.

Pages

Wednesday, March 21, 2018

அமீரகத்தில் தொழிலாளர்கள் வேலை நேர சட்டங்கள் பற்றிய சில முக்கிய விளக்கங்கள் (முழு விவரம்)

அதிரை நியூஸ்: மார்ச் 21
அமீரகத் தொழிலாளர் நல அமைச்சகம் தொழிலாளர்களின் வேலை நேரங்கள் மற்றும் அதன் உரிமைகள் குறித்து கீழ்க்காணும் சில விளக்கங்களை வெளியிட்டுள்ளது.

அதிகப்பட்ச வேலை நேரம் எவ்வளவு?
1. தொழிலாளர்கள் சாதாரணமான வேலைகளில் தினம் 8 மணிநேரம் அல்லது வாரத்திற்கு 48 மணிநேரம் வேலை செய்திட கடமைப்பட்டவர்கள்.

2. வர்த்தகம், ஹோட்டல், காபிட்டேரியாக்கள் உள்ளிட்ட உணவகங்கள், பாதுகாப்பு பணிகள் மற்றும் தொழிலாளர் நல அமைச்சகத்திடம் சிறப்பு அனுமதி பெற்ற சில தொழில்களுக்கும் தினம் 1 மணிநேரம் கூடுதலாக அதாவது 9 மணிநேரம் வேலை செய்ய அனுமதி உண்டு.

3. கடும் வேலை அல்லது தீங்கு விளைவிக்கக்கூடிய தன்மையுடைய வேலைகளின் பணி நேரத்தை தொழிலாளர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்று தினசரி வேலை நேரத்தை 8 மணிநேரத்திற்கும் குறைவாகவும் குறைத்துக் கொள்ளவும் செய்யலாம்.

4. புனித ரமலான் மாதத்தில் தினசரி அனுமதிக்கப்பட்ட வேலை நேரத்தில் இருந்து 2 மணிநேரங்கள் கண்டிப்பாக குறைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

வேலைக்காக பயணம் செய்து வரும் நேரம் தினசரி வேலை நேரத்தில் சேர்த்து கணக்கிடப்படுமா?
1. தொழிலாளர் தான் தங்கியிருக்கும் பகுதியிலிருந்து வேலை செய்யுமிடத்திற்கு பயணப்பட்டு வரும் நேரம் வேலை நேரத்துடன் இணைத்து கணக்கிடப்படாது.

இடைவேளை நேரங்கள் குறித்து விதிகள் என்ன?
1. தினசரி வேலை நேரங்கள் முறைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி ஒரு தொழிலாளி தொடர்ந்து 5 மணிநேரத்திற்கு மேலாக இடைவேளையின்றி வேலை செய்திட அனுமதியில்லை. அவருக்கு சிறு ஓய்வு, உணவு நேரம், தொழுகை நேரம் என ஒரு மணிநேரத்திற்கு குறையாத இடைவேளை வழங்கப்பட வேண்டும். இந்த இடைவேளை நேரம் மொத்த பணி நேரத்துடன் சேர்த்து கணக்கிடப்படாது.

2. 24 மணிநேரமும் தொடர்ந்து செயல்படும் தொழிற்சாலைகள், பணிமனைகள், தொழிற்நுட்பம் மற்றும் பொருளாதார காரணங்களினால் தடை ஏதும் ஏற்படாமல் தொடர்ச்சியாக பணியாற்ற வேண்டிய கட்டாயச் சூழல் நிலவும் இடங்களில் மட்டும் அமைச்சகத்தின் அனுமதியின் பேரில் உணவு, தொழுகை மற்றும் சிறு ஓய்வு இடைவேளைகள் போன்றவை வேலை நேரமாகவே சேர்த்து கணக்கிடப்படும்.

உங்கள் முதலாளி அல்லது நிறுவன நிர்வாகம் தொடர்ந்து அதிக நேரம் வேலை செய்ய நிர்பந்தித்தால் என்ன செய்வது?
1. சாதாரண வேலை நேரத்தைவிட கூடுதலாக வேலை செய்யும் ஒவ்வொரு மணிநேரமும் ஓவர்டைம் எனப்படும் கூடுதல் பணிநேரமாக கணக்கிடப்பட்டு உங்களுடைய அடிப்படை சம்பளத்தின் அளவின்படி மணிக்கணக்கில் கணக்கிட்டு சம்பளம் தருவதுடன் கூடுதலாக குறைந்தபட்ச அடிப்படை சம்பள அளவிலிருந்து 25% சம்பளமும் இணைத்து தர வேண்டும்.

உங்களுடைய வேலை நேரம் இரவு நேரமாக இருந்தால் அதற்கான விதி என்ன?
1. இரவு 9 மணிமுதல் அதிகாலை 4 மணி வரை வேலை ஓவர்டைம் எனும் கூடுதல் பணி செய்ய நேரிட்டால் அதற்கும் உங்களுடைய அடிப்படை சம்பளத்திலிருந்து மணிக்கணக்கில் கணக்கிட்டு தருவதுடன் கூடுதலாக அடிப்படை சம்பள கணக்கின் அடிப்படையில் 50% தர வேண்டும்.

