.

Pages

Saturday, January 12, 2019

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்?

அதிரை பாருக்
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!                   
2019 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிகள் வேகமெடுத்துள்ள நிலையில் தமிழகத்தில் யார்? யாருடன் கூட்டணி? என்ற கேள்விகளுக்கு 16-12-2018 அன்று சென்னையில் நடந்த விழாவில் தி.மு.க. தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் திருமதி. சோனியா மற்றும் பல கட்சிகளின் தலைவர்களின் முன்னிலையில் 2019 இல் ராகுல் அவர்களை பிரதமர் வேட்பாளராக முன் மொழிந்தது. அந்த மேடையில் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாது. அங்கே விழாவில் கலந்து கொண்ட  சில மாநில அரசியல் கட்சி தலைவர்களிடமும் சிறிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து இன்று வரை அந்த செய்தி பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் முக்கியத்துவம் பெற்றதாக ஆகிவிட்டது.

மூன்றாவது அணியைப் பற்றி அடிக்கடி கூடி பேசிக் கொண்டிருக்கும்  கட்சிகளுக்கு தி.மு.க.வின் முடிவு இன்று வரை கடும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது. மூன்றாவது அணி என்பது எப்போதுமே குழப்பமானது தான். அது ஏற்கனவே மூன்றாவது இடத்தில் உள்ளது. முதலிடத்திற்கு வரப்போவது இல்லை. எனவே அதைப் பற்றி காங்கிரசோ அல்லது அதன் கூட்டணி கட்சிகளோ கொஞ்சம் கூட பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. மூன்றாவது அணி என்பதே பிரதமர் பதவியை குறி வைத்து உண்டாக்கப் படுவதுதான். ஏற்கனவே இந்த அணிகள் எல்லாம் மத்தியில் நிலையான ஆட்சியை தரவில்லை என்பது இந்த நாட்டு மக்களுக்கு தெளிவாக தெரியும். மீண்டும் அது போன்ற ஸ்திரமற்ற குழப்பமான ஆட்சியை மக்கள் ஒரு போதும் விரும்ப மாட்டார்கள். ஐந்து மாநில தேர்தல் முடிவுகளால் காங்கிரஸ் 2019 ல் மற்ற கட்சிகளிடம் கூடுதல் இடங்களை கேட்கும் என்ற காரணத்தாலும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியே பிரதமர் பதவியில் இருந்து விடுமோ என்ற அச்சத்திலும் மூன்றாவது அணி என்ற ஒரு குழப்பமான அணி உருவாகிக்  கொண்டிருக்கிறது.

அதில்  யார் பிரதமர் வேட்பாளர்? இசை நாற்காலி (Musical Chair) கதை தான்.
கலைஞர் அவர்கள் இப்போது இருந்தால் பிரதமர் என்று யாரை அறிவிப்பாரோ அதைத் தான் ஸ்டாலின் அவர்களும் அறிவித்துள்ளார். தி.மு.க தனியாகவே போட்டியிடலாம் என்று தெலுங்கானா முதல்வர் திரு. K. சந்திர சேகர ராவ். அண்மையில் பேட்டி கொடுத்தார். 2014 ல் தமிழ் நாட்டில் தனியாக நின்ற தி.மு.க வுக்கும் காங்கிரசுக்கும் எத்தனை இடங்கள் கிடைத்தன என்ற விவரம் தெலுங்கான முதல்வருக்கு தெரியாதா? அது தெரிகிறதோ இல்லையோ தமிழக அரசியல் நிலவரம் அவருக்கு புரியவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

