரது குரல் சாதித்த சாதனைகள் ஏராளம். அவரது பாடல்களைப் பற்றி ஒரு தரப்பில் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனாலும் அனைத்தையும் மீறி அவர் மீது ஈர்ப்பு இருப்பதை மறுக்க இயலாது. அல்லாஹ் அவரை பொருந்திக் கொள்வானாக!

    ReplyDelete
  3. மத நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர் இசைமுரசு. அவரது குரல் அடங்கி இருக்கலாம். அவர் வாழ்ந்தகாலத்தில் அவரது குரல் சாதித்த சாதனைகள் ஏராளம். அவரது பாடல்களைப் பற்றி ஒரு தரப்பில் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனாலும் அனைத்தையும் மீறி அவர் மீது ஈர்ப்பு இருப்பதை மறுக்க இயலாது. அல்லாஹ் அவரை பொருந்திக் கொள்வானாக!

    ReplyDelete
  4. எழுத்தாளர் - சமூக ஆர்வலர் - மகளிர் கல்லூரி துணை முதல்வர் அவர்களின் கட்டுரைகள் பல அவப்போது படித்ததுண்டு. நல்ல எழுத்து நடை, கருத்துக்களை சேகரித்து ஒருங்கிணைத்து தருவதும் ஈர்க்கும்படி இருக்கும். ஆனாலும் அவர்கள் அறிந்ததுதான் உண்மை என்று எழுதும் சிலவற்றை மரியாதை நிமித்தம் கண்டும் காணாததும் போல சில நேரங்கள் இருக்க முடியாமலும் ஆகிவிடுகின்றது.

    மர்ஹூம் நாகூர் இ. எம். ஹனிபா அவர்கள் பாடிய எல்லாப் பாடலையும் கவனித்தால் அதில் அவர்கள் மிகவும் ஈடுபாடோடு எழுதியோரின் உணர்வின் உண்மைகளை ஏற்றவராகவே பாடியிருப்பார். அவர்கள் அறிந்த கண்ட உண்மையின் வெளிச்சங்கள் யாருக்கும் புரியவில்லை என்றால் மாறு எண்ணங்களை பதியாமல் மௌனியாக இருப்பதும் உயர்வே. அதைவிடுத்து தாம் அறிந்தவைகளே உண்மைகள் அதற்குமேல் வேறுகள் இருக்க விதியில்லை என்பது எந்தவகை தர்மம் புரியவில்லை.

    அந்தகால நினைவுகளை எல்லாம் அழகாக பதிதல் தாங்களின் தனித் திறமை என்பதும் மறுக்க முடியாததே. ஆனாலும் கந்தூரி போன்ற நிகழ்வுகள் காலத்தால் கைகள் ஓங்கியோர் எண்ணப்படி ஆக்கிரமிப்புகளை கொண்டுவிட்டது. அதனுள் கலந்ததவைகளை அகற்றாமல் கந்தூரியே ஷிர்க் எனவெல்லாம் எழுத்துதல் ஏற்றவர்கள் மனம் வேதனைப்படாதா ? ஏற்றுக்கொண்ட விளங்கியோர்களின் விளக்கங்களை விளங்கிக்கொள்வது, உணவுகள் பரிமாறுவது தவறென்றால், பலப்பலத்தின் உருசியை முட்களால் இழந்துவிடுதலே அன்றி வேறில்லைதானே !

    முட்களாக கணித்தது முள்லல்லா காணும் வழிதனில் வாசம் தரும் மலரே. அல்லாஹ்வை அறிந்துக்கொள்வதும், அத்தகைய வல்லவனை அறிந்தோர்களை அறிந்துக்கொள்வதும் கடினமானதே.

    கட்டுரையில் மனதை வாடவைத்தது //அதே நேரத்தில், சில கந்தூரி விரும்பிகளை திருப்திப்படுத்த பல ஷிர்க் ஆன பாடல்களையும் பாடினார் என்பதையும் மறுக்க இயலாது . உதாரணமாக , ‘நமனை விரட்ட மருந்தொன்று விற்குது நாகூர் தர்ஹாவிலே’ என்ற பாடலையும் ‘அஜ்மீரின் ராஜா’ என்ற பாடலையும், ‘பகுதாதில் வாழும் ‘ என்கிற பாடலையும் குறிப்பிடலாம்.//

    //பெருமானார் ( ஸல்) அவர்களின் வரலாற்றில் இந்த சம்பவத்தைப் பற்றி சில சந்தேகங்கள் இருப்பது வேறு விஷயம்.//
    பெருமானாரின் அகமியங்களை புரிந்துக்கொள்வது மிகக் கடினமானதே.

