.

Pages

Thursday, January 31, 2019

மரண அறிவிப்பு ~ உம்முல் ஹபீபா (வயது 75)

அதிரை நியூஸ்: ஜன.31
அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அகமது ஹாஜா அவர்களின் மகளும், மர்ஹூம் அப்துல் மஜீது லெப்பை அவர்களின் மனைவியும், மர்ஹூம் பஷீர் அகமது, மர்ஹூம் ராஜிக் அகமது, ரியாஸ் அகமது ஆகியோரின் சகோதரியும், முகமது ஹாலித், தமீம் அன்சாரி ஆகியோரின் மாமியாரும், சேக்தாவூது, ஹாஜா நசுருதீன், அப்துல் பத்தாஹ், சாகுல் ஹமீது, நெய்னா முகமது ஆகியோரின் தாயாரும், பயாஸ் அகமது, பைசல் அகமது, பெரோஸ்கான், மன்சூர் அகமது, அசாருதீன் ஆகியோரின் மாமியுமாகிய உம்மல் ஹபீபா (வயது 75) அவர்கள் இன்று இரவு 7 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (1-02-2019) காலை 9.30 மணியளவில், கடற்கரைத்தெரு ஜும்மா  பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

தஞ்சை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (31.01.2019) வெளியிட்டார்.

இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்ததாவது : -
இந்திய தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (31-01-2019) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில்  திருவிடைமருதூர் சட்ட மன்ற தொகுதியில் 1,20,701 ஆண் வாக்காளர்களும்,  1,20,079 பெண் வாக்காளர்களும், 14 இதர பாலினத்தவர்களும், கும்பகோணம் சட்ட மன்ற தொகுதியில் 1,25,377 ஆண் வாக்காளர்களும்  1,29,554 பெண் வாக்காளர்களும்,  3 இதர பாலினத்தவரும். பாபநாசம் சட்ட மன்ற தொகுதியில் 1,20,539 ஆண் வாக்காளர்களும்,  1,23,505 பெண் வாக்காளர்களும்,  10 இதர பாலினத்தவர்களும். திருவையாறு சட்ட மன்ற தொகுதியில் 1,24,713 ஆண் வாக்காளர்களும், 1,28,991 பெண் வாக்காளர்களும்,  4 இதர பாலினத்தவர்களும்,  தஞ்சாவூர் சட்ட மன்ற தொகுதியில் 1,30,852 ஆண் வாக்காளர்களும்,  1,40,892 பெண் வாக்காளர்களும். 55 இதர பாலினத்தவர்களும், ஒரத்தநாடு சட்ட மன்ற தொகுதியில் 1,12,244 ஆண் வாக்காளர்களும்,  1,16,635 பெண் வாக்காளர்களும், 5 இதர பாலினத்தவர்களும், பட்டுக்கோட்டை சட்ட மன்ற தொகுதியில் 1,11,419 ஆண் வாக்காளர்களும், 1.20.049 பெண் வாக்காளர்களும்,  21 இதர பாலினத்தவர்களும், பேராவூரணி சட்ட மன்ற தொகுதியில் 1.03.450 ஆண் வாக்காளர்களும்,  1,05,929 பெண் வாக்காளர்களும், 6 இதர பாலினத்தவரும், ஆக மொத்தம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 9,49,295 ஆண் வாக்காளர்களும், 9,85,634 பெண் வாக்காளர்களும், 118 இதர பாலின வாக்காளர்கள் என 19,35,047 மொத்த வாக்காளர்கள் உள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியல் தங்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்களின் பார்வைக்காக 01-02-2019 முதல் வைக்கப்படவுள்ளது. வாக்காளர் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபாடின்றி, தவறு ஏதுமின்றி இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள தவறியவர்கள் 01-02-2019 முதல் புதிதாக பெயர் சேர்க்க படிவம் 6 ஐயும் (வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் படிவம் 6A மூலம்), பெயர் நீக்கம் செய்திட படிவம் 7 ஐயும், பெயர். முகவரி மற்றும் புகைப்படம் திருத்தம் இவற்றில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொண்டிட படிவம் 8 ஐயும், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்திட படிவம் 8A ஐயும் பூர்த்தி செய்து உரிய சான்றாவணங்களுடன் தொடர்புடைய  வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள தேர்தல் பிரிவில் அளிக்கலாம், நேரடியாக உரிய படிவத்தில் பூர்த்தி செய்து வழங்க இயலாத பொது மக்கள் ஆன்லைன் மூலமாகவும் www.nvsp.com மற்றும் www.elections.tn.gov.in ஆகிய இணைய தளங்களில் விண்ணப்பிக்கலாம்,