ஆந்திர அரசியலும், தெலுங்கான அரசியலும் தமிழ் நாட்டுக்கு ஒத்து வராது. இங்குள்ள சூழ்நிலையை வைத்து தான் தி.மு.க, காங்கிரஸ் மற்றும் இடது சாரிகள் கூட்டணி பற்றி முடிவெடுப்பார்கள். இடது சாரிகள் 2019 ல் காங்கிரசுடன் எல்லா மாநிலங்களிலும் கூட்டணி சேர்வதன் மூலம் அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் கணிசமான அளவிற்கு பிரதிநிதிகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பதை அவர்களது கூட்டணி முடிவுக்கு பிறகு சொல்கிறேன். ஒரு வேளை டெல்லியில் உள்ள இடது சாரி தலைவர்கள் வேறு முடிவை எடுத்தால் (காங்கிரஸ்  அல்லாத அணி) தமிழ்நாட்டில் உள்ள அந்த கட்சிகள் அதே முடிவை எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று நான் கருதுகிறேன். ஏற்கனவே 2004 மற்றும் 2009 நாடாளுமன்ற தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே இடது சாரிகளுக்கு எத்தனை இடங்கள் கிடக்கும் என்பதை சரியாக கணித்து காங்கிரஸ் தலைமைக்கு (டெல்லி) தெரியப்படுத்தியிருக்கிறேன் . இந்த தகவல் ஏற்கனவே நான் செய்திகளில் கூறி இருக்கிறேன். மூன்றாவது அணி என்பதை காரணம் காட்டி காங்கிரசுக்கு குறைவான தொகுதி ஒதுக்குவதை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளாது. ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,சத்தீஸ்கர் மாநிலங்களில் அண்மையில் வலுவான கூட்டணி இல்லாமலேயே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

2019 ல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை நிர்வகிக்க போகும் காரணிகள் எவை? இதில் காங்கிரசும் கூட்டணி கட்சிகளும் மிக கவனமாகவும் மனோதத்துவ ரீதியாகவும் செயல்பட வேண்டும்.

1. பிரச்சார வியூகம் (ELECTION CAMPAIGN)
2. வேட்பாளர் தேர்வு (SELECTION OF CANDIDATES)
3. வாக்காளர்களை ஏமாற்றாத தேர்தல் அறிக்கை (ELECTION MANIFESTO)

கூட்டணி என்பது நாலாவது இடத்தில் உள்ளது. பணம் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்படும். வரும் பொதுத் தேர்தலில் என்னுடைய கணிப்பின் படி இன்ஷா அல்லாஹ் முடிவு இப்படித்தான் இருக்கும். கடந்த பல ஆண்டுகளாக பல தேர்தல் முடிவுகளை முன் கூட்டியே கணித்து காங்கிரஸ் தலைமைக்கு தெரியப்படுத்தியிருக்கின்றேன். அந்த வகையில் ஒரு கட்சியின் வளர்ச்சிக்கு ஆலோசகர்களே முக்கியமானவர்கள்  என்பதை பல முறை நிரூபித்து உள்ளேன். 1990  முதல் காங்கிரஸ் கட்சிக்கு நான் வழங்கியுள்ள ஏராளமான ஆலோசனைகளே இதற்கு சான்று. முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் (தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் உள்பட) இது தெரிந்த விஷயம்.
2016 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிலிருந்து என்னிடம் செல்போனில் தொடர்பு கொண்டதும், அதே நாளில் மாண்புமிகு காங்கிரஸ் தலைவர் ராகுல் அவர்கள் (அப்போது அவர் காங்கிரஸ் துணைத்தலைவராக இருந்தார்) என்னிடம் தொடர்பு கொண்டு பேசியதும். கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்காக நான் அவரிடம் கூறிய ஆலோசனைகளும் முக்கியத்துவம் வாய்ந்தது.