    //அவர் வாழ்ந்தகாலத்தில் அவரது குரல் சாதித்த சாதனைகள் ஏராளம். அவரது பாடல்களைப் பற்றி ஒரு தரப்பில் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனாலும் அனைத்தையும் மீறி அவர் மீது ஈர்ப்பு இருப்பதை மறுக்க இயலாது. அல்லாஹ் அவரை பொருந்திக் கொள்வானாக!// உண்மைகள் இருப்பதனால்தான் ஈர்ப்பு இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாகுமா ?

    எழுதாமல் இருக்கமுடியவில்லை என்பதாலே எழுதினேன். அதனால் பதில்கள் காண வேண்டுமென்பதுமில்லை. நியாயங்கள் மனதில் கொண்ட சாரத்தின்பால் சுரப்பதும் இயற்கை. அதனை அறியவிரும்பவுமில்லை. இறைவா ! உந்தன் உண்மையை நல்லவர்களுக்கு உணர்ந்துக்கொள்ளும்படி எல்லோரும் வேண்டுவோமாக !

    ReplyDelete
  5. //அவரது பாடல்களைப் பற்றி ஒரு தரப்பில் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனாலும் அனைத்தையும் மீறி அவர் மீது ஈர்ப்பு இருப்பதை மறுக்க இயலாது. அல்லாஹ் அவரை பொருந்திக் கொள்வானாக! //

    இப்ராஹீம் அன்சாரி காக்கா குறிப்பிட்டுள்ள இந்த வரிகள் முற்றிலும் உண்மையே.!

    அல்லாஹ் அவர்களின் பிழையை பொறுத்து நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்ப்பானாக !

    ReplyDelete
  6. குரல் கதிரவனின் ஒளிபெற்றே, மற்றப் பாடகச் சந்திரன்கள் இவரின் குரலொலியின் கதிர்வீச்சைப் பெற்று உலா வந்தாலும், இந்த ஆளுமை மிக்க ஆதவனை மறைக்கவோ, மறுக்கவோ, மறக்கவோ இயலாத வண்ணம் வாழ்வின் இறுதி நாள் வரைக்கும் அதே “கணீர்”என்ற குரலுக்குரியவராய்த் திகழ்ந்தார் என்பதே வியப்பிலும் வியப்பு; மெய்மையிலும் மெய்மையாகும்!!

    மரபுப் பாக்களின் ஓசை நயமும், அரபுச் சொற்களின் அழகு உச்சரிப்புகளும் இவரின் நாக்கு வழியாக நயம்பட வெளிவந்தன; இந்த நாகூராரின் நா- கூர் என்பதற்கு இதுவே காட்டாகும்.

    இறையருட்கவிமணி பேராசிரியர் கா.அப்துல் கஃபூ சாகிப், கிளியனூர் கவிஞர் அப்துஸ்ஸலாம், நாகூர் கவிஞர் சலீம் ஆகியோரின் மரபிலக்கணம் வழுவாத ஓசை நயமிக்க வரிகளின் கவிதைச் சமையலை, இந்தப் பாடகரின் நாவால் பாடல் வரிகள் விருந்து பறிமாட்டப்பட்டதால், எழுதியவர்களின் வரிகள் கூட இந்தப் பாடகரின் வரிகள் தான் என்று மக்கள் நினைக்கும் வண்ணம் இன்றும் ”இறைவனிடம் கையேந்துங்கள்” என்னும் பாடலுக்குரியவர் இவர்தான் என்று மக்கள் நினைக்கின்றனர்(இவரின் வரிகள் என்றே நினைக்கின்றனர்) அந்த அளவுக்கு எழுதியவரை விட அதனைப் பாடிய இவர் எழுச்சிப் பெற்றார்; இதுவே இவரின் திறமைக்குக் காட்டாகும்

    பா, கூர்மை பெற்றுப் பளிச்சிடவே பாடியது
    நாகூர் ஹனிபாவின் நா.