மேலும், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வாக்காளர் தொடர்பு மையம் செயல்பட்டு வருகிறது. வாக்காளர்கள் தங்களுக்கு தேவையான விபரங்களை அறிந்து கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1950ல் அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்,

மேலும், வாக்காளர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு அலைபேசியில் ஏடிவநசள ழநடpடiநே என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் இலவச செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு அதன் மு்லமாகவும். தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ள விபரத்தினை தெரிந்து கொள்ளலாம். மேற்படி செயலி மு்லமாகவும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க. நீக்கம் செய்ய மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்.  இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்,

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியாpன் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமீனாட்சி, தேர்தல் வட்டாட்சியர் ராமலிங்கம், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பேராவூரணியில் விவசாயிகளுக்கு தென்னை தொகுப்பு திட்டம்: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

பேராவூரணி ஜன,31-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் வேளாண்மைத் துறை சார்பில் 2018 கஜாபுயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வேளாண் அலுவலர் எஸ்.ராணி தலைமை வகித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில், "தமிழக அரசு இப்பகுதியில் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்து, அவர்களின் பொருளாதார, வாழ்வாதார மேம்பாட்டிற்காக பாடுபட்டு வருகிறது.

சுமார் ரூ 45 மதிப்பிலான தரமான தென்னங்கன்றுகள், பேராவூரணி வட்டாரத்தை சேர்ந்த 126 விவசாயிகளுக்கு 13,344 தென்னங்கன்றுகள் வழங்கப்படுகிறது. ஊடுபயிராக எள், உளுந்து மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது'' என்றார்.

நிகழ்ச்சியில், மாநில கயறு வாரியத்தலைவர் எஸ்.நீலகண்டன், அதிமுக ஒன்றியச் செயலாளர் உ.துரைமாணிக்கம், கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், பால் ஏ.பக்கர், கோ.ப.ரவி, பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆதனூர் ஆனந்தன், வேளாண்மை உதவி அலுவலர்கள் கோகிலா, தீபா, கார்த்திகேயன், ரவிச்சந்திரன், சசிகுமார், கண்காணிப்பாளர் குணசேகரன் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
 

Wednesday, January 30, 2019

இராஜகிரியில் தீ விபத்து: பாதிப்படைந்த குடும்பங்களுக்கு நிதியுதவி!

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், இராஜகிரியில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தினை வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை ஆகியோர் இன்று (30.01.2019) நேரில் பார்வையிட்டனர்.

இன்று (30.01.2019) அதிகாலை சுமார் 12.30மணியளவில் பாபநாசம் வட்டம், இராஜகிரி பெரிய பள்ளி வாசல் தெரு எதிரே உள்ள சந்து கேட் பஜார் தெருவில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் அப்பகுதியில் உள்ள உணவுக் கடை மற்றும் காய்கறி கடைகள் முழுவதுமாக சேதமடைந்தது. வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை ஆகியோர் தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும்,  தீ விபத்தில் சேதமடைந்த உணவுக்கடைகளின் உரிமையாளர்கள் முகமது ரபிக், சீராஜுதீன் மற்றும் காய்கறி கடை உரிமையாளர் சாதிக்அலி ஆகியோருக்கு தலா ரூ.10,000 வீதம் ரூ.30,000த்தினை வேளாண்மைத்துறை அமைச்சர் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.

இந்நிகழ்வின் போது முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ராம்குமார், முன்னாள் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் மோகன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் கோபிநாத், பாபநாசம் வட்டாட்சியர் மாணிக்கராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
 

மனிதநேய வார விழா நிறைவு (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ராஜராஜன் மணி மண்டபத்தில் இன்று (30.01.2019) நடைபெற்ற மனித நேய வார விழா நிறைவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை கலந்து கொண்டார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு  பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கி பேசியதாவது :-

மனித நேயம் என்பது சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றை கடந்து எல்லோரிடமும் இருக்கக் கூடிய ஒரு நற்பண்பாகும். பிரிவினையை தாண்டி பிற உயிர்கள் மீது அக்கறை கொள்வதே மனித நேயமாகும்.  மனித நேயத்தை அனைவரும் கடைப்பிடிப்பதனால் மட்டுமே சமுதாயத்தில் அமைதியும், ஒற்றுமையும் நிலவுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இளங்கோ, மாவட்ட வழங்கல் அலுவலர் அழகர்சாமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவீந்திரன், ஏராளமான மாணவ மாணவியர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
 