அதையெல்லாம் முழுவதுமாக என்னால் இங்கு விவரிக்க முடியாது. அது எனக்கும் கட்சி மேலிடத்துக்கும் இடையே நடந்த முக்கியத்துவம் வாய்ந்த கருத்துப் பரிமாற்றங்கள். இனிவரும் தேர்தல்களில் பணத்தை மையமாக வைத்து சீட் வழங்கும் பழைய முறைக்கு ராகுல் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். காங்கிரஸ் தொண்டர்களில் திறமையானவர்கள் யார் வேண்டுமானாலும் சீட் கேட்டு விண்ணப்பிக்கலாம். உங்களிடம்  பண வசதி இல்லை என்று நீங்கள் ஒதுங்கி விட வேண்டாம். யாரை எங்கே போட்டியிட செய்வது என்பதை நான் முடிவு செய்து கொள்கிறேன் என்பதாக ராகுல் அவர்கள் அண்மையில் அறிவித்தது. இன்னமும் ஏராளமானவர்களுக்கு தெரியவில்லை என்பதால் அதை நான்  இங்கே குறிப்பிடுகின்றேன். சோனியா மற்றும் ராகுல் அவர்களின் அறிவுறுத்தலின் படி, காங்கிரஸ் காரர்கள் கோஷ்டிகளை மறந்து செயல்பட வேண்டும்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரை மாற்றப் போகிறார்களா?
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக யாரை நியமித்தாலும் அவருக்கு எதிர்ப்பு வருவது வழக்கமானதுதான். இது டெல்லி தலைமைக்கும் தெளிவாக தெரியும்.

புத்தாண்டில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரை (திரு. திருநாவுக்கரசர்) மாற்றப் போகிறார்கள். தை பிறந்ததும் அவரை மாற்றப் போகிறார்கள். ராகுல் அமெரிக்காவிலிருந்து வந்ததும் புதிய தலைவரை நியமிக்கப் போகிறார்கள். இந்த மாதம் 9 ம் தேதி ராகுல் துபை செல்கிறார் , அங்கிருந்து வந்ததும் காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவரை அவர் நியமிக்கப் போகிறார். இப்படியாக கடந்த பல மாதங்களாக பலரும் பல விதமாக பேட்டிகளைக் கொடுத்து அவை தினசரி மற்றும் வார பத்திரிக்கைகளில்  செய்திகளாக வருகின்றன. இப்போதைக்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இது காங்கிரஸ் மேலிடத்திற்கும் தெரியும். திருநாவுக்கரசர் அவர்கள் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த இரண்டு ஆண்டுகளில் எந்த தேர்தலிலும் காங்கிரஸ் போட்டியிடவில்லை. தமிழ் நாட்டிற்கு 2019 நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமே வரும் எனவும். இடைத்தேர்தல்களோ உள்ளாட்சி தேர்தல்களோ வராது எனவும். தமிழ் நாடு காங்கிரஸ்  தலைவருக்கு ஏற்கனவே நான் எழுதி விட்டேன். என்னுடைய கணிப்பில் வந்ததை நான் முன்கூட்டியே தெரியப்படுத்தினேன். அது தான் இப்போதைய அரசியல். கூட்டணி  விஷயமாக ஒருவர் வேறு ரூட்டில் காய் நகர்த்துகிறார் என்பதற்கெல்லாம், ஒரு தலைவரை மாற்றும் சூழ்நிலை ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. ராகுல் அவர்கள் கூட சில நேரம் மாற்று யோசனைகளை ( கூட்டணி விஷயமாக) பரிசிலித்திருக்கிறார். அதற்காக அவரை மாற்ற வேண்டும் என்பதா?. நான் கூட இரண்டு விதமான கூட்டணியை வழக்கம் போல் காங்கிரஸ் மேலிடத்திற்கு தெரியப்படுத்துவேன். அதை அவர்கள் பரிசீலித்து. முடிவெடுப்பார்கள்.