    என்னைப் போன்ற மரபுக் கவிஞர்களுக்கு இவரின் இறப்பு ஓர் அதிர்ச்சியான பேரிழப்பாகும். ஆம். எங்களின் மரபின் ஓசைக்கு மடங்கும் நா கூரான நாகூர் ஹனீபா இல்லாமல் எங்கள் பாக்களை இத்துணை அழகாக உச்சரித்துப் பாட யார் உண்டு இவர் போல்?

    ReplyDelete
  7. அல்லாஹ் அவர்களின் பிழையை பொறுத்து நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்ப்பானாக !
    Very good article Ibrahim Ansari

    ReplyDelete
  8. இப்ராஹீம் அன்சாரி காக்காவின் அருமையான நினைவூட்டல் கட்டுரை.

    மர்ஹூம் டைரி சேக் அப்துல் காதர் அப்பாவுக்கும் மர்ஹூம் நாகூர் ஹனீபாவுக்கும் உள்ள நட்பு மிக அலாதியானது என்று டைரி அப்பா கூற கேட்டுள்ளேன். அதேபோல உதுமான் காக்காவுக்கும் நாகூர் ஹனீபாவுக்கும் நல்ல நட்பு இருந்து வந்துள்ளது. உதுமான் காக்கா குடும்பத்தின் அனைத்து திருமண நிகழ்ச்சிகளிலும் நாகூர் ஹனீபாவின் கச்சேரி அரங்கேறியுள்ளது.

    ReplyDelete
  9. அன்புள்ள முகைதீன் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

    தங்களின் அன்பான கருத்துக்களுக்கும் அறிவுரைகளுக்கும் நன்றி. என் சார்பான தவறான வார்த்தைகளுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
    நான் சொல்வதுதான் உணமை என்ற ஆணவத்தில் நான் எழுதுவது இல்லை. அவ்வாறு ஒரு கணிப்பு உங்கள் மனதில் ஏற்பட நான் காரணமாக இருந்து இருந்தால் இறைவனிடம் மன்னிப்புக் கோருகிறேன்.

    ஒவ்வொருவருக்கும் சிலவற்றில் தனிப்பட்ட பார்வை இருக்கும். உங்கள் பார்வையை பதிவு செய்வதை எதுவும் தடுக்க இயலாது. அந்த வகையில் உங்களின் கருத்தை வரவேற்கிறேன். மீண்டும் நன்றி.

    ReplyDelete
  10. அல்லாஹ் அவர்களின் பிழையை பொறுத்து நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்ப்பானாக !
    Very good article Ibrahim Ansari

    ReplyDelete
  11. Mohideen Said

    //ஆனாலும் அவர்கள் அறிந்ததுதான் உண்மை என்று எழுதும் சிலவற்றை மரியாதை நிமித்தம் கண்டும் காணாததும் போல சில நேரங்கள் இருக்க முடியாமலும் ஆகிவிடுகின்றது//

    நான் எழுதுவதுதான் உண்மை என்று வம்படியாக நிலை நிறுத்த எடுத்துக்கொண்ட உதாரணங்களைத் தந்தால் என்னைத் திருத்திக் கொள்ள உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  12. இப்ராஹீம்அன்சாரியுடையஇந்தகட்டுரையி யின் மூலம் இ.எம்.ஹனிபாவை பற்றிய பல விசயங்களைநான் தெரிந்துகொண்டேன்.அவருக்குதெரிந்தவரைதான்எழுதமுடியும். /அவர்எழுதுவதுதான்உண்மையென்று//வாதாடியநிகழ்வையும்வாசகர்களுக்குதெரியப்படுத்தினால் நன்றாகஇருக்கும்.ஒருவரைகுற்றவாளிஎன்றுசொல்லிவிட்டு செய்தகுற்றத்தை கூறாமல் விட்டால் அதை எந்த நீதிமன்றமும் ஏற் க்காது .மக்கள் கைகொட்டி சிரிப்பார்கள் .