அதிராம்பட்டினத்தில் அபூர்வ பொட்டிக்கிழங்கு விற்பனை (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தின் பிரதான மார்க்கெட்டாக கருதப்படுகிற கடைத்தெரு பெரிய மீன் மார்க்கெட் பகுதியில் அப்பகுதியின் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான சில்லறை பெண் வியாபாரிகள் மார்க்கெட்டின் முகப்பு பகுதியில் வரிசையாக அமர்ந்து வியாபாரம் செய்வார்கள். இங்கு அந்தந்த காலக்கட்டங்களில் கிடைக்கும் பனங்கிழங்கு, இலந்தைப்பழம், நிலக்கடலை, சோளக்கதிர், மரவள்ளிக் கிழங்கு, சக்கரைவள்ளி கிழங்கு, பப்பாளி, வாழைப்பழம், கீரைவகைகள் , மாங்காய், மாம்பலம், நாவப்பழம், சீதாப்பழம், பலாப்பழம், கொய்யப்பழம் உள்ளிட்டவை விற்கப்படும். மார்க்கெட்டிற்கு மீன், இறைச்சி மற்றும் காய் கறிகள் வாங்க வரும் அன்றாட வாடிக்கையாளர்கள் இந்த பொருட்களை வீட்டிற்கு விரும்பி வாங்கிச்செல்வார். இதனால் இப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்படும்.

இந்நிலையில், வருஷத்தில் சில நாட்கள் மாத்திரம் அபூர்வமாகக் கிடைக்கும் பொட்டிக்கிழங்கு இன்று புதன்கிழமை காலை விற்பனைக்கு வந்தது. மருத்துவ குணம் வாய்ந்த பொட்டிக்கிழங்கை அதிகமானோர் வாங்கிச்சென்றனர். ஒரு சுண்டு (ஒரு குவளை அளவு) பொட்டிக்கிழங்கு ரூ. 20 க்கு விற்பனை ஆனது.

இதுகுறித்து மார்க்கெட் பகுதியில் பொட்டிக்கிழங்கு விற்பனை செய்யும் நாடியம்மாள் கூறியது;
'வருடம்தோறும் ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் மாத்திரம் பொட்டிக்கிழங்கு கிடைக்கும். வயல் பகுதிகளில் தானாக வளரக்கூடியது. சுமார் அரை அடி ஆழம் வரை தோண்டி பெரும் சிரமத்திற்கு மத்தியில் கிழங்கை எடுக்கிறோம். கிழங்கை சுற்றியுள்ள வேர்களை முழுவதும் பிடுங்கி எடுத்துவிட்டு நீரில் அவித்து விடுகிறோம். அவித்த கிழங்கு சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாக இருக்கும். மருத்துவக்குணம் வாய்ந்தது. உடல் ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது. பலதரப்பட்ட நோய்களுக்கு நிவாரணியாக விளங்குகிறது' என்றார்.
 
 
 

அதிராம்பட்டினத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்: ரூ.3,500 அபராதம் விதிப்பு!

அதிராம்பட்டினம், ஜன.30
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி பார்சல் கட்டப்பட்ட உணவுப் பொருட்களை பேரூராட்சி அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய, விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை உத்தரவின்படி தஞ்சை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ப.குற்றாலிங்கம் அறிவுறுத்தலின்படி, அதிராம்பட்டினம் பகுதிகளில் உள்ள கடைகளில் புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பேரூராட்சி செயல் அலுவலர் எல் ரமேஷ் தலைமையில், துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், மேற்பார்வையாளர் வெங்கடேசன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், அதிராம்பட்டினம் பகுதிகளில்  நடத்திய ஆய்வில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்காக இருப்பு வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

ஆய்வில், தடைசெய்யப்பட்ட 17 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ. 3,500 அபராதம் விதிக்கப்பட்டது.  உணவகங்களில் தடைசெய்யப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தி பார்சல் கட்டுவதும், தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதும் குற்றத்திற்குரிய செயல் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

செய்தி: மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு!

தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட  ஆட்சியரக அலுவலகத்தில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (30.01.2019) ஏற்கப்பட்டது.

மகாத்மா காந்தி நினைவு தினமான ஜனவரி 30ம் தேதி தியாகிகள் தினமாக நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை மலர் தூவி மரியாதை செலுத்தி அனைத்துத்துறை அலுவலர்களும் 2 நிமிடம் மௌனஞ்சலி செலுத்தி தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.

