.

Pages

Wednesday, April 8, 2015

இவரை நாமும் அறியவேண்டும்



பொதுவாக தனி ஒரு மனிதனால் எந்தவொரு செயலிலும் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்க முடியாது, ஊர்கூடி இழுத்தால்தான் தேர் நகரும் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், அதையெல்லாம் மீறி தனி ஒரு மனிதன் நினைத்து உத்வேகத்தால் செயல்பட்டால், எந்தவொரு மாற்றத்தையும் செய்ய முடியும் என்பதை நிரூபித்த ஒரு சாமானியன், குக்கிராமவாசி இன்று மத்திய அரசாங்கத்தின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை பெறப்போகிறார். இந்த ஆண்டு இந்த பத்ம விருது பெற்றவர்களில் பலர் நிச்சயமாக அவர்களின் சேவைக்காக போற்றப்பட வேண்டியவர்கள். அதேநேரத்தில் சாமானியர்களும் அவர்களின் உன்னத சேவையால் இந்த உயரிய விருதை பெறமுடியும் என்ற வகையில், எங்கோ நாட்டின் மூலையில் உள்ள ஒரு சமூகசேவகரின் செயலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் அன் சங் ஹீரோ என்பார்கள். அதாவது சிலரின் உயர்ந்த சேவைகள் உலகுக்கே தெரியாதவகையில், அந்த மாமனிதர்களின் தியாகங்கள் அங்கீகரிக்கப்படாமல் இருக்கும். அப்படி ஒருவரை தேடிப்பிடித்து, இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசாங்கம் வழங்கியுள்ளது பாராட்டுக்குரியது.

பத்மஸ்ரீ பட்டியலில் 36–வது எண்ணில் இருந்த காட்சிக்கு எளியவரான ஒரு பாமர மனிதர் இந்தியாவின் முதல் குடிமகனான ஜனாதிபதியின் பொற்கரங்களினால் பத்மஸ்ரீ பட்டத்தை பெறப்போகிறார். யார் இந்த அருமனிதர்? என்பதை நாடு அறிந்தால்தான் அவரை மற்றவர்களும் பின்பற்ற முடியும். அவர் பெயர் ஜாதவ் மோலை பெயங். இந்தியாவின் வனமனிதர் என்று அழைக்கப்படுபவர். அசாம் மாநிலத்தில் உள்ள ஜோர்ஹாத் மாவட்டத்தைச் சேர்ந்த மோலை கதோனி என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். 1979–ம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு பெருவெள்ளம் அந்த கிராமத்தையும், அதன்பக்கத்தில் உள்ள ஊர்களையும் அழித்துவிட்டது. அந்தநேரத்தில் அரசாங்கம் அந்த ஊரின் அருகில் உள்ள சந்த்பார் என்ற தரிசு பகுதியில் மரம் நடும் பணிகளில் பெயங்கையும் மற்றும் சில தொழிலாளர்களையும் ஈடுபடுத்தியது. மற்றவர்களெல்லாம் ஏதோ வேலை செய்தோம், கூலி கிடைத்தது என்று போய்விட்ட நிலையில், ஜாதவ் பெயங் மட்டும் அந்த பகுதியில் உள்ள ஏறத்தாழ 1,400 ஏக்கர் தரிசு நிலத்தையும் அடர்ந்த காடாக ஆக்குவேன் என்று உறுதிபூண்டு, முதலில் மூங்கில் மரக்கன்றுகளை நடத்தொடங்கி, தொடர்ந்து அனைத்து மரக்கன்றுகளையும் தனி ஆளாக நடத்தொடங்கினார். தன் பிழைப்புக்காக பசுமாடுகள், எருமைகளை வளர்த்து, அதன் பாலை வைத்து பிழைப்பு நடத்துகிறார். ஏழ்மை அவர் லட்சியத்துக்கு குறுக்கே நிற்கவில்லை. 1979–ம் ஆண்டு தொடங்கிய அவரது முயற்சியால், இன்று அந்தப்பகுதி அடர்ந்த காடாகிவிட்டது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களைக்கொண்ட இந்த காடு இப்போது காண்டாமிருகங்கள், சிறுத்தைகள், யானைகள், முயல்கள், குரங்குகள், பறவைகள், பாம்புகள், கழுகுகள், மான்கள், காட்டுப்பன்றிகள், மாடுகள் என ஏராளமான மிருகங்கள், பறவைகளுக்கு வாழ்விடமாக ஆகிவிட்டது.

கிராமங்களில் நல்ல மாடு உள்ளூரில் விலை போகாதுஎன்பார்கள். அதுபோல, இவரது அரும்பெரும் முயற்சியைக்கண்டு முதலில் 2012–ம் ஆண்டு பாரீசில் நடந்த உலக வெப்பமயமாதல் மாநாட்டில்தான் அவரை அழைத்து கவுரவப்படுத்தினார்கள். அதன்பிறகுதான் இவரை இந்தியாவில் அடையாளம் கண்டுகொண்டார்கள். தனி ஒரு மனிதன் என்றாலும், அவன் நினைத்தால் எந்த லட்சியத்தையும் நிறைவேற்றமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் பெயங் முயற்சியையும், வாழ்க்கையையும் இந்தியா முழுவதும் அறியச்செய்து, எல்லா இடங்களிலும் இதுபோல காடுகளை மக்கள் உருவாக்க மத்தியமாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கலாமே!

கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.