திருநாவுக்கரசர் அவர்கள் கலிஃபோர்னியாவிலிருந்து நியூயார்க் சென்று திரு. ரஜினி அவர்களை ரகசியமாக சந்தித்துள்ளார் என்றும் அவரது கட்சியில் சேரப் போகிறார் என்றும் செய்திகள் வருவதைப் படித்தேன். அவர் திடிரென வாஷிங்டன் சென்றால் ட்ரம்ப் கட்சியில் சேரப்போகிறார். தமிழ் நாட்டுக்கே வரமாட்டார் என்று கூட பேட்டி கொடுத்து விடுவார்கள். தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக (2019 தேர்தலுக்கு  பிறகு)  சிறுபான்மை இனத்தவர் ஒருவரை அதாவது இஸ்லாமிய சமூகத்தை சார்ந்த ஒருவரை நியமிக்க கோரி கூடிய  விரைவில் திரு. ராகுல் அவர்களுக்கும் , திருமதி சோனியா அவர்களுக்கும் ஆலோசனை அனுப்ப உள்ளேன். அதை காங்கிரஸ் மேலிடமும் 33 மாவட்ட காங்கிரஸ் தலைவர்களும்  தொண்டர்களும் ஏற்றுக் கொள்வார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட நீங்கள் விரும்புகிறீர்களா என பலரும் என்னிடம் தொடர்ந்து கேட்கின்றனர். 2014 சூழ்நிலை இப்போது இல்லை. என் விஷயமாக நான் ஒருவன் மட்டும் முடிவு செய்ய இயலாது. அதே நேரம் யாரும் எனது விருப்பத்திற்கு தடையாக இருக்கப்போவதில்லை.நாடாளுமன்றத் தேர்தலில் பெண்கள், இளைஞர்கள், தலித்கள், சிறுபான்மையினர் ஆகியவர்களுக்கு காங்கிரஸ் மேலிடம் முக்கியத்துவம் அளிக்கும்.
2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் ராகுல், சோனியா அவர்களை நான் நேரில் சந்திக்க நாடியுள்ளேன். 2016ல் (ஜூன் 18). ராகுல் அவர்கள் எனக்காக பயண ஏற்பாடுகளை செய்து என்னை உடனடியாக டெல்லி வர அழைத்திருந்தார். அப்போது ரமலான் மாதமாக இருந்ததாலும்  உடல்நிலை சரி இல்லாததாலும் என்னால் அப்போது செல்ல இயலவில்லை அதற்கான காரணங்களை உடனடியாக நான் ராகுல் அவர்களுக்கு தெரியப்படுத்திவிட்டேன்.

2014 ல் மத்தியில் ஆட்சி மாற்றத்திற்கு ஒரு தனி நபரின் ஆக்ரோஷமான பிரச்சாரமும், அந்த கட்சியின் தேர்தல் அறிக்கையுமே  கை கொடுத்தன. அந்த தேர்தல் அறிக்கையில் உள்ள பல அம்சங்கள் பொய்யானவையாகவும், செயல்படுத்த முடியாததாகவும் ஆகிவிட்டன என்பது வாக்காளர்களுக்கு தெளிவாக புரிந்து விட்டன.

செயல்படுத்த முடியாத பொய்யான தேர்தல் அறிக்கைகளை ஒரு போதும் காங்கிரஸ் வெளியிடாது.

2019 ல் பி.ஜே.பி க்கு எத்தனை இடம்? காங்கிரசுக்கு எத்தனை இடம்? அந்த கட்சிக்கு எத்தனை இடம்? இந்தக் கட்சிக்கு எத்தனை இடம்? என்று புதிது புதிதாக வந்து கொண்டிருக்கும் திடீர் கணிப்புகளால் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. மக்கள் மனநிலை என்ன என்பதை புரிந்து கொள்ளாமலேயே அவ்வப்போது இது போன்ற கணிப்புகள் வெளியாகின்றன. இதெல்லாம் நாட்கள் செல்லச் செல்ல மாறிவிடும். காங்கிரசின் பிரச்சாரம் வேகமெடுக்கும் போது மக்களுக்கு அது புதிய சிந்தனையை கொடுக்கும். அந்த சமயம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கான சூழ்நிலை பிரகாசமாக உள்ளது என ஊடகங்கள் புதிய கருத்து  கணிப்புகளை வெளியிடுவதை நாம் பார்க்கலாம்.

ராகுல் அவர்களை ஸ்டாலின்  அவர்கள் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது. நாளுமன்றத் தேர்தலுக்காக  மட்டும் அல்ல. அடுத்து வரக் கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் கூட்டணிக்கும் சேர்த்து சொல்லப்பட்டது தான். அதை மேலும் விவரிக்க நான் விரும்பவில்லை. அதைத் தான் நான் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என குறிப்பிட்டுள்ளேன்.

ஏ. பாருக்,
'அரசியல் விமர்சகர்'
68 காலியார் தெரு,
அதிராம்பட்டினம் - 614 701.
பட்டுக்கோட்டை தாலுகா,
தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.