    ReplyDelete
  13. கண்ணியமிகு எழுத்தாளர் - சமூக ஆர்வலர் - மகளிர் கல்லூரி துணை முதல்வர் தங்களுக்கு,

    தான் அறிந்த, தான் ஏற்றுக்கொன்டக் கருத்தைத் தான் ஒருவர் கட்டுரையில் செய்திகளாக எழுத முடியும். அவ்வகையில் எழுதிய விளக்கங்களைப் படிப்போர் எழுதிய ஆசிரியரின் கருத்தாகத்தான் எடுக்கமுடியும். அவ்வாறு அவர்கள் எழுதியது அவர்கள் மனம் உண்மைதான் என அறிந்து ஏற்றக் கொண்டக் கருத்தாகத்தான் இருக்கமுடியும். அதைத்தான் அவர்கள் எழுத நேரிடும். அதனால் // அவர்கள் அறிந்ததுதான் உண்மை என்று எழுதும் சிலவற்றை// என்று எழுதினேன். ஆசிரியர் எதைச் சொல்லவருகிறார் என்பதைப் புரிந்துக்கொள்ளவேண்டித்தான் எழுதுகிறார். அடுத்தவர் மனதில் புகுத்த வேண்டும் என்ற "வம்படியாக" என்றச் சொல்லை நான் உபயோகிக்கவில்லை. எழுதியக் கருத்துக்களை படிப்பவர்கள் செய்திகளாக பொதுவாக ஏற்றுக்கொள்வது இயல்பு.

    தாங்கள் போன்றோர்கள் விபரமானவர்கள். ஆனாலும் கந்தூரி சம்பந்தப்பட்ட தங்களது செய்திகளில் 'ஷிர்க்' என்ற வார்த்தை முன்னரும் பயன்படுத்தியிருப்பதை கண்டுள்ளேன். அதை ஏற்க இயலாமையால் கருத்திட்டேன். இறைவனை அறிந்து நெருங்கிய மகான்களை மரியாதைகள் செய்யப்படுவதை 'ஷிர்க்' எனக்கொண்டால் வழிகாட்டப்பட்ட வணக்கம் அவ்வாறு இல்லையே ? நடத்தப்படும் கந்தூரிகளில் சிலவைகள் காலவோட்டத்தில் புகுத்தப்பட்டதைத் தடுக்க, நீக்க வேண்டும் என்பது அன்றி கந்தூரியே தவறு என்ற கோணத்தில் புரிதல் உண்டாகும் சொற்கள்(கந்தூரி விரும்பிகள்) படிக்க வேதனை ஏற்பட்டது. தாங்கள் உயர்ந்தவர்கள் தங்கள் மனம் புன்பட்டிருந்தால் வருந்துகிறேன். கருத்துப் பரிமாற்றத்திற்காக இதை எழுதினேன்.

    ReplyDelete
  14. அன்புள்ள அதிரை நியூஸ் ஆசிரியர் அவர்களுக்கு,

    ஷிர்க் என்கிற வார்த்தை சில நண்பர்களை புண்படுத்துவதாக அவர்கள் உணர்வதால் அந்த வார்த்தையை நீக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    மகான்கள் மரியாதை செய்ய ப் படுவதன் முறைகளில் அத்துமீறல்கள் வந்துவிட்டதால்தான் அத்தகைய வார்த்தைகள் பலராலும் துரதிஷ்டவசமாக பயன்படுத்தபடுகின்றன.

    கருத்துப் பரிமாற்றம் என்றும் வரவேற்கத் தகுந்தது. தெரிந்தவர்கள் மேலும் தெரிந்து கொள்ளலாம். தெரியாதவர்களும் விளங்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு தனி மனிதரிடமும் ஒரு பொறி இருக்கும் அது பலருக்கும் உதவலாம்.

    ஜசாக் அல்லாஹ் ஹைரன் அன்புள்ள முகைதீன்.

    ReplyDelete
  15. அற்புதமான வெண்கல குரல் , அழுத்தமான தமிழ் உச்சரிப்பு , எவரையும் ஈர்க்கின்ற லயம் என்று தனக்கென ஒரு பாணியை உருவாக்கி அதில் கடைசிவரை முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் E M ஹனீபா . . இறைவனிடம் கை ஏந்துங்கள் என்ற பாடல் எல்லா மதத்தினரும் தங்கள் அலைபேசியின் அழைப்பு ஒலியாக வைத்திருக்கிறார்கள். சமூக அமைப்புகள் இவரைப் பற்றி விமர்சனங்கள் செய்தாலும் அவரின் பாடல்கள் அவர்களின் மனதில் ஒலியத்தான் செய்கிறது. காலத்தை வென்றவரின் பாடல்கள் என்றும் நிலைத்த்திருக்கும். அவரின் நினைவுகள் பற்றி எழுதிய சிறப்பு கட்டுரை அருமை - வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.