இதில் தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழியான இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன்/குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன்.   தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்க மாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன்.  அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதை உணர்வேன்.   இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால்  உளமார உறுதியளிக்கிறேன்” என மாவட்ட ஆட்சித்தலைவர் படிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில் கஜா மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு கூடுதல் திட்ட இயக்குநர் ராஜகோபால் சுன்கரா, வேளாண் இணை இயக்குநர் நெடுஞ்செழியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமீனாட்சி  மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
 

தேசிய மக்கள் கட்சி செயல் தலைவராக அதிரை எம்.எம் இப்ராஹீம் நியமனம்!

அதிராம்பட்டினம், ஜன.30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பிலால் நகரைச் சேர்ந்த தொழில் அதிபர் எம்.எம் இப்ராஹீம் (68). இந்நிலையில், தேசிய மக்கள் கட்சி தேசியத் தலைவர் கே.சங்மா ஒப்புதலின் பேரில், அக்கட்சியின் தமிழ்மாநில செயல் தலைவராக நியமனம் செய்து, அக்கட்சியின் மாநிலத் தலைவர் எம்.துரையரசன் அறிவித்துள்ளார். இதையடுத்து, அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி 6-வது ஆண்டு விழா: சாதனை மாணவர்கள் கெளரவிப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர்  பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி 6-வது ஆண்டு விழா பள்ளி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளித் தாளாளர் வீ. சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.  சிறப்பு விருந்தினர் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ கலந்துகொண்டு கல்வியில், விளையாட்டில் சாதனை நிகழ்த்திய மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள், நினைவுப்பரிசுகள் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். சிறப்பு அழைப்பாளர் திருச்சி சுமதி ஸ்ரீ கலந்துகொண்டு ஆண்டுவிழா உரை நிகழ்த்தினார்.

விழாவில், எல்கேஜி முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், கல்வி கட்டணச் சலுகைகள் வழங்கப்பட்டது.

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் ஏ. முகமது முகைதீன்,  ராஜஸ்தான் கோட்டா கேரியர் பாயிண்ட் பயிற்சி மைய மேலாளர் பிராசாந்த் ஜெயின், ஏ.மலைஅய்யன், பி.சுப்பிரமணியன், ஏ.பிச்சை, பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர், எஸ்.எம் முகமது முகைதீன், இராம.குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில், பள்ளிக் குழந்தைகள் பங்குபெற்ற பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. முன்னதாக, பள்ளி முதல்வர் என். ரகுபதி அனைவரையும் வரவேற்று, பள்ளி ஆண்டறிக்கையை வாசித்தார். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் நடப்பு கல்வியாண்டில் ஆற்றிய சாதனைகள் மற்றும் பள்ளியில் நடந்த முக்கிய நிகழ்வுகளைப் பட்டியலிட்டு பேசினார். விழா ஏற்பாட்டினை பள்ளி மேலாளார் எஸ்.சுப்பையன் செய்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 

Tuesday, January 29, 2019

திருச்சி இனாம்குளத்தூர் இஜ்திமா மாநாடு நிறைவு ~ நேரடி ரிப்போர்ட் (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜன.29
தமிழ்நாடு இஜ்திமா மாநாடு திருச்சி அருகே, இனாம்குளத்தூரில் ஜன.26, 27, 28 ஆகிய 3 நாட்கள் பிரமாண்டமாக நடைபெற்றது.

கடந்த 3 நாட்களாக நடைபெற்ற இந்த மாநாட்டில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு தொடர் சொற்பொழிவு ஆற்றினர். இதில், இறையச்சம், வாழ்வியல் நெறிமுறைகள், நற்பண்புகள், மறுமை வாழ்வு பற்றிய சிந்தனைகள் இடம் பெற்றது. நேற்று (ஜன.28) திங்கட்கிழமை மதியம் நடைபெற்ற மாநாட்டின் நிறைவில் தப்லீக் ஜமாத் அகில உலக பொறுப்பாளர் டெல்லி முகமது சாத் மவுலானா சொற்பொழிவை இந்தி மொழியில் நிகழ்த்தினார். அதன் தமிழாக்கத்தை திருச்சி ரூஹுல் ஹக் மவுலான மொழி பெயர்த்தார். இதன், பின்னர், 30 நிமிஷங்கள் சிறப்பு துஆ ஓதப்பட்டன. இறை அச்சத்தோடு வாழ்தல், இம்மை மற்றும் மறுமைக்கான வாழ்வு, உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும், மும்மாரி மழை பெய்யவும், நாட்டு மக்கள் சுபிட்சமாக வாழவும், பிறருக்கு உதவுதல், கீழ்படிதல், உதவி புரிவது, தொண்டு புரிதல், ஈமானோடு இறுதி வரை இருப்பது, இறைவன் காட்டிய வழிமுறைகளை பின்பற்றி வாழ்வது உள்ளிட்டவை பிரார்த்தனையில் இடம்பெற்றது.