2. ஒரு நாளைக்கு 2 மணிநேரம் மட்டுமே ஓவர்டைம் எனும் கூடுதல் வேலை பார்க்க அனுமதியுள்ளது. ஒருவேளை ஏதேனும் ஒரு அசம்பாவிதத்தை தவிர்ப்பதற்காக, ஏதேனும் ஒன்றை அகற்றுவதற்காக, முக்கியமானதொரு இழப்பை தவிர்ப்பதற்காக அல்லது மட்டுப்படுத்துவதற்காக அவசியப்பட்டால் மட்டுமே சூழலை கருத்திற்கொண்டு 2 மணிநேர ஓவர்டைம் நேரத்திற்கு மேலாக வேலை பார்க்க அனுமதியுண்டு.

வெள்ளிக்கிழமைகளில் வேலை செய்தால் அதற்குரிய விதிகள் என்ன?
1. தினசரி அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்களைத் தவிர வெள்ளிக்கிழமை பொதுவாக அனைத்து தொழிலாளர்களுக்கும் பொதுவானதொரு வாராந்திர ஓய்வு நாளாகும்.

2. வெள்ளிக்கிழமை வேலை செய்யும் நிர்பந்தம் ஏற்பட்டால் இதற்குப் பகரமாக இன்னொரு வேலை நாளில் ஓய்வு தரப்பட வேண்டும் அல்லது சம்பந்தப்பட்ட தொழிலாளருடைய அடிப்படை சம்பளத்தில் இருந்து மணிக்கணக்கில் சம்பளம் வழங்கப்படுவதுடன் கூடுதலாக அடிப்படை சம்பள அடிப்படையிலேயே குறைந்தபட்சம் 50% சம்பளமும் தரப்பட வேண்டும்.

3. தினசரி நாள் கணக்கில் வேலை செய்யும் தொழிலாளர்களைத் தவிர பிற தொழிலாளர்களை தொடர்ந்தாற்போல் 2 வாரத்திற்கு மேல் வெள்ளிக்கிழமைகளில் ஓவர்டைம் வேலைபார்க்க அனுமதிக்கக்கூடாது.

குறிப்பு:
1. கீழ்க்காணும் தற்போதைய விதிகள் கீழ் கூறப்பட்டுள்ள அத்தியாயங்களுக்கு பொருந்தாது.

2. ஒரு நிறுவனத்தில் மேனேஜர், உயர் கண்காணிப்பாளர் போன்ற உயர்மட்ட பதவிகளில் உள்ளவர்கள் தங்களின் முதலாளிகளின் சார்பாக தொழிலாளர்கள் மீது வேலையின் நிமித்தம் அதிகாரம் செலுத்த உரிமை பெற்றவர்களாவர். அதேபோல் தொழிலாளர் மற்றும் சமூக நல அமைச்சகத்தின் உத்தரவுகளையும் நடைமுறைப்படுத்த கடமைப்பட்டவர்களாவர்.

3. பணி மற்றும் பணியிடச் சூழலின் காரணமாக கப்பல்களில் பணியாற்றும் தொழிலாளர்களும், கடல்சார் வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்களும் பிரத்தியேக சலுகைகள் வழங்கப்பட்டுள்ளனர். எனினும், துறைமுகங்களில் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் அதன் சார்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இச்சிறப்பு சலுகைகள் பொருந்தாது.

விதி எண்: 73
1. ஒரு முதலாளி தனது நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து வகை ஊழியர்களும் பயன்படுத்தும் முக்கிய நுழைவுவாயில்கள் மற்றும் கூடுமிடங்களில் தொழிலாளர்களின் அந்தந்த வாரத்திற்குரிய வேலை அட்டவணை, வாராந்திர விடுமுறை நாள், வேலை நேரம், ஓய்வு நேரம் போன்ற விபரங்களை ஒட்ட வேண்டும் மேலும் அதன் விபரங்களை தொழிலாளர் நல அமைச்சகத்திற்கும் அனுப்ப வேண்டும்.

2. குறிப்பிட்டதொரு நாளை வாராந்திர பொது விடுமுறை நாட்கள் பின்பற்றப்படாத வேலைத்தளங்களில் வழங்கப்படும் சுழற்சி அடிப்படையிலான வாராந்திர விடுமுறை நாட்கள் குறித்த அட்டவணையையும் அந்நிறுவனத்தினர் தயாரித்து தொழிலாளர் நல அமைச்சகத்திடம் வழங்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு:
தகவல் மூலம் : அமீரக தொழிலாளர் அமைச்சகம்
தொழிலாளர் விவகாரங்களுக்கான கால் சென்டர் தொலைபேசி எண்: 800 665

அருகாமையிலுள்ள அமீரக தொழிலாளர் அமைச்சக அலுவலக அமைவிடங்கள்.


Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.