மாநாடு துளிகள்:
1. திருச்சி ~ திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டிபுதூரில் இருந்து இனாம்குளத்தூர் வரை லட்சக்கணக்கானோர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.

2. வாகனங்கள் நிறுத்துவதற்கும் பல ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடு செய்யப்பட்டது. குடிநீர் வசதி, குளியல் அறை, உணவு, கழிவறை, தூங்குவதற்கான இடம், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் என அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

3. இரவை பகலாக்கும் வகையில் மாநாட்டு திடல் மற்றும் மக்கள் வந்து செல்லும் பகுதி முழுவதும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.

4. மாநாட்டில் நபிவழி சுன்னத் அடிப்படையில் சுமார் 150 க்கும் மேபட்டோருக்கு எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.

5. வாய் பேசாத  ~ காது கேளாத வருகையாளர்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

6. ஒளு செய்வதற்கு, கழிப்பறை, சிறுநீர் கழிக்க மாநாட்டின் மைதானப் பகுதிகளில் தனித்தனியாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும், திருச்சி சுற்றுவட்டார நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள இடங்களில் இஜ்திமா வருகையாளர்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

7. மாநாட்டில்,  தமிழகத்தின் தென் ஆற்காடு (01), கோவை (02), வெளி மாநிலங்கள் (03), இராமநாதபுரம் (04), சேலம் (05), மதுரை (06), புதுக்கோட்டை (07), திருநெல்வேலி (08), பாரா ஜமாத் (09), திருச்சி (10), தஞ்சாவூர்(11), வட ஆற்காடு (12 ), செங்கல்பட்டு (13), சென்னை (14) என 14 மண்டலங்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டன. இப்பகுதிகளில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்தோர் அமர்ந்து இருந்தனர்.

8. ஒவ்வொரு மண்டலங்களுக்கும் தனித்தனியாக உணவுக்கூடங்கள் அமைக்கப்பட்டு அதில், இரவு, காலை, பகல் ஆகிய 3 வேளைகளுக்கான உணவு பரிமாறப்பட்டது. இப்பணிகளில் தன்னார்வ களப்பணியாளர்கள் ஈடுபட்டனர்.

9. மாநாட்டில் மருத்துவ முதலுதவிக்காக மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

10. மாநாட்டு வருகையாளர்களுக்கு வழிகாட்ட பிரதான சாலைப் பகுதிகளில் 'வழிகாட்டி பதாகைகள்' ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்தன.

11. மாநாட்டில் இஸ்லாமிய மார்க்க நூல்கள், தொப்பி, அத்தர், பழங்கள், சிப்ஸ், குளிர் பானங்கள், தின்பண்டங்கள், பேக்கரி கேக் வகைகள், பட்டர் பிஸ்கட்ஸ், மலைத்தேன், பனங்கருப்பட்டி, மசாலா பவுடர், சூப், சுண்டல் ஆகியவை விற்பனைக்காக தனி ஸ்டால்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

11. மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வசதியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுன. வட மற்றும் தென் மாநிலங்களில் இருந்து வரும் ரெயில்கள் இனாம்குளத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று சென்றன. திருச்சி பேருந்து நிலையத்திலிருந்து மாநாட்டு நடைபெறும் இடத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

12. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்தரபிரதேசம், தெலுங்கானா, டெல்லி, பீகார் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இலங்கை, சவுதி, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் வந்து குவிந்தனர்.

13. மாநாட்டின் நிறைவில் நடைபெற்ற சிறப்பு துஆவில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

14. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் வந்ததால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இஸ்லாமிய தன்னர்வல இளைஞர்கள் வாகனங்களை ஒழுங்குபடுத்தியதோடு அதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.

15. வெளியூர் செல்லும் ஜமாத்தினர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. குறிப்பாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைவரும் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

16. மாநாட்டு திடல் நிரம்பி வழிந்ததால் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலர் வெளியில் நின்றபடி துஆ வில் கலந்து கொண்டனர். 

17. இதற்கு முன்பாக, தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் கடந்த 1983 ஆம் ஆண்டும், மேல்விஷாரத்தில் 1997 ஆம் ஆண்டும் பிரமாண்ட இஜ்திமா மாநாடுகள் நடைபெற்றன. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்தக்கது.

மாநாட்டில் இருந்து... 
எம். நிஜாமுதீன், 
ஏ.சாகுல் ஹமீது, 
பாருக், காதர்